Monday, November 25, 2013

அமெரிக்கா ஏன் உலகத்தின் தலை சிறந்த நாடு இல்லை..


HBO என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு ப்ரீமியம் டி வி சேனல். ப்ரீமியம் என்பதால் எந்த விளம்பரதாரர் தொந்தரவும் இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்க முடியும். இந்த சேனலில் முக்கியமாக மூன்று வித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகிறது. சினிமா. சின்னத்திரை  தொடர்கள். பே-பெர்-வியு நிகழ்ச்சிகள்.

இதில் 2012 இல் இருந்து வெளிவரும் தொடர் The Newsroom. ஒரு தொலைகாட்சியில் நியூஸ் வழங்கும் ஒரு டீமில் நடக்கும் நிகழ்ச்சிகள், எப்படிப்பட்ட நேரத்திலும் நேர்மையாக செய்திகளை வழங்க வேண்டும் என்று துடிக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்.. முடிந்தவரை எல்லோரையும் திருத்த முயற்ச்சிக்கும் செய்தியின் நேர்முக பேட்டியாளர்.. உண்மையாக உழைக்கும் துடிப்பான இளைஞர்கள்..அவர்கள் நேர்மையாக இருப்பதால் அவர்களுக்கு வரும் இடையூறுகள், யார் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று அவர்களை காப்பாற்றும் அந்த நெட்வொர்க்கின் தலைவர் என்று பிரமாதமான கேரக்டர்கள்.. அந்த தொடரில் அலசப்படும் நியூஸ் எல்லாம் அந்தந்த நேரத்தில் நடந்த நிகழ்சிகள் என்று.. அருமையாக எடுக்கப்பட்ட தொடர்..

அந்த தொடரின் முதல் நிகழ்ச்சியின் முதல் சில நிமிட கிளிப்.. அதில் இந்த தொடரின் ஹீரோ அமெரிக்கா இன்று ஏன் சிறந்த நாடு இல்லை என்று விளக்கும் ஒரு சுவாரஸ்யமான ஸீன் ..


இது போன்ற ஆக்க பூர்வமான தொடர்கள் நம் ஊரில் ஏன் வருவதில்லை?


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, November 6, 2013

உணவு எண்ணெய்!


அண்மையில் இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது. சீனாவில் கிட்டதட்ட 10% எண்ணெய் இப்படிப்பட்டது தான் என இது சொன்ன தகவல் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம். இதை பார்த்தால் வெளியே சாப்பிடுவதை கண்டிப்பாக குறைக்கத் தோன்றும்!

ஒருவரை ஒருவர் ஏய்த்து பிழைப்பது எந்த அளவிற்கு போனால் இப்படியெல்லாம் கலப்படம் பண்ணத் தூண்டும்?


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, November 5, 2013

நான் ரசித்த பாடல்..


எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கும்போது அதிக சத்தமாக வைக்காமல் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். மௌனத்தை கிழித்துக்கொண்டு வெளிவரும் குரல்..என்பதை தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை..

இந்த பாடல் உணர்த்தும் கருத்தும் அருமை. போருக்கு சென்ற தந்தையின் மரண செய்தியை கேட்டு உறைந்து நிற்கும் மகன்.. அதன் பிறகு அவன் வாழ்க்கை.. தாயின் சோகம்.. எல்லாமே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, October 27, 2013

பார்கின்சன்ஸ் - ஒரு புதிய கண்டுபிடிப்பு!


பார்கின்சன் சின்ட்ரோம்!

இதை கேட்டவுடன் மனக்கண்ணில் தெரிவது பாதித்தவரின் கை நடுக்கம் தான்! நாம் நினைவிலிருத்தி செய்யாத தினசரி செயல்களான சாப்பிடுவது.. குளிப்பது.. உடை உடுத்துவது.. காப்பி குடிப்பது என்று எந்த செயலையுமே பிறர் உதவி இல்லாமல் செய்ய இயலாமை பெரிய கொடுமை!

லிப்ட் லாப் டிசைன்ஸ் ஒரு சமீபத்தில் துவக்கப்பட்ட கம்பெனி. இவர்களின் முதல் ப்ராடக்ட் லிப்ட்வேர் (LIFTWARE)

பார்கின்சன்ஸ் பாதித்தவர்கள்  சாப்பிடுவதை எளிதாக்கி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு. இவர்கள் கண்டுபிடித்துள்ள ஸ்பூன் உபயோகித்து சாப்பிட்டால் 70% வரை கை நடுக்கத்தை அந்த ஸ்பூன் உணராமல் செய்துவிடுகிறது! இதனால் பிறர் உதவியின்றி இவர்களால் சாப்பிட முடியும் என்பது மட்டுமல்ல. பொது இடங்களில் சாப்பிட முடியாமல் தடுமாறுவதையும் குறைக்கும்!

இந்த ஸ்பூனின் விலை $295.00. கொடுக்கும் நிம்மதியோ கணக்கில் அடங்காதது. இந்த கம்பெனியின் சி இ ஒ ஒரு அமேரிக்கா வாழ் இந்தியர். இது நமக்கெல்லாம் ஒரு பெருமை!


இந்த கம்பெனி இணையத்தளம் https://www.liftlabsdesign.com/

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, September 4, 2013

அமெரிக்கா ... பாலம்..

Youtube -இல் உள்ள மிகப்பெரிய சிக்கல்.. பல வித குப்பைகளுக்கு இடையே உள்ள முத்துக்களை கண்டெடுப்பது தான். அப்படி குவிந்துள்ள பலவித குப்பைகளுக்கு இடையே நான் கண்டெடுத்த முத்து இன்று..

சான்பிரான்சிஸ்கோ நகரை ஒரு பக்கம் சூழ்ந்துள்ள தண்ணீரின் மீது தரை வழி இணைப்பதற்கு இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று மிகப் பிரபலமான Golden Gate பாலம். மற்றொன்று Bay Bridge. இதில் பே ப்ரிட்ஜ் போக்குவரத்து மிக அதிகமான ஒன்று. முக்கிய காரணம், அது இணைக்கும் பல நகரங்கள்.42000 மணி நேரம்.. கிட்ட தட்ட ஐந்து வருட கால உழைப்பில் உருவான புதிய 
பாலத்தின் நீட்டிப்பு இங்கு நான்கு நிமிட வீடியோவாக.. 

சில குறிப்புகள் 

  • இந்தப் பாலம் இணைப்பது சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஓக்லாண்ட் நகரங்களை 
  • இதில் இருப்பது ஆறு வழிப்பாதை. போக ஆறு. வர ஆறு. எமெர்ஜென்சிக்கு என்று ஒவ்வொரு புறமும் ஒன்று என மொத்தம் பதினான்கு வழிப்பாதை 
  • ஏற்கனவே இருந்த பாலத்திற்கு இணையாக ஒரு தற்காலிக இணைப்பை கட்டி போக்குவரத்திற்கு பெரிய பாதிப்பில்லாமல் கட்டினார்கள் 
  • மொத்த கட்டமைப்பு உருவாக எடுத்துக்கொண்ட ஐந்து வருடங்களில் மொத்தம் 6 நாட்களே பாலத்தை முழுமையாக மூடினார்கள். அதையும் ஒவ்வொரு முறையும் மூன்று நாட்கள் என மூன்று நாட்கள் விடுமுறை வரும் நாட்களில் மட்டுமே மூடினார்கள். மூடுவதற்கு ஒவ்வொரு முறையும் கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு முன்னேயே அறிவித்துவிட்டு செய்தார்கள். 
  • இந்த வீடியோ தயாரிப்பதற்கு இருபது லட்சம் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன..
ஆச்சர்யமாக இல்லை?

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, August 29, 2013

சரியும் ரூபாயின் மதிப்பு!

Image Courtesy : Google Images

எது நடக்கக்கூடாது என்று பயந்தோமோ அது நடந்து கொண்டிருக்கிறது.
ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. போனவாரம் வரை 1 டாலருக்கு 62 இல் இருந்த மதிப்பு இப்போது 1 டாலருக்கு 67 என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

அரசின் போக்கோ நான்கு குருடர்கள் யானையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாகத்தை தடவிப்பார்த்து அதன் உருவத்தை ஒவ்வொருமாதிரி கற்பனை செய்து கொள்வார்களே, அது போல இருக்கிறது.

