Friday, November 4, 2022

காந்தாரா !

கன்னடப்படம். கர்நாடகா, ஆந்திரா, இந்தி பெல்ட்களில் ஓடு ஓடு என்று ஓடுகிறது. பெரிய நடிகர்கள் இல்லை. பெரிய பட்ஜெட் இல்லை. வெறும் 16 கோடி செலவழித்து இதுவரை 300 கோடி சம்பாதித்திருக்கிறது! வெளிவந்து ஐந்து வாரங்கள் ஆகியும் வசூல் குறையவில்லை. இந்தியில் அதற்க்கு பின் வந்த இந்தி படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டது இந்தியில் வெளியான டப்பிங் படம்! தமிழகத்தில் பெரிய வசூல் இல்லாததற்கு காரணம் இதை ரெட் ஜெயண்ட் வெளியிடாததுதான் என நினைக்கிறேன். பிரின்ஸ், சர்தார் படங்கள் தப்பின! தமிழிலும் நன்றாக ஓடவேண்டும் என விரும்புகிறேன்.

படத்தை பார்த்ததில் இருந்து மந்திரித்து விட்டது போல இருக்கிறது! ஒரு படம் இப்படி பயித்தியமாக அடிக்க முடியுமா என்று வெகுவாக குழம்பினேன்... இரண்டாம் முறை பார்த்தவுடன் தெரிந்தது இது படம் இல்லை. அனுபவம். மருந்தை தேனில் குழைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் மருந்தும் இனிப்பாக இருக்கிறது!

கலைகளை முன்னிறுத்தி பல படங்கள் வந்திருக்கின்றன. இந்த படத்தில் பூத கோலா என்று மங்களூர் அருகில் நடக்கும் கலையை முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு மிகப்பெரிய வித்யாசம். கிட்டதட்ட கலையை முன்னிறுத்தும் எல்லா படங்களிலும் பார்ப்பது அதை செய்யும் மனிதர் பற்றியே. கலையில் அந்த மனிதரின் பாண்டித்யம், அதற்கு அவர் கொடுக்கும் விலை, கடைசியில் அவர் பெறும் அங்கீகாரம், அதற்கிடையே காதல், இதைதான்! இந்த படத்தில்தான் எதற்காக அந்த கலை என்பதை முன்னிறுத்தியிருக்கிறார்கள். இந்த கலை வழிபாட்டு முறையுடன் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்று காட்டுகிறது இந்தப் படம்.

அதேமாதிரி நாம் வழிவழியாக பார்த்து வந்த 'சாமி வருதல்' என்பதில் பலருக்கும் துறுத்தி நிற்கும் கேள்வி.. சொல்வது சாமியாடியா.. சாமியா.. என்பது. இந்த படத்தைவிட இதற்கு அழகான விளக்கம் கொடுத்த எதையும் நான் இது வரை பார்த்ததில்லை!

படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் காட்சிகளில் நான் நம்பும் குலதெய்வத்தை நான் உணர்ந்தேன். படத்தை பார்த்த பலரும் அதை உணர்வதால்தான் மறுபடி மறுபடி பார்க்க வருகிறார்கள் என நினைக்கிறேன்! இது போன்ற ஒரு அனுபவத்தை வாழ்க்கையில் அடைந்ததில்லை!

ஆத்மார்த்தமாக நடித்த ரிஷப் ஷெட்டி , கிஷோர், அச்யுத் குமார், சப்தமி கவுடா, மானசி சுதீர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். முக்கியமாக எழுதி, நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: