Wednesday, October 15, 2014

எது ஊழல்?


முதலில் நான் உண்மை என நினைப்பவை சில..


  • கொள்கை அடிப்படையில் எந்த கட்சிக்கும் பெரிய அளவு தன்னலம் கருதாத தொண்டர்கள் கிடையாது.
  • எந்த கட்சிக்கும் பெரிய அளவு கொள்கை எதுவும் இல்லை,  ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர. 
  • எல்லோரும் தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் தன்னிறைவு அடைய விரும்புகிறார்கள் 
  • யாரையும் சாராமல் தின வாழ்க்கைக்கு தேவையானவற்றை அடைய பணம் தேவையாக இருக்கிறது.
  • எந்த ஒரு கட்சி நடத்தவும் பெரிய அளவு பணம் தேவை. 
  • பதவியில் இல்லாத அரசியல்வாதிக்கு அரசியல் மூலம் சம்பளம் கிடையாது. 

எந்த பணவரவும் இல்லாமல் அரசியல்வாதி எப்படி வாழ முடியும்? சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் 50000 வேண்டியிருந்தால், அரசியல்வாதி குடும்பத்துக்கு அது போல சில மடங்கு தேவை. எதற்கு?

இருப்பை காட்டிக்கொள்ள அடிக்கடி போராட்டம் /உண்ணா விரதம் / பொதுக்கூட்டம் / மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த வேண்டியிருக்கிறது. இன்றைய விலைவாசியில் எது ஒன்றும் நடத்தவும்  குறைந்த பட்சம் ஒரு லட்சம்  முதல் பல லட்சம் வரை தேவையாக இருக்கும். எங்கிருந்து வரும் அந்தப் பணம்?

தனி ஒரு மனிதனாக இல்லாவிட்டாலும் அரசியல்வாதி மூலம் தான் இந்த செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்போது கட்சி கொடுப்பது?


கட்சிகளுக்கான வருமானம் என்றால், கட்சிக்கு வரும் நன்கொடை,அதன் சொத்துக்கள் மூலம் வரும் வாடகைகள் போன்றவை பெரும்பாலானவை. கொள்கைகளே இல்லை என்னும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நன்கொடை என்பது எவ்வளவு இருக்கப்போகிறது?.. கண்டிப்பாக அதிகம் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகளுடன் நன்கொடை என்பது இரு வகையில் இருக்கக் கூடும் (ஊகம் தான்!) ஒன்று செய்து கொடுக்கப் போகிற காரியத்திற்கோ (இந்த  திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்தால் கட்சிக்கு நிதி போன்ற..) / செய்து கொடுத்த காரியத்திற்க்கோ (இந்த ப்ராண்ட் சோலார் வாங்கினால் மட்டுமே ஊக்கத் தொகை என்பது போன்ற..) வருவது.. இரண்டாவது.. நாளை ஆட்சி அமைத்தவுடன் எனக்குப் அமைச்சர் / எம்பி / எம் எல் ஏ.  அதனால் இன்று சம்பாதிப்பதில் கொடுக்கிறேன் என்பது.

ஆக மொத்தம் கட்சிகள் நடத்தத் தேவைப் படும் பணம் சம்பாதிக்க எனக்குத் தெரிந்த வழிமுறைகள் இவைதான்.

அடிப்படையிலேயே நேர்மையுடன் நடத்தவே முடியாத ஒன்றாக இந்த கட்சி நடத்துவது இருக்கிறது. ஆனால் கட்சி நடத்த முடியவில்லை என்றால் ஆட்சிக்கு வர முடியாது. எவருக்கு எந்த அளவு பதவிக்கு வர விருப்பம் இருக்கிறதோ  அந்த அந்த அளவுக்கு கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதோ (அவரே நிதி கொடுப்பதால் / நிதி திரட்டும் வலிமை கொண்டதால்) இல்லை கட்சியை நடத்துவதோ இருக்க வேண்டும்.

மறுபடி அரசியல்வாதிக்கு வருவோம். அவரும் பிழைக்க மாதம் தோறும் பணம் தேவை. நேர்மையாக எந்த வழியும் இல்லை. ஆனாலும் அரசியலில் அவர் இருந்தால்தான் என்றாவது அதிகாரத்துக்கு வர முடியும்.. இப்படி இருக்கும்போது இவர்கள் நேர்மையாக எப்படி இருக்க முடியும்? நேர்மையாக இருப்பது என்பது கட்சி கொடுக்கும் (கொடுத்தால்) பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வது. அப்படி இருந்தால் அடுத்த மாதமே பெரும்பாலானோர் அவரை மறந்து விடுவார்கள்.. அப்புறம் எப்படி அதிகாரத்துக்கு வருவது?

