Wednesday, January 29, 2014

கர்ணனை விட பாவம்!

மஹாபாரதத்திலேயே மிகவும் பாவமான ஒரு ஜீவன் என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது கர்ணன்தான். அதேபோல் இன்னொருவர் இருந்தார் என்றால் அது அம்பா தான்! கர்ணனை விட பாவம்! இன்று அவர் கதை..காசி மன்னருக்கு மூன்று புதல்விகள். அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா. திருமண வயது வந்தவுடன் மூவருக்குமாக ஒரே சுயம்வரம் நடத்தினார் மன்னர். அவர்களின் அழகு மிக பிரசித்தி பெற்றதால் பற்பல மன்னர்களும் கலந்து கொண்டனர்.
தன் கூடப் பிறக்காத சகோதரனான விசித்திர வீர்யனுக்கு பெண் தேடிக்கொண்டிருந்த பீஷ்மருக்கு இந்த சுயம்வரம் நடப்பது தெரிந்தது. அவரும் அதில் கலந்து கொண்டார், ஆனால் தனக்காக இல்லாமல் தம்பிக்காக.

முதலில் அவர் வயதான தோற்றத்தை பார்த்த மற்ற அரசர்கள், அவர் வேடிக்கை பார்க்க வந்ததாக நினைத்துவிட்டனர். அவரும் கலந்து கொண்டதை பார்த்து அவரின் வயதையும், அவர் எடுத்த ப்ரமச்சர்ய சபதத்தை சுட்டிக் காட்டியும் எள்ளி நகையாடினர். பீஷ்மர் கொஞ்சம் கொஞ்சமாக கோபமடையத் தொடங்கினார். அதற்கு ஏற்றார்போல இளவரசிகளும் அவரை கண்டு கொள்ளவே இல்லை. இப்போது முழுமையான கோபமடைந்த பீஷ்மர், அங்கிருக்கும் எல்லா அரசர்களுக்கும் சவால் விட்டார் , தன்னை ஜெயித்து ஒரு ஆண் என நிரூபித்துக் கொள்ளச் சொல்லி. எதிர்த்தவர்களை எளிதில் வீழ்த்தி மூன்று இளவரசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அதிக தூரம் செல்வதற்குள் சௌபால நாட்டு அரசர் சால்வா பீஷ்மரை எதிர்த்தார். சுயம்வரம் நடக்கையிலேயே அம்பாவை அடைய விரும்பியவர் அவர். அம்பாவுக்கும் அவர் தனக்கு சரியான துணை என்ற எண்ணம் இருந்தது.. எனினும், வில் வித்தையில் வீரரான பீஷ்மர் சால்வாவை எளிதில் தோற்கடித்துவிட்டார். இளவரசிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சால்வாவிற்கு உயிர்பிச்சை கொடுத்து தன் பயணத்தை தொடர்ந்தார். 

ஹஸ்தினாபுரத்தை அடைந்தவுடன் அவர்களுக்கும் விசித்ரவீர்யனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்து முடித்தார். திருமணத்துக்காக எல்லோரும் கூடியிருக்கும்போது அம்பா முறுவலித்தபடி, "சாத்திரங்கள் அனைத்தும் அறிந்த பீஷ்மரே.. சௌபால மன்னர் சால்வாவை மனதளவில் நான் கணவனாக வரித்து விட்டேன். நீங்களோ என்னை இங்கு பலவந்தமாக கொண்டு வந்து விட்டீர். இப்போது சாத்திரப் படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்!" என்றாள்!

பீஷ்மர் அப்போது தன் தவற்றை உணர்ந்தார். தக்க துணையுடன் உடனே சால்வாவிடம் அம்பாவை அனுப்பிவைத்தார். மற்ற இருவரை விசித்திர வீர்யனுக்கு மணமுடித்தார்.

மிக்க மகிழ்ச்சியுடன் சால்வாவை அடைந்த அம்பாவுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. சால்வா அவளிடம், "எல்லோர் முன்னிலையிலும் பீஷ்மர் என்னை தோற்கடித்து உன்னை தூக்கி சென்றார். அப்படி இருக்கும்போது உன்னை ஏற்பது அவர் எனக்கு பிச்சை போட்டது போல! அந்த அவமானம் எனக்கு வேண்டாம். அவரிடமே சென்று அவர் சொன்னபடி நட!" என்றார்.

