Tuesday, September 29, 2020

பங்கு சந்தை முதலீடா சூதாட்டமா?உங்கள் கையில் நிறைய பணம் இருக்கிறது. அதை முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். 


ஏதாவது ஒரு டீக்கடை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் வேலையில் இருப்பதால், ஏற்கனவே இருக்கும் டீக்கடை ஒன்றில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறீர்கள். வீட்டருகே புதிதாக வந்த ஒரு கடை உங்களுக்கு ஞாபகம் வருகிறது. பிரமாதமான அலங்காரத்துடன் இருக்கும் அந்த கடை வந்த சில நாட்களிலேயே எப்போதும் கூட்டமாக இருப்பதும் உங்களுக்கு தெரியும். லேட் பண்ண வேண்டாம் என்று அந்த உரிமையாளருடன் பேசி ஐந்து லக்ஷம் பணம் போடுகிறீர்கள். நேற்றுவரை டீக்கடை வாடிக்கையாளராக இருந்த நீங்கள் இன்று டீக்கடை பங்கு தாரர் என்று பெருமையாக இருக்கிறது!

நீங்கள் செய்தது முதலீடா? சூதாட்டமா?

சூதாட்டம். டீக்கடை எவ்வளவு லாபத்தில் இயங்குகிறது? எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? மாதம் எவ்வளவு செலவு? மாதா மாதம் வருமானம் அதிகரிக்கிறதா ..

இதெல்லாம் தெரியாமல் பணம் போட்டால் சூதாட்டம். தெரிந்து முடிவெடுத்து பணம் போட்டால் முதலீடு!

இதே தான் பங்கு சந்தையிலும்! 

Thursday, January 3, 2019

சபரிமலை!இந்த பதிவு சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா கூடாதா என்பது பற்றி அல்ல.

எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை பதிவு செய்கிறேன்

- கேரளாவின் மொத்த மக்கள் தொகை 2011 ஆண்டில் மூன்றறை கோடி. (இப்போது நான்கு கோடி இருக்கும் என நினைக்கிறேன். பாதி பெண்கள் இருக்கும். ஒரு 2 கோடி? இதில் ஒரு 50 லட்சம் 15 வயதுக்கு கீழுள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும். மீதி ஒன்றரை கோடி )
- கேரளாவின் சாலைகளின் மொத்த நீளம் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர்கள்.
- வனிதா மதில் பேரணியில் 50 லட்சம் மக்கள் 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தார்கள் - பினராயி அரசு (அதாவது மூன்றில் ஒரு பங்கு கேரள பெண்கள் சரியாக அரைமணி நேரத்துக்கு வரிசையில் வெறும் 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்றிருந்தார்கள்!)
- கேரள அரசு ஆளுங்கட்சி CPI (M). இந்திய அளவில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படும் ஒன்று. ஆனால் காங்கிரஸ் கேரளாவில் சபரிமலை மீதான அரசு  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது
- பிஜேபி இந்திய அளவில் ஆளும் கட்சி. மாநில அளவில் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது
- பிஜேபி தென் இந்தியாவில் வலுவாக கால் ஊன்ற இதை ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கிறது
- காங்கிரசை பொறுத்தவரை காற்று எந்தப்பக்கம் அடிக்கும் என்று தெரியாமல் பின்னர் அதற்க்கேற்றமாதிரி நிலை எடுக்கலாம் என்று காத்திருக்கிறது
- CPI (M ) ஐ பொறுத்தவரை - பெண்கள் மீதான அதீத பாசம் - உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை எப்பாடு பட்டாவது அமுல் படுத்தும் நீதிக்கு தலை வணங்கும் நேர்மை - என்றெல்லாம் யாருமே நம்பமாட்டார்கள். இவர்கள் தான் மார்தோமா சர்ச், முல்லை பெரியாறு விஷயங்களில் கோர்ட் பேச்சைக் கேட்பதில்லை  பாதிரியார் ஒருவர் மீதான கன்னியாஸ்திரீகளின் குற்றசாட்டை கேட்கவும் தயாராக இல்லாத பெண் உரிமை பாதுகாவலர்கள்!
- CPI (M ) நோக்கம் புரியவில்லை. பிற மதங்களுக்கு சார்பாகவா.. இல்லை பிஜேபி காலூன்ற கள்ளத் தனமாக பினரயி கை கோர்த்திருக்கிறாரா.. மக்கள் நலனுக்காக எந்த அரசியல் கட்சியும் இல்லை என்பதில் சந்தேகமே இல்லை.
- எல்லோருமே இது வெறும் கேரளா விவகாரமாக இருக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

என்னமோ நடக்குது. ஒண்ணுமே புரியலை..