மொத்தத்தில், அரசியல்வாதிகள் பணம் ஈட்டுவது ஏற்கனவே செய்த செலவுகளை சரிகட்டவும் / எதிர்காலத்தில் செய்யப் போகும் செலவுகளை சமாளிக்கவும். அதையும் தாண்டித் தான் அனைவரும் சம்பாதிக்கிறார்கள்.

இப்படி ஒரு சொதப்பல் அஸ்திவாரத்துடன்.. 'ஊழல் இல்லாத அரசு..ஊழலை அடியோடு ஒழிப்போம்' என்பதெல்லாம் வெற்று வாதம் தான்!

ஓரளவு ஊழலை சகித்துக் கொள்வதே நடைமுறை வழி! இல்லையேல், அரசியல் வாதிகள் செய்வது ஊழல் இல்லை. மற்றவர் செய்வது மட்டுமே ஊழல் என்று சொல்லி விடலாம்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Avargal Unmaigal said...

மிக அருமையான பகிர்வு....பாராட்டுக்கள் இதே கருத்தைதான் என் மனைவி 2 நாட்களுக்கு முன்பு சொன்னாள்.

bandhu said...

நன்றி அவர்கள் உண்மைகள்... அடிப்படை பிரச்சனையை தீர்க்காமல் எப்படி ஒழியும் ஊழல்?

Jayadev Das said...

குறுக்கு வழியில் போகாமல் கட்சி நடத்த முடியாது என்பது போலத் தோன்றினாலும், பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காமராஜர் தனக்கோ தன்னுடைய குடும்பத்தினருக்கோ சொந்தங்களுக்கோ சொத்துக்கள் எதுவும் சேர்க்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நேருவின் தந்தை கோடிக்கணக்கான சொத்துக்களை நாட்டுக்கு வழங்கியவர்கள், மேலும் சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்றோர் சொத்தையும், உழைப்பு, உயிரையும் நாட்டுக்கு தந்திருக்கிறார்கள். சுதந்திரம் வாங்கிய பின்னரும் சில ஆண்டுகள் நாட்டின் முன்னேற்றத்தை மட்டுமே பிரதானமாக நினைத்த தலைவர்கள் இருந்தவரை நன்றாகத்தான் இருந்தது. மத்தியில் இந்திரா காந்தியும், மாநிலத்தில் அண்ணாதுரையும் பதவிக்கு வந்த பின்னர் தான் எல்லாம் குட்டிச் சுவராகிப் போனது. இடையிடையே, மொரார்ஜி தேசாய், ஜோதி பாசு, ராமகிருஷ்ண ஹெக்டே போன்ற நல்ல அரசியவாதிகளும் இருந்தே வந்திருக்கிறார்கள்.

தற்போதும், கேரளாவில் ஆட்சி எந்த கட்சி வந்தாலும் சிறப்பாகவே உள்ளது, சென்ற ஆட்சியில் மத்தியிலும் அவர்களுடைய அமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கு வேண்டியதை சாதூர்யமாக செயல் படுத்திக் கொண்டார்கள். மக்கள் அனாவசியமாக மரங்களை வெட்டுதல் போன்ற செயல்களால் இயற்கையை பாழ் செய்வதில்லை, ஆற்று மணல் எடுக்கக் கூடாது என்றால் கட்டுப் படுகிறார்கள், ஆயிரக்கணக்கான கோடி வருமானம் வரும் சாராயக் கடைகளை மூட ஒரு முதல்வர் முன்வருகிறார்.

அப்படியே தமிழகத்தைப் பாருங்கள். நாம் வாழும் மாநிலம் தரங்கெட்ட மனநிலை கொண்டோர் அதிகம் என்பதே பிரச்சினை. கனிமங்கள், ஆற்று மணல் கொள்ளை. அதீத சாராய விற்பனை, அதை எப்படி அதிகரிக்கலாம் என்று சிந்திக்கும் அரசு. மத்தியில் பங்கேற்ற திமுக எப்படி கொள்ளையடிக்கலாம் என்று சிந்தித்தார்களே தவிர மக்கள் பிரச்சினை எதையும் தீர்க்க முன்வரவில்லை. இரண்டு 'கல'கங்களிலும் கொள்ளையர்கள், ரவுடிகள் நில அபகரிப்பு, இயற்கை வளங்கள் சுரண்டுதல் என ஈடுபட்டாலும் மக்கள் யாரும் வாயைத் திறக்க முடியாது. நியாமாக செயல்பட நினைத்த சகாயம் 22 முறை மாற்றப் பட்டதே இரண்டு கலகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதற்க்குச் சாட்சி.

