Friday, December 26, 2014

பிசாசு!

மிஷ்கின் கிரைம் த்ரில்லெர் படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ரசிகரை புத்திசாலியாக கருதி படத்தின் ஓட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் அவர் உத்தி எனக்கு மிகப் பிடிக்கும். முடிச்சை போட்டுக்கொண்டே போய் வழியில் சில அதை அவிழ்க்கும் தடயங்களை விட்டு கடைசியில் அதை அவிழ்க்கும்போது நமக்கு வரும் திருப்தி.. என்ன சொல்ல. அது ஒரு அனுபவம்.. விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்தப் படத்திலும் அந்த அனுபவம் கிடைத்தது. ஆட்டோ சிக்னலில் நிற்காமல் முன்னே இருக்கும் டூ வீலரில் முட்டி நிற்பது ஒரு சாதாரண நிகழ்வு. அதையும் கடைசியில் ஒரு ஆதாரமாக கொண்டு வருவதில் மிஷ்கினின் அறிவு மிளிர்கிறது!

மிஷ்கினின் மிகப்பெரிய பலம்.. பொதுவான உருவகத்தை உடைப்பது. பாண்டியராஜனையும் பிரசன்னாவையும் வேறு யார் வில்லனாக பார்த்திருப்பார்கள்? அசட்டுத்தன நகைச்சுவை நடிப்பை வழங்கிய YG மகேந்திராவிடம் மிரட்டும் நடிப்பை யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ஆவி என்றாலாவது கொஞ்சம் நல்ல ஆவி உண்டு என்று நினைப்பதற்கு வழி உண்டு.. பிசாசு என்றால் தோன்றுவதே பயம் தான். அதை நல்லதாகவும் இருக்கக் கூடும் என்று புது சிந்தனைக்கு வழி அமைத்திருக்கிறார் மிஷ்கின்.

புத்திசாலித்தனமான படம் பிசாசு. எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் அழகாக எடுத்திருக்கிறார், மிஷ்கின். அதே போல 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கும் ராதா ரவி அவர்களுக்கு பெருமைப் படும் நடிப்பு வாய்ப்பை அளித்திருக்கிறார் மிஷ்கின்.

பிசாசு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Welcome Back , மிக்ஷ்கின்!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, December 6, 2014

குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?ஆஸ்திரேலியாவின் Traffic Accident Commission தனது இருபது வருட சேவையை முன்னிட்டு வெளியிட்டுள்ள விளம்பரம்..

இளகிய மனதினர் பார்க்க வேண்டாம். மற்றவர் அனைவரும் பார்க்க வேண்டியது..குடிக்கும் போது 'என்னடா இது. எறும்பு கடிச்சமாதிரி லைட்டா இருக்கு. போதையே இல்ல' என்று தோன்றினாலே.. உங்களுக்கு போதை ஏற ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.. எப்பாடு பட்டாவது குடித்து விட்டு வண்டி ஓட்டுவதை தவிருங்கள்..

டாஸ்மாக் பற்றி பலரும் பல விதமாக சொல்லியாகி விட்டது.. எனக்குத் தோன்றுவது..

நம்மைப் பற்றி அரசுக்கோ வேறு யாருக்குமோ அக்கறை இருக்கும் என்று நம்ப வேண்டாம். நம் குடும்பம் நம் பொறுப்பு. நம் நலம் அதற்கு முக்கியம். நலமாக இருப்போமே..

குடிப்பது கொடிது. அதனினும் கொடிது குடித்து விட்டு வண்டி ஓட்டுவது!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, October 15, 2014

எது ஊழல்?


முதலில் நான் உண்மை என நினைப்பவை சில..


  • கொள்கை அடிப்படையில் எந்த கட்சிக்கும் பெரிய அளவு தன்னலம் கருதாத தொண்டர்கள் கிடையாது.
  • எந்த கட்சிக்கும் பெரிய அளவு கொள்கை எதுவும் இல்லை,  ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர. 
  • எல்லோரும் தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் தன்னிறைவு அடைய விரும்புகிறார்கள் 
  • யாரையும் சாராமல் தின வாழ்க்கைக்கு தேவையானவற்றை அடைய பணம் தேவையாக இருக்கிறது.
  • எந்த ஒரு கட்சி நடத்தவும் பெரிய அளவு பணம் தேவை. 
  • பதவியில் இல்லாத அரசியல்வாதிக்கு அரசியல் மூலம் சம்பளம் கிடையாது. 