NDTV -யின் இப்போதைய நிலையை விளக்கும் கலந்துரையாடலை கேட்டேன். காங்கிரஸ் சார்பாக வந்த ஒருவர் "இப்போதைய நிலைக்கு நாம் அயன் ஓர் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதற்க்கு காரணம் கர்நாடகாவில் அந்த அயன் ஓரில் ஏகப்பட்ட ஊழல். கர்நாடகாவில் அப்போதைய ஆட்சி பி.ஜே.பி. அதனால் இந்த சிக்கலுக்கு காரணம் பி.ஜே.பி. தான்!" என்று ஒரு போடு போட்டார். சும்மா சொல்லக்கூடாது. குடுத்த காசுக்கு நல்லாவே கூவுகிறார்!

அதே கலந்துரையாடலில் இன்னொருவர், "பொருளாதார மேதை" என நினைக்கிறேன்.. (ஊரெங்கும் இந்த "பொருளாதார மேதைகளின்" அட்டகாசம் தாங்க முடியவில்லை!). அவர் சொன்னது.."இந்தியா ஆயிரத்தி நூறு வருடமாக பொருளாதார ரீதியாக முன்னேறாத நாடு. (என்ன கணக்கோ!) கடந்த இருபது வருடமாக தான் இந்த வளர்ச்சி. கொஞ்சம் குறைந்திருக்கிறதே ஒழிய இப்போதும் நாம் மிக பலமாகத்தான் இருக்கிறோம்" என்றார்!

Image Courtesy : Google Images

நமது ப.சி யோ, என்னமோ இப்போதுதான் இதெல்லாம் கண்ணுக்கு தெரிவது போல, "ப.சி.யின் பத்து கட்டளைகளை" வெளியிட்டிருக்கிறார். அதில் முதல் கட்டளை, அரசின்  செலவை குறைப்பது. அதே நேரத்தில் சோனியா எல்லோருக்கும் உணவு என்ற ஓட்டு வாங்கும் திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி புதிய செலவை உருவாக்கி இருக்கிறார். இவர்களெல்லாம் ஒருவரை ஒருவர் கலந்து பேசி ஏதாவது செய்கிறார்களா.. இல்லை சோனியா தவிர மற்றவர் எல்லோரும் புடுங்குவது ஆணியே இல்லை என்கிறார்களா ?

   பதிவுலகத்தின் கண்களாலும், தமிழ் பத்திருக்கைகளின் கண்களாலும் தமிழகத்தை பார்த்துக்கொண்டிருப்பதால் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக இருப்பதாக தோன்றுகிறது.

போகும் போக்கை பார்த்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைத்து பொருட்களும் 25% வரை விலை உயரக்கூடும் என நினைக்கிறேன். அதைவிடக்கொடுமை பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காமல் போவது. சில அத்யாவசியம் இல்லாத ஆடம்பரப் பொருட்கள் கிடைக்காவிடில் தலை முழுகிப்போகாது. (பெட்ரோமாக்ஸே வேணுமா?) ஆனால், முக்கியமான பொருட்களான பெட்ரோலிய பொருட்கள் (பெட்ரோல், டீசல், சமையல் காஸ்..), இறக்குமதி செய்யும் சில மருந்துகள், போன்றவற்றின் தட்டுப்பாடு வந்தால் அது பல விதத்தில் எல்லோரின் வாழ்வையும் பாதிக்கும்.

அரசின் செயல்கள் யாவும்.. எத்தை தின்னால் பித்தம் குறையும்.. என்ற மனோபாவத்தில் பலவற்றையும் முயற்ச்சித்து பார்ப்பது போல இருக்கிறது..

இதற்க்கு நடுவில் சிரியாவின் மீது அமேரிக்கா போர் தொடுக்குமோ என்ற பயம்.. (ஏண்டா ..ஏன் .. ஏன்  இந்த கொலைவெறி? ) பிரிட்டன் பார்லிமென்ட் அந்த நாட்டிற்கு போருக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது கொஞ்சம் ஆஸ்வாசம் தருகிறது!

இந்த நிகழ்வுகள் எல்லோரயுமே பாதிக்கும் என்பது மிக விரைவில் அனைவரும் அறிந்து கொள்வார்கள். என்ன.. அப்போது அது மிக கசப்பாக இருக்கும்!

