Monday, July 7, 2025

கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணும்போது இரண்டு விஷயங்கள் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தன. ஒன்று, மலிந்து கிடைக்கும் எழுத்துப் பிழைகள். சிற்சில தளங்களில் குறைவாக இருந்தாலும், இருக்கவே செய்கிறது. என்னை பொறுத்தவரை சூலமங்கலம் சகோதரிகள் சொல்வது சரியான ஒன்று என்ற வகையில், வரிக்கு வரி, அவர்கள் பாடலை கேட்டு இந்த பதிப்பை சரி செய்து கொள்கிறேன். இரண்டாவது, சூலமங்கலம் சகோதரிகள் பாடுகையில் இடையிடையே மாறும் ராகம். அதே போல் சொல்ல முயற்சிப்பதற்கு எளிய வழியாக, ராகங்கள் மாறும்போது, வரிகள் நிறம் மாறுவது என்ற பரீட்சார்த்த முயற்சி செய்கிறேன். தவறுகள் இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள். பாடலுடன் சரி பார்த்துக்கொண்டு திருத்திவிடுகிறேன்.


ஸ்கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்;
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்;
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீரவமரம் புரிந்த
குமரன் அடி
நெஞ்சே குறி..

நூல்

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட (4) (x 2)

மையல் நடனம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக (8)

இந்திரன் முதலாய் எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக (12)

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக (16)


ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறன (20) (x 2)

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னையாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங்குசமும் (24)

பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிளியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிளியும் (28)

கிளியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக (32)

ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் (36) (x 2)

ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திவ்ய தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தினமாலையும் (40)

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும் (44)

இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொக மொக மொகமொக மொக மொக மொகென (48)

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி (52)

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து (56)

என்தனை யாளும் ஏரகச் செல்வா
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்றும் (60) (x 2)

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலைவைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க (64)

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விழிசெவியிரண்டும் வேலவர் காக்க (68)

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க (72)

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க (76) (x 2)

வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க (80)

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க (84)

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க (88)

ஐவிரலடியினை அருள் வேல் காக்க
கை களிரண்டும் கருணை வேல் காக்க
முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க (92)

நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க (96)

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க (100)

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க (104)

தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் (108)

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும் (112)

அடியனைக் கண்டால் அலறி கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோட னைவரும் (116)

விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியங் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட (119)

ஆனையடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன் (123)

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும் (127)

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட (131)

வாய் விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டியுருட்டு கை கால் முறியக் (135)

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு (139)

குத்து குத்து கூர் வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட (143)

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் (147)

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு (151)

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்தரணை பருவரையாப்பும் (155)

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய் (159)

மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக
உன்னைத் துதிக்க உன்திருநாமம்
சரவணபவனே சையொளிபவனே
திரிபுரபவனே திகழொளிபவனே (163)

பரிபுரபவனே பவமொழிபவனே
அரிதிருமருகா அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே (167)

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா (171)


பழநிப் பதிவாழ் பாலகுமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா
சமரா புரிவாழ் சண்முகத்தரசே (175)

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்னா விருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக (179)

ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக (183)

அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க (187)

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம் (191)

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன் (195)

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய் (199)

கந்தசஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடனாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி (203)

நேச முடனொரு நினைவதுவாகி
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு (207)


ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலதருள்வர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் (211)

நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
கந்தர் கை வேலாம் கவசத்தடியை (215)

வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும் (219)

சர்வசத்குரு சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாக
சூரபத்மாவைத் துணித்தகையதனால் (223)

இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம் (227)

மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குற மகள் மன மகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி (231)

இடும்பாயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோர் அரசே (235)

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்..
சரணம் சரணம் சண்முகா சரணம்..! (239)


கந்தர் சஷ்டி கவசத்தின் பலன்கள்

பயம் நீங்கும்: கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் மனதில் உள்ள பயம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.
நோய் நீங்கும்: உடல்நலக் கோளாறுகள், மனநலப் பிரச்சனைகள், வறுமை போன்ற துன்பங்கள் நீங்க இந்தப் பாடல் உதவும் என்று நம்பப்படுகிறது.
பாதுகாப்பு: எதிரிகளின் தொல்லைகள், செய்வினைகள், துஷ்ட சக்திகள் போன்ற எதிர்மறை தாக்கங்களிலிருந்து முருகப் பெருமான் இந்தப் பாடலை ஓதுபவர்களைக் காப்பார் என்று கூறப்படுகிறது.
செல்வம் பெருகும்: வறுமையால் வாடுபவர்கள் இந்தப் பாடலைத் தினமும் பாராயணம் செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
நவகிரக அருள்: நவகிரகங்களின் தீய தாக்கங்களிலிருந்து விடுபட்டு, அவற்றின் அருளைப் பெற கந்த சஷ்டி கவசம் உதவுகிறது.
நேர்மறை ஆற்றல்: இந்தப் பாடலைத் தினமும் படிப்பதால் உடலில் நேர்மறை ஆற்றல் பரவி, சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

Thanks to aanmeegam.com from where I have taken the text.

Thursday, December 1, 2022

சர்தார்!



கொஞ்சம் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். (தண்ணீர் பற்றாக்குறை வருடாவருடம் வருகிறது. அதனால் அது சிறந்தது! ) அதனுடன் அது சம்பந்தமான டீடெயில்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். தமிழ் தெரியாத கதாநாயகியை சேர்த்துக்கொள்ளுங்கள். (பாட்டில் வந்தால் போதும்). நிறைய சண்டை காட்சிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். raw , intelligence , cbi , national security advisor போன்ற வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். பெரிய பெரிய பாக்டரிகளில் சண்டை காட்சிகளை வைத்துக்கொள்ளுங்கள்! விக்ரமின் சிறை சண்டை பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியது. அதனால், சிறையில் ஒரு சண்டை காட்சியை சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் சித்தப்பா செண்டிமெண்ட், குழந்தை செண்டிமெண்ட் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கலக்கி லாஜிக் போக நன்கு வடிகட்டுங்கள்! சர்தார் திரைப்படம் தயார்!

உளவாளி. அவருக்கு தெரியாததே இல்லை! தனி ஆளாக பாகிஸ்தான் ஆர்மி கேம்பில் நுழைந்தது மூன்று விதமான மேக்கப்பை போட்டுக்கொண்டு, அங்கிருக்கும் ராணுவ ரகசியங்களை டீகோட் செய்து இந்தியா அனுப்பி, பலரை காப்பாற்றி, தென் இந்தியா கிராமத்தில் அவர் உளவாளி என்று குடும்பத்தினருக்கும் தெரியாமல் வாழும் நாடக கலைஞன் - ஹீரோ.

32 வருடங்கள் ஆனாலும் இன்று இருக்கும் புள்ளிவிவரங்களெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறார்! சண்டையில் நூறு பேரை அசாதாரணமாக வீழ்த்துகிறார்!

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வது போல் பொய் சொல்லலாம். அதுக்குன்னு ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது!

கார்த்தி ஒரு படத்தில் பற்பல மாறுவேஷம் போடவேண்டும் என்ற ஆசை நிறைவேறியிருக்கிறது! அவ்வளவுதான்!

இந்தப் படம் பார்ப்பதற்கு பதில் வேறு ஏதாவது உருப்படியான வேலையை பார்க்கலாம்!

Friday, November 4, 2022

காந்தாரா !

கன்னடப்படம். கர்நாடகா, ஆந்திரா, இந்தி பெல்ட்களில் ஓடு ஓடு என்று ஓடுகிறது. பெரிய நடிகர்கள் இல்லை. பெரிய பட்ஜெட் இல்லை. வெறும் 16 கோடி செலவழித்து இதுவரை 300 கோடி சம்பாதித்திருக்கிறது! வெளிவந்து ஐந்து வாரங்கள் ஆகியும் வசூல் குறையவில்லை. இந்தியில் அதற்க்கு பின் வந்த இந்தி படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டது இந்தியில் வெளியான டப்பிங் படம்! தமிழகத்தில் பெரிய வசூல் இல்லாததற்கு காரணம் இதை ரெட் ஜெயண்ட் வெளியிடாததுதான் என நினைக்கிறேன். பிரின்ஸ், சர்தார் படங்கள் தப்பின! தமிழிலும் நன்றாக ஓடவேண்டும் என விரும்புகிறேன்.