எந்த பணவரவும் இல்லாமல் அரசியல்வாதி எப்படி வாழ முடியும்? சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் 50000 வேண்டியிருந்தால், அரசியல்வாதி குடும்பத்துக்கு அது போல சில மடங்கு தேவை. எதற்கு?

இருப்பை காட்டிக்கொள்ள அடிக்கடி போராட்டம் /உண்ணா விரதம் / பொதுக்கூட்டம் / மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த வேண்டியிருக்கிறது. இன்றைய விலைவாசியில் எது ஒன்றும் நடத்தவும்  குறைந்த பட்சம் ஒரு லட்சம்  முதல் பல லட்சம் வரை தேவையாக இருக்கும். எங்கிருந்து வரும் அந்தப் பணம்?

தனி ஒரு மனிதனாக இல்லாவிட்டாலும் அரசியல்வாதி மூலம் தான் இந்த செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்போது கட்சி கொடுப்பது?


கட்சிகளுக்கான வருமானம் என்றால், கட்சிக்கு வரும் நன்கொடை,அதன் சொத்துக்கள் மூலம் வரும் வாடகைகள் போன்றவை பெரும்பாலானவை. கொள்கைகளே இல்லை என்னும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நன்கொடை என்பது எவ்வளவு இருக்கப்போகிறது?.. கண்டிப்பாக அதிகம் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகளுடன் நன்கொடை என்பது இரு வகையில் இருக்கக் கூடும் (ஊகம் தான்!) ஒன்று செய்து கொடுக்கப் போகிற காரியத்திற்கோ (இந்த  திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்தால் கட்சிக்கு நிதி போன்ற..) / செய்து கொடுத்த காரியத்திற்க்கோ (இந்த ப்ராண்ட் சோலார் வாங்கினால் மட்டுமே ஊக்கத் தொகை என்பது போன்ற..) வருவது.. இரண்டாவது.. நாளை ஆட்சி அமைத்தவுடன் எனக்குப் அமைச்சர் / எம்பி / எம் எல் ஏ.  அதனால் இன்று சம்பாதிப்பதில் கொடுக்கிறேன் என்பது.

ஆக மொத்தம் கட்சிகள் நடத்தத் தேவைப் படும் பணம் சம்பாதிக்க எனக்குத் தெரிந்த வழிமுறைகள் இவைதான்.

அடிப்படையிலேயே நேர்மையுடன் நடத்தவே முடியாத ஒன்றாக இந்த கட்சி நடத்துவது இருக்கிறது. ஆனால் கட்சி நடத்த முடியவில்லை என்றால் ஆட்சிக்கு வர முடியாது. எவருக்கு எந்த அளவு பதவிக்கு வர விருப்பம் இருக்கிறதோ  அந்த அந்த அளவுக்கு கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதோ (அவரே நிதி கொடுப்பதால் / நிதி திரட்டும் வலிமை கொண்டதால்) இல்லை கட்சியை நடத்துவதோ இருக்க வேண்டும்.

மறுபடி அரசியல்வாதிக்கு வருவோம். அவரும் பிழைக்க மாதம் தோறும் பணம் தேவை. நேர்மையாக எந்த வழியும் இல்லை. ஆனாலும் அரசியலில் அவர் இருந்தால்தான் என்றாவது அதிகாரத்துக்கு வர முடியும்.. இப்படி இருக்கும்போது இவர்கள் நேர்மையாக எப்படி இருக்க முடியும்? நேர்மையாக இருப்பது என்பது கட்சி கொடுக்கும் (கொடுத்தால்) பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வது. அப்படி இருந்தால் அடுத்த மாதமே பெரும்பாலானோர் அவரை மறந்து விடுவார்கள்.. அப்புறம் எப்படி அதிகாரத்துக்கு வருவது?

மொத்தத்தில், அரசியல்வாதிகள் பணம் ஈட்டுவது ஏற்கனவே செய்த செலவுகளை சரிகட்டவும் / எதிர்காலத்தில் செய்யப் போகும் செலவுகளை சமாளிக்கவும். அதையும் தாண்டித் தான் அனைவரும் சம்பாதிக்கிறார்கள்.

இப்படி ஒரு சொதப்பல் அஸ்திவாரத்துடன்.. 'ஊழல் இல்லாத அரசு..ஊழலை அடியோடு ஒழிப்போம்' என்பதெல்லாம் வெற்று வாதம் தான்!

ஓரளவு ஊழலை சகித்துக் கொள்வதே நடைமுறை வழி! இல்லையேல், அரசியல் வாதிகள் செய்வது ஊழல் இல்லை. மற்றவர் செய்வது மட்டுமே ஊழல் என்று சொல்லி விடலாம்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, June 10, 2014

காசிருந்தால் இங்கிருக்கவும்..திண்ணை. நம் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் வஸ்து. அயலூரார் ஒரு பொழுது தங்கிப் போவதற்கும், கவனிப்பாரற்ற தத்தா மூலையில் முடங்கிக் கொள்வதற்கும், பகலெல்லாம் வெய்யிலில் இளைப்பாற யாருக்கும் இடம் அளிக்கவும் காலம் காலமாக நம் ஊரில் இருந்து வந்தது.. இப்போதைய இரண்டு பெட்ரூம்.. இரண்டு பாத்ரூம்.. ஒரு ஹால். ஒரு கிச்சன்.. 600 சதுர அடி.. தேவையில் திண்ணை தேவையில்லாமல் போய் விட்டது..எல்லாவற்றிற்கும் அடி நாதம்... என்னிடம் இருக்கும் பணம் என் சௌகர்யத்திற்கு.. மற்றவரிடம் பணம் இல்லை என்றால் அது அவர்கள் தவறு (இப்படி ஒரு வாதத்தை அமெரிக்காவில் முதன்முறை கேட்டு அசந்து விட்டேன்!) ஏனென்றால் அவர்கள் உழைக்க மறுக்கின்றார்கள்! அவர்கள் சௌகர்யத்தை ப் பற்றி நான் ஏன் கவலைப் படவேண்டும் என்ற எண்ணங்களே..

இது எந்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் என்பதை கற்பனை பண்ணிப் பார்க்க வேண்டாம்.. கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்தாலே போதும்..

இங்கிருக்கும் படங்களைப் பாருங்கள். தரையை வெறுமனே வைத்திருந்தால் வீடில்லாத மக்கள் வந்து தூங்கி மற்ற எல்லோருக்கும் 'தொல்லை' தருகிறார்களே என்று லண்டனில் சில இடங்களில் தரையில் ஈட்டி போல கூர்மையான உலோக வடிவங்களை பதித்திருக்கிறார்கள்!
இவர்களே பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டார்கள் கனடாவில் உள்ள ஒரு ஊரின் அதிகாரிகள். வீடில்லாதவர்கள் கூடாரம் அடித்துத் தங்கும் நிலத்தில் கோழிக் கழிவுகளை கொட்டி அவர்களை விரட்ட முயற்ச்சித் திருக்கிறார்கள்.எதை இழந்து எதை பெறுகிறோம் என்றே தெரியவில்லை!

இதைப் பற்றிய செய்தி..

https://ca.news.yahoo.com/blogs/dailybrew/london-criticized-anti-homeless-spikes-canada-better-174042472.html
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, June 9, 2014

சாலை பாதுகாப்பு..சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு மொபைல் போன் பெரிய பங்கு வகிக்கிறது.. இது பற்றி பற்பல விளம்பரங்கள் வந்தாலும் பெரிய பலன் இருப்பதாக தெரியவில்லை.

ஆனாலும் என்னைக் கவர்ந்த சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று.. எவ்வளவு அழகாக டெக்னாலஜியை பயன் படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!


இந்த விளம்பரத்தை அனுபவித்தவர் மனதில் நீண்ட நாள் அந்த பாதிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, March 15, 2014

பெரிய பிரச்சனை.. எளிய தீர்வு..


பார்க்கிங் பல இடங்களில் பெரிய பிரச்சனை.. இந்த பார்க்கிங் லாட்களை பாருங்கள்..
இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது அரை மணி நேரத்துக்கும் அதிகமாக காலியான பார்கிங் இடத்தை தேடுவதற்கே ஆகி விடும்! சில சமயங்களில் அதை விட அதிகமாவதும் உண்டு. ஒரு முறை, சுற்றி சுற்றி வெறுத்துப் போய் திரும்பி வந்ததும் உண்டு..

டி நகரில் கார் நிறுத்த இடம் கிடைக்காமல் ட்ரைவரை சுற்றிக்கொண்டே இருக்கச் சொல்லிவிட்டு நிதானமாக ஷாப் செய்துவிட்டு திரும்ப வருபவர்களை பார்த்திருக்கிறேன்!

பல நாடுகளிலும் இந்த காலி இடம் தேடுவதை பல விதமாக சால்வ் செய்கிறார்கள்..

அமெரிக்காவில் மால்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் முறை.. பார்கிங் சென்சர். ஒவ்வொரு பார்க்கிங் இடத்திற்கும் மேலே ஒரு விளக்கு இருக்கும். பார்கிங் இடத்தில் கார் இருந்தால் சிவப்பு வண்ணத்திலும் காலியாக இருந்தால் நீல வண்ணத்திலும் அந்த விளக்கு எரியும்.

பார்கிங் ப்ளோர் போகுமுன் அந்த ப்ளோரில் எவ்வளவு காலி இடங்கள் இருக்கிறது என்று எண்ணிக்கை இருக்கும். அதிக நேர விரயம் இல்லாமல் பார்க்கிங் செய்துவிட்டு வந்துவிடலாம்..


இப்போது  ஸ்மார்ட் போனுடன் இணைத்தும் சில கம்பெனிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கிறார்கள். இந்த முறையில் இன்னொரு பெரிய அட்வான்டேஜ்.. காரை எங்கே வைத்தோம் என எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்பது தான்.. ஒரே பார்கிங் லாட்டில் ஆயிரம் கார் இருக்கும்போது கண்டுபிடிப்பதும் ஒரு தலை வலியே!

எனக்கு மிகவும் பிடித்த தீர்வை தந்திருப்பது ஒரு கொரியன் கம்பெனி.. மிக எளிய தீர்வு.. எவ்வளவு அழகாக இந்த பிரச்சனையை தீர்த்திருக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது..

நீங்களே பாருங்களேன்!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, March 9, 2014

குடிநீர் தேவைக்கு தீர்வு!இந்த இணைப்பில் இருக்கும் வீடியோவைப் பாருங்கள்..


பெரு நாட்டின் லிமா நகரத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. ஒரு பெரிய விளம்பரப் பலகையில் Air Filter , Condenser , Carbon Filter அனைத்தையும் இணைத்து காற்றில் இருக்கும் ஈரப் பதத்தை உறிஞ்சி குடிநீராக மாற்றும் திட்டம். கடந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு பலகையில் இருந்து 10000 லிட்டர் குடிநீர் எடுத்திருக்கிறார்கள்! எடுத்த குடிநீர் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மூலம் சுத்திகரிக்கப் படுவதால், மிக மிக தூய்மையான ஒன்றாக இருக்கிறது இந்த நீர்.

இதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அந்த ஊரில் காற்றின் ஈரப்பதம் 98% இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.

சென்னையில் காற்றின் ஈரப்பதம் எப்போதுமே 80% க்கு அருகிலோ அதிகமாகவோ.. நம் குடிநீர் தேவைக்கு இப்படி ஒரு வழி சாத்தியமா?

பெருவில் அமைக்கப் பட்டது proof of concept என நினைக்கிறேன். சாத்தியமே என்று நிரூபிக்க நிறுவப் பட்டது. ஆனால், அதை நிர்மாணிக்கவும் தொடர்ந்து அது வேலை செய்யவும் ஆகும் செலவு மிக அதிகமானால் இந்த திட்டம் விரயமாகும். அதே சமயத்தில், விளம்பரப் பலகை என்பது ஒரு பணம் கொடுக்கும் விஷயம். அந்த விளம்பரப் பலகையின் மூலம் வரும் பணத்தைக் கொண்டு இந்த திட்டத்தை நடத்த முடிந்தால்?

சாத்தியம் என்றே தோன்றுகிறது!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, March 5, 2014

உலகமே உங்களுக்கு எதிராக..


உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்ற எண்ணம் எப்பொழுதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா? இல்லை என்றால் இது வரை நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடவில்லை என்று அர்த்தம்!