மறுபடி பீஷ்மரை அடைந்த அம்பாவை, பீஷ்மர்  இன்னொரு மனைவியாக ஏற்றுக்கொள்ள விசித்திர வீர்யனை பணித்தார். ஆனால் அவனோ, இன்னொருவனை கணவராக வரித்துக் கொண்டவளை நான் மணந்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அம்பா பீஷ்மரிடம் "இப்போது நீங்கள் தான் என்னை மணந்து கொள்ளவேண்டும். இதைவிட வேறு வழியே இல்லை!" என்றாள்.
அம்பா எவ்வளவோ கெஞ்சியும் பீஷ்மர் தன் ப்ரமச்சர்ய சபதத்தை மீற மறுத்துவிட்டார். மறுபடி சால்வாவிடம் செல்ல சொல்லிவிட்டார். மறுபடியும் செல்ல தன்மானம் இடம் கொடுக்கா விட்டாலும், வேறு வழியின்றி அவரிடம் சென்றாள் அம்பா. சால்வாவோ தன் நிலையிலிருந்து மாறாமல் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அடுத்த ஆறு வருடத்தை தனிமையிலும், வெறுமையிலும், துயரத்திலும் கழித்த அம்பா கொஞ்சம் கொஞ்சமாக தன் சாந்த குணங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு பீஷ்மரின் மீதான வெறுப்பை மட்டுமே வளர்த்துக் கொண்டாள். தன் நிலைமைக்கு பீஷ்மரே காரணம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவள் மனதை கல்லாக்கியது. 

சுற்றி இருக்கும் அனைத்து அரசர்களிடமும் சென்று பீஷ்மர் செய்த அநியாயத்தை சொல்லி அவருடன் போர் புரியச் சொன்னாள். மிகப் பெரிய வீரனான பீஷ்மரை எதிர்க்க எவரும் துணியவில்லை. 

கடைசியில் சுப்ரம்மணியரை கடும் விரதத்துடன் பூஜித்தாள்.  அவரும், எப்போதுமே வாடாமல் இருக்கும் தாமரை மலர் மாலை ஒன்றை கொடுத்து, அதை அணிந்து கொள்பவர் பீஷ்மருக்கு எதிரியாவார் என வரம் கொடுத்தார். 

அந்த மாலையை எடுத்துக்கொண்டு மறுபடியும் யாராவது அதை வாங்கிக்கொள்வார்களா என்று பல சத்ரிய மன்னர்களை அணுகினால் அம்பா. அதிலும் தோல்வியே கிட்டியது. பீஷ்மரின் பகையை சம்பாதித்துக்கொள்ள எவரும் தயாராக இல்லை.

மாலை எந்த பலனையும் தராததால் கடைசியாக முயற்சி செய்த துருபத மன்னனின் அரண்மனை  வாயிற்கதவின் மீது அந்த மாலையை விட்டு காட்டுக்கு சென்றாள் அம்பா. அங்கு அவள் கதையை கேட்ட சில சாதுக்கள், பரசுராமரிடம் முறையிடச் சொன்னார்கள். அம்பாவின் கதையை கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்த பரசுராமர், "நான் சொன்னால் சால்வா கட்டாயம் செய்வான். அவனிடம் உன்னை திருமணம் செய்துக்கொள்ள சொல்லட்டுமா" என்றார். 

அம்பாவோ, "எனக்கு திருமணம், குடும்பம், குழந்தைகள் என்ற எல்லா ஆசையும் போய்விட்டது. இப்போது இருப்பது பீஷ்மரை பழி வாங்கும் லட்சியம் ஒன்றே. அதை நிறைவேற்றித்தாருங்கள்" என்று கோரினாள்.


ஏற்கனவே சத்ரியர் அனைவரையும் எதிரியாக கருதிக்கொண்டிருந்த பரசுராமர், பீஷ்மரை எதிர்த்து போர் புரிய முடிவு செய்தார். இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. இருவரும் சுத்த வீரர்கள்! ஆனாலும், அவர் விரும்பும்போது மரணம் ஏற்படும் என்ற வரம் இருந்ததால் பீஷ்மரே வென்றார். பரசுராமர் அம்பாவிடம் " என்னால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டேன். இனி நீ பீஷ்மரிடம் சென்று அவர் கருணையை பெறுவதே வழி" என்றார். 

அதை ஏற்க மறுத்த அம்பா, காட்டுக்கு சென்று சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்.  தவத்தை மெச்சிய சிவன், "பீஷ்மரை நீ கொல்வது இந்த ஜென்மத்தில் முடியாது. அடுத்த பிறவியில், பீஷ்மரின் சாவுக்கு நீ காரணமாவாய்" என வரம் அளித்தார். 

அடுத்த ஜென்மத்திற்கு அதிக நாள் காத்திருக்க விரும்பாத அம்பா உடனே ஒரு பெரிய நெருப்பு வளர்த்து அதில் புகுந்து உயிரை இழந்தாள்!

மறு ஜென்மத்தில், துருபதனுக்கு மகளாக பிறந்தாள் அம்பா.   மறு ஜென்மத்தில் சிகண்டி என பெயர் பெற்றாள். சிறு வயது வந்தபோது ஒரு நாள், வாடாத மாலையைப்  பார்த்து ஆவலுடன் எடுத்து அணிந்து கொண்டாள். அதை கண்ட துருபதன், இதை கேள்விப்பட்டாலே பீஷ்மர் விரோதிப்பாரே என எண்ணி, அவளை காட்டில் வளர ஏற்பாடு செய்தார். துருபதனின் இரண்டாவது மகள் தான் திரௌபதி.

காட்டில் வளர்கையில் சிகண்டி போர் பயிற்சி பெற்றாள். அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாக உருமாறிக்கொண்டு வந்தாள் சிகண்டி.

தக்க தருணம் வரை காத்திருந்த சிகண்டி, பாரதப் போரின்போது அர்ஜுனனை வேண்டி, பீஷ்மருடன் போருக்கு செல்லும் நாள் மட்டும் அவனுக்கு சாரதியாக சென்றான்(ள் ). பாரதப் போரில் பகவான் கிருஷ்ணனே சிகண்டியை ஆணாக ஏற்று அவனை சாரதியாக வைத்துக்கொள்ள அர்ஜுனனிடம் உரைத்தார். தோற்றத்தில் ஆணாக இருந்தாலும், யாரென்று தெரிந்து கொண்ட பீஷ்மர், ஒரு பெண்ணுக்கு எதிராக போர் புரியமாட்டேன் என ஆயுதம் தூக்க வில்லை. அதனால் சரமாரியாக அம்பினால் வீழ்த்தபட்டார் பீஷ்மர்.

அதிக ஆழம் சென்ற அம்பு அர்ஜுனனாலேயே விடப்பட்டது என்ற நிம்மதியுடன் மாண்டார் பீஷ்மர். அம்பாவின் ஆவலும் நீண்ட நாளுக்கு பிறகு தீர்ந்தது!All images belong to the original owners. Thanks to the courtesy of Google Images. 
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆணவத்திற்கு கிடைத்த பரிசு...! குரோதம் அடுத்த ஜென்மம் வரை தொடர்ந்து, எப்படியோ பலி வாங்கும் படலம் முடிந்து விட்டது... ஆவல் தீர்ந்து திருப்தி இல்லாமல் போயிருக்கலாம்...!

அபயாஅருணா said...

இந்தக் கதை முன்னமே தெரியும் என்றாலும் திரும்ப விவரமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

அபயாஅருணா said...

இந்தக் கதை முன்னமே தெரியும் என்றாலும் திரும்ப விவரமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆணவத்திற்கு கிடைத்த பரிசு.

bandhu said...

உண்மை தான் தனபாலன். கடைசியில் ஆவல் தீர்ந்து வெறும் கடமை போலத்தான் இருந்திருக்கும் அம்பாவிற்கு!

bandhu said...

வருகைக்கு நன்றி அபயா அருணா. அம்பாவை நினைத்து மிகவும் பாவமாக இருந்தது விவரமாக தெரிந்தவுடன். அதனால்தான் பதிவிட்டேன்!

bandhu said...

வருகைக்கு நன்றி ஜெயகுமார் சார்.. ஆணவம் என்பதைவிட க்ஷண நேர கர்வம் என தோன்றுகிறது..

ரிஷபன் said...

மஹாபாரதக் கதைகளின் விசேஷமே அவை சொல்லாமல் சொல்லிச் செல்லும் நீதிகள் தான். சில நேரங்களில் நாம் செய்யும்/சொல்லும் வார்த்தைகளின் பின் விளைவுகள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கையோடு விளையாடுகின்றன என்பதே.. புராணமாய்ப் பார்க்காமல் யதார்த்தமாய்ப் பார்த்தால் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்பதே உண்மை.

Thulasidharan V Thillaiakathu said...

தெரிந்த கதைதான் என்றாலும் உங்கள் விவரணம் அருமையாக இருக்கின்றது!!

வாழ்த்துக்கள்!!

bandhu said...

மிகச் சரியாக சொன்னீர்கள் ரிஷபன் சார். அம்பா பேசவேண்டிய நேரத்தில் பேசாததாலும் பேசக்கூடாத நேரத்தில் பேசியதாலும் வந்த விளைவுகளே இவை!

bandhu said...

வருகைக்கு நன்றி துளசிதரன் சார்..

Jayadev Das said...

Those were the days when a girls considered polluted if she even thinks of other man in mind. But these days........??? Good writing!!

வெங்கட் நாகராஜ் said...

தெரிந்த கதை என்றாலும் மீண்டும் படித்தேன். அம்பா பாவம் தான்!

பால கணேஷ் said...

உண்மையில் தேவவிரதன் பிரம்மச்சர்ய சபதமெடுத்து வானவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு பீஷ்மரானது உலகறிந்த விஷயம். அவரிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அம்பா வற்புறுத்தியது சரியானதல்ல என்றே எனக்குத் தோன்றும். மற்றபடி அம்பையின் பரிதவிப்பும், அவளின் வைராக்கியமும் மனதில் நின்ற விஷயங்கள்!

Unknown said...

கதையை மிக மிக விரிவாக பெயர்களுடன் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.

Unknown said...
This comment has been removed by the author.