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !

Friday, March 9, 2018

மோடி அரசு. - ஒரு அலசல்முதலில் ஒரு Disclaimer. நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். என் கருத்தில் தவறிருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

மோடி அவர்களின் மிகப்பெரிய வாக்குறுதி.. "நானும் தின்ன மாட்டேன். மற்றவர்களையும் தின்ன விட மாட்டேன்." அதாவது, நானும் ஊழல் செய்யமாட்டேன். மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன்.

ஊழல் ஒரு பிரச்சனையா ?

அதிர்ச்சியாக இருந்தாலும், மக்கள் இதை பிரச்சனையாக பார்ப்பதில்லை என்பதே உண்மை. ஜெ , கருணாநிதி, காங்கிரஸ்.. என்று ஊழல் செய்தது உள்ளங்கை நெல்லிக்கனி போலவோ புறங்கையை நக்கியது போலவோ வெளிப்படையாகவோ தெரிந்தாலும் மக்கள் அதன் பின்னரும் ஓட்டு போட்டிருக்கிறார்கள்

பிறகு என்ன தான் பிரச்சனை?

நான்  தனிப்பட்ட முறையில் எதில் பாதிக்கப் படுகிறேனோ, அது தான் எனக்குப் பிரச்சனை!

இதனால் தான், ஜெயலலிதா நேரடியாக மக்கள் பாதிக்கப் படும் எதிலும் கை வைக்கவில்லை. முன்னால் கை வைத்த போதெல்லாம் அடி வாங்கினார் (உயிர்பலி தடை / அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்).

நேரடியாக பலன் தரும் திட்டங்களில் (அம்மா உணவகம். சத்துணவு. கலைஞர் தொலைக்காட்சி) உடனடியாக நல்ல பெயர் கிடைப்பது அதனால் தான். 

ஊழல் எப்போது பிரச்சனை ஆகிறது என்றால் வெளிப்படையாக அது அப்பட்டமாக வெளிக் காட்டிக் கொள்ளப் படும்போது , Flaunt செய்யப் படும்போது. (கருணாநிதியின் வாரிசுகள் மிகப் பெரிய படத் தயாரிப்பாளர்கள் ஆனது / ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமண ஆடம்பரம்)

இப்போது மோடி அரசைப் பார்க்கலாம்

மோடி அரசின் மிகப் பெரிய தவறாக ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை காண்கிறேன். கிட்ட தட்ட எல்லோரும் பாதிக்கப் பட்டார்கள். பெரிய அளவு நல்லது எதுவும் நடந்ததாக தெரியவில்லை. பலன் என்ன கிடைத்தது என்பதை விளக்கவோ, பலன் இல்லாததற்கு வருத்தம் தரவோ மோடி முன்வரவில்லை என்பது அநியாயம்!

அதே போல் GST. எவ்வளவு குழப்பம்! இதுவரை நான்கு முறை பட்டியலிட்ட பொருட்கள் மாறிவிட்டது. Again, கிட்ட தட்ட எல்லோரும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இப்போது தேசிய வங்கிகள் ஒவ்வொன்றாக வாராக்கடன் பட்டியல் வெளியிடும்போது, இவர் அரசும் ஊழலில் குறைந்ததில்லை என்று தோன்றுகிறது!

அடுத்தது கிட்ட தட்ட ஐந்து வருட தேர்தல் பிரச்சாரமாக அரசை நடத்துகிறார்.

நல்லது நடந்திருக்கிறது. அல்லதும் நடக்கிறது. எல்லோர் அரசைப் போலவே.

அடுத்து காங்கிரஸ் வந்துவிடுமோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை!

ராகுல் மட்டுமே அதை தடுக்க முடியும், வாயை திறக்காமலிருந்தால்!

Tuesday, October 24, 2017

இருப்பவர்களும் இல்லாதவர்களும்!இன்று இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை, வெளியிலிருந்து பார்ப்பவனாக எனக்குத் தெரிவது, ஏழை / பணக்காரர்கள் இடையே இருக்கும் மிகப்பெரிய இடைவெளி.இன்றைய தமிழ் இந்து நாளிதழின் முதல் பக்கத்தில் பார்த்தவுடன் முகத்தில் அறைவது..