Image Courtesy : Google Images
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, August 21, 2013

இந்திய பொருளாதாரம் - கவலைக்கிடமான நிலையில்..


Image courtesy : Google Images
இந்திய பொருளாதாரம் மிக அபாயமான நிலையில் உள்ளது. ஒரே மாதத்தில் 7% மதிப்பை ரூபாய் இழந்துள்ளது. இதன் ஆபத்தை இரண்டு உதாரணங்கள் மூலம் உணரலாம்.
கொடுக்க வேண்டிய கடன் டாலரில் திருப்பி கொடுக்க வேண்டியிருப்பதால், ஒரே மாதத்தில் கடன் தொகை 7% அதிகரித்துள்ளது! ஆண்டிற்கு 84% வட்டி!

Image courtesy : Google Images

70% பெட்ரோல் இறக்குமதி ஆவதால், பெட்ரோல் பொருட்கள் விலை மேலும் மேலும் உயரும். நம் நாட்டில் பெரும்பாலான சரக்குகள் (அந்த 'சரக்கு' உட்பட) பெட்ரோல் பொருட்களால் இயங்கும் வாகனங்கள் மூலம் விற்பனை ஆகும் இடங்களுக்கு எடுத்து செல்வதால் எல்லா பொருட்களுமே 7% உயரும்.

இன்னுமொரு நெருக்கடி குறைந்த காலத்தில் திருப்பிக்கொடுக்கவேண்டிய கடன் மிக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஒரே வருடத்தில் இந்தியா திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் - $172 Billion. கிட்டதட்ட  பதினொரு லக்ஷம் கோடி ருபாய் மதிப்பில்! .
Image courtesy : Google Images


திருப்பிக்கொடுக்கவேண்டிய நேரத்தை நீட்டிக்கொள்ளலாம். ஆனால், நாம் இருக்கும் நெருக்கடியான நிலையினால்  வட்டி அதிகமாகும்.

நம் கையிருப்பும் மிக குறைந்துள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி இடையில், இறக்குமதி அதிகமாக இருப்பதால், நம் கையில் உள்ள தொகை ஏழு மாத பற்றாக்குறையை சமாளிக்கும் அளவே உள்ளது.

இது வரை RBI எடுத்த நடவடிக்கை எதுவும் பலனளிக்கவில்லை! 1990-ஆம் ஆண்டு இருந்த நெருக்கடி நிலைக்கு இப்போது வந்திருக்கிறோம்.

அப்போது அதை சமாளிக்க லாப நிலையில் இருந்த பொதுத்துறை நிறுவனகள் ஒன்றொன்றாய் பலி கொடுத்து சமாளிக்க முடிந்தது. இப்போது என்ன செய்யப்போகிறோம்? (BSNL போன்ற பொன் முட்டை இட்ட வாத்துக்களை தனியார் லாபத்திற்காக பலி கொடுத்துவிட்டோம்)

எந்த அளவு இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. எல்லோருக்குமே இதன் மூலம் பாதிப்பு இருக்கும்.

Image courtesy : Google Images

வேலையில்  ஆள் குறைப்பு , வானளாவிய விலை உயர்வு. ஒரே நாளில் பங்கு சந்தைகளில் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் பலர்..

இன்னும் தலைவா ரிலீஸ் ஆகவில்லை என்று கவலைப்படும் பலரை பார்த்தால் தான் கவலையாக இருக்கிறது!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, May 3, 2013

தெரிந்த பெயர்கள். தெரியாத கதைகள் -1


என் புரிதல் படி, இந்து மதம் பலமுறை, பலவிதமாக சொல்வதில் முக்கியமானது... நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் உண்டான நல்ல / தீய பலன்களை அடைந்தே தீருவோம். அதை விளக்கும் வகையில் ஒரு கதை..

முன்னொரு காலத்தில் அஷ்ட வசுக்கள் என்ற தேவர்கள் இருந்தனர்.  அவர்களும் அவர்கள் மனைவியரும் ஒரு முறை இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு காட்டிற்கு வந்தனர். வந்த நோக்கம் சுற்றிப்பார்த்து அனுபவிக்க. அப்போது அங்கிருந்த வசிஷ்ட மகரிஷி ஆசிரமத்தை பார்த்தனர். அப்போது அவர் அங்கில்லை. வெளியே எங்கேயோ சென்றிருந்திருக்க வேண்டும். ஆசிரமத்தை சேர்ந்த நந்தினி என்ற பசுவை கண்டனர். நித்ய யவ்வனத்தை - இளமையை- வழங்கும் பால் கொடுக்கும் சிறப்பை உடையது நந்தினி.

எட்டு வசுக்களில் ஒருவரான பிரபாசாவின்  மனைவிக்கு இந்த பசுவை நாம் கொண்டு சென்றால் என்ன என்று தோன்றியது. அவள் தன்  கணவனிடம் இதை தெரிவித்தாள். அவள் கணவன்.." நமக்கெதற்கு இது? நமக்கு இளமை என்றும் சாஸ்வதம். இதன் பால் நமக்களிக்கப்போவது எதுவும் இல்லை. மேலும், வசிஷ்டர் இல்லாத போது பசுவை கவர்ந்து செல்வது தவறு" என்றான். 

அதற்கு அவள் "இந்த பசு எனக்கில்லை. மானிடப்பெண் ஒருத்தி என் தோழி. இந்த பசு அவளிடம் இருந்தால் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களால் முடியாது என்றால் விட்டுவிடுங்கள். எதற்கு வியாக்யானம்?" என்றால்.

இதற்கு மேலும் வாதிக்க முடியாத  பிரபாசா பசுவை கட்டி இழுத்துவர முனைந்தான். தனி ஒருவனாக இழுக்க முடியாததால் மற்ற வசுக்களின் உதவியை வேண்டினான். அவர்களும்  தேவவிரதனுடன் இணைந்து  நந்தினி என்ற பசுவை வசிஷ்டர் வருவதற்கு முன் கட்டி இழுத்துச்சென்றனர். கொஞ்சம் பொறுத்து வசிஷ்டரிடம் அனுமதி பெற்று சென்றிருக்கலாம். க்ஷண கணத்தில், ஆமாம்.. அவரென்ன நம்மை விட பெரியவரா என்ற அஞ்சானம் அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது. 

வசிஷ்டர் வந்தவுடன் நந்தினியை காணாது திடுக்கிட்டார். எனினும் திரிகால ஞானியான அவர் பசுவை இழுத்துச் சென்றது யார் என்று எளிதில் அறிந்துகொண்டார். இழுத்துச்சென்ற எட்டு பேரும் மனிதராய் பிறக்கக்கடவது! என்று சாபமளித்துவிட்டார். 

அதை கேள்விப்பட்ட உடன் வசுக்கள் எட்டு பேரும்  வசிஷ்டரிடம் மன்னிப்பு கோரினர். க்ஷண நேரத்தில் இந்த நிலை வந்துவிட்டதே என்று வருந்தினர்.

வசிஷ்டர் அதற்கு "செய்த தவற்றுக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். நான் இட்ட சாபத்தை என்னாலும் விலக்கிக்கொள்ள முடியாது. போகட்டும்.  சாரம் விலகாமல் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன். பசுவை இழுத்துச்சென்ற பிரபாசா நீண்ட நாள் மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து பின் இங்கு வர வேண்டும். மற்றவரெல்லாம் பிறந்த உடனே மரணித்து இங்கு வந்துவிடலாம். " என்றார்

ஏதோ இந்த வரையாவது குறைத்தாரே என்று பிரபாசாவை முறைத்தவாரே அங்கிருந்து வசுக்கள் சென்றனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு உடனே மரணிப்பதையும் உறுதி செய்துகொள்ள கங்கையை அடைந்தனர். கங்கா மாதாவை வேண்டி, அவர் ஒரு அரசனை மணம் செய்துகொண்டால் தாங்களே அவருக்கு குழந்தைகளாக பிறப்பதாகவும்  முதலில் பிறக்கும் ஏழு குழந்தைகளையும் உடனே கங்கை ஆற்றில் விட்டுவிடும்படியும் அதன் 
மூலம் தங்கள் சாபம் நிவர்த்தியாகும் என்று மன்றாடிக்கேட்டுக்கொண்டனர். அரசன் மகனாகப் பிறந்தால் நீண்ட நாள் வாழப்போகும் பிரபாசாவும் கஷ்டப்படாமல் வாழ்வான் என்று நினைத்தனர். கங்கையும் மனம் இறங்கி 
ஒப்புக்கொண்டார்.

