Monday, October 17, 2011

அமெரிக்க அனுபவம். - 3


அலுவலகத்தில் மதிய நேரம். அன்று எடுத்து சென்றிருந்த 'மேத்தி பராத்தாவை' மைக்ரோவேவில் சூடு பண்ணிக்கொண்டிருந்தேன். (என் மனைவி ஒரு அருமையான சமையல் நிபுணர்)

அதை எடுக்கும்போது, அருகில் நின்றிருந்த அமெரிக்க சக ஊழியை..

"ஓ! பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது.. நீங்களே சமைத்ததா?"  என்றார்..


"கிழித்தேன்.. எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும். இது என் மனைவி செய்தது" என்றேன்.


"நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்! எனக்கும் என் கணவருக்கும் வீட்டில் செய்த சமையல் என்றால் அவ்வளவு இஷ்டம்.. ஆனால் பாருங்கள், எனக்கும் சமைக்க தெரியாது. அவருக்கும் சமைக்க தெரியாது.. தினமும் சாப்பாடு வெளியில் தான். இல்லையேல் Frozen Dinner தான்.."
என்று சொல்லிக்கொண்டே போனார்! 

கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், யோசித்துப்பார்த்தால் இது தான் உண்மையான சுதந்திரம் என்று தோன்றியது. வேலைக்கும் போய்கொண்டு சமையல் கட்டையும் தான்  மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியை நினைத்துக்கொண்டேன். பாவமாக இருந்தது.

வீட்டுக்கு போனவுடன் மேத்தி பராத்தா செய்வது எப்படி என்று மனைவியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்..


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, October 11, 2011

தமிழ்மணத்தின் குறும்பு!


தமிழ்மணத்தில் இன்று அடுத்தடுத்து வந்த பதிவுகள்..


நல்லாத்தான் காமெடி பண்றாங்க!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, October 5, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்!


இந்த நூற்றாண்டின் இணையற்ற சி இ ஓ, ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று காலமானார். அழுகும் நிலையிலிருந்த ஆப்பிளை எல்லோரும் அண்ணாந்து பார்க்க வைத்த அவருக்கு என் அஞ்சலி..
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, September 6, 2011

அமெரிக்க அனுபவம் - 2


இதை என் முந்தைய பதிவு போலவே இன்னொரு அனுபவம்..

ஒரு திங்கள் கிழமை காலையில் வழக்கம் போல ஒரு மீட்டிங் துவங்குவதற்காக காத்திருக்கும்போது சம்பிரதாயமாக மற்றவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.. 

உரையாடல் தமிழில்..

உடன் பணி புரியும் அமெரிக்க பெண்மணி..

"சென்ற வீகென்ட் எப்படி செலவழித்தீர்கள்"

"பிள்ளைகளுடன் மால் சென்றிருந்தேன்.. வேறு விசேஷமில்லை.. உங்களுடைய வீகென்ட் எப்படி?" என்றேன்..

"மிக அருமையாக இருந்தது.. ஊரிலிருந்து என் மாமியார் வந்திருந்தார். நானும் என் கணவரும் மாமியாருடன் சென்று வெட்டிங் கௌன் (wedding gown)  வாங்கினோம்.."

எனக்கு இந்த வாக்கியம் அபத்தமாக தெரிந்தது.. வெட்டிங் கௌன் என்கிறார். மாமியார் என்கிறார். ஒரு வேளை கல்யாணத்திற்கு முன்னேயே மாமியார் என்கிறாரோ? அவ்வளவு அன்யோன்யமோ? நம்ம ஊரிலும் இருக்கிறார்களே.. என்று பலவாறு சிந்தனை பறந்தது..

இருந்தாலும் குழப்பம் பெரிய அளவு என் முகத்தில் தெரிந்ததை பார்த்து, அவரே..

"வெட்டிங் கௌன் என் மாமியாருக்கு! சமீபத்தில் விவாகரத்து பெற்ற அவர் மறுமணம் செய்துகொள்ளப்போகிறார்.. அதற்காக தான்.. " என்றார்..

என்னிடம் மறு பேச்சில்லை!



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, August 24, 2011

அதே மனைவி?

பல வருடங்களுக்கு முன் எனக்கு நடந்த அனுபவம் இது. அப்போது நாங்கள் அமெரிக்கா வந்து ஓரிரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். நான் புதிதாக ஒரு கம்பெனியில் சேர்ந்திருந்தேன். அங்கு என்னை தவிர வேறு யாரும் இந்தியர்கள் இல்லை. எல்லா அனுபவமுமே கொஞ்சம் புதியதாக இருந்தது. 

அதில் இந்த அனுபவம் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது!

எங்கள் இரண்டாவது குழந்தை பிறந்த வேளை. அந்த செய்தியை  இந்திய வழக்கப்படி, அலுவலகத்தில் பலருடன் பகிர்ந்து கொண்டேன். அப்போது உடன் பணி புரிந்த ஒருவர் - அமெரிக்கர்- உடனான உரையாடல்..தமிழில்..

அமெரிக்கர்: "இது தான் உங்கள் முதல் குழந்தையா?"

நான்: "இல்லை. இது இரண்டாவது குழந்தை. என் முதல் குழந்தைக்கு ஆறு வயதாகிறது"

அமெரிக்கர்: "இதே  மனைவியுடனா?"

நான் முழிப்பதை பார்த்து, அவர் மறுபடி விளக்கமாக 

"முதல் குழந்தையும் இதே மனைவியுடனா இல்லை இது வேறு கல்யாணத்திற்கு பிறகா?"..

கொஞ்ச நேரம் அதிர்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, August 19, 2011

S A ராஜ் குமாரும் Cheetos-ம்!

சீடோசின் ரசிக்க வைத்த விளம்பரம்..





கான்செப்ட் நமது S A ராஜ் குமாரின்  ஒரே டியுனை வைத்து ஓராயிரம் பாடல் போடும் கான்செப்ட்..

கடைசி காட்சி ராஜ்குமாரின் பாடல் கேட்கும்போது நான் நினைத்ததையே காட்டியதால் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரமாகியது!




மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, August 5, 2011

அமெரிக்கா.. நெடுஞ்சாலை ஓய்விடம்... (2)


நம்ம ஊர்ல பஸ்ல போகும்போது "பஸ் அரை மணி நேரம் நிக்கும். சாப்படரவங்க சாப்டுட்டு வரலாம்" அப்படின்னு கண்டக்டர் சொல்லும் ஒவ்வொரு முறையும், கலவரமா இருக்கும்.

முதல்ல அங்க இருக்கற 'ஓட்டல்'! சீடை அளவுக்கு மாவு எடுத்து எப்படித்தான் வடை போடுவாங்களோ! அதையும் கூசாம முப்பது ரூபான்னு சொல்லும்போது அதாலியே அடிக்கலாம்னு தோணும்! டீ, காபின்னு பேரை வச்சிருக்கும் கலர் கலர் (மிதமான) சூடான தண்ணி இன்னும் கொடுமை!


அதுக்கு மேல அங்க இருக்கற பாத் ரூமை நினைச்சாவே வயத்த கலக்கும்.. பாத்ரூம் அப்படின்னு பேர் வச்ச சின்ன தடுப்பு சுவர் வச்ச இடத்துக்கு ஒரு நாப்பது அடி முன்னாடியே அதிலிருந்து வரும் வாடை பாத்ரூம் எங்கே இருக்குன்னும் எப்படி இருக்குன்னும் காட்டிடும்! ஆண்கள், உள்ள போய் உபயோகித்தால் எல்லா வியாதியும் வந்துடும்னு அங்கங்கே நகந்துடுவாங்க. பெண்கள் பாடு தான் பாவம்!


முதல் முதல் அமெரிக்காவில் நெடுஞ்சாலை பயணத்தின்போது Rest Area அப்படின்னு போர்டு பார்த்து நிறுத்தினோம். அதில் உள்ள வசதிகள்.. ஆடம்பரம் எதுவும் இல்லை. அத்யாவசியமான எல்லாம் இருந்தது.

அதில் உள்ள வசதிகள்..

--ஆண் , பெண் கழிவறைகள்.. நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு
--காலை நீட்டி உட்கார வசதியான பெஞ்ச்கள்
--சிறிய தூரத்திற்கு நடை பயில 'வாக் வே'
--வேண்டிய சிறு தின்பண்டங்களை வாங்கிக்கொள்ள 'வெண்டிங் மெஷின்'..
சில ஓய்விடங்களில், 'வெண்டிங்  மெஷினில்' காபியும் உண்டு. 
--அருகில் உள்ள சாலையில் செல்லும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ற மாதிரி பார்கிங் வசதி.
--சாலையின் மேப்
--பப்ளிக் போன்
--சில இடங்களில், சிறுவர் விளையாட சிறிய பூங்கா..


முக்கியமான விஷயம் ..
இவை அனைத்து வாகன பயணிகளுக்கும் இலவசம்! (போன் உபயோகிக்க , வெண்டிங் மெஷினில் வாங்க காசு கொடுக்க வேண்டும், of course!)
இரண்டாவது, எந்த வித வியாபாரிகளுக்கும் / கடைகளுக்கும் அனுமதி இல்லை.

கிட்ட தட்ட, ஒவ்வொரு மணி நேர பயணத்திற்கு ஒரு முறை உபயோகிக்க கூடிய தூரத்தில் அமைத்திருக்கிறார்கள். (சில சாலைகளில் இல்லாமல் இருக்கலாம். நான் பார்த்த இடங்களில் இருந்தது!)

நீண்ட தூரம் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற இடங்கள் வரப்ரசாதம்! 

நம் ஊரில் எப்போ இது போன்ற வசதி வரும் என்று நான் அடிக்கடி எங்கும் வசதி இது!

அது போன்ற ஒரு ஓய்விடத்தின் புகைப்படம் இதோ..


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, August 1, 2011

அமெரிக்கா! அற்புத உள் கட்டமைப்பு

இந்த பதிவு தொகுப்பில் அமெரிக்காவில் நான் கண்டு வியக்கும், நம் ஊரில் இல்லையே என்று பொறாமைப்படும் விஷயங்கள் குறித்து எழுத இருக்கிறேன்

இதில், இன்று எடுத்துக்கொள்வது ப்ரீவே (freeway)

அமெரிக்க புகைப்படங்களையும் சினிமாவில் காட்டுவதையும் பார்த்தால், அதன் உள் கட்டமைப்பு என்றவுடன் நமக்கு உடனடியாக தோன்றுவது, அதன் வானுயர் கட்டிடங்கள் தான்! உங்களுக்கும் அப்படித்தான் என்றால் அதை மனதில் இருந்து அழித்து விடுங்கள். 

அமெரிக்காவின் உள்கட்டமைப்புக்கு முதுகெலும்பு எனக்கருதப்படுவது அதன் ப்ரீவே எனப்படும் சாலைகள் தான்! ப்ரீவே எனப்படும் சாலைகளின் விசேஷம், பொதுவாக அதில், சிக்னல் கிடையாது, குறுக்கு போக்குவரத்து கிடையாது, சாலையை எல்லா இடத்திலும் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் கிடையாது. சுருக்கமாக  எதற்காகவும் வாகனங்கள் நிற்க தேவை இருக்காது, (டிராபிக் ஜாம் தவிர).

இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.

சாலையை எல்லா இடத்திலும் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் கிடையாது. 
இந்த பிரீவேக்கள் நகரங்களுக்குள் செல்லும் இடங்களில் எல்லாம், இந்த சாலைகளின் இரு பக்கங்களிலும் சுவர் எழுப்பியுள்ளார்கள். இந்த படத்தில் உள்ளது போல.



இது போல உள்ளதால், சாலையை யாராவது எப்போது வேண்டுமானாலும் கடக்கலாம் என்ற பயமில்லாமல் வாகனம் ஓட்ட முடியும். சுவருக்கு பதில் சில இடங்களில் வேலி உள்ளது. ஆனால், அடிப்படையில், நோக்கம் ஒன்றே.

சரி, சாலையை கடக்க வேண்டும் என்றால் எப்படி?

சாலையை கடக்க வேண்டிய அளவு குறுக்கு பாலங்கள் அமைத்துள்ளார்கள். சில பாலங்கள் பாதசாரிகள் மட்டுமே உபயோகிக்க. கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு பிரீவேயை கடக்க குறுகிய தூரத்தில் எவ்வளவு பாலங்கள்!

சரி, வாகனம் ஓட்டுபவர் அவர் சேர வேண்டிய இடம் வந்தவுடன் நிறுத்துவாரே?

இந்த பிரீவேக்களில் நுழைவதற்கும் வெளியே வருவதற்கும் பிரீவேயின் இணையாகவே அமைக்கப்பட்ட எக்சிட் ராம்ப் என்ற சிறிய சாலைகளை உபயோகிக்க வேண்டும். இந்த சிறிய சாலைகள் கிட்டதட்ட அரை மைல் நீளம் இருப்பதால், அந்த தூரத்திற்குள் பிரீவேயில் நுழைய வேண்டுமானால் வேகத்தை அதிகரித்துக்கொள்ளவோ, பிரீவேயில் இருந்து வெளியேற  வேண்டுமானால் வேகத்தை குறைத்துக்கொள்ளவோ முடியும்.

அப்படி ஒரு, எக்சிட் ராம்ப் இங்கே..

1944 இல் President Franklin D Roosevelt கொண்டுவந்த   "National System of Interstate Highways" சட்டமும், 1956 இல் President Dwight D Eisenhower கொண்டுவந்த Federal Aid Highway act சட்டமும் தான் அமெரிக்காவில் இன்று உள்ள நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்தது!

மற்றும் google images

அமெரிக்காவில் நான் வியக்கும் மிகப்பெரிய உள் கட்டமைப்பு இது தான்!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, June 16, 2011

அடிமையின் சான்றிதழ்.. முதலாளிக்கு!



திக் விஜய் சிங்! வேண்டாதவர்கள் மீது சேறு அள்ளி தெளிக்கவென்றே காங்கிரஸால் வளர்க்கப்படுபவர்.. சுருக்கமாக, வயதானதால் கவர்னர் பதவி எதிர்பார்த்து காத்திருக்கும் எஜமான விசுவாசத்தை எப்படியாவது காட்ட துடிக்கும் ஒரு அடிமை!

இவர் உதித்த இன்றைய முத்து..  ராகுல் பிரதமராக தகுதி உடையவர்! 

ஒரு இத்துப்போனவன் இன்னொரு இத்துப்போனவனுக்கு ரெகமண்டேஷன்! 

இவனையெல்லாம்  பேச விட்டு அதையும் ஒரு நியூஸ் என்று போடுபவர்களை என்ன சொல்ல?  
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, May 18, 2011

அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்!