ஒரு லட்சத்துக்கு கொஞ்சம் அதிகம் கடன் வாங்கி இரு மடங்கு வட்டி கட்டி அடைக்க எந்த வழியும் தெரியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்து தம்பதியர்..

33 கோடிக்கு புது 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த சேகர் ரெட்டி

எப்பவோ நடந்த பத்திரப் பதிவு ஊழல் புகழ் தெல்கி (90000 கோடி ஊழல்!)..

 ஏழ்மையுடன் நேர்மையாக இருப்பதற்கு என்ன இன்சென்டிவ் ?

Saturday, September 16, 2017

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2

(முதல் பாகம் படித்துவிட்டீர்களா? கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். இல்லையேல் தலைகால் புரியாது!)
இப்போது என்ன செய்வது என்று முழித்தோம்! இன்னொரு குடும்பம் என்பது ஒரு இளைஞர் / இளைஞி . "நாங்கள் இங்கிருந்து வாடகை கார் எடுத்துக்கொண்டு யூஜின் (180 மைல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம்)  செல்ல வேண்டும். நாம் வந்த ரயிலிலேயே போகலாம். ஆனால் ட்ரைவ் செய்யும் பாதை அழகாக இருக்கும் என்பதால் இந்த பிளான்! " என்றார்கள் (சொந்த செலவில் சூனியம் என்று தோன்றியது. பேசாமல் ரயிலிலேயே போயிருக்கலாம்!)

சரி. நாம் இருக்கப் போவது ரிஸார்ட் -ஆச்சே. அவர்களையே கூப்பிட்டு ஒரு வண்டியை அனுப்பச் சொல்லலாம் என்று அவர்களையே கூப்பிட்டோம்!

நாங்கள் இருந்த ரிஸார்ட்!

போனை எடுத்த பெண், 'எங்கள் ரிஸார்ட் பதினைந்து நிமிட ட்ரைவில் உள்ளது. எங்களிடம் ஷட்டில் சர்விஸ் இல்லை. வந்தால் இருக்க எல்லா வசதியும் இங்கு இருக்கிறது' என்றார். வந்தவுடன் சவுகரியம் எல்லாம் சரி. வருவது எப்படி என்றால் மறுபடியும் அதே வசனம். 'எங்கள் ரிஸார்ட் பதினைந்து..' மனிதருடன் பேசுகிறோமா. இல்லை மெஷினுடனா என்று சந்தேகம் வந்தது. கொஞ்சம் யோசித்தால் அவரும் தான் என்ன செய்ய முடியும்?

சரி. அந்த வழியும் இல்லை. என்ன செய்யலாம் என்று இளைஞ்ஞரை பார்த்தேன். அவருக்கும் தர்ம சங்கடமான நிலைமை!

கார் கம்பெனிக்காரரை பார்த்தோம். வேறு ஏதாவது ரெண்டல் கார் கம்பெனி நம்பர் கொடுங்கள். அங்கிருந்து கார் எடுத்துக் கொள்கிறோம் என்றோம். அவர், இந்த ஊரில் பகல் 12 மணிக்கு மேல் எந்த ரெண்டல் கார் கம்பெனியும் திறந்திருக்காது. நாளை தான் இனிமேல்! என்றார். திகைத்து விட்டேன். இப்படி ஒரு ஊரா!

இதற்கு நடுவில் என் பெண் போனில் யாருடனோ வண்டி  பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். இவளுக்கு இந்த ஊரில் யாரைத் தெரியும் என்று யோசித்தேன். போனை வைத்துவிட்டு என்னிடம், 'வீடு விட்டு வீடு மாறுபவர்களுக்கு U-Haul இருக்கில்லயா. அதாம்பா, வேன் வாடகைக்கு எடுத்து போவோமே. அங்க வேன் எடுத்துக்க முடியுமே. அதில் இருவர் தான் போகமுடியும். அவங்க அந்த வேன் எடுத்துக்கலாம். திருப்பி இங்க வந்து ரிட்டர்ன் பண்ணத்  தேவையில்லை. யூஜினிலேயே ரிட்டர்ன் பண்ணலாம்! வண்டி கூட இருக்காம். அதான் கேட்டுட்டு இருந்தேன்' என்றாள். நான் உடனே அவரிடம், 'இது நல்ல ஐடியாவா இருக்கே. நீங்க ஏன் அப்படிப் பண்ணக்கூடாது?' எனக் கேட்டேன்.

அதற்க்கு அவர்கள் இருவரும், 'ஐயையோ! U-Haul வண்டியா. வேண்டவே வேண்டாம்' என்றுவிட்டார்கள்! அவர்களுக்கு என்ன அனுபவமோ! U-Haul வண்டி வசதியாக எல்லாம் இருக்காது. வெறும் $20 வாடகை என்று விளம்பரப் படுத்தும்போது அதில் என்ன வசதியை எதிர்பார்க்க முடியும்?

சரி. இதுவும் வேலைக்காகாது. 'ஒரு வழி இருக்கிறது. நம்ம குடும்பத்தை அந்த ரிஸார்ட்டில் விட்டு விட்டு அவர்களை கார் எடுத்துக்கொண்டு போக சொல்லலாமா? நாம ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கொள்ளலாமே'  என்றேன் மனைவியிடம். அவள் அனல் பார்வையைப் பார்த்து அந்த யோசனை அப்படியே அமுங்கிவிட்டது!

அவர்கள் இதற்கு நடுவில் யார் யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ தெரிந்தவர் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். காதில் இருந்து போனை உரித்தெடுத்து, 'அடுத்த ஊர் medford. அங்கு வாடகை கார் இருக்கிறதாம். ரிஸர்வ் பண்ணிவிட்டேன் (இன்னுமாடா இந்த ரிஸர்வேஷனை நம்பறீங்கன்னு நினைச்சுக்கிட்டேன்!) நீங்கள் இந்த காரை எடுத்துக் கொள்ளுங்கள். எங்களை அங்கு ட்ராப் செய்துவிடுங்கள்' என்று சொன்னார்!

நல்ல யோசனையாக இருக்கிறது. கண்டிப்பாக பண்ணிடுவோம் என்று அந்த ஊர் எவ்வளவு தூரம் என்று பார்த்தேன் . 80 மைல்! அடக்கொடுமையே! சரி வேறு வழியே இல்லை என்றாகி விட்ட பிறகு பண்ணிவிட்டு வேண்டியது தான்! போய்வர ஒரு 3 மணி நேரம் விரயம் என்று யோசித்த படியே ஒத்துக்கொண்டேன்!

யாருக்கும் திருப்தியில்லாத ஒரு தீர்வு! என்ன செய்வது!

அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டது. ஏர்போர்ட் தான் காலியாச்சே! ஒரு தவளை வந்தாலும் கேட்டிருக்கும்!

ஒருவர் உள்ளே நுழைந்து நேரே யாரிடமும் பேசாமல் காலியாக இருந்த hertz கார் counter எதிரில் நின்று கொண்டார். சில நிமிடங்களில் hertz அலுவலக சிப்பந்தி அவரைத் தொடர்ந்து வந்தார். 'நல்லவேளை. நான் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தேன். அதனால தான் கூப்பிட்ட உடனே வரமுடிந்தது என்று அவரிடம் சொன்னது கேட்ட்து!' உடனே அவரிடம் ஓடினோம்.

முதலில் இளைஞர் அவரிடம் 'அந்த காரை எங்களுக்கு வாடகைக்கு  கொடுங்கள்' என்றார்.
அவரும், 'எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், செவ்வாய் கிழமை இதை ஒருவர் வந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அதற்குள் கொடுத்தால் சரி' என்றார். இளைஞர் சோகமாக 'நாங்கள் யூஜினால் காரை விடுவதாக இருக்கிறோம்' என்றார்.
'அப்படியானால் தரமுடியாது' - hertz யுவதி!

நான் அவரிடம், 'அப்படியானால் அந்த காரை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் திரும்பிச் செல்லவேண்டிய ட்ரெயின் திங்கள் இரவு கிளம்புகிறது. அதனால் கண்டிப்பாக நாங்கள் காரை திருப்பிக் கொடுத்துவிடுவோம் ' என்றேன்!

சரி. நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் Hertz யுவதி! அந்த இளைஞர்  / இளைஞி பட்ஜெட் கம்பெனி காரை எடுத்துக் கொண்டார்கள்!