படத்தை பார்த்ததில் இருந்து மந்திரித்து விட்டது போல இருக்கிறது! ஒரு படம் இப்படி பயித்தியமாக அடிக்க முடியுமா என்று வெகுவாக குழம்பினேன்... இரண்டாம் முறை பார்த்தவுடன் தெரிந்தது இது படம் இல்லை. அனுபவம். மருந்தை தேனில் குழைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் மருந்தும் இனிப்பாக இருக்கிறது!

கலைகளை முன்னிறுத்தி பல படங்கள் வந்திருக்கின்றன. இந்த படத்தில் பூத கோலா என்று மங்களூர் அருகில் நடக்கும் கலையை முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு மிகப்பெரிய வித்யாசம். கிட்டதட்ட கலையை முன்னிறுத்தும் எல்லா படங்களிலும் பார்ப்பது அதை செய்யும் மனிதர் பற்றியே. கலையில் அந்த மனிதரின் பாண்டித்யம், அதற்கு அவர் கொடுக்கும் விலை, கடைசியில் அவர் பெறும் அங்கீகாரம், அதற்கிடையே காதல், இதைதான்! இந்த படத்தில்தான் எதற்காக அந்த கலை என்பதை முன்னிறுத்தியிருக்கிறார்கள். இந்த கலை வழிபாட்டு முறையுடன் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்று காட்டுகிறது இந்தப் படம்.

அதேமாதிரி நாம் வழிவழியாக பார்த்து வந்த 'சாமி வருதல்' என்பதில் பலருக்கும் துறுத்தி நிற்கும் கேள்வி.. சொல்வது சாமியாடியா.. சாமியா.. என்பது. இந்த படத்தைவிட இதற்கு அழகான விளக்கம் கொடுத்த எதையும் நான் இது வரை பார்த்ததில்லை!

படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் காட்சிகளில் நான் நம்பும் குலதெய்வத்தை நான் உணர்ந்தேன். படத்தை பார்த்த பலரும் அதை உணர்வதால்தான் மறுபடி மறுபடி பார்க்க வருகிறார்கள் என நினைக்கிறேன்! இது போன்ற ஒரு அனுபவத்தை வாழ்க்கையில் அடைந்ததில்லை!

ஆத்மார்த்தமாக நடித்த ரிஷப் ஷெட்டி , கிஷோர், அச்யுத் குமார், சப்தமி கவுடா, மானசி சுதீர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். முக்கியமாக எழுதி, நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு!

Friday, November 12, 2021

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 3




பழைய பாகங்களை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சில வருடங்களுக்கு முன் தொடங்கினேன். 3-ம் பதிவை எழுத மறந்துவிட்டேன். இதோ இப்போது.


அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2


கார் கிடைத்தவுடன் நேரே ரிஸார்டுக்கு சென்றோம். உச்சி வெய்யில் என்றதால் காரில் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. ஊர் அப்போது கூட பனி போர்வை பார்த்துக்கொண்டு அழகாக இருந்தது. சரி ஏசி எதற்கு என்று கண்ணாடியை இறக்கினால், வெய்யில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. இந்த வெய்யிலில் பனிப்போர்வையா? குளிரவும் இல்லையே என்று ஒன்றுமே புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது அது பனி இல்லை. வெறும் புகை என்று!


ரேடியோவை போட்டால் ஊருக்கு சில மைல் தூரத்தில் காட்டுத்தீ என்பதால் ஊரெல்லாம் புகை என்று தெரிந்தது! கொடுமை!


மனைவிக்கு அந்த புகையில் ஒரே தலைவலி! அங்கிருந்த மீதி நாட்களும் இந்த கொடுமை தொடர்ந்தது.


ஒரு வழியாக ரிசார்ட் சென்றடைந்தோம். மிக அழகாக இருந்தது. ரூம் வசதியாக இருந்தது. அங்கும் புகை மூடி காட்டுத்தீ வாசனை காற்றில். கொண்டு வந்த உணவை உண்டு அங்குமிங்கும் திரிந்து பொழுது போக்கினோம். இரவு ரிஸார்ட் உணவகத்துக்கு சென்றோம். சாப்பிடும்போது தெரிந்தது தான் சமையல்காரருக்கு சமைக்கத் தெரியாது என்று!  


நொந்து கொண்டே சென்று படுத்தோம்.


அடுத்தநாள் காலை அங்கிருந்து 30 மைல் தொலைவில் உள்ள கிரேட்டர் ஏரிக்கு செல்லும் பிளான். ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து 7700 வருடத்துக்கு முன் வெடித்து வெளிப்பக்கம் மலையாகவும் நடுவில் பெரிய ஆழமான குழியாக ஆகி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி இருக்கும் பனி உருகி ஏரியாக நிரம்பி இருக்கிறது. அதிகம் இல்லை ஜென்டில்மென். 10-12 கிலோமீட்டர் சுற்றளவு. 1.2 கிலோமீட்டர் ஆழம். அத்தனையும் 99.99% சுத்தமான தண்ணீர். இது தான் இந்த ஊரின் மிகப்பெரிய அட்ராக்ஷன்!


வருவதற்கு முன் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தண்ணீரின் கரை சாலையிலிருந்து வெகு கீழே (200-300 அடி). இறங்கி தண்ணீரை தொடக்கூட முடியாது. 


சரி வந்தாயிற்று. போய் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டோம். வெளியே வருவதற்கு முன், இந்த ஊரில் இதுவரை கிடைத்த சனிப் பார்வை பலன்களை எண்ணி இதற்கு அந்த ஏரி அருகில் இருந்த ஆன்லைன் கேமராவில் ஏரியை பார்த்துவிட்டு போகலாம் என்று ஒரு யோசனை.


ரிஸார்ட்டின் கம்ப்யூட்டரில் போய் பார்த்தோம். நல்லவேளை. மாங்கு மாங்கு என்று போயிருந்தால் மறுபடியும் நொந்திருப்போம்! அங்கும் ஒரே புகை என்பதால் சாலையிலிருந்து தண்ணீரே தெரியவில்லை! போயிருந்தால் அங்கும் புகையைத்தான் பார்த்திருப்போம்!


அந்த ரிஸார்ட்டில் விளையாட வைத்திருந்த ஸ்னூக்கர் டேபிளில் விளையாட ஒரு கேமுக்கு 50 சென்ட், அங்குள்ள ஸ்விம்மிங் பூலில் குளிக்க 50 சென்ட் என்று அவர்கள் அல்பமாக பிடுங்கியதெல்லாம் கொடுமை.


அழுது கொண்டே ஊர் திரும்பினோம்!


ஆனால் அந்த ட்ரிப்பை நினைத்து நினைத்து சிரிக்காத நாளில்லை!



Wednesday, November 10, 2021

கோடியில் ஒருவன்!

 




தெளிவான கதை. இறுக்கமாக பின்னப்பட்ட திரைக்கதை. வேகமாக நகரும் திரைக்கதை. மிகப்பெரிய ஹீரோயிசம் இல்லை. நம்ப முடியாத சண்டைகள் அதிகம் இல்லை. 


நேரம் போனதே தெரியவில்லை. படம் முடியும்போது கூட, அதற்குள் முடிந்து விட்டதே என்று இருந்தது.  ஆனால் திருப்தியான முடிவாக இருந்தது.


இத்தனைக்கும் விஜய் ஆண்டனிக்கு வழக்கமான பிரச்சனை தான். நடிப்பு வரவில்லை. திறமைசாலிகளை கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர் நடிப்பை வளர்த்துக்கொள்ளவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது!


டைரக்டர் மிக திறமைசாலி. வாழ்த்துக்கள் 


Sunday, November 7, 2021

Doctor - டாக்டர் படம்



டாக்டர் படம் netflix -இல் வெளிவந்திருக்கிறது. பொதுவாக நல்ல விமர்சனங்கள் இருப்பதாலும் பெரிய அளவு ஹிட் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்தேன்.


பெரிய ஏமாற்றம்!


குழந்தை கடத்தல் என்பது வெகு சீரியஸான விஷயம். அதை டார்க் காமெடி என்ற பெயரில் கொடுமை படுத்தி இருந்தார்கள். படத்தின் இசை சுத்தமாக ஒட்டவில்லை.


படத்தில் இம்மி அளவும் லாஜிக் இல்லை. 


