Sunday, December 11, 2016

காங்கிரஸிற்கு தமிழ் நாட்டில் மறுவாழ்வு!


விசித்திரமாகவும், பைத்தியக் காரத் தனமாகவும் தோன்றலாம். கிட்டதட்ட புதைக்கப் பட்ட கட்சி தமிழ் நாட்டில் உயிர்த்தெழுவதா என்ற கேள்வியும் எழலாம். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.


அதிமுக வின் தலைவி திரு ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த உடன் அந்த கட்சியின் / தமிழகத்தின் வெற்றிடம் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஜெயலலிதாவின் ஆளுமை அப்படிப் பட்டது. எம்ஜியாரும் கருணாநிதியும் அடைய முடியாத உயரம் இது.  (வெற்றிடம் பற்றி சென்ற வருடம் நான் எழுதியது)

இப்போது நடராஜன் அவர்களின் சித்து வேலைகளால் கிட்டதட்ட எல்லோரும் சசிகலாவின் பின் ஓரணியில் திரண்டு வருகிறார்கள். இங்கு எல்லோரும் என்பது அறியப்பட்ட / அறியப்படாத அதிமுக 'தலைவர்கள்' மற்றும் மீடியா 'நண்பர்கள்'

ஆனால், மக்களில் பெரும்பாலோருக்கு சசிகலா என்றால் வேப்பங்காய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மக்களின் பொதுவான கருத்து ஜெயலலிதா நல்லவர்தான், ஆனால் சசிகலா தான் எல்லா கெட்டவற்றிக்கும் காரணம் என்பது. யோசித்துப் பாருங்கள். எவருக்காகவாது 10000 பேர் மொட்டை போட்டுக் கொண்டதாக சரித்திரம் உண்டா? எம்ஜியாருக்குக் கூட கிடையாது.

பிஜேபியை பொறுத்தவரை அவர்கள் சசிகலா பின்னால். கௌதமியை அறிக்கைவிட வைத்து சசிகலாவுக்கு ஒரு செக். சேகர் ரெட்டியை ரெய்டு செய்து பன்னீர் செல்வத்துக்கு ஒரு செக். சசிகலா தலைவியாக இருப்பதே பிஜேபி க்கு நல்லது என நினைக்கிறார்கள்.

திமுகவை பொறுத்தவரை, எது செய்தாலும் அவர்களுக்கு கெட்டப் பெயர். அதனால் அமைதியாக இருப்பது மட்டுமே அவர்களுக்கான ஆப்ஷன்.

  இது தான் காங்கிரஸிற்கு சரியான சந்தர்ப்பம். திருநாவுக்கரசர் தலைவராக இருப்பது காங்கிரஸிற்கு பெரிய அதிர்ஷ்டம். நேரடியாக எதுவும் செய்ய வேண்டாம்.

ஜெயலலிதாவின் சகோதரர் மகளை தலைவியாகக் கொண்டு அம்மா திமுக ஆரம்பித்தால், மிக விரைவில் கட்சியும் ஆட்சியையும் அதற்கு வந்துவிடும். அவரை முன்னிறுத்தி காங்கிரஸ் தன்னை பலப் படுத்திக் கொள்ளவேண்டியதுதான்!

ஒரு 10000 கோடி இருந்தால் இதைத்தான் நான் செய்வேன்! இல்லையே!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, January 5, 2016

அமெரிக்க அனுபவம் : பிரச்சனையின் வேர்!போலீசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு விரிசல் என்பதற்கு   எகானமி, தோல் நிறம் என்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களைப் போலில்லாதவர்கள் குறித்த தவறான புரிதலும் இதற்க்குக் காரணம். பிரச்சனையின் அடி வேரை கண்டு அதற்கு தீர்வு காண சிகாகோ நகர அரசு எடுத்த ஒரு நடவடிக்கை இது. ஏழு வருடத்துக்கு முந்தைய வீடியோ என்பதை நினைவில் கொள்ளுங்கள்

எல்லா வகுப்பினரையும் / மதத்தினரையும் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த வீடியோ.
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது இந்த நகரத்தில் மட்டும் 80000 இந்துக்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு போலீஸ் போக நேர்ந்தால் அந்த வீட்டிலுள்ளவர்கள் அதை எப்படி எதிர் கொள்வார்கள் என்று பாடம் எடுக்கிறது இந்த வீடியோ

