Wednesday, May 18, 2011

அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்!


இது நான் எழுதும் முதல் சிறுகதை.. உங்கள் கருத்துக்களை எழுதினால் தன்யனாவேன்.

காலையில்..

  "என்ன ப்ரேக்பாஸ்ட் பண்ணட்டும்" 

கேட்ட   தர்ம பத்தினிக்கு ஒழுங்கான கணவனாய் "எது ஈசியோ அது பண்ணு" என்றேன்..

"ஆமா. இப்படி சொல்லிட்டு அப்புறம் அரிசி உப்புமா ஆகாது, சேமியா உப்புமா பிடிக்காதுன்னு சொல்றதில ஒன்னும் குறைச்சல் இல்லை!" 

"சரி.. மனுஷன் சாப்புடரதுல எது ஈசியோ அது பண்ணு!"

"நாக்கை முழம் நீளம் வளர்த்துட்டு .. உங்களுக்கு நக்கல் ஒண்ணுதான் குறைச்சல்"

இதற்கு பதில் பேசினால், பிரட் + ஜாம் தான் என்பதால், மௌன சாமியாரானேன்.

ஓட்ஸ் கஞ்சியுடன் வந்த மனைவி "இந்தாங்க ப்ரேக்பாஸ்ட்" என்று டேபிளில் வைத்தாள்.

"நேத்து காலேல கலா.." என்று ஆரம்பித்த மனைவியை இடை மறித்து..

"ஐயய்யோ.. மறுபடியும் முதல்ல இருந்தா?" என்றேன்..

புரியாமல் விழித்தவளிடம் .. "அது தான் நேத்து சாயந்திரம் சொன்னியே..மறுபடியும் அதே தானே.. சரியான போர் " என்றேன்..

"உங்க கிட்ட சொல்ல வந்தேன் பாருங்க..." என்று அகன்றாள் கடுப்புடன்.

இரவு..


"பத்தரை மணியாச்சி.. தூங்க போகலை? நாளைக்கு ஆபீஸ் போற ஐடியா இருக்கா இல்லையா?" 

இது மூன்றாவது தடவை . இனிமேல் சொல்ல மாட்டாள் என்று தோன்றியது. மடிக்கணினியை எடுத்து வைத்து விட்டு படுக்க சென்றேன். படுக்கையில் மகன் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு..

"ஏண்டா, இன்னுமாடா தூங்கலை.."

"தூக்கம் வரலப்பா... ஒரு கத சொல்லு.."ன்னான்

"ஒரே ரோதனடா உன்கூட.. சரி.. கதைக்கு பதில் ஒரு Puzzle சொல்லட்டுமா?" 

(ஒரு ரகசியம். Puzzle அப்படின்னா அதுல கொஞ்சம் கணக்கை கலந்துடுவேன்.. கணக்குன்னா பையனுக்கு உடனே தூக்கம் சொக்கிடும்!)

"Sure" 

சொல்ல ஆரம்பித்தேன்..

"ஒரு ஊர்ல ஒரு சாது நடந்து போயிட்டிருந்தார். அங்க ஒரு வீட்ல ஒரே கூச்சலும் குழப்பமுமா இருந்தது"

"ம்.."

"என்ன விஷயம்னு கேட்டாரு"

"யாரு கிட்டப்பா?"

"ஏண்டா. அதுவா முக்கியம். பேசாம கேள்டா"

"சரி. சொல்லு"

"அந்த வீட்ல மூணு பசங்க. அவங்கப்பா அவர் ஊருக்கு போறப்போ மூணு பேரு கிட்டயும் ஒரு வேலை சொன்னாரு. அவருகிட்ட இருக்கிற பசுக்களில பாதியை பெரிய பையன் பாத்துக்கணும். மூணுல ஒரு பாகம் இரண்டாவது பையன் பாத்துக்கணும். ஒன்பதில ஒரு பாகம் மூணாவது பையன் பாத்துக்கணும் அப்படின்னு சொன்னாரு"

"எனக்கு தெரியும். பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும். அவங்களுக்கு Fractions எப்படி பண்றதுன்னு தெரியலை. அது தானே?"

"அது தான் இல்லை. அவங்கல்லாம் கணக்குல புத்திசாலிங்க. பிரச்சனையை என்னன்னா, அவங்க அப்பா கிட்ட இருந்த பசு மொத்தம் 17, அதை எப்படி பிரிக்கறதுன்னு தான் மண்டைய ஓடச்சுக்கிட்டிருந்தாங்க."