**spoiler alert**


கோவாவில் பெரிய வில்லன். அரசில் எல்லோரையும் தெரியும் என்கிறார். சிவ கார்த்திகேயன் ஒரு ஐஸ் க்ரீம் கடை நடத்துபவர்  என்பதையும் குழந்தை கடத்தலையும் செய்பவர் என்பதை எளிதாய் நம்பும் ஏமாளியாக இருக்கிறார்!


படத்தின் க்ளைமாக்ஸ் 1970 வந்த மோசமான படங்களை நினைவு படுத்தியது 



எல்லா படத்திலும் நிறைய பேசி நடிப்பதால் இதில் சிவகார்த்திகேயன் அண்டர் பிளே பண்ண முயற்சிக்கிறார். அதனால் லைஃபே இல்லாமல் ஒரு நடிப்பு 



எல்லா விதத்திலும் இந்த படம் ஒரு குப்பை! 


இந்த படம் எப்படி ஓடியது என்பது பெரிய ஆச்சர்யம்!


பணம் போட்டு லாபம் பார்த்த சிவகார்த்திகேயன் பெரிய அதிர்ஷ்டசாலி!


Tuesday, September 29, 2020

பங்கு சந்தை முதலீடா சூதாட்டமா?



உங்கள் கையில் நிறைய பணம் இருக்கிறது. அதை முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். 


ஏதாவது ஒரு டீக்கடை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் வேலையில் இருப்பதால், ஏற்கனவே இருக்கும் டீக்கடை ஒன்றில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறீர்கள். வீட்டருகே புதிதாக வந்த ஒரு கடை உங்களுக்கு ஞாபகம் வருகிறது. பிரமாதமான அலங்காரத்துடன் இருக்கும் அந்த கடை வந்த சில நாட்களிலேயே எப்போதும் கூட்டமாக இருப்பதும் உங்களுக்கு தெரியும். லேட் பண்ண வேண்டாம் என்று அந்த உரிமையாளருடன் பேசி ஐந்து லக்ஷம் பணம் போடுகிறீர்கள். நேற்றுவரை டீக்கடை வாடிக்கையாளராக இருந்த நீங்கள் இன்று டீக்கடை பங்கு தாரர் என்று பெருமையாக இருக்கிறது!

நீங்கள் செய்தது முதலீடா? சூதாட்டமா?

சூதாட்டம். டீக்கடை எவ்வளவு லாபத்தில் இயங்குகிறது? எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? மாதம் எவ்வளவு செலவு? மாதா மாதம் வருமானம் அதிகரிக்கிறதா ..

இதெல்லாம் தெரியாமல் பணம் போட்டால் சூதாட்டம். தெரிந்து முடிவெடுத்து பணம் போட்டால் முதலீடு!

இதே தான் பங்கு சந்தையிலும்! 

Thursday, January 3, 2019

சபரிமலை!



இந்த பதிவு சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா கூடாதா என்பது பற்றி அல்ல.

எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை பதிவு செய்கிறேன்

- கேரளாவின் மொத்த மக்கள் தொகை 2011 ஆண்டில் மூன்றறை கோடி. (இப்போது நான்கு கோடி இருக்கும் என நினைக்கிறேன். பாதி பெண்கள் இருக்கும். ஒரு 2 கோடி? இதில் ஒரு 50 லட்சம் 15 வயதுக்கு கீழுள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும். மீதி ஒன்றரை கோடி )
- கேரளாவின் சாலைகளின் மொத்த நீளம் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர்கள்.
- வனிதா மதில் பேரணியில் 50 லட்சம் மக்கள் 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தார்கள் - பினராயி அரசு (அதாவது மூன்றில் ஒரு பங்கு கேரள பெண்கள் சரியாக அரைமணி நேரத்துக்கு வரிசையில் வெறும் 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்றிருந்தார்கள்!)
- கேரள அரசு ஆளுங்கட்சி CPI (M). இந்திய அளவில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படும் ஒன்று. ஆனால் காங்கிரஸ் கேரளாவில் சபரிமலை மீதான அரசு  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது
- பிஜேபி இந்திய அளவில் ஆளும் கட்சி. மாநில அளவில் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது
- பிஜேபி தென் இந்தியாவில் வலுவாக கால் ஊன்ற இதை ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கிறது
- காங்கிரசை பொறுத்தவரை காற்று எந்தப்பக்கம் அடிக்கும் என்று தெரியாமல் பின்னர் அதற்க்கேற்றமாதிரி நிலை எடுக்கலாம் என்று காத்திருக்கிறது
- CPI (M ) ஐ பொறுத்தவரை - பெண்கள் மீதான அதீத பாசம் - உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை எப்பாடு பட்டாவது அமுல் படுத்தும் நீதிக்கு தலை வணங்கும் நேர்மை - என்றெல்லாம் யாருமே நம்பமாட்டார்கள். இவர்கள் தான் மார்தோமா சர்ச், முல்லை பெரியாறு விஷயங்களில் கோர்ட் பேச்சைக் கேட்பதில்லை  பாதிரியார் ஒருவர் மீதான கன்னியாஸ்திரீகளின் குற்றசாட்டை கேட்கவும் தயாராக இல்லாத பெண் உரிமை பாதுகாவலர்கள்!
- CPI (M ) நோக்கம் புரியவில்லை. பிற மதங்களுக்கு சார்பாகவா.. இல்லை பிஜேபி காலூன்ற கள்ளத் தனமாக பினரயி கை கோர்த்திருக்கிறாரா.. மக்கள் நலனுக்காக எந்த அரசியல் கட்சியும் இல்லை என்பதில் சந்தேகமே இல்லை.
- எல்லோருமே இது வெறும் கேரளா விவகாரமாக இருக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

என்னமோ நடக்குது. ஒண்ணுமே புரியலை..

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !

Friday, March 9, 2018

மோடி அரசு. - ஒரு அலசல்



முதலில் ஒரு Disclaimer. நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். என் கருத்தில் தவறிருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

மோடி அவர்களின் மிகப்பெரிய வாக்குறுதி.. "நானும் தின்ன மாட்டேன். மற்றவர்களையும் தின்ன விட மாட்டேன்." அதாவது, நானும் ஊழல் செய்யமாட்டேன். மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன்.

ஊழல் ஒரு பிரச்சனையா ?

அதிர்ச்சியாக இருந்தாலும், மக்கள் இதை பிரச்சனையாக பார்ப்பதில்லை என்பதே உண்மை. ஜெ , கருணாநிதி, காங்கிரஸ்.. என்று ஊழல் செய்தது உள்ளங்கை நெல்லிக்கனி போலவோ புறங்கையை நக்கியது போலவோ வெளிப்படையாகவோ தெரிந்தாலும் மக்கள் அதன் பின்னரும் ஓட்டு போட்டிருக்கிறார்கள்

பிறகு என்ன தான் பிரச்சனை?

நான்  தனிப்பட்ட முறையில் எதில் பாதிக்கப் படுகிறேனோ, அது தான் எனக்குப் பிரச்சனை!

இதனால் தான், ஜெயலலிதா நேரடியாக மக்கள் பாதிக்கப் படும் எதிலும் கை வைக்கவில்லை. முன்னால் கை வைத்த போதெல்லாம் அடி வாங்கினார் (உயிர்பலி தடை / அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்).

நேரடியாக பலன் தரும் திட்டங்களில் (அம்மா உணவகம். சத்துணவு. கலைஞர் தொலைக்காட்சி) உடனடியாக நல்ல பெயர் கிடைப்பது அதனால் தான். 

ஊழல் எப்போது பிரச்சனை ஆகிறது என்றால் வெளிப்படையாக அது அப்பட்டமாக வெளிக் காட்டிக் கொள்ளப் படும்போது , Flaunt செய்யப் படும்போது. (கருணாநிதியின் வாரிசுகள் மிகப் பெரிய படத் தயாரிப்பாளர்கள் ஆனது / ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமண ஆடம்பரம்)

இப்போது மோடி அரசைப் பார்க்கலாம்

மோடி அரசின் மிகப் பெரிய தவறாக ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை காண்கிறேன். கிட்ட தட்ட எல்லோரும் பாதிக்கப் பட்டார்கள். பெரிய அளவு நல்லது எதுவும் நடந்ததாக தெரியவில்லை. பலன் என்ன கிடைத்தது என்பதை விளக்கவோ, பலன் இல்லாததற்கு வருத்தம் தரவோ மோடி முன்வரவில்லை என்பது அநியாயம்!