கங்கைக்கரையில் கங்கையை மங்கை வடிவில் ஒருநாள் கண்ட சந்தனு மதி மறந்தார். மணமுடிக்க ஆசைப்பட்டார். சந்தனு அவரை மணமுடிக்க ஆசைப்பட்டவுடன் மணம் செய்துகொள்ள கங்கா தேவி ஒரு நிபந்தனை விதித்தார். தான் என்ன செய்தாலும் தடுக்கக்கூடாது என்பதும், அதை ஏன்  செய்தாய் என கேட்கக்கூடாது என்பதுமே அந்த நிபந்தனை. கங்கையின் அழகில் மதி மயங்கிய சந்தனுவும் அப்படி செய்வதாக வாக்களித்தார். இது போன்ற சாபம் இருப்பதும், அதன் பொருட்டே கங்கை பிற்காலத்தில் நடந்து கொள்வதும் மானிடரான சந்தனு அறிந்துகொண்டால் அனைத்தும் விரயமாகும் என்ற காரணமே இப்படி ஒரு நிபந்தனைக்கு வழி வகுத்திருக்க வேண்டும்.

அவர்களுக்கு பிறந்த முதல் ஏழு  குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கங்கையாற்றில் விட்டு கங்கை  கொன்றதையும் சந்தனு தடுத்ததால் தப்பி பிழைத்த எட்டாவது குழந்தை தேவவிரதன் கதையையும் அனைவரும் அறிவோம். இந்த தேவவிரதனே பின்னர்  அனைவராலும் போற்றப்பட்ட பீஷ்மர்! 


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, April 25, 2013

கடவுள்!ஒரு தாயின் வயிற்றில் 8 மாதம் வளர்ந்த இரு குழந்தைகள் இருந்தன. ஓரளவு வளர்ந்து விட்டதால் இருவருக்கும் இடம் பற்றாக்குறை! நிறையநாள் இங்கேயே இருக்கமுடியாது என்பது இருவருக்குமே தெரிந்து விட்டது. 

முதல் குழந்தை : "எப்படியும் நாம் கொஞ்ச நாட்களில் இங்கிருந்து  சென்றுவிடுவோம். இங்கிருந்து சென்ற பிறகு கூட இதுவரை இருந்தது போல வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் என நம்புகிறாயா?"


இரண்டாவது : கண்டிப்பாக. இதற்க்கு வெளியேயும் கண்டிப்பாக ஏதாவது இருக்க வேண்டும். எனக்கென்னமோ நாம் வெளியே சென்ற பிறகு நன்றாக இருக்கவேண்டும் என்று ப்ரிபேர் பண்ணிக்கொள்வதர்க்கே இங்கிருக்கிறோம் என்று தோன்றுகிறது!"

முதலாவது : "முட்டாள்! இங்கிருந்து போனபின்னால் வாழ்க்கை கிடையாது. அப்படி ஒன்றிருந்தால் அது எப்படி இருக்கும் என்று சொல் பார்ப்போம்?"

இரண்டாவது : "எனக்குத்தெரியாது. ஆனால் இங்கிருப்பதை விட கண்டிப்பாக வெளிச்சமாக இருக்கக்கூடும். யாருக்குத் தெரியும்? நாம் கால்களால் நடப்போமோ.. வாயில் உணவு உண்ணுவோமோ என்னவோ?"

முதலாவது : "நீ சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனம்.. கால்களால் நடப்பதாவது.. வாயால் உணவு உண்பதாவது.. நமக்கு உணவு வரும் குழாய் (Umbilical cord ) இருக்கிறது. என்ன.. ரொம்ப சின்னதாக இருக்கிறது. அதனால் தான் வெளியே போனபின் வாழ்க்கை இல்லை என்கிறேன்!"

இரண்டாவது : "எனக்கு என்னமோ வெளியே வேறு இடம் இருக்கும் என்று தோன்றுகிறது. அது நாம் இருக்கும் இடத்தை விட மிக வித்யாசமாக இருக்கும் எனவும் நினைக்கிறேன்."

முதலாவது : "நீ சொல்வது தவறு. முடிந்த வரை இங்கேயே இருப்போம். வெளியே போனால் அவ்வளவுதான்!"

