Wednesday, October 15, 2014

எது ஊழல்?






முதலில் நான் உண்மை என நினைப்பவை சில..


  • கொள்கை அடிப்படையில் எந்த கட்சிக்கும் பெரிய அளவு தன்னலம் கருதாத தொண்டர்கள் கிடையாது.
  • எந்த கட்சிக்கும் பெரிய அளவு கொள்கை எதுவும் இல்லை,  ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர. 
  • எல்லோரும் தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் தன்னிறைவு அடைய விரும்புகிறார்கள் 
  • யாரையும் சாராமல் தின வாழ்க்கைக்கு தேவையானவற்றை அடைய பணம் தேவையாக இருக்கிறது.
  • எந்த ஒரு கட்சி நடத்தவும் பெரிய அளவு பணம் தேவை. 
  • பதவியில் இல்லாத அரசியல்வாதிக்கு அரசியல் மூலம் சம்பளம் கிடையாது. 

எந்த பணவரவும் இல்லாமல் அரசியல்வாதி எப்படி வாழ முடியும்? சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் 50000 வேண்டியிருந்தால், அரசியல்வாதி குடும்பத்துக்கு அது போல சில மடங்கு தேவை. எதற்கு?

இருப்பை காட்டிக்கொள்ள அடிக்கடி போராட்டம் /உண்ணா விரதம் / பொதுக்கூட்டம் / மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த வேண்டியிருக்கிறது. இன்றைய விலைவாசியில் எது ஒன்றும் நடத்தவும்  குறைந்த பட்சம் ஒரு லட்சம்  முதல் பல லட்சம் வரை தேவையாக இருக்கும். எங்கிருந்து வரும் அந்தப் பணம்?

தனி ஒரு மனிதனாக இல்லாவிட்டாலும் அரசியல்வாதி மூலம் தான் இந்த செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்போது கட்சி கொடுப்பது?


கட்சிகளுக்கான வருமானம் என்றால், கட்சிக்கு வரும் நன்கொடை,அதன் சொத்துக்கள் மூலம் வரும் வாடகைகள் போன்றவை பெரும்பாலானவை. கொள்கைகளே இல்லை என்னும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நன்கொடை என்பது எவ்வளவு இருக்கப்போகிறது?.. கண்டிப்பாக அதிகம் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகளுடன் நன்கொடை என்பது இரு வகையில் இருக்கக் கூடும் (ஊகம் தான்!) ஒன்று செய்து கொடுக்கப் போகிற காரியத்திற்கோ (இந்த  திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்தால் கட்சிக்கு நிதி போன்ற..) / செய்து கொடுத்த காரியத்திற்க்கோ (இந்த ப்ராண்ட் சோலார் வாங்கினால் மட்டுமே ஊக்கத் தொகை என்பது போன்ற..) வருவது.. இரண்டாவது.. நாளை ஆட்சி அமைத்தவுடன் எனக்குப் அமைச்சர் / எம்பி / எம் எல் ஏ.  அதனால் இன்று சம்பாதிப்பதில் கொடுக்கிறேன் என்பது.

ஆக மொத்தம் கட்சிகள் நடத்தத் தேவைப் படும் பணம் சம்பாதிக்க எனக்குத் தெரிந்த வழிமுறைகள் இவைதான்.

அடிப்படையிலேயே நேர்மையுடன் நடத்தவே முடியாத ஒன்றாக இந்த கட்சி நடத்துவது இருக்கிறது. ஆனால் கட்சி நடத்த முடியவில்லை என்றால் ஆட்சிக்கு வர முடியாது. எவருக்கு எந்த அளவு பதவிக்கு வர விருப்பம் இருக்கிறதோ  அந்த அந்த அளவுக்கு கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதோ (அவரே நிதி கொடுப்பதால் / நிதி திரட்டும் வலிமை கொண்டதால்) இல்லை கட்சியை நடத்துவதோ இருக்க வேண்டும்.

மறுபடி அரசியல்வாதிக்கு வருவோம். அவரும் பிழைக்க மாதம் தோறும் பணம் தேவை. நேர்மையாக எந்த வழியும் இல்லை. ஆனாலும் அரசியலில் அவர் இருந்தால்தான் என்றாவது அதிகாரத்துக்கு வர முடியும்.. இப்படி இருக்கும்போது இவர்கள் நேர்மையாக எப்படி இருக்க முடியும்? நேர்மையாக இருப்பது என்பது கட்சி கொடுக்கும் (கொடுத்தால்) பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வது. அப்படி இருந்தால் அடுத்த மாதமே பெரும்பாலானோர் அவரை மறந்து விடுவார்கள்.. அப்புறம் எப்படி அதிகாரத்துக்கு வருவது?

மொத்தத்தில், அரசியல்வாதிகள் பணம் ஈட்டுவது ஏற்கனவே செய்த செலவுகளை சரிகட்டவும் / எதிர்காலத்தில் செய்யப் போகும் செலவுகளை சமாளிக்கவும். அதையும் தாண்டித் தான் அனைவரும் சம்பாதிக்கிறார்கள்.

இப்படி ஒரு சொதப்பல் அஸ்திவாரத்துடன்.. 'ஊழல் இல்லாத அரசு..ஊழலை அடியோடு ஒழிப்போம்' என்பதெல்லாம் வெற்று வாதம் தான்!

ஓரளவு ஊழலை சகித்துக் கொள்வதே நடைமுறை வழி! இல்லையேல், அரசியல் வாதிகள் செய்வது ஊழல் இல்லை. மற்றவர் செய்வது மட்டுமே ஊழல் என்று சொல்லி விடலாம்!




மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...