உண்மையிலேயே இந்த நடவடிக்கையை பார்த்து அசந்து விட்டேன். இதை தான் ஒவ்வொரு பொறுப்பான அரசும் செய்ய வேண்டும். நம் ஊரிலும் போலீஸ் போன்ற பொது நல ஊழியர்களுக்கு இது போன்ற வழிகாட்டிகள் இருக்கும் என நம்புகிறேன்.
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, January 3, 2016

பழைய பட விமர்சனம்! கேப்டன் பிரபாகரன்
பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் கேப்டன் பிரபாகர் படம் பார்த்தோம். சுவாரஸ்யமாக இருந்தாலும் அப்போது பார்த்தபோது தெரியாதது, எந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஒரே படத்தில் கொட்டி கிளறியிருக்கிறார்கள் என்பது!

ஏற்கனவே 100 வது படம் கமல், ரஜனி இருவருக்குமே தோல்விப் படங்களாக அமைந்ததால் விஜயகாந்த் எந்த ரிஸ்கும் எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.


 • போலிஸ் ஸ்டேஷனில் கற்பழிப்பு முயற்சி - வேலியே பயிரை மேய்கிறது போன்ற வீர வசனங்கள்
 • ஷோலே பாதிப்பில் ரயிலை குதிரைகளில் துரத்தி பெரிய சண்டைக் காட்சி (நம் ஊரில் யார் குதிரையில் ரயிலை துரத்தி கொள்ளை அடித்தார்கள்?)
 • இளையராஜா இசையில் குரூப் டான்ஸ் பாடல் - ஆட்டமா தேரோட்டமா - 
 • பலசாலியான வில்லன் - மன்சூரலிகானின் அட்டகாச நடிப்பு 
 • எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு ஹீரோ - கௌரவ தோற்றத்தில் - சரத் குமார் 
 • கொஞ்சம் தெரிந்த இன்னொரு ஹீரோ - லிவிங்க்ஸ்டன் 
 • இந்த கௌரவ ஹீரோக்களின் பரிதாப மரணம் 
 • கௌரவத் தோற்றத்தில் நம்பியார் (ஒரு வசனம் கூட இல்லை! யூ டியுப் பிரிண்டில். மௌன விரதமோ என்னமோ!)
 • கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சிகள் - சரத் குமார் - ரம்யா கிருஷ்ணன் 
 • க்ளைமாக்சில் சண்டைக் காட்சி நடுவில் நிறை மாத கர்ப்பிணி தவிப்பு -- 
 • ரத்தக் களரி சண்டைக்கு நடுவே குழந்தை பிறப்பது -- ரம்யா கிருஷ்ணன் 
 • குழந்தையை பிரசவித்த வுடன் தாய் மரணம் -- ரம்யா கிருஷ்ணன் 
 • வில்லனை பிடித்த வுடன் நின்று விடாமல் நீளமான தீப்பொறி பறக்கும் வசனங்கள் --
 • கோர்ட்டில் மூன்று கொலை செய்த விஜயகாந்த் நிரபராதி என்று விடுதலையாவது (
 • கடைசி கோர்ட் காட்சிகள் எல்லாம்  படு முட்டாள் தனம்!)
 • விஜயகாந்திற்க்கே உரிய கால்களை அதிகம் உபயோகித்து நிறைய சண்டைகள்..Throw the kitchen sink என்பார்கள். குத்துச் சண்டையில் கடைசி ரௌண்டில் ஜெயிக்க தனக்குத் தெரிந்த எல்லா வகை தாக்குதல்களையும் பயன்படுத்தி அடிப்பது. (கிடைத்தால் கிச்சன் சிங்கை தூக்கி அடி!) உண்மையிலேயே எல்லா வித்தையையும் இறக்குவது என்பது இது தான்.

விஜயகாந்தின் உழைப்பு அசர வைக்கிறது. படத்தின் பெரிய வெற்றிக்கு அவர் மட்டுமில்லாமல் மன்சூரும் காரணம். மற்றதெல்லாம் சேப்டி நெட் தான்!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, January 1, 2016

அரசியல் வெற்றிடம்முதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். நான் தமிழகம் இப்போதிருக்கும் நிலையை பார்ப்பது செய்தி ஊடகங்கள் மூலமும், சமூக வலை தளங்கள் மூலமும், பதிவுகள் மூலமும் தான்.

