Friday, May 3, 2013

தெரிந்த பெயர்கள். தெரியாத கதைகள் -1


என் புரிதல் படி, இந்து மதம் பலமுறை, பலவிதமாக சொல்வதில் முக்கியமானது... நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் உண்டான நல்ல / தீய பலன்களை அடைந்தே தீருவோம். அதை விளக்கும் வகையில் ஒரு கதை..

முன்னொரு காலத்தில் அஷ்ட வசுக்கள் என்ற தேவர்கள் இருந்தனர்.  அவர்களும் அவர்கள் மனைவியரும் ஒரு முறை இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு காட்டிற்கு வந்தனர். வந்த நோக்கம் சுற்றிப்பார்த்து அனுபவிக்க. அப்போது அங்கிருந்த வசிஷ்ட மகரிஷி ஆசிரமத்தை பார்த்தனர். அப்போது அவர் அங்கில்லை. வெளியே எங்கேயோ சென்றிருந்திருக்க வேண்டும். ஆசிரமத்தை சேர்ந்த நந்தினி என்ற பசுவை கண்டனர். நித்ய யவ்வனத்தை - இளமையை- வழங்கும் பால் கொடுக்கும் சிறப்பை உடையது நந்தினி.

எட்டு வசுக்களில் ஒருவரான பிரபாசாவின்  மனைவிக்கு இந்த பசுவை நாம் கொண்டு சென்றால் என்ன என்று தோன்றியது. அவள் தன்  கணவனிடம் இதை தெரிவித்தாள். அவள் கணவன்.." நமக்கெதற்கு இது? நமக்கு இளமை என்றும் சாஸ்வதம். இதன் பால் நமக்களிக்கப்போவது எதுவும் இல்லை. மேலும், வசிஷ்டர் இல்லாத போது பசுவை கவர்ந்து செல்வது தவறு" என்றான். 

அதற்கு அவள் "இந்த பசு எனக்கில்லை. மானிடப்பெண் ஒருத்தி என் தோழி. இந்த பசு அவளிடம் இருந்தால் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களால் முடியாது என்றால் விட்டுவிடுங்கள். எதற்கு வியாக்யானம்?" என்றால்.

இதற்கு மேலும் வாதிக்க முடியாத  பிரபாசா பசுவை கட்டி இழுத்துவர முனைந்தான். தனி ஒருவனாக இழுக்க முடியாததால் மற்ற வசுக்களின் உதவியை வேண்டினான். அவர்களும்  தேவவிரதனுடன் இணைந்து  நந்தினி என்ற பசுவை வசிஷ்டர் வருவதற்கு முன் கட்டி இழுத்துச்சென்றனர். கொஞ்சம் பொறுத்து வசிஷ்டரிடம் அனுமதி பெற்று சென்றிருக்கலாம். க்ஷண கணத்தில், ஆமாம்.. அவரென்ன நம்மை விட பெரியவரா என்ற அஞ்சானம் அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது. 

வசிஷ்டர் வந்தவுடன் நந்தினியை காணாது திடுக்கிட்டார். எனினும் திரிகால ஞானியான அவர் பசுவை இழுத்துச் சென்றது யார் என்று எளிதில் அறிந்துகொண்டார். இழுத்துச்சென்ற எட்டு பேரும் மனிதராய் பிறக்கக்கடவது! என்று சாபமளித்துவிட்டார். 

அதை கேள்விப்பட்ட உடன் வசுக்கள் எட்டு பேரும்  வசிஷ்டரிடம் மன்னிப்பு கோரினர். க்ஷண நேரத்தில் இந்த நிலை வந்துவிட்டதே என்று வருந்தினர்.