ஒரு வழியாக கார் கிடைத்தது! வாழ்க Hertz !

அப்பாடா. கார் கிடைத்துவிட்டது. இனி ஜாலி தான் என நினைத்தேன்.. (விதி) சிரித்தது காதில் விழவில்லை!

Monday, September 4, 2017

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1


கொஞ்சம் பெரிய தொடர் பதிவு!


(c)கிரேட்டர் ஏரி 

இங்கு லேபர் டே வீகெண்ட் சென்ற வார இறுதியில். எளிதில் கிடைத்திடாத சேர்ந்தாற்போல் மூன்று நாள் விடுமுறை. அலுவலகத்திற்காவது எளிதில் லீவ் எடுத்துவிடலாம். பள்ளிக்கு மாணவர்கள்  லீவ் எடுப்பது பயங்கரக்  கொடுமை. அரசு பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாணவரும் வரும் எண்ணிக்கையை வைத்து பள்ளிக்கு பணம் கொடுக்கப் படுகிறது என்பதால் லீவ் கேட்டால் சொத்தை கேட்பது போல முறைப்பதும், வராத நாளுக்கு செய்யவேண்டிய ஹோம் ஒர்க் சுமையும் அன்று நடந்த டெஸ்ட் மற்றும் quiz -ஐ ஈடு கட்டுவதும் பெரிய கொடுமை என்பதால் மாணவர்களே லீவ் எடுக்க அழுவார்கள். அதனால், இது போன்ற சேர்ந்து வரும் மூன்று நாள் விடுமுறைகள் கட்டாயமாக சுற்றுலா செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு நம்மை தள்ளிவிடும்!

மூன்று நாள் விடுமுறைக்கு இம்முறை oregan மாநிலத்தில் உள்ள klamath falls என்று ஊருக்கு செல்ல தீர்மானித்தோம்.  சென்று வர ரயில் பயணம். அங்கு வாடகை கார். தங்க வசதியான ஓட்டல். என்று எல்லா ஏற்பாடும் செய்துவிட்டோம். நிம்மதியாக சென்று வரவேண்டியதுதான்!

மாலை 8 மணி வாக்கில் ரயில் கிளம்பும் நேரம் என்பதால் அவசர அவசரமாக 7 மணி வாக்கில் ஊபரில் ரயில் நிலையம் சென்றோம். அறிவிப்பு எதுவும் காணோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு enquiry counter சென்று விசாரித்தால் ரயில் மூன்று மணி நேர தாமதம். நீங்கள் இன்டர்நெட்டில் செக் செய்து விட்டு வந்திருக்கலாமே என்றார்! அடக்கொடுமையே என்று நொந்து மறுபடியும் எடு ஊபெர்! வீட்டை நோக்கி சோகமாக சென்றால் ஓட்டுநர், எங்கிருந்து வருகிறீர்கள்? சுற்றுலாவா? என்று புண்ணில் வேல் பாய்ச்சினார்!

ஒருவழியாக கிட்டதட்ட 12 மணிக்கு ரயில் கிளம்பியது. ஏறி நிதானமாக உட்கார்ந்தோம் (மற்றவர் தூங்குகிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் எதற்கு பேசுகிறார்களோ என்று யாரோ யாரிடமோ சத்தமாக 'முணுமுணுத்தது காதில் விழுந்தது. என்ன செய்வது. மனதிற்குள்ளேயே பேசி மற்றவர்களுக்கு கேட்க செய்யும் கலை தெரியவில்லையே!)

8 மணிக்கு செல்ல வேண்டிய ஊருக்கு 12 மணிக்கு சென்றோம் (நான் தான் சொன்னேனே! time make -up எல்லாம் செய்ய மாட்டார்கள் என்று! - train conductor). அந்த ஊரு ரயில் நிலையம் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வேலை செய்யும் ஒன்று என்பதும் இந்த ரயில் மட்டுமே அந்த ஊருக்கு இணைப்பு என்பதால் அந்த ரயில் வரும் நேரத்திற்கு ஏற்றாற்போல் நிலையம் வேலை செய்யும் என்பது புதுமையான செய்தி. அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் ஒரு நாளுக்கு நாலு மணிநேரம் மட்டுமே என்பதால்  எல்லோரும் இன்னொரு பகுதி நேர வேலைக்கு செல்பவர்களாயிருக்கும்! ரயில் லேட்டாக வந்ததால் இன்னும் இரண்டு மணிநேரம் ரயில் நிலையம் திறந்திருந்தது. அவர்களுக்கு இன்று இரண்டு மணி நேரம் அதிக சம்பளமாக இருந்திருக்கும் என்பது மட்டுமே இதில் ஒரு திருப்தி!