எனக்கு இன்னும் புரியாத பெரும் புதிர் இது தான். அது எப்படி? நாளும் விலை ஏறிக்கொண்டிருக்கும் பங்கு நான் வாங்கிய அடுத்த வினாடி முதல் கீழ் நோக்கி மட்டுமே செல்கிறது?

இது போன்ற "நாளும் விலை ஏறிக்கொண்டிருக்கும்" பங்குகளை பார்த்தீர்களானால், முதலில் பெரிதாக யாரையும் கவராமல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும்.. பிறகு எல்லா பைனான்ஸ் நியூஸ் வலைகளிலும் அந்த கம்பெனி பற்றிய ஆர்டிகல்  வரும்..  நம்மை ஆர்வம் தொத்திக் கொள்ளும்.. ஓரமாக நின்று பார்ப்போம்.. ஸ்டாக் மார்கெட்டில் திடீரென்று ஒரு 15% அந்த பங்கு விலை ஏறும்.. நம்மை இப்போது பதட்டம் தொற்றிக்கொள்ளும்.. ஐயோ.. கோட்டை விட்டோமே என்று.. சரி இனிமேல் ஏறாது.. நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக்கொண்டு நகருவோம்..


அடுத்த நாள் பார்த்தால், இன்னுமொரு 10% ஜம்ப் ! இப்போது அந்த கம்பெனி பற்றிய ஆர்டிகல் பரவலாக நிறைய வரும்.. அவரவர், இது தான் அடுத்த அமேசன், அடுத்த கூகிள்.. என்ற அளவுக்கு எழுதுவார்கள்..சரி இன்னும் நேரம் இருக்கிறது என்று நம் பங்குக்கு கொஞ்சம் காசை போட்டு அடுத்த பில் கேட்ஸ் நாம் தான் என்று கனவு காண ஆரம்பித்த உடன்..

பங்கு சரிய ஆரம்பிக்கும்..

அடுத்த இரு நாள் இதே போல இறங்கும்.. அது வரை வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய எந்த மகராசனும்.. இப்போது அந்த கம்பெனி பற்றி எழுதமாட்டான். மூன்றாவது நாள், ஒரு புண்ணியவான்.. அந்த கம்பெனி ஏன் உருப்படாது என்று விளக்கமாக எழுதுவான் (இதுவரைக்கும் எங்கடா போயிருந்த?)

அவ்வளவுதான்.. இன்னும் வேகமாக சரியும்.. இப்போதும் சிலர் ஈனஸ்வரத்தில் அது நல்ல கம்பெனி தான்.. இப்போது மார்கெட் செண்டிமெண்ட் சரியில்லை.. உக்ரைனில் போர் வரும் போல இருக்கிறது.. அதனால் தான் நம் ஊரில் உப்பு விலை ஏறுகிறது என்ற மாதிரி வித விதமாக கதை விடுவார்கள்!

நாமும் தலை மேல் கைவைத்துக்கொண்டு அது உண்மைதான் போல இருக்கிறது.. இதோ.. புடின் பின் வாங்கியவுடன் பங்கு எகிறிவிடும் என்று காத்துக்கொண்டு இருப்போம்.. அதற்குள் போட்ட காசில் பாதி காலி! சரி எடுக்கலாம் என்று பார்த்தால்.. பணத்தை தொலைத்த இடத்தில் தானே தேடணும் .. சென்னையில் தொலைத்துவிட்டு சைனாவில் தேடினால் கிடைக்குமா என்று "அறிவு" இடிக்கும்!


சரி போகுது போ என்று.. ஒரு ஜெலுசில் முழுங்கிவிட்டு திருட்டு முழி முழித்துக்கொண்டு அலைவோம் கொஞ்ச நாளுக்கு.

அடுத்த நாள் பேப்பரை பார்த்தால்.. டெஸ்லா விற்கு பதில் பெஸ்லா என்ற புது கார் வரப்போகிறது.. அதற்கு முக்கியமான பார்ட் சப்ளையர்.. கேக்ரான் மேக்ரான் கம்பெனி தான். அடுத்த சூப்பர் ஸ்டாக் இது தான் என்று ஒரு பைனான்ஸ் வலை பக்கத்தில் ஒரு ஆர்டிக்கல் போட்டிருக்கிறான்.. எப்படியாவது ஒரு பத்தாயிரம் புரட்டி அதில் போட்டுட வேண்டியதுதான்.. ஒரே மாதம்.. விலை நூறு மடங்காகிவிடாது?


image credit : to the creators of the image
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, January 31, 2014

அமெரிக்க அனுபவம் -- ஃபாரினர் யாரும் இங்க இல்லை!

என் நண்பர் ஒருவரின் மாமனார் தன் மகள் / மாப்பிள்ளை குடும்பத்துடன் சில மாதம் தங்க சென்ற கோடை காலத்தில் அமேரிக்கா வந்திருந்தார். மகள் மாப்பிள்ளை இருவரும் வேலைக்கு சென்றிருந்த படியால் வீட்டில் தனியாக இருந்தார். யாரோ அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டு இவருக்கு ஒரே குழப்பம் கதவை திறக்கலாமா வேண்டாமா என்று. ஒரு வழியாக கதவை திறந்தவருக்கு அழைப்பு மணி அடித்தவரை பார்த்து இன்னும் குழப்பம். வந்திருந்தவர் ஒரு வெள்ளைக்காரர்.

வந்தவர்.. I was looking for David. He used to live here.. I am sorry if this is not his house.. என்றார்..

இவர் உடனடியாக.. No Foreigner is living here. It is our house!

வந்தவர்.. "யார்ரா ஃபாரினர்" என்று நினைத்திருப்பாரோ?
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, January 29, 2014

கர்ணனை விட பாவம்!

மஹாபாரதத்திலேயே மிகவும் பாவமான ஒரு ஜீவன் என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது கர்ணன்தான். அதேபோல் இன்னொருவர் இருந்தார் என்றால் அது அம்பா தான்! கர்ணனை விட பாவம்! இன்று அவர் கதை..காசி மன்னருக்கு மூன்று புதல்விகள். அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா. திருமண வயது வந்தவுடன் மூவருக்குமாக ஒரே சுயம்வரம் நடத்தினார் மன்னர். அவர்களின் அழகு மிக பிரசித்தி பெற்றதால் பற்பல மன்னர்களும் கலந்து கொண்டனர்.
தன் கூடப் பிறக்காத சகோதரனான விசித்திர வீர்யனுக்கு பெண் தேடிக்கொண்டிருந்த பீஷ்மருக்கு இந்த சுயம்வரம் நடப்பது தெரிந்தது. அவரும் அதில் கலந்து கொண்டார், ஆனால் தனக்காக இல்லாமல் தம்பிக்காக.

முதலில் அவர் வயதான தோற்றத்தை பார்த்த மற்ற அரசர்கள், அவர் வேடிக்கை பார்க்க வந்ததாக நினைத்துவிட்டனர். அவரும் கலந்து கொண்டதை பார்த்து அவரின் வயதையும், அவர் எடுத்த ப்ரமச்சர்ய சபதத்தை சுட்டிக் காட்டியும் எள்ளி நகையாடினர். பீஷ்மர் கொஞ்சம் கொஞ்சமாக கோபமடையத் தொடங்கினார். அதற்கு ஏற்றார்போல இளவரசிகளும் அவரை கண்டு கொள்ளவே இல்லை. இப்போது முழுமையான கோபமடைந்த பீஷ்மர், அங்கிருக்கும் எல்லா அரசர்களுக்கும் சவால் விட்டார் , தன்னை ஜெயித்து ஒரு ஆண் என நிரூபித்துக் கொள்ளச் சொல்லி. எதிர்த்தவர்களை எளிதில் வீழ்த்தி மூன்று இளவரசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அதிக தூரம் செல்வதற்குள் சௌபால நாட்டு அரசர் சால்வா பீஷ்மரை எதிர்த்தார். சுயம்வரம் நடக்கையிலேயே அம்பாவை அடைய விரும்பியவர் அவர். அம்பாவுக்கும் அவர் தனக்கு சரியான துணை என்ற எண்ணம் இருந்தது.. எனினும், வில் வித்தையில் வீரரான பீஷ்மர் சால்வாவை எளிதில் தோற்கடித்துவிட்டார். இளவரசிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சால்வாவிற்கு உயிர்பிச்சை கொடுத்து தன் பயணத்தை தொடர்ந்தார். 