இப்போது இருப்பது போல ஒரு அரசியல் வெற்றிடம் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை. வெள்ளம் வந்த போதுதான் எந்த அளவு அரசு செயல்படாத அரசாக இருக்கிறது என்று தெரிந்தது. ஊரே முழுகிக் கொண்டிருக்கும் போதும் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வெளியே வராத முதல்வரை என்ன சொல்வது?

திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி தலைமையை ஸ்டாலினுக்கு எளிதாகக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார் என நினைக்கிறேன். சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது இரண்டாவது அல்லது மூன்றாவது வருடம் ஸ்டாலினைக் கொண்டு வந்திருந்தால் transition எளிதாக இருந்திருக்கும். இப்போது யார் கூட்டணிக்கு வருவார்கள் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள். வெள்ளத்தில் இறங்கி வேலை செய்திருந்தால் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். மிக தாமதமாக குறைந்த இடங்களில் தென்பட்டது பெரிதாக பலன் அளிக்கவில்லை என நினைக்கிறேன்.

வைகோ வை பொருத்தவரை தங்கத்தட்டில் கொடுத்த வாய்ப்பை தவற விட்டவர் என நினைக்கிறேன். இனி எப்போதும் அந்த வாய்ப்பு வராது. எப்போது தமிழகத்தின் நலத்தை விட தமிழீழத்தின் நலத்தை அதிகமாக  அவர் மதிபிட்டாரோ அப்பொழுதே அவர் அரசியலில் தனிப்பட்டு விட்டார். அவர்தான் புரிந்து கொள்ளவில்லை.

விஜயகாந்தை பொறுத்த வரை, பொறுப்பிலாமல் நடந்து கொள்வதே அவர் மிகப் பெரிய பலமாகக் கருதிக் கொள்கிறார். எல்லோரையும் துச்சமாக மதிப்பது வேறு. பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேறு. அந்த வித்யாசம் தெரியாமல்தான், யாரையும் மதிக்காமல், அது வெளியே தெரியும் அளவு பொறுப்பிலாமல் நடந்து கொள்கிறார். அதை உணர்ந்து கொள்ளும் வரை, அவர் 10% ஓட்டோடு திருப்தி அடைய வேண்டியது தான்!


ராமதாசை பொருத்தவரை அவர் credibility யை அவரே போக்கிக்கொண்டு விட்டார். மாற்றி மாற்றி அலியன்ச் வைப்பது பெரிய தவறு ஒன்ன்றும் இல்லை. யாருக்குமே கொள்கை என்று ஒன்று கிடையாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். என்ன. இது பா மா கா விஷயத்தில் வெளிப்படையாக தெரிந்து விட்டது. அது தான் தவறு. அதை மீறி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.

திருமாவளவன் போன்றவர்கள் உண்மையாக உறுதியாக தன் கொள்கையில் (!) நின்றிருந்தால் ஒரு credibility  இருந்திருக்கும். ஆனால் கொள்கை (!​) விஷயத்தில் எதிர் நிற்கும் பா மா கா போன்றவர்களுடன் எப்போது கூட்டணி அமைத்தாரோ, ராஜ பக்ஷேவுடன் புகைப் படத்துக்கு போஸ் கொடுத்தாரோ அப்போதே அவர் அழிந்துவிட்டார். இவரை அழித்ததில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம் என நினைக்கிறேன்.

கம்யூனிஸ்ட் களை பொருத்தவரை அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மேலும், ஒன்றுக்கும் உதவாத சீனா ஆதரவு, ரஷ்யா ஆதரவு என்பதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் மக்களை பாதிக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்களேயானால் scope உண்டு. என்னைப் பொருத்தவரை, மக்களை பாதிக்கும் விஷயங்களில் உண்மையாக அக்கறை செலுத்துபவர்கள் இவர்கள் மட்டுமே. என்ன பிரயோஜனம். அதை மக்கள் உணரும் வரை இவர்களுக்கு விடிவு காலம் கிடையாது.

பிஜேபி யை பொருத்தவரை தமிழிசை போன்றவர்களை தவிர்த்து வேறு யாரும் அவர்களை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.

கடைசியில் என்ன மிச்சம் என்று பார்த்தால், இருப்பது வெற்றிடம் என்ற உண்மை தான்.

மீள ஒரே வழி , தேர்தலில் ஒரு மைனாரிட்டி அரசு வரவேண்டும். அந்த அரசு, குறைந்தது இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் அரசு அமைக்க முடியும் என்ற நிலை வரவேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது பொறுப்பான அரசு வரும்!மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...