இது நான் எழுதும் முதல் சிறுகதை.. உங்கள் கருத்துக்களை எழுதினால் தன்யனாவேன்.

காலையில்..

  "என்ன ப்ரேக்பாஸ்ட் பண்ணட்டும்" 

கேட்ட   தர்ம பத்தினிக்கு ஒழுங்கான கணவனாய் "எது ஈசியோ அது பண்ணு" என்றேன்..

"ஆமா. இப்படி சொல்லிட்டு அப்புறம் அரிசி உப்புமா ஆகாது, சேமியா உப்புமா பிடிக்காதுன்னு சொல்றதில ஒன்னும் குறைச்சல் இல்லை!" 

"சரி.. மனுஷன் சாப்புடரதுல எது ஈசியோ அது பண்ணு!"

"நாக்கை முழம் நீளம் வளர்த்துட்டு .. உங்களுக்கு நக்கல் ஒண்ணுதான் குறைச்சல்"

இதற்கு பதில் பேசினால், பிரட் + ஜாம் தான் என்பதால், மௌன சாமியாரானேன்.

ஓட்ஸ் கஞ்சியுடன் வந்த மனைவி "இந்தாங்க ப்ரேக்பாஸ்ட்" என்று டேபிளில் வைத்தாள்.

"நேத்து காலேல கலா.." என்று ஆரம்பித்த மனைவியை இடை மறித்து..

"ஐயய்யோ.. மறுபடியும் முதல்ல இருந்தா?" என்றேன்..

புரியாமல் விழித்தவளிடம் .. "அது தான் நேத்து சாயந்திரம் சொன்னியே..மறுபடியும் அதே தானே.. சரியான போர் " என்றேன்..

"உங்க கிட்ட சொல்ல வந்தேன் பாருங்க..." என்று அகன்றாள் கடுப்புடன்.

இரவு..


"பத்தரை மணியாச்சி.. தூங்க போகலை? நாளைக்கு ஆபீஸ் போற ஐடியா இருக்கா இல்லையா?" 

இது மூன்றாவது தடவை . இனிமேல் சொல்ல மாட்டாள் என்று தோன்றியது. மடிக்கணினியை எடுத்து வைத்து விட்டு படுக்க சென்றேன். படுக்கையில் மகன் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு..

"ஏண்டா, இன்னுமாடா தூங்கலை.."

"தூக்கம் வரலப்பா... ஒரு கத சொல்லு.."ன்னான்

"ஒரே ரோதனடா உன்கூட.. சரி.. கதைக்கு பதில் ஒரு Puzzle சொல்லட்டுமா?" 

(ஒரு ரகசியம். Puzzle அப்படின்னா அதுல கொஞ்சம் கணக்கை கலந்துடுவேன்.. கணக்குன்னா பையனுக்கு உடனே தூக்கம் சொக்கிடும்!)

"Sure" 

சொல்ல ஆரம்பித்தேன்..

"ஒரு ஊர்ல ஒரு சாது நடந்து போயிட்டிருந்தார். அங்க ஒரு வீட்ல ஒரே கூச்சலும் குழப்பமுமா இருந்தது"

"ம்.."

"என்ன விஷயம்னு கேட்டாரு"

"யாரு கிட்டப்பா?"

"ஏண்டா. அதுவா முக்கியம். பேசாம கேள்டா"

"சரி. சொல்லு"

"அந்த வீட்ல மூணு பசங்க. அவங்கப்பா அவர் ஊருக்கு போறப்போ மூணு பேரு கிட்டயும் ஒரு வேலை சொன்னாரு. அவருகிட்ட இருக்கிற பசுக்களில பாதியை பெரிய பையன் பாத்துக்கணும். மூணுல ஒரு பாகம் இரண்டாவது பையன் பாத்துக்கணும். ஒன்பதில ஒரு பாகம் மூணாவது பையன் பாத்துக்கணும் அப்படின்னு சொன்னாரு"

"எனக்கு தெரியும். பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும். அவங்களுக்கு Fractions எப்படி பண்றதுன்னு தெரியலை. அது தானே?"

"அது தான் இல்லை. அவங்கல்லாம் கணக்குல புத்திசாலிங்க. பிரச்சனையை என்னன்னா, அவங்க அப்பா கிட்ட இருந்த பசு மொத்தம் 17, அதை எப்படி பிரிக்கறதுன்னு தான் மண்டைய ஓடச்சுக்கிட்டிருந்தாங்க."

"ம்.."

"என்ன ம்.. பதிலை சொல்லு. எப்படி பிரிச்சாங்க"

".."

"தெரியலையா.. யோசிச்சுப்பாரு... காலைல பதில் சொல்றேன்.. Goodnight"

கொஞ்ச நேரம் சத்தமே இல்லை.. சரி, தூங்கிட்டான் போல இருக்குன்னு நினச்சேன்..

"அப்பா..."

"என்ன.."

"பதில் சொல்லட்டுமா?"

எனக்கு ஆச்சர்யம். அவ்வளவு ஈசி இல்லன்னு நினச்சத உடனே எப்படி சொல்றான்...

"சரி சொல்லு"

"அந்த சாது தன் ஆஸ்ரமத்திலிருந்த பசு ஒண்ண வரவழைச்சார். அதை அவங்க கிட்ட இருந்த பசுக்களோட சேத்தாரு. அதுல பாதி, 9 பசுவை பெரிய பையன் கிட்ட குடுத்தார். மூணுல ஒரு பாகம், 6 பசுவ இரண்டாவது பையனுக்கு குடுத்தார். ஒம்போதுல ஒரு பாகம் 2 பசுவை மூணாவது பையனுக்கு குடுத்தார். பசங்களுக்கு குடுத்த 17 பசு போக மீதி ஒண்ணு அவரோட ஆஸ்ரமத்து பசு. அத அவரே வச்சுகிட்டாரு. கரெக்டா?"

பிரமித்தேன்.. ஆனாலும் கொஞ்சம் சந்தேகம்.. 

"ஏண்டா.. இத நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டனா?"

"இல்லப்பா. இதுல பசு -க்கு பதிலா கேமல் அப்படின்னு போட்டு டிங்கிள் புக்ல  வந்துதுப்பா. அதுல படிச்சேன்.."

"அது தான பாத்தேன்.. ஏண்டா. முதலிலே சொல்லலாம் இல்ல. வேற puzzle சொல்லியிருப்பேன் இல்ல"

"இல்லப்பா. ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிட்டிருந்தே.. அதுதான் சொல்லலை.."

இப்போது, உண்மையாக பிரமித்தேன்..  
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, May 16, 2011

நகைச்சுவை


இன்று தமிழ் மணத்தின் பக்கத்தில் இருப்பது இது போன்ற லிங்குகளின் தொகுப்பு. இது இயல்பிலேயே அமைந்த ஒன்றா இல்லை... 


:-)


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, May 15, 2011

திருப்பூருக்கு புதிய அரசு செய்யக்கூடிய உதவி!


மறுபடியும் ஆட்சி அமைக்க இருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

இன்று தமிழ் நாட்டில் எங்கும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும் நகரம் திருப்பூர். பல பேரின் பல்வேறு தவறுகளுக்கு விளைவாக இன்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். 