ஹஸ்தினாபுரத்தை அடைந்தவுடன் அவர்களுக்கும் விசித்ரவீர்யனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்து முடித்தார். திருமணத்துக்காக எல்லோரும் கூடியிருக்கும்போது அம்பா முறுவலித்தபடி, "சாத்திரங்கள் அனைத்தும் அறிந்த பீஷ்மரே.. சௌபால மன்னர் சால்வாவை மனதளவில் நான் கணவனாக வரித்து விட்டேன். நீங்களோ என்னை இங்கு பலவந்தமாக கொண்டு வந்து விட்டீர். இப்போது சாத்திரப் படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்!" என்றாள்!

பீஷ்மர் அப்போது தன் தவற்றை உணர்ந்தார். தக்க துணையுடன் உடனே சால்வாவிடம் அம்பாவை அனுப்பிவைத்தார். மற்ற இருவரை விசித்திர வீர்யனுக்கு மணமுடித்தார்.

மிக்க மகிழ்ச்சியுடன் சால்வாவை அடைந்த அம்பாவுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. சால்வா அவளிடம், "எல்லோர் முன்னிலையிலும் பீஷ்மர் என்னை தோற்கடித்து உன்னை தூக்கி சென்றார். அப்படி இருக்கும்போது உன்னை ஏற்பது அவர் எனக்கு பிச்சை போட்டது போல! அந்த அவமானம் எனக்கு வேண்டாம். அவரிடமே சென்று அவர் சொன்னபடி நட!" என்றார்.

மறுபடி பீஷ்மரை அடைந்த அம்பாவை, பீஷ்மர்  இன்னொரு மனைவியாக ஏற்றுக்கொள்ள விசித்திர வீர்யனை பணித்தார். ஆனால் அவனோ, இன்னொருவனை கணவராக வரித்துக் கொண்டவளை நான் மணந்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அம்பா பீஷ்மரிடம் "இப்போது நீங்கள் தான் என்னை மணந்து கொள்ளவேண்டும். இதைவிட வேறு வழியே இல்லை!" என்றாள்.
அம்பா எவ்வளவோ கெஞ்சியும் பீஷ்மர் தன் ப்ரமச்சர்ய சபதத்தை மீற மறுத்துவிட்டார். மறுபடி சால்வாவிடம் செல்ல சொல்லிவிட்டார். மறுபடியும் செல்ல தன்மானம் இடம் கொடுக்கா விட்டாலும், வேறு வழியின்றி அவரிடம் சென்றாள் அம்பா. சால்வாவோ தன் நிலையிலிருந்து மாறாமல் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அடுத்த ஆறு வருடத்தை தனிமையிலும், வெறுமையிலும், துயரத்திலும் கழித்த அம்பா கொஞ்சம் கொஞ்சமாக தன் சாந்த குணங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு பீஷ்மரின் மீதான வெறுப்பை மட்டுமே வளர்த்துக் கொண்டாள். தன் நிலைமைக்கு பீஷ்மரே காரணம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவள் மனதை கல்லாக்கியது. 

சுற்றி இருக்கும் அனைத்து அரசர்களிடமும் சென்று பீஷ்மர் செய்த அநியாயத்தை சொல்லி அவருடன் போர் புரியச் சொன்னாள். மிகப் பெரிய வீரனான பீஷ்மரை எதிர்க்க எவரும் துணியவில்லை. 

கடைசியில் சுப்ரம்மணியரை கடும் விரதத்துடன் பூஜித்தாள்.  அவரும், எப்போதுமே வாடாமல் இருக்கும் தாமரை மலர் மாலை ஒன்றை கொடுத்து, அதை அணிந்து கொள்பவர் பீஷ்மருக்கு எதிரியாவார் என வரம் கொடுத்தார். 

அந்த மாலையை எடுத்துக்கொண்டு மறுபடியும் யாராவது அதை வாங்கிக்கொள்வார்களா என்று பல சத்ரிய மன்னர்களை அணுகினால் அம்பா. அதிலும் தோல்வியே கிட்டியது. பீஷ்மரின் பகையை சம்பாதித்துக்கொள்ள எவரும் தயாராக இல்லை.

மாலை எந்த பலனையும் தராததால் கடைசியாக முயற்சி செய்த துருபத மன்னனின் அரண்மனை  வாயிற்கதவின் மீது அந்த மாலையை விட்டு காட்டுக்கு சென்றாள் அம்பா. அங்கு அவள் கதையை கேட்ட சில சாதுக்கள், பரசுராமரிடம் முறையிடச் சொன்னார்கள். அம்பாவின் கதையை கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்த பரசுராமர், "நான் சொன்னால் சால்வா கட்டாயம் செய்வான். அவனிடம் உன்னை திருமணம் செய்துக்கொள்ள சொல்லட்டுமா" என்றார். 

அம்பாவோ, "எனக்கு திருமணம், குடும்பம், குழந்தைகள் என்ற எல்லா ஆசையும் போய்விட்டது. இப்போது இருப்பது பீஷ்மரை பழி வாங்கும் லட்சியம் ஒன்றே. அதை நிறைவேற்றித்தாருங்கள்" என்று கோரினாள்.


ஏற்கனவே சத்ரியர் அனைவரையும் எதிரியாக கருதிக்கொண்டிருந்த பரசுராமர், பீஷ்மரை எதிர்த்து போர் புரிய முடிவு செய்தார். இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. இருவரும் சுத்த வீரர்கள்! ஆனாலும், அவர் விரும்பும்போது மரணம் ஏற்படும் என்ற வரம் இருந்ததால் பீஷ்மரே வென்றார். பரசுராமர் அம்பாவிடம் " என்னால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டேன். இனி நீ பீஷ்மரிடம் சென்று அவர் கருணையை பெறுவதே வழி" என்றார். 

அதை ஏற்க மறுத்த அம்பா, காட்டுக்கு சென்று சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்.  தவத்தை மெச்சிய சிவன், "பீஷ்மரை நீ கொல்வது இந்த ஜென்மத்தில் முடியாது. அடுத்த பிறவியில், பீஷ்மரின் சாவுக்கு நீ காரணமாவாய்" என வரம் அளித்தார். 

அடுத்த ஜென்மத்திற்கு அதிக நாள் காத்திருக்க விரும்பாத அம்பா உடனே ஒரு பெரிய நெருப்பு வளர்த்து அதில் புகுந்து உயிரை இழந்தாள்!

மறு ஜென்மத்தில், துருபதனுக்கு மகளாக பிறந்தாள் அம்பா.   மறு ஜென்மத்தில் சிகண்டி என பெயர் பெற்றாள். சிறு வயது வந்தபோது ஒரு நாள், வாடாத மாலையைப்  பார்த்து ஆவலுடன் எடுத்து அணிந்து கொண்டாள். அதை கண்ட துருபதன், இதை கேள்விப்பட்டாலே பீஷ்மர் விரோதிப்பாரே என எண்ணி, அவளை காட்டில் வளர ஏற்பாடு செய்தார். துருபதனின் இரண்டாவது மகள் தான் திரௌபதி.

காட்டில் வளர்கையில் சிகண்டி போர் பயிற்சி பெற்றாள். அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாக உருமாறிக்கொண்டு வந்தாள் சிகண்டி.

தக்க தருணம் வரை காத்திருந்த சிகண்டி, பாரதப் போரின்போது அர்ஜுனனை வேண்டி, பீஷ்மருடன் போருக்கு செல்லும் நாள் மட்டும் அவனுக்கு சாரதியாக சென்றான்(ள் ). பாரதப் போரில் பகவான் கிருஷ்ணனே சிகண்டியை ஆணாக ஏற்று அவனை சாரதியாக வைத்துக்கொள்ள அர்ஜுனனிடம் உரைத்தார். தோற்றத்தில் ஆணாக இருந்தாலும், யாரென்று தெரிந்து கொண்ட பீஷ்மர், ஒரு பெண்ணுக்கு எதிராக போர் புரியமாட்டேன் என ஆயுதம் தூக்க வில்லை. அதனால் சரமாரியாக அம்பினால் வீழ்த்தபட்டார் பீஷ்மர்.

அதிக ஆழம் சென்ற அம்பு அர்ஜுனனாலேயே விடப்பட்டது என்ற நிம்மதியுடன் மாண்டார் பீஷ்மர். அம்பாவின் ஆவலும் நீண்ட நாளுக்கு பிறகு தீர்ந்தது!All images belong to the original owners. Thanks to the courtesy of Google Images. 
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...