அதே போல் GST. எவ்வளவு குழப்பம்! இதுவரை நான்கு முறை பட்டியலிட்ட பொருட்கள் மாறிவிட்டது. Again, கிட்ட தட்ட எல்லோரும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இப்போது தேசிய வங்கிகள் ஒவ்வொன்றாக வாராக்கடன் பட்டியல் வெளியிடும்போது, இவர் அரசும் ஊழலில் குறைந்ததில்லை என்று தோன்றுகிறது!

அடுத்தது கிட்ட தட்ட ஐந்து வருட தேர்தல் பிரச்சாரமாக அரசை நடத்துகிறார்.

நல்லது நடந்திருக்கிறது. அல்லதும் நடக்கிறது. எல்லோர் அரசைப் போலவே.

அடுத்து காங்கிரஸ் வந்துவிடுமோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை!

ராகுல் மட்டுமே அதை தடுக்க முடியும், வாயை திறக்காமலிருந்தால்!

Tuesday, October 24, 2017

இருப்பவர்களும் இல்லாதவர்களும்!



இன்று இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை, வெளியிலிருந்து பார்ப்பவனாக எனக்குத் தெரிவது, ஏழை / பணக்காரர்கள் இடையே இருக்கும் மிகப்பெரிய இடைவெளி.



இன்றைய தமிழ் இந்து நாளிதழின் முதல் பக்கத்தில் பார்த்தவுடன் முகத்தில் அறைவது..

ஒரு லட்சத்துக்கு கொஞ்சம் அதிகம் கடன் வாங்கி இரு மடங்கு வட்டி கட்டி அடைக்க எந்த வழியும் தெரியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்து தம்பதியர்..

33 கோடிக்கு புது 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த சேகர் ரெட்டி

எப்பவோ நடந்த பத்திரப் பதிவு ஊழல் புகழ் தெல்கி (90000 கோடி ஊழல்!)..

 ஏழ்மையுடன் நேர்மையாக இருப்பதற்கு என்ன இன்சென்டிவ் ?

Saturday, September 16, 2017

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2

(முதல் பாகம் படித்துவிட்டீர்களா? கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். இல்லையேல் தலைகால் புரியாது!)
இப்போது என்ன செய்வது என்று முழித்தோம்! இன்னொரு குடும்பம் என்பது ஒரு இளைஞர் / இளைஞி . "நாங்கள் இங்கிருந்து வாடகை கார் எடுத்துக்கொண்டு யூஜின் (180 மைல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம்)  செல்ல வேண்டும். நாம் வந்த ரயிலிலேயே போகலாம். ஆனால் ட்ரைவ் செய்யும் பாதை அழகாக இருக்கும் என்பதால் இந்த பிளான்! " என்றார்கள் (சொந்த செலவில் சூனியம் என்று தோன்றியது. பேசாமல் ரயிலிலேயே போயிருக்கலாம்!)

சரி. நாம் இருக்கப் போவது ரிஸார்ட் -ஆச்சே. அவர்களையே கூப்பிட்டு ஒரு வண்டியை அனுப்பச் சொல்லலாம் என்று அவர்களையே கூப்பிட்டோம்!

நாங்கள் இருந்த ரிஸார்ட்!

போனை எடுத்த பெண், 'எங்கள் ரிஸார்ட் பதினைந்து நிமிட ட்ரைவில் உள்ளது. எங்களிடம் ஷட்டில் சர்விஸ் இல்லை. வந்தால் இருக்க எல்லா வசதியும் இங்கு இருக்கிறது' என்றார். வந்தவுடன் சவுகரியம் எல்லாம் சரி. வருவது எப்படி என்றால் மறுபடியும் அதே வசனம். 'எங்கள் ரிஸார்ட் பதினைந்து..' மனிதருடன் பேசுகிறோமா. இல்லை மெஷினுடனா என்று சந்தேகம் வந்தது. கொஞ்சம் யோசித்தால் அவரும் தான் என்ன செய்ய முடியும்?

சரி. அந்த வழியும் இல்லை. என்ன செய்யலாம் என்று இளைஞ்ஞரை பார்த்தேன். அவருக்கும் தர்ம சங்கடமான நிலைமை!

கார் கம்பெனிக்காரரை பார்த்தோம். வேறு ஏதாவது ரெண்டல் கார் கம்பெனி நம்பர் கொடுங்கள். அங்கிருந்து கார் எடுத்துக் கொள்கிறோம் என்றோம். அவர், இந்த ஊரில் பகல் 12 மணிக்கு மேல் எந்த ரெண்டல் கார் கம்பெனியும் திறந்திருக்காது. நாளை தான் இனிமேல்! என்றார். திகைத்து விட்டேன். இப்படி ஒரு ஊரா!

இதற்கு நடுவில் என் பெண் போனில் யாருடனோ வண்டி  பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். இவளுக்கு இந்த ஊரில் யாரைத் தெரியும் என்று யோசித்தேன். போனை வைத்துவிட்டு என்னிடம், 'வீடு விட்டு வீடு மாறுபவர்களுக்கு U-Haul இருக்கில்லயா. அதாம்பா, வேன் வாடகைக்கு எடுத்து போவோமே. அங்க வேன் எடுத்துக்க முடியுமே. அதில் இருவர் தான் போகமுடியும். அவங்க அந்த வேன் எடுத்துக்கலாம். திருப்பி இங்க வந்து ரிட்டர்ன் பண்ணத்  தேவையில்லை. யூஜினிலேயே ரிட்டர்ன் பண்ணலாம்! வண்டி கூட இருக்காம். அதான் கேட்டுட்டு இருந்தேன்' என்றாள். நான் உடனே அவரிடம், 'இது நல்ல ஐடியாவா இருக்கே. நீங்க ஏன் அப்படிப் பண்ணக்கூடாது?' எனக் கேட்டேன்.

அதற்க்கு அவர்கள் இருவரும், 'ஐயையோ! U-Haul வண்டியா. வேண்டவே வேண்டாம்' என்றுவிட்டார்கள்! அவர்களுக்கு என்ன அனுபவமோ! U-Haul வண்டி வசதியாக எல்லாம் இருக்காது. வெறும் $20 வாடகை என்று விளம்பரப் படுத்தும்போது அதில் என்ன வசதியை எதிர்பார்க்க முடியும்?

சரி. இதுவும் வேலைக்காகாது. 'ஒரு வழி இருக்கிறது. நம்ம குடும்பத்தை அந்த ரிஸார்ட்டில் விட்டு விட்டு அவர்களை கார் எடுத்துக்கொண்டு போக சொல்லலாமா? நாம ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கொள்ளலாமே'  என்றேன் மனைவியிடம். அவள் அனல் பார்வையைப் பார்த்து அந்த யோசனை அப்படியே அமுங்கிவிட்டது!

அவர்கள் இதற்கு நடுவில் யார் யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ தெரிந்தவர் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். காதில் இருந்து போனை உரித்தெடுத்து, 'அடுத்த ஊர் medford. அங்கு வாடகை கார் இருக்கிறதாம். ரிஸர்வ் பண்ணிவிட்டேன் (இன்னுமாடா இந்த ரிஸர்வேஷனை நம்பறீங்கன்னு நினைச்சுக்கிட்டேன்!) நீங்கள் இந்த காரை எடுத்துக் கொள்ளுங்கள். எங்களை அங்கு ட்ராப் செய்துவிடுங்கள்' என்று சொன்னார்!

நல்ல யோசனையாக இருக்கிறது. கண்டிப்பாக பண்ணிடுவோம் என்று அந்த ஊர் எவ்வளவு தூரம் என்று பார்த்தேன் . 80 மைல்! அடக்கொடுமையே! சரி வேறு வழியே இல்லை என்றாகி விட்ட பிறகு பண்ணிவிட்டு வேண்டியது தான்! போய்வர ஒரு 3 மணி நேரம் விரயம் என்று யோசித்த படியே ஒத்துக்கொண்டேன்!

யாருக்கும் திருப்தியில்லாத ஒரு தீர்வு! என்ன செய்வது!

அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டது. ஏர்போர்ட் தான் காலியாச்சே! ஒரு தவளை வந்தாலும் கேட்டிருக்கும்!