வாடகை கார் எடுக்க ஏர்போர்ட் செல்ல வேண்டியிருந்தது. கொடுமை என்னவென்றால், அந்த ஊருக்கு வரும் விமான சேவை ரத்து செய்யப் பட்டது 2014இல். தத்தித்தத்தி இன்னொரு கம்பெனி ஒரு விமானத்தில் 30 பேர் மட்டுமே செல்லக் கூடிய பயணத் திட்டத்தை 2016 இல் தொடங்கியது. அதுவும் இப்போது நிறுத்தப் பட்டு விட்டது.மொத்தத்தில், ஆளில்லா விமான நிலையத்தில் இருக்கும் கார் வாடகை கம்பனிக்கு  வெளியூரில் இருந்து வர போக இருக்கும் ஒரே இணைப்புள்ள ரயில் நிலையத்தில் இருந்து டாக்ஸி (உபெர் இல்லை!) எடுத்து இரண்டு குடும்பம் சேர்ந்து சென்றோம் (இருவரும் தனித் தனியாக மீட்டர் வாடகை கொடுக்கவேண்டும் - ட்ரைவர்) அங்கு சென்றால் பட்ஜெட் கார் கம்பெனி என்று போர்ட் மட்டும் இருந்தது. ஒரு தொலை பேசி எண்ணும், அழைத்தால் ஜேமி என்ற சிப்பந்தி வருவார் என்றும் போட்டிருந்தது. தொலைபேசியவுடன் வந்த அவர், இரண்டு குடும்பங்களை பார்த்தவுடன், நீங்கள் லேட் ஆக வந்ததால் ஒரு கார் தான் இருக்கிறது. நீங்கள் இருவரும் யார் எடுத்து செல்வது என்று முடிவு செய்து கொள்ளுங்கள் என்று நம்மிடம் பிரச்சனையை தள்ளி விட்டார். ரிசர்வ் செய்த கார் எப்படி இல்லாமல் போகும். நீங்கள் இதற்க்கு பொறுப்பில்லையா என்ற கேள்விகளை கண்டு கொள்ளவே இல்லை. ஒரே பதில். நீங்கள் லேட்டாக வந்தீர்கள். அதனால் கார் இல்லை. வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டோம்! (கண்ணுக்கு எட்டிய வரை ஆளே இல்லாத இடத்தில் யார் வந்து கார் எடுத்திருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை!)

..தொடரும்!

Saturday, February 25, 2017

ஆரம்பமே சொதப்பல்!


ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சி தொடங்கியிருக்கிறார்.

அரசியல் என்பது எவ்வளவு பெரிய பிசினெஸ்! எவ்வளவு பணத்தை கொட்டி ஒரு கட்சியை நடத்த வேண்டியிருக்கிறது! வெறும் டீ குடித்துவிட்டு நாளெல்லாம் வேலை செய்யும் தொண்டர்கள் எந்த கட்சியிலாவது இருக்கிறார்களா? (கம்யூனிஸ்ட் தவிர). வேளைக்கு குவார்ட்டர். சாப்பாட்டுக்கு பிரியாணி. கையில் கொஞ்சம் காசு என்றுதான் தொண்டர்களை திரட்ட வேண்டியிருக்கிறது.

போட்ட பணத்தை எடுக்க எவ்வளவு பொறுப்பாக அந்த பிசினெஸ்ஸை நடத்தவேண்டும்! இங்கே என்னடாவென்றால் கட்சி பெயரிலேயே சொதப்பல்.

கட்சிப் பெயர் : எம்ஜியார் அம்மா தீபா பேரவை

ஆங்கிலத்தில் : MGR Amma Deepa பேரவை. அதாவது MAD பேரவை.

பைத்தியக்கார பேரவை? பைத்தியக்காரர்களின் பேரவை?

கொஞ்சம் யோசித்து வைத்திருக்கக் கூடாதா? இரண்டு மாதம் யோசித்து வைத்த பேர் இதுதானா?

சுத்தம்!