இது ஒரே நாளில் தீர்க்கக்கூடிய பிரச்சனையா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். இதற்கு அந்த தொழில் வல்லுனர்கள் ஒரு தீர்வை சொல்லமுடியும் என்றே நான் நம்புகிறேன். அதை முழுமையாக தீர்க்க ஒரு வருடமோ இல்லை இன்னும் அதிக நாட்களோ ஆகலாம். அதுவரை முதலாளிகள் காத்திருக்கலாம். ஆனால் தொழிலாளிகளை காத்திருக்க சொல்வது பிரக்டிகல் தீர்வில்லை. 

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று எல்லோருக்கும் மிக்சி மற்றும் கிரைண்டர் என்பது. இதற்கு தேவையான மிக்சி மற்றும் கிரைண்டர் ஆர்டர் மொத்தத்தையும் கோவை தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவர்களை திருப்பூரில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதை ஒரு நிபந்தனையாக வைத்தால் குறுகிய காலத்தில் இந்த தொழிலாளர்களுக்கு வேலை மறுபடியும் கிடைக்கும். உண்மையாக  உழைத்து குடுபத்தை காப்பாற்ற நினைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெஞ்சார வாழ்த்துவார்கள்!

இதன் மூலம் மேலும் ஒரு பலன் என்னவென்றால் இலவசங்களால் மக்களுக்கு மட்டுமில்லாமல்  பலன் இந்த தொழிலாளர்களுக்கும்  கிடைக்கும். 

இதுவே புதிய அரசு திருப்பூருக்கு செய்யக்கூடிய உடனடி உதவி!










மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, April 30, 2011

பர்கா தத் மானத்தை வாங்கிய சுவாமி அக்னிவேஷ்!



இந்த இணைப்பில் உள்ள விடியோவை பாருங்கள்



பர்கா தத் சுவாமி அக்னிவேஷிடம் சசி தரூர், அசோக் சவான் போன்ற அரசியல்வாதிகள் தன் மீது குற்ற சாட்டு வந்தவுடன்  ராஜினாமா செய்துவிட்டார்கள். அதுபோல சாந்தி பூஷன் மற்றும் அவர் மகன் இருவரும் தன் மீது குற்றசாட்டு வந்தவுடன் அது தவறு என்று நிரூபிக்கும் வரை ராஜினாமா செய்யவேண்டும் அல்லவா என்று கேட்கிறார். (என்னமோ அவர்கள் இருவரும் உத்தமர்கள் என்ற தொனியில்)

சுவாமி அக்னிவேஷ் அதற்க்கு கேட்ட நெத்தியடி கேள்வி... நீரா ராடியா டேப் வெளிவந்தவுடன் நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?

உண்மை தானே! தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா? இதற்க்கு பதில் அளிப்பதற்கு எவ்வளவு முழிக்கிறார் பாருங்கள்! 

உத்தமர் வேஷம் எதிர்பாராமல் கலைந்தவுடன் எப்படி தடுமாறுகிறார்!





மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, April 25, 2011

சத்ய சாயி பாபா கடவுளா?



If there is righteousness in the heart, there will be beauty in the character. 
If there is beauty in the character, there will be harmony in the home.
If there is harmony in the home, there will be order in the nation.
When there is order in the nation, there will be peace in the world. 

சத்ய  சாயி  பாபா

ஒவ்வொருவரின் உள்ளத்திலும்  நேர்மை குடி கொண்டிருந்தால் அந்த தேசம் அமைதியாக திகழும் என்பது பாபாவின் அருள் மொழி. இது மட்டுமல்ல, அவர் போதனைகள் எல்லாமே எளிய கருத்துக்கள் தான். எல்லாவற்றிலும் அடி நாதம் ஒன்றே. அன்பு. அன்பு. அன்பு. எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த வேண்டும். மானிட சேவையே மகேசன் சேவை. 

கிட்டதட்ட எல்லாமே நாம் பலமுறை கேட்ட கருத்துக்கள் தான். பொதுவாக யாரும் மறுக்க முடியாதவை கூட. பாபா இந்த அறிவுரைகளை சித்து வேலைகள் என்ற தேனில் குழைத்து கொடுத்தார். தேனின் சுவை மக்களை அவர் பக்தர்கள் ஆக்கியது என்றால், இந்த அறிவுரைகள் அவர்களை நல்ல மனிதர்கள் ஆக்கியது. தேனின் சுவை ஒரு அறிமுகம் மட்டுமே. முழுமையான சாரம் அவர் போதனைகளில் தான் இருந்தது. 

இந்த அன்பின் வெளிப்பாடு தான் பாபாவின் மட்டற்ற பொது சேவை. ராயல சீமா முழுவதற்கும் தண்ணீர் வர அவர் எடுத்த முயற்சி, தமிழக ஆந்திர அரசுகள் இணைந்து செய்ய வேண்டிய கிருஷ்ணா குடிநீர் திட்டத்திற்கு அவர் பங்களிப்பு, புட்டபர்த்தியில் இருக்கும் சாய் கல்லூரி. உலகத்தரத்திலான இலவச மருத்துவ மனை. 

இப்படி பாபா இந்த சமுதாயத்திற்கு அளித்தது எவ்வளவோ. 

இதையெல்லாம் விட்டு விட்டு, அவர் அளித்த தேன் உண்மையானது அல்ல. வெறும் சக்கரை தண்ணீர்தான் என்று சொல்பது போல, அவர் செய்தது கண்கட்டு வித்தை, போலி, ஏமாற்றுவேலை என்று சொல்பது சாரத்தை விட்டு விட்டு வழியை குறை சொல்பது தான்!

அவர் அருளிய அருள் மொழிகள் மட்டும் எனக்கு போதும். அதுவே சாரம். 

இந்த அளவு சமுதாயத்திற்கு ஒருவர் செய்ய முடியுமென்றால்....

அவர் கடவுள் தான்!  

அவர் என்றும் பக்தர்கள் இதயத்தில் வாழ்வார்!   


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, April 10, 2011

தி மு க மறுபடி பதவிக்கு வரக்கூடாது!


ஓட்டு போடுவதற்கு முன் கடைசி நேர சிந்தனைகள். தி மு கா மறுபடி இந்தமுறை பதவிக்கு வரக்கூடாது. தி மு க ஆட்சியின் சில சாதனைகள்
  • ஸ்பெக்ட்ரம் மெகா ஊழலில் உலகத்திற்கே எந்த அளவு ஊழல் செய்ய முடியும் என்று காட்டியது!
  • தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட / அறிவிக்கப்படாத மின் வெட்டு. ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தும் மின் வெட்டிற்கு அ தி மு க வை குற்றம் சொல்வது. இந்த ஐந்தாண்டுகளில் என்ன கிழித்தார்கள்?
  • கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சரும் சேர்த்த பற்பல கோடிகள்! நேருவின் சொத்து இரண்டு கோடியிலிருந்து பதினைந்து கோடியாக உயர்ந்திருக்கிறது இந்த ஐந்தாண்டுகளில்
  • தெருவெங்கும் ஓடும் சாராயக்கடை (டாஸ்மாக்). தன் மகன் குடியினால் அழிந்தும் (மு க முத்து) அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் இந்த அளவு கருணாநிதி டாஸ்மாக்கை வளர்த்திருப்பது.
  • தன் குடும்ப வாரிசுகள் செல்வத்தை வளர்க்க (சுமங்கலி கேபிள் மூலமும், சன் டி வி யின் விளம்பர வருவாய் மூலமும்) அரசு பணத்தில் எல்லோருக்கும் இலவசமாக டி வி கொடுத்தது
  • தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும்போது கடிதம் எழுதுவது.  தன் குடும்பத்திற்கு பதவி என்றால் டில்லிக்கு நேரில் சென்று காவடி எடுப்பது
  • ஈழப்ரச்சனையில் உலக சாதனையாக மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்தது
  • கனிமொழி விசாரணை வளையத்தில் மாட்டியதும் பொது பிரச்சனையில் 'போராடி' சிறை செல்வது போல சீன் காட்டியது
காரணங்கள் போதும் என்று நினைக்கிறேன். இப்போது, அ தி மு க ஆட்சிக்கு  வந்தால் அவர்கள் மட்டும் ஒழுங்கா என்ற கேள்விக்கு பதில்..

அவர்களும் ஒழுங்கில்லை என்பதே!

ஆனால், ஆட்சியை மாற்றுவது மூலம் ஒரு திருடர் இன்னொரு திருடரை மாட்டி விட சந்தர்ப்பங்கள் உண்டு. ஆட்சியில் இருப்பவர்களுக்கு, இது நிலையில்லை என்ற எண்ணம் தோன்றும். இல்லாதவர்கள்  ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் தவறை பெரிதாக்கி காட்ட ஒரு கேடலிஸ்ட் இருக்கும்.

மேலும், இப்போது தமிழ்நாட்டில் இருப்பது ஒரு ஊடக பயங்கர வாதம். அன்னா ஹசாரேவின் உண்ணா விரதத்தையே எந்த தொலை காட்சி ஊடகமும் காட்ட வில்லை. இது தொடர்ந்தால், மக்களை இருட்டில் வைப்பதையே இவர்கள் விரும்புவார்கள்

இதற்கெல்லாம் ஒரு முடிவின் தொடக்கமாக இந்த ஆட்சி மாற்றம் அமைய வேண்டும்!



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, April 7, 2011

இதோ இன்னொரு காந்தி!



இன்று நம்மிடையே தோன்றியுள்ள இன்னொரு  காந்தி பற்றி பாலா  எழுதிய பதிவு இது.. 



புதுடில்லி: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட அவகாசம் கேட்டதால் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது.
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் மும்பையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன.

ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.

3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார். 


இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.

ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.

அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.

அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவருக்கு சாதாரண மக்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது

துனிசியா, எகிப்து, லிபியா நாடுகளில் கிளம்பிய புரட்சியின் இந்திய வடிவமாக இந்த புரட்சியை பரவலாக்குவோம்! இது நம் ஒவ்வொருவரின் கடமை!

ஜெய் ஹிந்த்!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, April 4, 2011

2G - நார்வே மிரட்டல்!


சிபிஐ பதித்த குற்ற பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்று Unitech. இந்த நிறுவனத்தை 6,120 கோடி கொடுத்து நார்வேயை சேர்ந்த Telenor நிறுவனம் வாங்கியது. இதை வாங்கியபோது இந்த நிறுவனத்திற்கு Unitech செய்த தில்லுமுல்லு எதுவும் தெரியாது.அதனால் அந்த நிறுவனத்திற்கு கொடுத்த லைசென்ஸ்சை ரத்து செய்ய கூடாது என்று நார்வே நாட்டு பிரதம மந்திரி நமது பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார் (இவரும் கடிதம் தானா? இன்னும் எத்தனை பேர்டா கெளம்பியிருக்கீங்க?)

வெறும் கடிதம் மட்டுமில்லை. மிரட்டியுமிருக்கிறார். எப்படி? லைசென்ஸ் ரத்து பண்ணினால் அயல் நாட்டிலிருந்து வரும் முதலீடுகள் வருவது தடை படும் என்று. 

முதலில், ரத்து செய்வது தவறே இல்லை. ஒரு கம்பனியை வாங்கும்போது அதன்    
சொத்து மற்றும் கடனை சேர்த்தே வாங்குகிறார்கள். அந்த கம்பெனியின் லாபத்திற்கு எப்படி சொந்தக்காரரோ அதன் ரிஸ்கிர்க்கும் வாங்கியவர்களே பொறுப்பாளர்கள்.  அதனால், ரத்து செய்யப்படும் என்ற ரிஸ்க் வாங்கியவர்களை சேர்ந்தது. ரத்து செய்வதில் தப்பில்லை. 

இரண்டாவது, இந்தியாவின் வழக்கு எப்படி தீர்ப்பளிக்கப்படவேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? 

இதை மன்மோகன் சொல்ல வேண்டும். கொஞ்சமாவது முதுகெலும்பிருந்தால் சொல்வார். ஆனால் இருப்பது போல் தெரியவில்லையே!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 24, 2011

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பா?




தேர்தல் கமிஷன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கிறது. இதே தேர்தல் கமிஷன், தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்களை எதிர்த்து ஒன்றும் சொல்வதில்லை.


இந்த தேர்தலில் தி மு க கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்கள்
  • 35 கிலோ அரிசி - ஏழை மக்களுக்கு
  • பஸ் பாஸ் - 58 வயதை தாண்டிய எல்லோருக்கும்
  • இன்ஜினியரிங் மாணவர்கள் எல்லோருக்கும் லேப்டாப்
  • மீனவர்களுக்கு இலவச இன்சூரன்ஸ்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக்சி அல்லது கிரைண்டர் 
...மற்றும் பல.. 


அ தி மு க கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்கள்
  • 20 கிலோ அரிசி - எல்லா குடும்பங்களுக்கும்
  • பஸ் பாஸ் - 58 வயதை தாண்டிய எல்லோருக்கும்
  • 12 -ஆம் வகுப்பு மானவர்களிலுருந்து அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி
  • குறைந்த விலையில் கேபிள் 
  • ஏழை மக்களின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கம்....
..மற்றும் பல..

இதில் இரண்டு கட்சிகளுமே சொல்லாமல் விட்டது, அனைத்தும் அரசு பணத்தில் என்பதை. 

ஆனால், தேர்தலுக்கு முன் கொடுக்கும் பணம் அரசு பணம் இல்லை. அவரவர்கள் சம்பாதித்த  பணம். 

இப்படி இருக்கும்போது  தேர்தல் கமிஷன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடை செய்வது சரியா? தடை செய்வது அரசியல் வாதிகளுக்கு நன்மையாகவே முடிகிறது!

நீங்களே சொல்லுங்கள், ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பா?



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 17, 2011

புள்ளி(யில்லாத) ராஜா!



விகிலீக்ஸ் இந்தியா குறித்து  வெளியிட்டுள்ள  ரகசியங்களில் பெரிய அளவு பரபரப்பை உருவாக்கி இருப்பது, பார்லிமென்ட்-இல் ஒரு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட லஞ்சம் கொடுத்த விவகாரம். மன்மோகன் பிரதமராக இருக்க தகுதியில்லாதவர் (உண்மை தானே) என்று பி ஜே பி , கம்யூனிஸ்ட் என்று எல்லோரும் உரக்க குரல் கொடுக்கிறார்கள். 

மன்மோகன் வழக்கம் போல், 'எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்க மாட்டோமா' என்று பேசாமல் இருக்கிறார். 

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி, இதற்கு பதிலளிக்கையில்  எதிர்கட்சிகள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். Manmohan Singh is a "spotless Prime Minister" என்று கூறியுள்ளார். "spotless prime minister" என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு இது இல்லை என்றாலும், மன்மோகன் சிங்கிற்கு பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்பு..

மன்மோகன் சிங் ஒரு "புள்ளியில்லாத ராஜா"!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தி மு க வுடன் அ தி மு க கூட்டணி?




ஸ்பெக்ட்ரம் ஊழல், திரையுலகில் எப்போதுமில்லாத அளவு ஆக்கரமிப்பு, நாளும் உயரும் விலைவாசி, ஈழப்படுகொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு மட்டுமில்லாது அவற்றை நடத்த துணை போனது, நாளும் நடக்கும் மீனவ படுகொலை என்று எவ்வளவோ விஷயங்கள் தி மு க விற்கு எதிரே.

அவற்றின் துணையால் வெற்றி கோப்பை தட்டில் வரும்போது, அது எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டியது (பெட்டி) ஏற்கனவே கிடைத்துவிட்டது என்பது போல் இருக்கிறது ஜெ வின் நடவடிக்கைகள். 

கூடவே இருந்த வை கோ விற்கு கை விரிப்பு, முதலில் கூட்டணி அமைக்க வந்த கார்த்திக்கிற்கு அல்வா, கடைசியில் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற இடங்களுக்கும் சேர்த்து வேட்பாளர் அறிவித்த தான் தோன்றி தனம்.. 

எல்லாவற்றிற்கும் இரு காரணங்களே இருக்க முடியும். ஒன்று, தன் வெற்றி உறுதி என்ற ஓவர் கான்பிடன்ஸ். இல்லையேல், தி மு க வுடன் ரகசிய கூட்டணி. 

இரண்டுமே யாருக்கும் (தி மு க தவிர) நல்லதில்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, March 5, 2011

கூட்டணி முறிவு, காங்கிரஸ்ஸிற்கு முடிவு?



காங்கிரஸ் - தி மு க இடையே கூட்டணி முறிந்துள்ளது. அவசர அவசரமாக இணையலாம். அப்படி இல்லாமல் போனால் காங்கிரஸ்ஸிற்கு இதனால் என்ன பாதிப்பு என்று கொஞ்சம் அலசலாம். 

எல்லோருக்கு தெரிந்த ஒரு விஷயம், தனியாக நின்றால் மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரஸ் வெல்ல முடியும். சொல்லப்போனால் ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போகலாம். இது காங்கிரஸ்ஸிர்க்கும் தெரிந்ததே. அதற்க்கு பின்னாலும் இப்படி அவர்கள் முறுக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம்?

ஒன்று, காங்கிரஸ்ஸின் மிகப்பெரிய பிரச்சனை கோஷ்டி சண்டைகள். இதற்க்கு காரணம், தொண்டர்களை விட தலைவர்கள் நிறைய! ஒரு சின்ன பட்டியல்,
தங்கபாலு
வாசன்
சிதம்பரம்
இளங்கோவன்
ஜெயந்தி நடராஜன்
....
இவர்களுக்கு அடுத்த லெவலில்
யசோதா
ஞானசேகரன் 
வசந்த் & கோ - வசந்த் 
...
இன்னும் சட்டென்று பட்டியலிட முடியாத மேலும் 20-30 பெயர்கள். இந்த தலைவர்களின் உண்மையான செல்வாக்கு என்ன என்று தேர்தலில் தனியாக நின்றால் கச்சிதமாக கணிக்க முடியும்,.  தேர்தலில் தோற்ற பிறகு, செல்வக்கில்லாதவர்களை எளிதில் களையெடுக்க முடியும். 

எல்லோரும் சொல்வது போல் பீகாரில் காங்கிரஸ் ஸி ற்கு பிரம்மாண்ட தோல்வி என்று சொல்ல முடியாது. என்ன முன்னர் 4 M L A இருந்தார்கள். இப்போது 2 தான். ஆனால், அங்கு இருக்கு வேற்று வெட்டு தலைவர்களை அடையாளம் காண தேர்தல் வழி வகுத்து விட்டது. அதை தான் இந்த தேர்தல் இங்கு செய்யும். 

இரண்டு, கருணாநிதிக்கு பிறகு தி மு க பல பிரிவாக பிரிந்து விடும் என்று தோன்றுகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் ஒன்றும் இல்லை. அதனால், கருணாநிதிக்கு பிறகு வரும் வெற்றிடத்தை நல்ல முறையில் காங்கிரஸ் உபயோகப்படுத்த பார்க்கிறது. இந்த தேர்தலில் தனியாக நின்றால், காங்கிரஸ் திராவிட கட்சிகளுக்கு நல்ல ஒரு மாற்றாக காட்சி அளிக்கும். இன்றைய  தேதியில் அப்படி யாரும் இல்லை என்பதே உண்மை!

மூன்றாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தி மு க மட்டுமே காரணம் என்று எளிதில் கை கழுவி விடலாம். ஓர் அளவிற்கு மேல் தி மு க வும் எதுவும் செய்ய முடியாது. சோனியா இந்த ஊழலில் பங்கு பெற்றிருந்தால் கருணாநிதியும் பங்கு பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினால் இருவருமே மாட்டிக்கொள்வார்கள். அதனால், மேலும் மேலும் குட்டையை குழப்புவார்களே ஒழிய வெளிப்படையாக ஒன்றும் நடக்காது!

எல்லாவற்றையும் பார்த்தால், நீண்ட நாள் திட்டப்படி தனியாக நிற்பது காங்கிரஸ்ஸிற்கு நன்மையே!




மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, March 4, 2011

தினமலரின் கேவலமான செய்தி தலைப்பு!


செய்தியை பார்த்தால், 

கோவை ஒண்டிப்புதூர், நேருநகர் இரண்டாவது வீதியில் வசிப்பவர் கணபதி கவுண்டர் (93); மனைவி நஞ்சம்மாள் (88). இவர்களுக்கு, இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதால், வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். நேரு நகர் வீட்டில், வயதான தம்பதியினர் மட்டுமே வசிக்கின்றனர்.


மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, நஞ்சம்மாள், கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி காலை, வீட்டை விட்டு வெளியே சென்ற நஞ்சம்மாள் திரும்பவில்லை. குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம், சிங்காநல்லூர் போலீசில், கணபதி கவுண்டர் புகார் கொடுத்தார். நஞ்சம்மாளை, போலீசார் தேடுகின்றனர். 


இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? மனைவி காணாமல் போய்விட்டால் வயதானவரானால் தேடக்கூடாதா? 
பரபரப்புக்காக எதையும் எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த முதியவர் இவர்கள் மீது வழக்கு தொடுத்தால், மூன்றாம் பக்கம் யாரும் பொதுவாக பார்க்காத இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஒரு மன்னிப்பு கேட்டு விடுவார்கள். 

இவர்களை புறக்கணிக்க வேண்டும்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, February 13, 2011

யுத்தம் செய்!


தமிழில் இது வரை வந்த மிக சில Crime Thriller வகை படங்கள் பெரும்பாலும் நேர் கோட்டில் செல்லும் கதையை வைத்தே வெளி வந்துள்ளன. அதாவது குற்றங்களின் நிகழ்வு. துப்பறிதல். வில்லனை அடைதல் என்ற நேர் கோட்டிலேயே பயணித்துள்ளன.
பெரும்பாலும் மற்ற எல்லாவற்றையும் காட்டி விட்டு முகத்தை மட்டும் காட்டாதது மட்டும்  பெரிய சஸ்பென்ஸ் - ஆக இருந்து வந்துள்ளது.