ஒருவர் உள்ளே நுழைந்து நேரே யாரிடமும் பேசாமல் காலியாக இருந்த hertz கார் counter எதிரில் நின்று கொண்டார். சில நிமிடங்களில் hertz அலுவலக சிப்பந்தி அவரைத் தொடர்ந்து வந்தார். 'நல்லவேளை. நான் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தேன். அதனால தான் கூப்பிட்ட உடனே வரமுடிந்தது என்று அவரிடம் சொன்னது கேட்ட்து!' உடனே அவரிடம் ஓடினோம்.

முதலில் இளைஞர் அவரிடம் 'அந்த காரை எங்களுக்கு வாடகைக்கு  கொடுங்கள்' என்றார்.
அவரும், 'எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், செவ்வாய் கிழமை இதை ஒருவர் வந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அதற்குள் கொடுத்தால் சரி' என்றார். இளைஞர் சோகமாக 'நாங்கள் யூஜினால் காரை விடுவதாக இருக்கிறோம்' என்றார்.
'அப்படியானால் தரமுடியாது' - hertz யுவதி!

நான் அவரிடம், 'அப்படியானால் அந்த காரை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் திரும்பிச் செல்லவேண்டிய ட்ரெயின் திங்கள் இரவு கிளம்புகிறது. அதனால் கண்டிப்பாக நாங்கள் காரை திருப்பிக் கொடுத்துவிடுவோம் ' என்றேன்!

சரி. நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் Hertz யுவதி! அந்த இளைஞர்  / இளைஞி பட்ஜெட் கம்பெனி காரை எடுத்துக் கொண்டார்கள்!


ஒரு வழியாக கார் கிடைத்தது! வாழ்க Hertz !

அப்பாடா. கார் கிடைத்துவிட்டது. இனி ஜாலி தான் என நினைத்தேன்.. (விதி) சிரித்தது காதில் விழவில்லை!

Monday, September 4, 2017

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1


கொஞ்சம் பெரிய தொடர் பதிவு!


(c)கிரேட்டர் ஏரி 

இங்கு லேபர் டே வீகெண்ட் சென்ற வார இறுதியில். எளிதில் கிடைத்திடாத சேர்ந்தாற்போல் மூன்று நாள் விடுமுறை. அலுவலகத்திற்காவது எளிதில் லீவ் எடுத்துவிடலாம். பள்ளிக்கு மாணவர்கள்  லீவ் எடுப்பது பயங்கரக்  கொடுமை. அரசு பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாணவரும் வரும் எண்ணிக்கையை வைத்து பள்ளிக்கு பணம் கொடுக்கப் படுகிறது என்பதால் லீவ் கேட்டால் சொத்தை கேட்பது போல முறைப்பதும், வராத நாளுக்கு செய்யவேண்டிய ஹோம் ஒர்க் சுமையும் அன்று நடந்த டெஸ்ட் மற்றும் quiz -ஐ ஈடு கட்டுவதும் பெரிய கொடுமை என்பதால் மாணவர்களே லீவ் எடுக்க அழுவார்கள். அதனால், இது போன்ற சேர்ந்து வரும் மூன்று நாள் விடுமுறைகள் கட்டாயமாக சுற்றுலா செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு நம்மை தள்ளிவிடும்!

மூன்று நாள் விடுமுறைக்கு இம்முறை oregan மாநிலத்தில் உள்ள klamath falls என்று ஊருக்கு செல்ல தீர்மானித்தோம்.  சென்று வர ரயில் பயணம். அங்கு வாடகை கார். தங்க வசதியான ஓட்டல். என்று எல்லா ஏற்பாடும் செய்துவிட்டோம். நிம்மதியாக சென்று வரவேண்டியதுதான்!

மாலை 8 மணி வாக்கில் ரயில் கிளம்பும் நேரம் என்பதால் அவசர அவசரமாக 7 மணி வாக்கில் ஊபரில் ரயில் நிலையம் சென்றோம். அறிவிப்பு எதுவும் காணோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு enquiry counter சென்று விசாரித்தால் ரயில் மூன்று மணி நேர தாமதம். நீங்கள் இன்டர்நெட்டில் செக் செய்து விட்டு வந்திருக்கலாமே என்றார்! அடக்கொடுமையே என்று நொந்து மறுபடியும் எடு ஊபெர்! வீட்டை நோக்கி சோகமாக சென்றால் ஓட்டுநர், எங்கிருந்து வருகிறீர்கள்? சுற்றுலாவா? என்று புண்ணில் வேல் பாய்ச்சினார்!

ஒருவழியாக கிட்டதட்ட 12 மணிக்கு ரயில் கிளம்பியது. ஏறி நிதானமாக உட்கார்ந்தோம் (மற்றவர் தூங்குகிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் எதற்கு பேசுகிறார்களோ என்று யாரோ யாரிடமோ சத்தமாக 'முணுமுணுத்தது காதில் விழுந்தது. என்ன செய்வது. மனதிற்குள்ளேயே பேசி மற்றவர்களுக்கு கேட்க செய்யும் கலை தெரியவில்லையே!)

8 மணிக்கு செல்ல வேண்டிய ஊருக்கு 12 மணிக்கு சென்றோம் (நான் தான் சொன்னேனே! time make -up எல்லாம் செய்ய மாட்டார்கள் என்று! - train conductor). அந்த ஊரு ரயில் நிலையம் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வேலை செய்யும் ஒன்று என்பதும் இந்த ரயில் மட்டுமே அந்த ஊருக்கு இணைப்பு என்பதால் அந்த ரயில் வரும் நேரத்திற்கு ஏற்றாற்போல் நிலையம் வேலை செய்யும் என்பது புதுமையான செய்தி. அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் ஒரு நாளுக்கு நாலு மணிநேரம் மட்டுமே என்பதால்  எல்லோரும் இன்னொரு பகுதி நேர வேலைக்கு செல்பவர்களாயிருக்கும்! ரயில் லேட்டாக வந்ததால் இன்னும் இரண்டு மணிநேரம் ரயில் நிலையம் திறந்திருந்தது. அவர்களுக்கு இன்று இரண்டு மணி நேரம் அதிக சம்பளமாக இருந்திருக்கும் என்பது மட்டுமே இதில் ஒரு திருப்தி!

வாடகை கார் எடுக்க ஏர்போர்ட் செல்ல வேண்டியிருந்தது. கொடுமை என்னவென்றால், அந்த ஊருக்கு வரும் விமான சேவை ரத்து செய்யப் பட்டது 2014இல். தத்தித்தத்தி இன்னொரு கம்பெனி ஒரு விமானத்தில் 30 பேர் மட்டுமே செல்லக் கூடிய பயணத் திட்டத்தை 2016 இல் தொடங்கியது. அதுவும் இப்போது நிறுத்தப் பட்டு விட்டது.



மொத்தத்தில், ஆளில்லா விமான நிலையத்தில் இருக்கும் கார் வாடகை கம்பனிக்கு  வெளியூரில் இருந்து வர போக இருக்கும் ஒரே இணைப்புள்ள ரயில் நிலையத்தில் இருந்து டாக்ஸி (உபெர் இல்லை!) எடுத்து இரண்டு குடும்பம் சேர்ந்து சென்றோம் (இருவரும் தனித் தனியாக மீட்டர் வாடகை கொடுக்கவேண்டும் - ட்ரைவர்) அங்கு சென்றால் பட்ஜெட் கார் கம்பெனி என்று போர்ட் மட்டும் இருந்தது. ஒரு தொலை பேசி எண்ணும், அழைத்தால் ஜேமி என்ற சிப்பந்தி வருவார் என்றும் போட்டிருந்தது. தொலைபேசியவுடன் வந்த அவர், இரண்டு குடும்பங்களை பார்த்தவுடன், நீங்கள் லேட் ஆக வந்ததால் ஒரு கார் தான் இருக்கிறது. நீங்கள் இருவரும் யார் எடுத்து செல்வது என்று முடிவு செய்து கொள்ளுங்கள் என்று நம்மிடம் பிரச்சனையை தள்ளி விட்டார். ரிசர்வ் செய்த கார் எப்படி இல்லாமல் போகும். நீங்கள் இதற்க்கு பொறுப்பில்லையா என்ற கேள்விகளை கண்டு கொள்ளவே இல்லை. ஒரே பதில். நீங்கள் லேட்டாக வந்தீர்கள். அதனால் கார் இல்லை. வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டோம்! (கண்ணுக்கு எட்டிய வரை ஆளே இல்லாத இடத்தில் யார் வந்து கார் எடுத்திருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை!)

..தொடரும்!

Saturday, February 25, 2017

ஆரம்பமே சொதப்பல்!


ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சி தொடங்கியிருக்கிறார்.

அரசியல் என்பது எவ்வளவு பெரிய பிசினெஸ்! எவ்வளவு பணத்தை கொட்டி ஒரு கட்சியை நடத்த வேண்டியிருக்கிறது! வெறும் டீ குடித்துவிட்டு நாளெல்லாம் வேலை செய்யும் தொண்டர்கள் எந்த கட்சியிலாவது இருக்கிறார்களா? (கம்யூனிஸ்ட் தவிர). வேளைக்கு குவார்ட்டர். சாப்பாட்டுக்கு பிரியாணி. கையில் கொஞ்சம் காசு என்றுதான் தொண்டர்களை திரட்ட வேண்டியிருக்கிறது.

போட்ட பணத்தை எடுக்க எவ்வளவு பொறுப்பாக அந்த பிசினெஸ்ஸை நடத்தவேண்டும்! இங்கே என்னடாவென்றால் கட்சி பெயரிலேயே சொதப்பல்.

கட்சிப் பெயர் : எம்ஜியார் அம்மா தீபா பேரவை

ஆங்கிலத்தில் : MGR Amma Deepa பேரவை. அதாவது MAD பேரவை.

பைத்தியக்கார பேரவை? பைத்தியக்காரர்களின் பேரவை?

கொஞ்சம் யோசித்து வைத்திருக்கக் கூடாதா? இரண்டு மாதம் யோசித்து வைத்த பேர் இதுதானா?

சுத்தம்!

Sunday, December 11, 2016

காங்கிரஸிற்கு தமிழ் நாட்டில் மறுவாழ்வு!


விசித்திரமாகவும், பைத்தியக் காரத் தனமாகவும் தோன்றலாம். கிட்டதட்ட புதைக்கப் பட்ட கட்சி தமிழ் நாட்டில் உயிர்த்தெழுவதா என்ற கேள்வியும் எழலாம். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.


அதிமுக வின் தலைவி திரு ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த உடன் அந்த கட்சியின் / தமிழகத்தின் வெற்றிடம் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஜெயலலிதாவின் ஆளுமை அப்படிப் பட்டது. எம்ஜியாரும் கருணாநிதியும் அடைய முடியாத உயரம் இது.  (வெற்றிடம் பற்றி சென்ற வருடம் நான் எழுதியது)

இப்போது நடராஜன் அவர்களின் சித்து வேலைகளால் கிட்டதட்ட எல்லோரும் சசிகலாவின் பின் ஓரணியில் திரண்டு வருகிறார்கள். இங்கு எல்லோரும் என்பது அறியப்பட்ட / அறியப்படாத அதிமுக 'தலைவர்கள்' மற்றும் மீடியா 'நண்பர்கள்'

ஆனால், மக்களில் பெரும்பாலோருக்கு சசிகலா என்றால் வேப்பங்காய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மக்களின் பொதுவான கருத்து ஜெயலலிதா நல்லவர்தான், ஆனால் சசிகலா தான் எல்லா கெட்டவற்றிக்கும் காரணம் என்பது. யோசித்துப் பாருங்கள். எவருக்காகவாது 10000 பேர் மொட்டை போட்டுக் கொண்டதாக சரித்திரம் உண்டா? எம்ஜியாருக்குக் கூட கிடையாது.

பிஜேபியை பொறுத்தவரை அவர்கள் சசிகலா பின்னால். கௌதமியை அறிக்கைவிட வைத்து சசிகலாவுக்கு ஒரு செக். சேகர் ரெட்டியை ரெய்டு செய்து பன்னீர் செல்வத்துக்கு ஒரு செக். சசிகலா தலைவியாக இருப்பதே பிஜேபி க்கு நல்லது என நினைக்கிறார்கள்.

திமுகவை பொறுத்தவரை, எது செய்தாலும் அவர்களுக்கு கெட்டப் பெயர். அதனால் அமைதியாக இருப்பது மட்டுமே அவர்களுக்கான ஆப்ஷன்.

  இது தான் காங்கிரஸிற்கு சரியான சந்தர்ப்பம். திருநாவுக்கரசர் தலைவராக இருப்பது காங்கிரஸிற்கு பெரிய அதிர்ஷ்டம். நேரடியாக எதுவும் செய்ய வேண்டாம்.

ஜெயலலிதாவின் சகோதரர் மகளை தலைவியாகக் கொண்டு அம்மா திமுக ஆரம்பித்தால், மிக விரைவில் கட்சியும் ஆட்சியையும் அதற்கு வந்துவிடும். அவரை முன்னிறுத்தி காங்கிரஸ் தன்னை பலப் படுத்திக் கொள்ளவேண்டியதுதான்!

ஒரு 10000 கோடி இருந்தால் இதைத்தான் நான் செய்வேன்! இல்லையே!

Tuesday, January 5, 2016

அமெரிக்க அனுபவம் : பிரச்சனையின் வேர்!



போலீசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு விரிசல் என்பதற்கு   எகானமி, தோல் நிறம் என்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களைப் போலில்லாதவர்கள் குறித்த தவறான புரிதலும் இதற்க்குக் காரணம். பிரச்சனையின் அடி வேரை கண்டு அதற்கு தீர்வு காண சிகாகோ நகர அரசு எடுத்த ஒரு நடவடிக்கை இது. ஏழு வருடத்துக்கு முந்தைய வீடியோ என்பதை நினைவில் கொள்ளுங்கள்

எல்லா வகுப்பினரையும் / மதத்தினரையும் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த வீடியோ.
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது இந்த நகரத்தில் மட்டும் 80000 இந்துக்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு போலீஸ் போக நேர்ந்தால் அந்த வீட்டிலுள்ளவர்கள் அதை எப்படி எதிர் கொள்வார்கள் என்று பாடம் எடுக்கிறது இந்த வீடியோ





உண்மையிலேயே இந்த நடவடிக்கையை பார்த்து அசந்து விட்டேன். இதை தான் ஒவ்வொரு பொறுப்பான அரசும் செய்ய வேண்டும். நம் ஊரிலும் போலீஸ் போன்ற பொது நல ஊழியர்களுக்கு இது போன்ற வழிகாட்டிகள் இருக்கும் என நம்புகிறேன்.

Sunday, January 3, 2016

பழைய பட விமர்சனம்! கேப்டன் பிரபாகரன்




பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் கேப்டன் பிரபாகர் படம் பார்த்தோம். சுவாரஸ்யமாக இருந்தாலும் அப்போது பார்த்தபோது தெரியாதது, எந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஒரே படத்தில் கொட்டி கிளறியிருக்கிறார்கள் என்பது!

ஏற்கனவே 100 வது படம் கமல், ரஜனி இருவருக்குமே தோல்விப் படங்களாக அமைந்ததால் விஜயகாந்த் எந்த ரிஸ்கும் எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.


  • போலிஸ் ஸ்டேஷனில் கற்பழிப்பு முயற்சி - வேலியே பயிரை மேய்கிறது போன்ற வீர வசனங்கள்
  • ஷோலே பாதிப்பில் ரயிலை குதிரைகளில் துரத்தி பெரிய சண்டைக் காட்சி (நம் ஊரில் யார் குதிரையில் ரயிலை துரத்தி கொள்ளை அடித்தார்கள்?)
  • இளையராஜா இசையில் குரூப் டான்ஸ் பாடல் - ஆட்டமா தேரோட்டமா - 
  • பலசாலியான வில்லன் - மன்சூரலிகானின் அட்டகாச நடிப்பு 
  • எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு ஹீரோ - கௌரவ தோற்றத்தில் - சரத் குமார் 
  • கொஞ்சம் தெரிந்த இன்னொரு ஹீரோ - லிவிங்க்ஸ்டன் 
  • இந்த கௌரவ ஹீரோக்களின் பரிதாப மரணம் 
  • கௌரவத் தோற்றத்தில் நம்பியார் (ஒரு வசனம் கூட இல்லை! யூ டியுப் பிரிண்டில். மௌன விரதமோ என்னமோ!)
  • கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சிகள் - சரத் குமார் - ரம்யா கிருஷ்ணன் 
  • க்ளைமாக்சில் சண்டைக் காட்சி நடுவில் நிறை மாத கர்ப்பிணி தவிப்பு -- 
  • ரத்தக் களரி சண்டைக்கு நடுவே குழந்தை பிறப்பது -- ரம்யா கிருஷ்ணன் 
  • குழந்தையை பிரசவித்த வுடன் தாய் மரணம் -- ரம்யா கிருஷ்ணன் 
  • வில்லனை பிடித்த வுடன் நின்று விடாமல் நீளமான தீப்பொறி பறக்கும் வசனங்கள் --
  • கோர்ட்டில் மூன்று கொலை செய்த விஜயகாந்த் நிரபராதி என்று விடுதலையாவது (
  • கடைசி கோர்ட் காட்சிகள் எல்லாம்  படு முட்டாள் தனம்!)
  • விஜயகாந்திற்க்கே உரிய கால்களை அதிகம் உபயோகித்து நிறைய சண்டைகள்..



Throw the kitchen sink என்பார்கள். குத்துச் சண்டையில் கடைசி ரௌண்டில் ஜெயிக்க தனக்குத் தெரிந்த எல்லா வகை தாக்குதல்களையும் பயன்படுத்தி அடிப்பது. (கிடைத்தால் கிச்சன் சிங்கை தூக்கி அடி!) உண்மையிலேயே எல்லா வித்தையையும் இறக்குவது என்பது இது தான்.

விஜயகாந்தின் உழைப்பு அசர வைக்கிறது. படத்தின் பெரிய வெற்றிக்கு அவர் மட்டுமில்லாமல் மன்சூரும் காரணம். மற்றதெல்லாம் சேப்டி நெட் தான்!

Friday, January 1, 2016

அரசியல் வெற்றிடம்



முதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். நான் தமிழகம் இப்போதிருக்கும் நிலையை பார்ப்பது செய்தி ஊடகங்கள் மூலமும், சமூக வலை தளங்கள் மூலமும், பதிவுகள் மூலமும் தான்.

இப்போது இருப்பது போல ஒரு அரசியல் வெற்றிடம் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை. வெள்ளம் வந்த போதுதான் எந்த அளவு அரசு செயல்படாத அரசாக இருக்கிறது என்று தெரிந்தது. ஊரே முழுகிக் கொண்டிருக்கும் போதும் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வெளியே வராத முதல்வரை என்ன சொல்வது?

திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி தலைமையை ஸ்டாலினுக்கு எளிதாகக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார் என நினைக்கிறேன். சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது இரண்டாவது அல்லது மூன்றாவது வருடம் ஸ்டாலினைக் கொண்டு வந்திருந்தால் transition எளிதாக இருந்திருக்கும். இப்போது யார் கூட்டணிக்கு வருவார்கள் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள். வெள்ளத்தில் இறங்கி வேலை செய்திருந்தால் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். மிக தாமதமாக குறைந்த இடங்களில் தென்பட்டது பெரிதாக பலன் அளிக்கவில்லை என நினைக்கிறேன்.

வைகோ வை பொருத்தவரை தங்கத்தட்டில் கொடுத்த வாய்ப்பை தவற விட்டவர் என நினைக்கிறேன். இனி எப்போதும் அந்த வாய்ப்பு வராது. எப்போது தமிழகத்தின் நலத்தை விட தமிழீழத்தின் நலத்தை அதிகமாக  அவர் மதிபிட்டாரோ அப்பொழுதே அவர் அரசியலில் தனிப்பட்டு விட்டார். அவர்தான் புரிந்து கொள்ளவில்லை.

விஜயகாந்தை பொறுத்த வரை, பொறுப்பிலாமல் நடந்து கொள்வதே அவர் மிகப் பெரிய பலமாகக் கருதிக் கொள்கிறார். எல்லோரையும் துச்சமாக மதிப்பது வேறு. பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேறு. அந்த வித்யாசம் தெரியாமல்தான், யாரையும் மதிக்காமல், அது வெளியே தெரியும் அளவு பொறுப்பிலாமல் நடந்து கொள்கிறார். அதை உணர்ந்து கொள்ளும் வரை, அவர் 10% ஓட்டோடு திருப்தி அடைய வேண்டியது தான்!


ராமதாசை பொருத்தவரை அவர் credibility யை அவரே போக்கிக்கொண்டு விட்டார். மாற்றி மாற்றி அலியன்ச் வைப்பது பெரிய தவறு ஒன்ன்றும் இல்லை. யாருக்குமே கொள்கை என்று ஒன்று கிடையாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். என்ன. இது பா மா கா விஷயத்தில் வெளிப்படையாக தெரிந்து விட்டது. அது தான் தவறு. அதை மீறி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.

திருமாவளவன் போன்றவர்கள் உண்மையாக உறுதியாக தன் கொள்கையில் (!) நின்றிருந்தால் ஒரு credibility  இருந்திருக்கும். ஆனால் கொள்கை (!​) விஷயத்தில் எதிர் நிற்கும் பா மா கா போன்றவர்களுடன் எப்போது கூட்டணி அமைத்தாரோ, ராஜ பக்ஷேவுடன் புகைப் படத்துக்கு போஸ் கொடுத்தாரோ அப்போதே அவர் அழிந்துவிட்டார். இவரை அழித்ததில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம் என நினைக்கிறேன்.

கம்யூனிஸ்ட் களை பொருத்தவரை அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மேலும், ஒன்றுக்கும் உதவாத சீனா ஆதரவு, ரஷ்யா ஆதரவு என்பதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் மக்களை பாதிக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்களேயானால் scope உண்டு. என்னைப் பொருத்தவரை, மக்களை பாதிக்கும் விஷயங்களில் உண்மையாக அக்கறை செலுத்துபவர்கள் இவர்கள் மட்டுமே. என்ன பிரயோஜனம். அதை மக்கள் உணரும் வரை இவர்களுக்கு விடிவு காலம் கிடையாது.

பிஜேபி யை பொருத்தவரை தமிழிசை போன்றவர்களை தவிர்த்து வேறு யாரும் அவர்களை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.

கடைசியில் என்ன மிச்சம் என்று பார்த்தால், இருப்பது வெற்றிடம் என்ற உண்மை தான்.

மீள ஒரே வழி , தேர்தலில் ஒரு மைனாரிட்டி அரசு வரவேண்டும். அந்த அரசு, குறைந்தது இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் அரசு அமைக்க முடியும் என்ற நிலை வரவேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது பொறுப்பான அரசு வரும்!



Tuesday, July 28, 2015

ஃபேஸ்புக் .. ட்விட்டர் .. அப்புறம்?





பிடிக்குதோ.. இல்லையோ.. நான் இந்த 'சோசியல் மீடியா'க்களில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய நேரம் செலவழிக்கிறேன்.. எனக்கு மட்டுமில்லை.. பலருக்கும் இதே அனுபவம் என நினைக்கிறேன்..

முதலில் எல்லாம் பஸ்.. ரயில்.. பயணங்களில் கொஞ்சமாவது மற்றவர்களுடன் பேசுவார்கள்.., இப்போது  சுத்தம்!
 (இங்கு).. ஏறியவுடன் பையை கீழே வைக்கும் முன்.. போஃனில்  ஃபேஸ்புக் .. யூடியூப் .. பார்ப்பவர்கள் கிட்டதட்ட எல்லோரும்!



இது எங்கே போய் முடியும் என்று முழிக்கும் போது இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது..

எல்லாரும் தனித்தனியா கூட்டமா அலையப் போறோம்!


கடைசியில்.. ஐன்ஸ்டீன் சொன்னது தான் நடக்கப் போகிறது!



Sunday, June 7, 2015

முழுமையான சர்வாதிகாரம்..

 கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் டி வி யில் வரும் 'செய்திகள் ' எந்த அளவு நம் கருத்துக்களை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது..

ஒரு மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டு வெளிவந்து உண்மையிலேயே மக்கள் புரட்சி வந்துவிடும் போல இருக்கிறது என்று எண்ணும்போது  திடீர் என்று ஒரு நடிகை குளிக்கும் வீடியோ வெளியாவது.. மிகப் பரபரப்பாக ஒரு கற்பழிப்பு செய்தி  வெளியாவது..என்றும் இல்லாமல் அதற்கு மிகப் பெரிய கவரேஜ்..அதிரடியாக ஒரு கிரிக்கெட் விளையாட்டு நடப்பது.. மிகப்பெரிய நடிகரின் படம் பெரிய தோல்வி அடைவது.. அந்த படத்தில் நஷ்டம் அடைந்த மிக சிலர் நடத்தும் 'போராட்டம்' செய்தியாக தொடர்ந்து வருவது..

இதெல்லாம் தற்செயலா? இல்லை யாராவது தெளிவாக நம் கருத்துக்களை சிதைத்துக் கொண்டே இருக்கிறார்களா?

இதெல்லாம் தெளிவாக நடக்கும் சதி வேலையே என்று கண்முன் போட்டுடைக்கிறது Perfect Dictatorship என்ற ஸ்பானிஷ் திரைப்படம். பார்க்க பார்க்க யாரோ நம் ஊரில் நடப்பதை வெட்டவெளிச்சம் ஆக்குவது போல இருந்தது..



கதை இதுதான்..

மெக்சிகோவின் ப்ரெசிடெண்ட் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாக வாயை விட்டு மாட்டிக்கொள்ளும் டைப். அவர் முதல் காட்சியிலேயே அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேசும்போது மெக்சிகோ மக்கள் கடின உழைப்பாளிகள்.. யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.. என்று சொல்ல நினைத்து .. உங்கள் நாட்டு கருப்பர்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவர்களை விட நன்றாக செய்வார்கள் என்று உளறிவிடுகிறார் .. வாட்ஸ் அப்.. Facebook , Twitter என்று எல்லோரும் அவரை கிழித்து தோரணமாய் தொங்க விட.. உடனே அவர் ஓர் டிவி நெட்வொர்க்கை அணுகுகிறார்.. அவர்கள் இதை எல்லோரும் மறக்கவேண்டுமானால் வேறு ஒரு பெரிய செய்தி வேண்டும் என்று ப்ரெசிடெண்ட் கட்சியிலேயே இருக்கும் ஒரு மாநில கவர்னர் பெட்டி நிறய பணம் லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிடுகிறார்கள்.. சட்டென்று பிரச்சனை திசை திரும்பிவிடுகிறது...

ஆனால் பெட்டி வாங்கிய கவர்னர் அசகாய சூரன்.. அந்த டிவி காரர்களுக்கு பணம் கொடுத்து அவர் மீதான செய்தியை மாற்ற முயல்கிறார்.. பேச்சுவார்த்தையின் போதுதான் தெரிகிறது இவர்கள் வீச்சு எவ்வளவு பெரிது என்று.. ஒரேடியாக தன்னை ப்ரெசிடெண்ட் ஆக்குவதற்கு அந்த டிவி யுடனே ஒரு டீல் போட்டுக் கொள்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்ட டிவி யே  கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அவர் இமேஜை வளர்க்கிறார்கள் என்று படம் வளர்கிறது..

நேர்மையாக நடக்கும் ஒரு அரசியல்வாதி.. அவரை டிவி பேட்டியில் எடக்கு மடக்காக கேள்வி கேட்டும் பழைய விவகாரங்களை கிளறியும் அவர் இமேஜை டிவி காலி செய்வது.. இரட்டைக் குழந்தைகள் காணாமல் போவது... அந்த விவகாரத்தை எந்த அளவு முடியுமோ அந்த அளவு பெரிதாக்குவது.. எந்த அளவு அதை 'ஸ்டேஜ்' செய்து காட்டுவது.. என்று கிழித்து தோரணமாய் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஒரு சாம்பிள் காட்சி.. நேர்மையான அரசியல்வாதியின் பழசை கிளற அரசின் உதவியை நாடுகிறார் டிவி அதிபர்.. அவர் கூப்பிடுவது தற்போதய ப்ரெசிடெண்டை .. ப்ரெசிடெண்ட் இருப்பது ஒரு ராணுவ வீரருக்கு அரசு மரியாதை செலுத்தும் விழாவில்.. அப்படி ஒரு விழாவில் இருப்பவரை போனில் கூப்பிட்டு கிட்டதட்ட மிரட்டுகிறார் டிவி அதிபர். யாரிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று அப்பட்டமாக காட்டுகிறது இது! அதுவும் 'என்னய்யா டை போட்டுட்டு இருக்க. கேவலமா இருக்கு. நான் கொஞ்சம் அனுப்பறேன்.. அதை போட்டுக்கோ..' என்று 'நான் உன்னை பாத்துக்கிட்டே தான் இருக்கேன்' என்று உள்ளூட மிரட்டுவது.. அட்டகாசம்!

பற்பல இடங்களில் படம் நம் ஊர் அரசியலை நக்கல் செய்வது போலவே இருக்கிறது. அவர்கள் செய்வதென்னவோ மெக்சிகோ அரசியலை! எல்லா ஊரிலும் இவர்கள் ஒரே மாதிரிதான் போல!

தவறவே விடக்கூடாத படம் இது..  2014இல் வெளியான படம். Netflix இல் உள்ளது.

இந்தப் படம் பார்க்கும்போது உங்களுக்கு ஆருஷி கேஸ்.. நிர்பயா விவகாரம் , லிங்கா விவகாரம்.. லல்லு.. சுப்பிரமணியம் சுவாமி.. சல்மான்.. பிரியங்கா.. ராகுல்.. மோடி.. எல்லோரும் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. அவர்களே பொறுப்பு! ..

Tuesday, February 10, 2015

மன்மோஹனின் நெருங்கிய நண்பர்!



டிபெரியஸ் (Tiberius) 14 AD முதல் 37 AD வரை ஆட்சியில் இருந்த ரோமாபுரி மன்னன். வரலாற்றில் அவர் ஒரு கொடுங்கோல் மன்னனாக பதிவு செய்யப் பட்டிருக்கிறார் (மாற்று தகவல்களும் உண்டு) அவரை சதி மூலம் கொன்று பதவிக்கு வந்தவர் அவர் கொள்ளு மருமகன்  (grand nephiew) கலிகுலா (Caligula) டிபெரியஸ் இறக்கும்போது கலிகுலாவிடம் சொன்னது..எப்படியாவது மக்களை டிபெரியஸ் நல்லவன் என்று சொல்ல வேண்டும். அது ஒன்றே நான் கேட்கும் உதவி என்றானாம். அடுத்து வந்த கலிகுலாவின் மிருகத்தனமான கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் எல்லோரும் 'இவனை விட டிபெரியஸ்  எவ்வளவோ நல்லவன்' என்று சொன்னார்களாம்!

வரலாறு மறுபடி திரும்புகிறது

மௌனசாமியாக இருந்து குடி கெடுத்த மன்மோகனிடம் இருந்து பிடுங்கி மோடியிடம் அரசை கொடுத்தால், அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போல் இருக்கிறது!

நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவேன்.. (அதுவும் ஆளுக்கு ஒரு லட்சம்!)
இன்சூரன்ஸ் தனியார் மயமாகாது
ஆதார் அட்டை தேவையில்லை..
அணு ஒப்பந்தம் எல்லோருக்கும் ஏற்றது போல நிறைவேற்றப் படும்..
...
...
எல்லாமே மறந்து விட்டது போல இருக்கிறது. வேலையற்ற வேலையாக இந்துக்கள் பத்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.. கோட்சேக்கு சிலை..பட்டேலுக்கு  உலகத்திலேயே பெரிய சிலை... அதானிக்கு வெளிநாட்டில் தொழில் தொடங்க 1 பில்லியன் டாலர் கடன் (ஸ்டேட் பேங்க் மூலம்).. அணு ஒப்பந்தத்திற்கு கிட்ட தட்ட மண்டியிட்டு ஒப்புக் கொண்டு கையெழுத்து..'எளிமையாய்' 11 லட்சத்தில் சூட்..

நல்ல வேளை .. .டில்லியில் தோத்தது பிஜேபி.. இதை ஒரு wakeup call என உணர்ந்து வெறும் விளம்பரத்தை விட்டு உண்மையில் ஏதாவது பண்ணினால் தேவலாம்!

இப்போது சொல்லுங்கள்..

மன்மோகனே நல்லவர் போல இருக்கிறதே என்று எண்ண வைத்த மோடி தானே மன்மோகனின் நெருங்கிய நண்பர்?