"ம்.."

"என்ன ம்.. பதிலை சொல்லு. எப்படி பிரிச்சாங்க"

".."

"தெரியலையா.. யோசிச்சுப்பாரு... காலைல பதில் சொல்றேன்.. Goodnight"

கொஞ்ச நேரம் சத்தமே இல்லை.. சரி, தூங்கிட்டான் போல இருக்குன்னு நினச்சேன்..

"அப்பா..."

"என்ன.."

"பதில் சொல்லட்டுமா?"

எனக்கு ஆச்சர்யம். அவ்வளவு ஈசி இல்லன்னு நினச்சத உடனே எப்படி சொல்றான்...

"சரி சொல்லு"

"அந்த சாது தன் ஆஸ்ரமத்திலிருந்த பசு ஒண்ண வரவழைச்சார். அதை அவங்க கிட்ட இருந்த பசுக்களோட சேத்தாரு. அதுல பாதி, 9 பசுவை பெரிய பையன் கிட்ட குடுத்தார். மூணுல ஒரு பாகம், 6 பசுவ இரண்டாவது பையனுக்கு குடுத்தார். ஒம்போதுல ஒரு பாகம் 2 பசுவை மூணாவது பையனுக்கு குடுத்தார். பசங்களுக்கு குடுத்த 17 பசு போக மீதி ஒண்ணு அவரோட ஆஸ்ரமத்து பசு. அத அவரே வச்சுகிட்டாரு. கரெக்டா?"

பிரமித்தேன்.. ஆனாலும் கொஞ்சம் சந்தேகம்.. 

"ஏண்டா.. இத நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டனா?"

"இல்லப்பா. இதுல பசு -க்கு பதிலா கேமல் அப்படின்னு போட்டு டிங்கிள் புக்ல  வந்துதுப்பா. அதுல படிச்சேன்.."

"அது தான பாத்தேன்.. ஏண்டா. முதலிலே சொல்லலாம் இல்ல. வேற puzzle சொல்லியிருப்பேன் இல்ல"

"இல்லப்பா. ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிட்டிருந்தே.. அதுதான் சொல்லலை.."

இப்போது, உண்மையாக பிரமித்தேன்..  
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, May 16, 2011

நகைச்சுவை


இன்று தமிழ் மணத்தின் பக்கத்தில் இருப்பது இது போன்ற லிங்குகளின் தொகுப்பு. இது இயல்பிலேயே அமைந்த ஒன்றா இல்லை... 


:-)


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, May 15, 2011

திருப்பூருக்கு புதிய அரசு செய்யக்கூடிய உதவி!


மறுபடியும் ஆட்சி அமைக்க இருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

இன்று தமிழ் நாட்டில் எங்கும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும் நகரம் திருப்பூர். பல பேரின் பல்வேறு தவறுகளுக்கு விளைவாக இன்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். 

இது ஒரே நாளில் தீர்க்கக்கூடிய பிரச்சனையா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். இதற்கு அந்த தொழில் வல்லுனர்கள் ஒரு தீர்வை சொல்லமுடியும் என்றே நான் நம்புகிறேன். அதை முழுமையாக தீர்க்க ஒரு வருடமோ இல்லை இன்னும் அதிக நாட்களோ ஆகலாம். அதுவரை முதலாளிகள் காத்திருக்கலாம். ஆனால் தொழிலாளிகளை காத்திருக்க சொல்வது பிரக்டிகல் தீர்வில்லை. 

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று எல்லோருக்கும் மிக்சி மற்றும் கிரைண்டர் என்பது. இதற்கு தேவையான மிக்சி மற்றும் கிரைண்டர் ஆர்டர் மொத்தத்தையும் கோவை தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவர்களை திருப்பூரில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதை ஒரு நிபந்தனையாக வைத்தால் குறுகிய காலத்தில் இந்த தொழிலாளர்களுக்கு வேலை மறுபடியும் கிடைக்கும். உண்மையாக  உழைத்து குடுபத்தை காப்பாற்ற நினைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெஞ்சார வாழ்த்துவார்கள்!

இதன் மூலம் மேலும் ஒரு பலன் என்னவென்றால் இலவசங்களால் மக்களுக்கு மட்டுமில்லாமல்  பலன் இந்த தொழிலாளர்களுக்கும்  கிடைக்கும். 

இதுவே புதிய அரசு திருப்பூருக்கு செய்யக்கூடிய உடனடி உதவி!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...