இவை இரண்டு விஷயத்திலுமே முற்றிலும் மாறு பட்ட படம் யுத்தம் செய்!
ஒரு விஷயத்தை சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக கதையை வளர்த்து கிட்ட தட்ட பாதி படத்தில் அதற்க்கு முற்றிலும் மாறான கோணத்தில் கதை திருப்பவதில் மிஸ்கின் பெரிய வெற்றி பெற்றுள்ளார்! த்ரில்லர் வகை படங்களில் முன்னோடியான Psycho படத்தில் இதே உத்தியை கையாண்டிருப்பார் ஹிட்ச்காக்! இது கத்தி மேல் நடப்பது போன்றது. இதில் முக்கிமானது இந்த மாறுபட்ட கோணங்களின் blending and transition. இந்த விதத்தில் மிஸ்கின் அருமையாக இதை கையாண்டிருக்கிறார்!

இரண்டாவது பார்வையாளர்களை உள்ளிழுக்கும் கலை. பார்ப்பவரும் புத்திசாலிதான். எல்லாவற்றையும் சொல்லித்தான் விளக்கவேண்டும் என்பதில்லை. Being suggestive than being explicit adds an element of mystery and when the viewer understands that suggestive thing, he feels better about the story as well as himself! Sixth Sense படத்திலும் சியாமளன் இதை பண்ணியிருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக நாமும் இந்த படத்தில் ஒரு பாகமாகி விடுகிறோம்!

யாரை எந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டும் என்று மிஸ்கின் தேர்வு செய்வது அவரின் மிக பெரிய பலம்! மிக புத்திசாலித்தனமாக he exploits the off screen image! இதிலும் அவர் மிக வித்தியாச படுகிறார். எல்லோரும் Y G Magendra வை ஒரு நகைச்சுவை நடிகராக பார்த்த போது, தொலைகாட்சியில் ஒரு நல்ல character role artist -ஆக பார்த்த போது, மிஸ்கின் அந்த பிம்பத்தை மட்டும் மிக அழகாக உபயோக படுத்தியுள்ளார்! ஒரு மென்மையான மனிதர் மூர்கமாக மாறுவதை காட்டும்போது அதன் maximum effect இந்த casting -இனால் வருகிறது!

மொத்தத்தில், யுத்தம் செய் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்!

மிஸ்கின் should be proud of this achievement!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, February 3, 2011

பூனை குட்டி வெளியே வந்து விட்டதா?



இங்கு இருக்கும் செய்தி முதன் முறையாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியை சம்பந்த படுத்தியிருக்கிறது! இதில் கூறியது உண்மையாக இருந்தால் தப்புவது கஷ்டம் போல் உள்ளது

Chinese பழமொழி ஒன்றில்   சொல்வது போல், we are living in interesting times!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, January 27, 2011

அவங்க மட்டும் ஒழுங்கா?



கருணாநிதியின் சமாளிப்புகள் பெரும்பாலும் மூன்று வகை. 

ஒன்று. மற்றவர்கள் மட்டும் ஒழுங்கா? அவர்களும் இதே லட்சணம் தான் என்பது ஒன்று. விலை வாசி புள்ளி விவரம் சொன்னால், மற்ற மாநிலங்களில் தனக்கு சாதகமானவற்றை சொல்வதும் இதில் சேர்த்தி!
இரண்டாவது. இதற்கெல்லாம் காரணம் ஆரியர் என்பது! அது எதுவானாலும்.
மூன்றாவது. கேள்வி கேட்டவரை சந்தேகத்துக்கு உள்ளாக்குவது! 

இன்றைய கேள்வியும் நானே பதிலும் நானேவில் முதல் வகை சமாளிப்பிற்கு சாம்பிள்கள் சில..  

இலவசங்கள் என்ற பெயரில் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி வரும், தி.மு.க., அரசு மக்களை கடனில் மூழ்கடித்துள்ளது என்று தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?


இந்த ஆண்டு கூட மேற்குவங்க அரசு வாங்கியுள்ள கடன் தொகை 16 ஆயிரத்து 260 கோடி ரூபாய். தமிழ்நாடு பெற்ற கடன் 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய். இதிலிருந்து எந்த மாநில கடன் சுமையை மக்கள் தலையிலே ஏற்றி உள்ளது என்பதை பாண்டியன் நடுநிலையோடு கூறுவாரா? கடந்த 2001, 2002ம் ஆண்டில் எனது தலைமையிலான, அரசு விட்டுச் சென்ற கடந்த 32 ஆயிரம் கோடி ரூபாய். அந்தக் கடன் 2005, 2006ம் ஆண்டு இறுதியில் அ.தி.மு.க., ஆட்சி பதவியில் இருந்து நீக்குகின்ற காலக் கட்டத்தில் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி? இலவசங்கள் வழங்காத ஜெயலலிதா ஆட்சியிலே கடனே வாங்கவில்லையா? அந்தக் கட்சியோடு கூட்டணி சேர தா.பாண்டியன் சென்றிருப்பது எந்த அடிப்படையிலே நியாயம்? நியாயத்தைப் பாண்டியனிடம் கேட்க முடியுமா?


வழக்கம் போலத்தான்! அவர்களும் கடன் வாங்கினார்கள். நானும் வாங்கினேன். என்ன தவறு?


மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று ஹெலிகாப்டரிலேயே திரும்பியிருக்கிறாரே?


தமிழகத்திலே இது வரை பல மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அ.தி.மு.க., ஆட்சி நடை பெற்ற காலத்திலும் கூட கொல்லப்பட்டுள்ளனர். உதாரணமாக 1991, 1996ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடை பெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதில் எந்த ஒரு மீனவர் வீட்டுக்காவது, ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வேண்டாம், ரயிலிலோ, காரிலோ சென்று இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுண்டா? அப்போதெல்லாம் போகாமல், இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வருகிறது என்றதும், நாகப்பட்டினத்திற்குச் சென்று ஆறுதல் கூறுகிறார் என்றால் அது உண்மையிலே பாசமா? வேஷமா? ஆறுதல் கூறப் போன இடத்திலே கூட தான் ஆட்சிக்கு வர மீனவர்கள் ஓட்டு அளிக்க வேண்டுமென்று தான் ஜெயலலிதா கோரிக்கை வைத்திருக்கிறார்.

திருமண விழாக்களில் அரசியல் மட்டுமே பேசுவதும் எந்த முறையில் சேர்த்தியோ! 


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, January 22, 2011

முதல்வரின் அறிவிப்பு!