நல்லது நடக்க வேண்டுமென்றால் முதலில் குறுக்கு வழியில் பணம் தேவையில்லை என்று மக்கள் நினைக்க வேண்டும், அவ்வாறு ஈடுபடும் அரசியல் கட்சி குண்டர்களை ஒற்றுமையோடு எதிர்க்க வேண்டும். மற்றபடி மக்களை ஒழித்து சொத்து சேர்ப்பதில் ஆத்தாவும் ஒண்ணுதான், தாத்தாவும் ஒண்ணுதான், வேறுபாடு இல்லை.

Thulasidharan V Thillaiakathu said...

மிக அருமையான பதிவு! நல்ல ஆய்வும் கூட!இன்றைய தேதிக்கு! அதே சமயம் நாங்கள் சொல்ல நினைத்த ஒரு சில கருத்துக்களை அதாவது சிந்தித்துப் பார்க்கலாமே என்று சொல்ல நினைத்ததை திரு ஜெயதேவ தாஸ் சொல்லியிருக்கின்றார். ம்ம்ம்ம் கேரளாவில் இந்த அளவு எல்லாம் இல்லையே! அதையும் நாம் யோசிக்கலாமே!

அது போல் னீங்கள் சொல்லும் அடிப்படை பிரச்சனையை தீர்க்காமல் எப்படி ஒழியும் ஊழல்?// அதுவும் யோசிக்கத்தான் வைக்கின்றது! ம்ம்ம் என்னவோ போங்க கஷ்டப்படுவது என்னவோ நடுத்தர வர்க பொதுஜனம்தான்....

bandhu said...

வருகைக்கு நன்றி ஜெயதேவ் தாஸ்.. இந்த பதிவுக்கு தொடர்பாக இன்னொரு பதிவு எழுத எண்ணியிருக்கிறேன். அதில் நீங்கள் சொன்னவற்றைப் பற்றி எழுதப் பார்க்கிறேன்.

bandhu said...

வருகைக்கு நன்றி துளசிதரன் சார்.. என் ஆதங்கம் இது தான். அடிப்படை பிரச்சனையை புரிந்து கொள்ளாமல் இதை தீர்க்கவே முடியாது!

வெங்கட் நாகராஜ் said...

லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கும் வரை லஞ்சம் வாங்குபவர்களும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.....

பல விஷயங்களுக்கு லஞ்சம் கொடுத்தே பழகி விட்டார்கள் மக்கள்.

நல்ல கட்டுரை ஜி....

bandhu said...

வருகைக்கு நன்றி வெங்கட்.. இது என்னைப் பொருத்தவரை தீராத பிரச்சனை!

ஸ்ரீ said...

நல்ல பதிவு,இதுதான் இந்தியாவின் நிலைமை.
நானும் இத்தகைய நிலைமையை கண்டு ஏன் இந்தியாவில் பிறந்தேன் என வேதனைப்பட்டதுண்டு.
இங்கே எதற்கும் ,எங்கும் ,எப்பொழுதும் ஊழ்லும் ,லஞ்சமும் இன்றியமையாததாகிவிட்டது.ஒரு சில நேரங்களில் அனைத்தும் நல்லதற்கே என நினைத்ததும் உண்டு.கடைகோடி கிராமத்தில் கூட பேசப்பட்ட 2G-ஊழல் நடைபெறாதிருந்தால் என்னைபொறுத்தவரை இந்தியாவிற்கு இன்று ஒரு நல்ல பிரதமர் கிடைத்திருக்க மாட்டாரே.

bandhu said...

வருகைக்கு நன்றி ஸ்ரீ ... புதிய பிரதமர் வல்லவரா.. நல்லவரா என்று இன்னும் தெரியவில்லை. வெளிவரும் செய்திகள் அவ்வளவு உசிதமாக இல்லை. பார்க்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை!

yathavan nambi said...

ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)

செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு