Sunday, June 7, 2015

முழுமையான சர்வாதிகாரம்..

 கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் டி வி யில் வரும் 'செய்திகள் ' எந்த அளவு நம் கருத்துக்களை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது..

ஒரு மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டு வெளிவந்து உண்மையிலேயே மக்கள் புரட்சி வந்துவிடும் போல இருக்கிறது என்று எண்ணும்போது  திடீர் என்று ஒரு நடிகை குளிக்கும் வீடியோ வெளியாவது.. மிகப் பரபரப்பாக ஒரு கற்பழிப்பு செய்தி  வெளியாவது..என்றும் இல்லாமல் அதற்கு மிகப் பெரிய கவரேஜ்..அதிரடியாக ஒரு கிரிக்கெட் விளையாட்டு நடப்பது.. மிகப்பெரிய நடிகரின் படம் பெரிய தோல்வி அடைவது.. அந்த படத்தில் நஷ்டம் அடைந்த மிக சிலர் நடத்தும் 'போராட்டம்' செய்தியாக தொடர்ந்து வருவது..

இதெல்லாம் தற்செயலா? இல்லை யாராவது தெளிவாக நம் கருத்துக்களை சிதைத்துக் கொண்டே இருக்கிறார்களா?

இதெல்லாம் தெளிவாக நடக்கும் சதி வேலையே என்று கண்முன் போட்டுடைக்கிறது Perfect Dictatorship என்ற ஸ்பானிஷ் திரைப்படம். பார்க்க பார்க்க யாரோ நம் ஊரில் நடப்பதை வெட்டவெளிச்சம் ஆக்குவது போல இருந்தது..கதை இதுதான்..

மெக்சிகோவின் ப்ரெசிடெண்ட் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாக வாயை விட்டு மாட்டிக்கொள்ளும் டைப். அவர் முதல் காட்சியிலேயே அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேசும்போது மெக்சிகோ மக்கள் கடின உழைப்பாளிகள்.. யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.. என்று சொல்ல நினைத்து .. உங்கள் நாட்டு கருப்பர்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவர்களை விட நன்றாக செய்வார்கள் என்று உளறிவிடுகிறார் .. வாட்ஸ் அப்.. Facebook , Twitter என்று எல்லோரும் அவரை கிழித்து தோரணமாய் தொங்க விட.. உடனே அவர் ஓர் டிவி நெட்வொர்க்கை அணுகுகிறார்.. அவர்கள் இதை எல்லோரும் மறக்கவேண்டுமானால் வேறு ஒரு பெரிய செய்தி வேண்டும் என்று ப்ரெசிடெண்ட் கட்சியிலேயே இருக்கும் ஒரு மாநில கவர்னர் பெட்டி நிறய பணம் லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிடுகிறார்கள்.. சட்டென்று பிரச்சனை திசை திரும்பிவிடுகிறது...

ஆனால் பெட்டி வாங்கிய கவர்னர் அசகாய சூரன்.. அந்த டிவி காரர்களுக்கு பணம் கொடுத்து அவர் மீதான செய்தியை மாற்ற முயல்கிறார்.. பேச்சுவார்த்தையின் போதுதான் தெரிகிறது இவர்கள் வீச்சு எவ்வளவு பெரிது என்று.. ஒரேடியாக தன்னை ப்ரெசிடெண்ட் ஆக்குவதற்கு அந்த டிவி யுடனே ஒரு டீல் போட்டுக் கொள்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்ட டிவி யே  கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அவர் இமேஜை வளர்க்கிறார்கள் என்று படம் வளர்கிறது..

நேர்மையாக நடக்கும் ஒரு அரசியல்வாதி.. அவரை டிவி பேட்டியில் எடக்கு மடக்காக கேள்வி கேட்டும் பழைய விவகாரங்களை கிளறியும் அவர் இமேஜை டிவி காலி செய்வது.. இரட்டைக் குழந்தைகள் காணாமல் போவது... அந்த விவகாரத்தை எந்த அளவு முடியுமோ அந்த அளவு பெரிதாக்குவது.. எந்த அளவு அதை 'ஸ்டேஜ்' செய்து காட்டுவது.. என்று கிழித்து தோரணமாய் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஒரு சாம்பிள் காட்சி.. நேர்மையான அரசியல்வாதியின் பழசை கிளற அரசின் உதவியை நாடுகிறார் டிவி அதிபர்.. அவர் கூப்பிடுவது தற்போதய ப்ரெசிடெண்டை .. ப்ரெசிடெண்ட் இருப்பது ஒரு ராணுவ வீரருக்கு அரசு மரியாதை செலுத்தும் விழாவில்.. அப்படி ஒரு விழாவில் இருப்பவரை போனில் கூப்பிட்டு கிட்டதட்ட மிரட்டுகிறார் டிவி அதிபர். யாரிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று அப்பட்டமாக காட்டுகிறது இது! அதுவும் 'என்னய்யா டை போட்டுட்டு இருக்க. கேவலமா இருக்கு. நான் கொஞ்சம் அனுப்பறேன்.. அதை போட்டுக்கோ..' என்று 'நான் உன்னை பாத்துக்கிட்டே தான் இருக்கேன்' என்று உள்ளூட மிரட்டுவது.. அட்டகாசம்!

பற்பல இடங்களில் படம் நம் ஊர் அரசியலை நக்கல் செய்வது போலவே இருக்கிறது. அவர்கள் செய்வதென்னவோ மெக்சிகோ அரசியலை! எல்லா ஊரிலும் இவர்கள் ஒரே மாதிரிதான் போல!

தவறவே விடக்கூடாத படம் இது..  2014இல் வெளியான படம். Netflix இல் உள்ளது.

இந்தப் படம் பார்க்கும்போது உங்களுக்கு ஆருஷி கேஸ்.. நிர்பயா விவகாரம் , லிங்கா விவகாரம்.. லல்லு.. சுப்பிரமணியம் சுவாமி.. சல்மான்.. பிரியங்கா.. ராகுல்.. மோடி.. எல்லோரும் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. அவர்களே பொறுப்பு! ..
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...