Saturday, April 30, 2011

பர்கா தத் மானத்தை வாங்கிய சுவாமி அக்னிவேஷ்!



இந்த இணைப்பில் உள்ள விடியோவை பாருங்கள்



பர்கா தத் சுவாமி அக்னிவேஷிடம் சசி தரூர், அசோக் சவான் போன்ற அரசியல்வாதிகள் தன் மீது குற்ற சாட்டு வந்தவுடன்  ராஜினாமா செய்துவிட்டார்கள். அதுபோல சாந்தி பூஷன் மற்றும் அவர் மகன் இருவரும் தன் மீது குற்றசாட்டு வந்தவுடன் அது தவறு என்று நிரூபிக்கும் வரை ராஜினாமா செய்யவேண்டும் அல்லவா என்று கேட்கிறார். (என்னமோ அவர்கள் இருவரும் உத்தமர்கள் என்ற தொனியில்)

சுவாமி அக்னிவேஷ் அதற்க்கு கேட்ட நெத்தியடி கேள்வி... நீரா ராடியா டேப் வெளிவந்தவுடன் நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?

உண்மை தானே! தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா? இதற்க்கு பதில் அளிப்பதற்கு எவ்வளவு முழிக்கிறார் பாருங்கள்! 

உத்தமர் வேஷம் எதிர்பாராமல் கலைந்தவுடன் எப்படி தடுமாறுகிறார்!





மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, April 25, 2011

சத்ய சாயி பாபா கடவுளா?



If there is righteousness in the heart, there will be beauty in the character. 
If there is beauty in the character, there will be harmony in the home.
If there is harmony in the home, there will be order in the nation.
When there is order in the nation, there will be peace in the world. 

சத்ய  சாயி  பாபா

ஒவ்வொருவரின் உள்ளத்திலும்  நேர்மை குடி கொண்டிருந்தால் அந்த தேசம் அமைதியாக திகழும் என்பது பாபாவின் அருள் மொழி. இது மட்டுமல்ல, அவர் போதனைகள் எல்லாமே எளிய கருத்துக்கள் தான். எல்லாவற்றிலும் அடி நாதம் ஒன்றே. அன்பு. அன்பு. அன்பு. எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த வேண்டும். மானிட சேவையே மகேசன் சேவை. 

கிட்டதட்ட எல்லாமே நாம் பலமுறை கேட்ட கருத்துக்கள் தான். பொதுவாக யாரும் மறுக்க முடியாதவை கூட. பாபா இந்த அறிவுரைகளை சித்து வேலைகள் என்ற தேனில் குழைத்து கொடுத்தார். தேனின் சுவை மக்களை அவர் பக்தர்கள் ஆக்கியது என்றால், இந்த அறிவுரைகள் அவர்களை நல்ல மனிதர்கள் ஆக்கியது. தேனின் சுவை ஒரு அறிமுகம் மட்டுமே. முழுமையான சாரம் அவர் போதனைகளில் தான் இருந்தது. 

இந்த அன்பின் வெளிப்பாடு தான் பாபாவின் மட்டற்ற பொது சேவை. ராயல சீமா முழுவதற்கும் தண்ணீர் வர அவர் எடுத்த முயற்சி, தமிழக ஆந்திர அரசுகள் இணைந்து செய்ய வேண்டிய கிருஷ்ணா குடிநீர் திட்டத்திற்கு அவர் பங்களிப்பு, புட்டபர்த்தியில் இருக்கும் சாய் கல்லூரி. உலகத்தரத்திலான இலவச மருத்துவ மனை. 

இப்படி பாபா இந்த சமுதாயத்திற்கு அளித்தது எவ்வளவோ. 

இதையெல்லாம் விட்டு விட்டு, அவர் அளித்த தேன் உண்மையானது அல்ல. வெறும் சக்கரை தண்ணீர்தான் என்று சொல்பது போல, அவர் செய்தது கண்கட்டு வித்தை, போலி, ஏமாற்றுவேலை என்று சொல்பது சாரத்தை விட்டு விட்டு வழியை குறை சொல்பது தான்!

அவர் அருளிய அருள் மொழிகள் மட்டும் எனக்கு போதும். அதுவே சாரம். 

இந்த அளவு சமுதாயத்திற்கு ஒருவர் செய்ய முடியுமென்றால்....

அவர் கடவுள் தான்!  

அவர் என்றும் பக்தர்கள் இதயத்தில் வாழ்வார்!   


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, April 10, 2011

தி மு க மறுபடி பதவிக்கு வரக்கூடாது!