இரண்டாவது : "ஒன்று நிச்சயம். வெளியே போனவுடன் நாம் அம்மாவை பார்ப்போம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்."

முதலாவது : "அம்மாவா? நீ அம்மா இருக்கிறார் என்பதை நம்புகிறாயா? எங்கே இருக்கிறார் அம்மா?"

இரண்டாவது : "அம்மா நம்மை சுற்றி எல்லா எடத்திலும் இருக்கிறார். அம்மாவின் உள்ளே தான் நாம் இருக்கிறோம். அம்மா இல்லாவிட்டால் நமது உலகமே இருக்காது."

முதலாவது : "என் கண்ணுக்கு அம்மா தெரியவில்லை. அதனால் அம்மா இருக்கிறார் என்று நம்ப மாட்டேன்."

இரண்டாவது : "கொஞ்ச நேரம் அமைதியாக எதைபற்றியும் சிந்திக்காமல் கேள். அம்மாவை உன்னால் உணரமுடியும்"

முதலாவது அமைதியாக எதையும் சிந்திக்காமல் கேட்கத்தொடங்கியது... 

thanks to my friend, Sandy, for sharing this in her Facebook wall.
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, April 20, 2013

எம்பதி


எம்பதி என்பது மற்றவர் பார்வையில் அவர் பிரச்சனையை உணர்ந்து கொள்வது. 
ஒவ்வொருபிரச்சனையிலும் , மற்றவர் பார்வையில் பார்க்க முடிந்தால் நம் அணுகுமுறையில் பெரிய வித்யாசம் இருக்கும். இதோ ஒரு அருமையான வீடியோ.. 

ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கும் கவலைகளை அறிந்து கொள்ள முடிந்தால் நம் பார்வையில் கருணை இன்னும் அதிகமாக இருக்குமோ?
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, April 7, 2013

இசை அனுபவம்!

இன்றைய இசை அறிமுகம் மிக புதுமையான ஒன்று. அகபெல்லா (A capella) என்பது எந்த வித இசை கருவிகளும் இல்லாமல் இசையையும் பாடகர்களே இசை போலவே பாடிவிடுவது (சத்தம் செய்வது?)

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் பலவற்றில் இதற்கென்றே இசை குழுக்கள் இருக்கும். எந்த இசை கருவியும் இல்லாததால், எந்த முதலீடும் இல்லாமல் மாணவர்கள் இதை பழக முடியும். இசை மீது காதல் ஒன்றிருந்தால் போதும் என்பது இதன் சிறப்பு. 

அகபெல்லாவின் இசை தொகுப்பு ஒன்று..இப்போது அதிலும் புதுமை செய்த ஒருவர் பற்றி. அலா வார்டி (Alaa Wardi).  ஈரானில் பிறந்து சவுதி அரேபியாவில் வாழும் இளைஞர். இசையின் எல்லா வாத்தியங்களின் சத்தங்களையும் அவரே தனித்தனியாக உருவாக்கி எல்லாவற்றையும் இணைத்து அற்புதமான இசை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். எந்த அளவு இசையை ஒருவர் நேசித்துக் கொண்டிருந்தால்  இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்க முடியும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. 

இதோ அவர் வெளியிட்டுள்ள ஒரு ஹிந்தி பாடல்.. 


இன்னும் ஒரு அற்புதமான பாடல் அவரிடம் இருந்து.. அசந்து விட்டேன்.. இசையை எந்நேரமும் சுவாசித்துக்கொண்டிருக்கும் ஒருவரால் தான் இதை செய்திருக்க முடியும். நீங்களும் ரசித்து அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன்..
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 14, 2013

குற்றங்களை குறைக்க எளிய வழி !கடந்த சில மாதங்களாகவே மீடியாவில் வரும் செய்திகளில் முக்கியமானது பெண்களுக்கு எதிரான குற்றங்கள். கிட்ட தட்ட எல்லா விதங்களிலும் செயலற்றதாக இருக்கும் இந்திய அரசு, இதில் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம், வேகமாக செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. அதற்கு அரசுக்கு பாராட்டுக்கள். 

அதே நேரம், அதில் உள்ள சில பிரிவுகள் இந்த சட்டத்தை மட்டும் அல்லாது, ஏற்கனவே இருக்கும் சட்டங்களையும் நீர்த்துப்போகுமாறு செயல் படக்கூடியது. 