முதல்வரின் இன்றைய அறிவிப்பினால் தமிழகத்தில்  எதிர்பாராத திருப்பங்கள் நடை பெற்றுள்ளன. ஆகாயத்தையும் தாண்டுமோ என்று எல்லோரும் நினைத்த விலைவாசி இந்த அறிவிப்பினால் பெரும் சரிவை சந்திக்க உள்ளது. 
தெருவெங்கும் இருக்கும் டாஸ்மார்க்கினால் மக்கள் கெட்டழியும் நிலையும் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் இந்த அறிவிப்பின் மூலம் பெரும் மாற்றம் காணும் என்பது உறுதி. 
அகில இந்தியாவே பெட்ரோல் விலை உயர்வை சந்திக்க முடியாமல் முழிக்கும்போது முதல்வரின் இந்த அறிவிப்பு இதற்க்கு ஒரு தீர்வு காண்கிறது. பெட்ரோல் விலை குறையும் என்பதால் எல்லா பொருட்களின் விலையும் குறையும் வாய்ப்புள்ளது.
பத்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லை என்பதால் மாணவர்களிடையே பெரும் சரிவை சந்தித்திருக்கும்  கற்கும் ஆர்வம், இந்த அறிவிப்பின் மூலம் தீர்வு சொல்லியிருக்கிறார் முதல்வர். சமீபத்தில் ஒரு பதிவர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத படிக்க கூட தெரியவில்லை என்று ஒரு பதிவு எழுதியிருந்தார்.
தினம் ஒரு இலவசம் என்று எதிர்பார்த்து மக்கள் வாழும் சுயமரியாதையும் உழைக்கும் ஆர்வமும் அற்ற சமுதாயத்திற்கு இந்த அறிவிப்பின் மூலம் தீர்வளித்திருக்கிறார் முதல்வர். 
கிட்ட தட்ட ஆயிரம் விவசாயிகள் கடந்த சில வருடங்களில் தற்கொலை செய்து கொண்ட துயரம் இந்த அறிவிப்பினால் முடிவிற்கு வந்திருக்கிறது.
ரேஷனில் கிடைக்கும் அரிசியை விட கட்டடம் கட்ட தேவையான மணல் அதிக விலை விற்கும் அதனால் கட்ட தொழிலினால் பாதிப்படைவது இதனால் முடிவிற்கு வரக்கூடும்.
தமிழ் நாடெங்கும் விவசாய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட் பிளாட்டக மாறுவதும், தினம் அதிகரிக்கும் சாலை போக்குவரத்தும், என், ஈழ தமிழர்களின் அல்லல் கூட இந்த அறிவிப்பினால் மாறலாம்.

அப்படி என்ன அறிவிப்பு என்கிறீர்களா?


எவ்வளவோ பிரச்சனைகளால் மக்கள் அன்றாடம் அவதிப்படும்போது முதல்வரின் இந்த 'பொறுப்பான' அறிவிப்பு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடும் தானே?



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வீரப்ப மொய்லி - இரட்டை நாக்கு!


இந்த செய்தி, முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களின் மருமகன் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பற்றியது. இந்த செய்தியின் சாரம் : வீரப்ப மொய்லி சொல்வது என்ன என்றால், "இந்த குற்றசாட்டுகள் எந்த அளவிற்கு உண்மை என்று தீர விசாரிக்க வேண்டும். தீர விசாரிக்காமல் நான் அதை பற்றி சொல்வது முறையாகாது". இது சென்ற மாதக்கடைசியில்.

இதே போல இன்னொரு செய்தி, எடியூரப்பா மற்றும் அவர் குடும்பத்தினர் நில ஆக்கிரமிப்பு சம்பந்த பட்டது. இந்த செய்தியில் வீரப்ப மொய்லி எடியூரப்பா கிட்ட தட்ட குற்றவாளி என்ற முடிவிற்கே வந்து விட்டார்! இவர் மீதும் இன்னும் எந்த குற்றசாட்டும் நிரூபணமாகவில்லை.

என்ன, எடியூரப்பா எதிர் கட்சி. பாலக்ருஷ்ணன் அப்படி இல்லை! 

போடோவில் மொய்லி. ஒட்டு போட்டதோடு உங்கள் கடமை முடிந்தது. மூடிகிட்டு இருங்க என்கிறாரா?
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, January 21, 2011

நகை முரண்!


இன்றைய தினமலரில் வந்தது.. 
ஊழலை ஒழிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழுவில் விவசாய அமைச்சர் சரத்பவார், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இதில் இருக்கும் எவருக்காவது இந்த குழுவில் பங்கு பெற தகுதி உண்டா? சரத் பவார் பற்றி ஈ எறும்புக்கு கூட தெரியும். வீரப்ப மொய்லி ராஜாவிற்கு பரிந்து வந்தவர். பிரச்சனையை பெரியாதானவுடன் அதை பற்றி பேசாமல் நழுவுபவர். அழகிரி பற்றி சொல்லவே வேண்டாம். 

இந்த லட்சணத்தில் இவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பரிந்துரைகள் வழங்குவார்களாம். 

திருடர்களையே   திருட்டை குறைக்க வலி கேட்கும்  விசித்திரமான ஜனநாயகம் இந்தியாவில்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, January 17, 2011

முரளி தியோரா!


எவ்வளவு நாள் ஒரே பொய்யை சொன்னால் அது உண்மையாகும்? 

இங்கு முரளி தியோரா சொல்வது இந்தியாவின் பெட்ரோல் கம்பனிகள் நிறைய நஷ்டத்தை அடைவதால் பெட்ரோல் விலை உயர்வை தவிர வேறு வழியில்லை! எத்தனையோ முறை - வினவு மற்றும் பலர், ஏன் நான் கூட  - பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் அரசு விதிக்கும் வரிதான் என்று சுட்டி காட்டிய பிறகும், அரசுக்கு சொந்தமான இந்த கம்பனிகள் நஷ்டமடைகிறது என்று சொல்வது ஜமக்காளத்தில் வடி கட்டிய பொய்!

ஒரு கையில் அரசு வரி விதித்து விலையை உயர்த்திவிட்டு, வரி போக அந்த நிறுவனங்களுக்கு போகும் வருமானம் கம்மி. அதனால் மேலும் விலையை உயர்த்துகிறோம் என்று அறிவிக்கிறார்?

இது போன்ற அண்ட புளுகு மந்திரிகளை என்ன செய்யலாம்?

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, January 15, 2011

மாண்டேக் சிங் அலுவாலியா!



இத்தனை நாள் அரசியல் வாதிகள் 2G விஷயத்தில் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தது போதாது என்று இப்போது இவரும் இதற்கு ஒத்து ஊதுகிறார்! 

இதில் இவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம் SWAN மற்றும் UNITECH கம்பனிகள் பாதிக்கும் கீழான பங்கை ஏகப்பட்ட விலைக்கு விற்ற குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லியிருக்கிறார். இவர் சொல்வது, அந்த அதிக பணம் promoter களுக்கு தரப்படவில்லை. அந்த கம்பெனியிலேயே இருக்கிறது. இது வேறு. பணம் கொடுத்து பங்கு வாங்குவது வேறு என்று. 

ஒரு கடை நடத்துகிறீர்கள். ஒரு வருடம் கழித்து வேறொருவர் பங்கு தாரராக சேர வருகிறார். கடையின் அப்போதைய மதிப்பில் பாதியை அவரை தர சொல்லி அவரை பாதி பங்குதாரராக்கி கொள்கிறீர்கள். அப்போது அவர் கொண்டு வந்த பணத்தை உங்களிடம் கொடுக்காவிட்டாலும் அதன் மீது உங்களுக்கு உள்ள உரிமை எப்போதும்  உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது. 

சேரும்போது கொடுக்கும் பணம் அந்த கம்பனியின் அன்றைய மதிப்பின் படி கொடுப்பது. கொடுத்தபின் இந்த மாதிரி கதை விடுவது மக்களை முட்டாளாக்கும் முயற்ச்சியே!

ஒன்று மட்டும் முழுமையாக தெரிகிறது. காங்கிரஸ்ஸின் பங்கு கைக்கு வந்து விட்டது. பூசணிக்காயை முழுமையாக மறைக்க பார்க்கிறார்கள். 

மாண்டேக் போன்றவர்களுக்கு பாரதி அன்றே சொன்னான், படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் ஐயோ என்று போவான் என்று!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...