ஓட்டு போடுவதற்கு முன் கடைசி நேர சிந்தனைகள். தி மு கா மறுபடி இந்தமுறை பதவிக்கு வரக்கூடாது. தி மு க ஆட்சியின் சில சாதனைகள்
  • ஸ்பெக்ட்ரம் மெகா ஊழலில் உலகத்திற்கே எந்த அளவு ஊழல் செய்ய முடியும் என்று காட்டியது!
  • தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட / அறிவிக்கப்படாத மின் வெட்டு. ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தும் மின் வெட்டிற்கு அ தி மு க வை குற்றம் சொல்வது. இந்த ஐந்தாண்டுகளில் என்ன கிழித்தார்கள்?
  • கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சரும் சேர்த்த பற்பல கோடிகள்! நேருவின் சொத்து இரண்டு கோடியிலிருந்து பதினைந்து கோடியாக உயர்ந்திருக்கிறது இந்த ஐந்தாண்டுகளில்
  • தெருவெங்கும் ஓடும் சாராயக்கடை (டாஸ்மாக்). தன் மகன் குடியினால் அழிந்தும் (மு க முத்து) அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் இந்த அளவு கருணாநிதி டாஸ்மாக்கை வளர்த்திருப்பது.
  • தன் குடும்ப வாரிசுகள் செல்வத்தை வளர்க்க (சுமங்கலி கேபிள் மூலமும், சன் டி வி யின் விளம்பர வருவாய் மூலமும்) அரசு பணத்தில் எல்லோருக்கும் இலவசமாக டி வி கொடுத்தது
  • தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும்போது கடிதம் எழுதுவது.  தன் குடும்பத்திற்கு பதவி என்றால் டில்லிக்கு நேரில் சென்று காவடி எடுப்பது
  • ஈழப்ரச்சனையில் உலக சாதனையாக மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்தது
  • கனிமொழி விசாரணை வளையத்தில் மாட்டியதும் பொது பிரச்சனையில் 'போராடி' சிறை செல்வது போல சீன் காட்டியது
காரணங்கள் போதும் என்று நினைக்கிறேன். இப்போது, அ தி மு க ஆட்சிக்கு  வந்தால் அவர்கள் மட்டும் ஒழுங்கா என்ற கேள்விக்கு பதில்..

அவர்களும் ஒழுங்கில்லை என்பதே!

ஆனால், ஆட்சியை மாற்றுவது மூலம் ஒரு திருடர் இன்னொரு திருடரை மாட்டி விட சந்தர்ப்பங்கள் உண்டு. ஆட்சியில் இருப்பவர்களுக்கு, இது நிலையில்லை என்ற எண்ணம் தோன்றும். இல்லாதவர்கள்  ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் தவறை பெரிதாக்கி காட்ட ஒரு கேடலிஸ்ட் இருக்கும்.

மேலும், இப்போது தமிழ்நாட்டில் இருப்பது ஒரு ஊடக பயங்கர வாதம். அன்னா ஹசாரேவின் உண்ணா விரதத்தையே எந்த தொலை காட்சி ஊடகமும் காட்ட வில்லை. இது தொடர்ந்தால், மக்களை இருட்டில் வைப்பதையே இவர்கள் விரும்புவார்கள்

இதற்கெல்லாம் ஒரு முடிவின் தொடக்கமாக இந்த ஆட்சி மாற்றம் அமைய வேண்டும்!



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, April 7, 2011

இதோ இன்னொரு காந்தி!



இன்று நம்மிடையே தோன்றியுள்ள இன்னொரு  காந்தி பற்றி பாலா  எழுதிய பதிவு இது.. 



புதுடில்லி: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட அவகாசம் கேட்டதால் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது.
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் மும்பையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன.

ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.

3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார். 


இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.

ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.

அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.

அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவருக்கு சாதாரண மக்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது

துனிசியா, எகிப்து, லிபியா நாடுகளில் கிளம்பிய புரட்சியின் இந்திய வடிவமாக இந்த புரட்சியை பரவலாக்குவோம்! இது நம் ஒவ்வொருவரின் கடமை!

ஜெய் ஹிந்த்!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, April 4, 2011

2G - நார்வே மிரட்டல்!


சிபிஐ பதித்த குற்ற பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்று Unitech. இந்த நிறுவனத்தை 6,120 கோடி கொடுத்து நார்வேயை சேர்ந்த Telenor நிறுவனம் வாங்கியது. இதை வாங்கியபோது இந்த நிறுவனத்திற்கு Unitech செய்த தில்லுமுல்லு எதுவும் தெரியாது.அதனால் அந்த நிறுவனத்திற்கு கொடுத்த லைசென்ஸ்சை ரத்து செய்ய கூடாது என்று நார்வே நாட்டு பிரதம மந்திரி நமது பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார் (இவரும் கடிதம் தானா? இன்னும் எத்தனை பேர்டா கெளம்பியிருக்கீங்க?)

வெறும் கடிதம் மட்டுமில்லை. மிரட்டியுமிருக்கிறார். எப்படி? லைசென்ஸ் ரத்து பண்ணினால் அயல் நாட்டிலிருந்து வரும் முதலீடுகள் வருவது தடை படும் என்று. 

முதலில், ரத்து செய்வது தவறே இல்லை. ஒரு கம்பனியை வாங்கும்போது அதன்    
சொத்து மற்றும் கடனை சேர்த்தே வாங்குகிறார்கள். அந்த கம்பெனியின் லாபத்திற்கு எப்படி சொந்தக்காரரோ அதன் ரிஸ்கிர்க்கும் வாங்கியவர்களே பொறுப்பாளர்கள்.  அதனால், ரத்து செய்யப்படும் என்ற ரிஸ்க் வாங்கியவர்களை சேர்ந்தது. ரத்து செய்வதில் தப்பில்லை. 

இரண்டாவது, இந்தியாவின் வழக்கு எப்படி தீர்ப்பளிக்கப்படவேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? 

இதை மன்மோகன் சொல்ல வேண்டும். கொஞ்சமாவது முதுகெலும்பிருந்தால் சொல்வார். ஆனால் இருப்பது போல் தெரியவில்லையே!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...