வசிஷ்டர் அதற்கு "செய்த தவற்றுக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். நான் இட்ட சாபத்தை என்னாலும் விலக்கிக்கொள்ள முடியாது. போகட்டும்.  சாரம் விலகாமல் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன். பசுவை இழுத்துச்சென்ற பிரபாசா நீண்ட நாள் மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து பின் இங்கு வர வேண்டும். மற்றவரெல்லாம் பிறந்த உடனே மரணித்து இங்கு வந்துவிடலாம். " என்றார்

ஏதோ இந்த வரையாவது குறைத்தாரே என்று பிரபாசாவை முறைத்தவாரே அங்கிருந்து வசுக்கள் சென்றனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு உடனே மரணிப்பதையும் உறுதி செய்துகொள்ள கங்கையை அடைந்தனர். கங்கா மாதாவை வேண்டி, அவர் ஒரு அரசனை மணம் செய்துகொண்டால் தாங்களே அவருக்கு குழந்தைகளாக பிறப்பதாகவும்  முதலில் பிறக்கும் ஏழு குழந்தைகளையும் உடனே கங்கை ஆற்றில் விட்டுவிடும்படியும் அதன் 
மூலம் தங்கள் சாபம் நிவர்த்தியாகும் என்று மன்றாடிக்கேட்டுக்கொண்டனர். அரசன் மகனாகப் பிறந்தால் நீண்ட நாள் வாழப்போகும் பிரபாசாவும் கஷ்டப்படாமல் வாழ்வான் என்று நினைத்தனர். கங்கையும் மனம் இறங்கி 
ஒப்புக்கொண்டார்.

கங்கைக்கரையில் கங்கையை மங்கை வடிவில் ஒருநாள் கண்ட சந்தனு மதி மறந்தார். மணமுடிக்க ஆசைப்பட்டார். சந்தனு அவரை மணமுடிக்க ஆசைப்பட்டவுடன் மணம் செய்துகொள்ள கங்கா தேவி ஒரு நிபந்தனை விதித்தார். தான் என்ன செய்தாலும் தடுக்கக்கூடாது என்பதும், அதை ஏன்  செய்தாய் என கேட்கக்கூடாது என்பதுமே அந்த நிபந்தனை. கங்கையின் அழகில் மதி மயங்கிய சந்தனுவும் அப்படி செய்வதாக வாக்களித்தார். இது போன்ற சாபம் இருப்பதும், அதன் பொருட்டே கங்கை பிற்காலத்தில் நடந்து கொள்வதும் மானிடரான சந்தனு அறிந்துகொண்டால் அனைத்தும் விரயமாகும் என்ற காரணமே இப்படி ஒரு நிபந்தனைக்கு வழி வகுத்திருக்க வேண்டும்.

அவர்களுக்கு பிறந்த முதல் ஏழு  குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கங்கையாற்றில் விட்டு கங்கை  கொன்றதையும் சந்தனு தடுத்ததால் தப்பி பிழைத்த எட்டாவது குழந்தை தேவவிரதன் கதையையும் அனைவரும் அறிவோம். இந்த தேவவிரதனே பின்னர்  அனைவராலும் போற்றப்பட்ட பீஷ்மர்! 


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

பால கணேஷ் said...

மகாபாரதம் என்ற ஆலமரத்தின் விழுதுகளான கிளைக் கதைகளில் ஒன்றை அழகாச் சொல்லியிருக்கீங்க. இதை நான் முன்பே படித்திருந்தாலும் இப்போ இங்க படிக்கையிலயும் ரசிக்க முடிஞ்சது!தொடருங்கள்!

bandhu said...

வருகைக்கும் உற்சாகப்படுத்துவதற்கும் நன்றி, பால கணேஷ் சார்!

அப்பாதுரை said...

தெரியாத கதை. சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

bandhu said...

வருகைக்கு நன்றி, அப்பாதுரை.. உங்கள் எழுத்துபோல் கொஞ்சம் ஒருநாள் எழுதமுடிந்தால் தன்யனாவேன்!

MANO நாஞ்சில் மனோ said...

கிளை கதைகள் நல்லாத்தான் இருக்கு....!

சூரைக்கண்ணன் said...

நனிமிகநன்று

சூரைக்கண்ணன் said...

நனிமிகநன்று