அதில் முதலாவது, இருவரும் ஒத்துக்கொண்டு வைத்துக்கொள்ளும் செக்ஸ் ரேப் ஆகாது. மேலோட்டமாக இது சரியாக தோன்றுகிறது. ஆனால், புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு, அந்த இருவரின் வயதும் பதினாறு இருந்தாலே போதும் என்கிறது! பதினாறு வயதில் என்ன தெளிவு இருக்க முடியும்?

இதற்க்கு விளக்கமளித்த அமைச்சர் கூறியது, கிட்ட தட்ட, இருவரும் மனம் ஒத்து வைத்துக்கொள்ளும் செக்ஸ் தவறே இல்லை, இருவருமே மைனராக இருந்தாலும் கூட என்ற வகையில் இருக்கிறது! இது பற்றிய செய்தி

கண்டிப்பாக குற்றங்களை குறைக்க இது ஒரு வழி. செய்தது குற்றமே இல்லை என்றானபின் குற்றங்கள்  குறையுமா இல்லையா?

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, February 6, 2013

மனதை சுற்றி வரும் பாடல்இதோ இன்னுமொரு பாடல். ஒரு முறை கேட்டுப்பாருங்கள். ஆனால் ஒரு வார்னிங். கேட்ட உடன் கால எந்திரத்தில் பின்னோக்கி ஒரு ஐம்பது வருஷம் போய்விடுவீர்கள்! வீடியோவை பார்க்காமல் கண் மூடி இந்த பாட்டை கேட்டாலும் பின்னோக்கி போக முடிவது ஆச்சர்யம்..


கண்மூடி என்றவுடன் ஞாபகம் வருகிறது. பெண்குரல் பாடகர் வைக்கம் விஜயலக்ஷ்மி. பிறவியிலேயே பார்வை இழந்தவர் என்பது ஒரு ஆச்சர்யமான தகவல். வெறும் பத்து வயதிற்குள்ளாகவே நானூறுக்கும் மேற்பட்ட கச்சேரி செய்திருக்கிறார். கடந்த பதினெட்டு வருடங்களாக குருவாயூர் செம்பை சந்கீதோத்சவத்தில் பாடி வருகிறார்.

இதே பாடல் Making of the Song வீடியோவில்..என்ன ஒரு அருமையான குரல்!  அவ்வப்போது மனச்சோர்வு வரும்போதெல்லாம் பிறவியிலே குறைகளுடன் படைக்கப்பட்டவர்களையே நினைத்துக்கொள்கிறேன்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - தவறான முன்னுதாரணங்கள்!விஸ்வரூபம் தடை விலகி படம் வெளிவரும் நேரம். நடந்ததை பார்க்கும்போது பல தவறான முன்னுதாரணங்களை இந்த பட விவகாரம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. 

முதலாவது. படத்தை பார்க்காமல் பல இஸ்லாமிய சமூக சங்கங்கள் இணைந்து இந்த அளவு பெரிதாக எதிர்ப்பை தெரிவித்து படத்தை எங்களுக்கு போட்டு காட்டிவிட்டுத்தான் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதே போல பற்பல சங்கங்கள் வெளிவரும் படங்களுக்கு தடை விதிக்க போராட்டம் நடத்த முன் வரும்.. 

இரண்டாவது, இந்த போராட்டங்களுக்கு பணிந்து படத்தை முன் கூட்டியே அவர்களுக்கு போட்டுக்காட்டியது. இதுவே போராட்டத்தை வலுப்படுத்திவிட்டது. 

மூன்றாவது, தமிழக அரசு தடை விதித்தது. சென்சார் சான்றிதழ் பெற்றபின்னும் அரசு தடை செய்யலாம் என்பது தயாரிப்பாளர்களின் கழுத்து மேல் தொங்கும் கத்தி!

நான்காவது, நீதிமன்றம் 'பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியது. பொறுப்பை தட்டிக்கழிப்பது போல தோன்றினாலும் அடுத்த நாளே சரி செய்து விட்டார் நீதிபதி.

கொஞ்சநாளுக்கு வரும் படங்களுக்கு எதிரே பல லெட்டர் பேட்  சங்கங்கள் போராடும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...