Friday, November 4, 2022
காந்தாரா !
படத்தை பார்த்ததில் இருந்து மந்திரித்து விட்டது போல இருக்கிறது! ஒரு படம் இப்படி பயித்தியமாக அடிக்க முடியுமா என்று வெகுவாக குழம்பினேன்... இரண்டாம் முறை பார்த்தவுடன் தெரிந்தது இது படம் இல்லை. அனுபவம். மருந்தை தேனில் குழைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் மருந்தும் இனிப்பாக இருக்கிறது!
கலைகளை முன்னிறுத்தி பல படங்கள் வந்திருக்கின்றன. இந்த படத்தில் பூத கோலா என்று மங்களூர் அருகில் நடக்கும் கலையை முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு மிகப்பெரிய வித்யாசம். கிட்டதட்ட கலையை முன்னிறுத்தும் எல்லா படங்களிலும் பார்ப்பது அதை செய்யும் மனிதர் பற்றியே. கலையில் அந்த மனிதரின் பாண்டித்யம், அதற்கு அவர் கொடுக்கும் விலை, கடைசியில் அவர் பெறும் அங்கீகாரம், அதற்கிடையே காதல், இதைதான்! இந்த படத்தில்தான் எதற்காக அந்த கலை என்பதை முன்னிறுத்தியிருக்கிறார்கள். இந்த கலை வழிபாட்டு முறையுடன் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்று காட்டுகிறது இந்தப் படம்.
அதேமாதிரி நாம் வழிவழியாக பார்த்து வந்த 'சாமி வருதல்' என்பதில் பலருக்கும் துறுத்தி நிற்கும் கேள்வி.. சொல்வது சாமியாடியா.. சாமியா.. என்பது. இந்த படத்தைவிட இதற்கு அழகான விளக்கம் கொடுத்த எதையும் நான் இது வரை பார்த்ததில்லை!
படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் காட்சிகளில் நான் நம்பும் குலதெய்வத்தை நான் உணர்ந்தேன். படத்தை பார்த்த பலரும் அதை உணர்வதால்தான் மறுபடி மறுபடி பார்க்க வருகிறார்கள் என நினைக்கிறேன்! இது போன்ற ஒரு அனுபவத்தை வாழ்க்கையில் அடைந்ததில்லை!
ஆத்மார்த்தமாக நடித்த ரிஷப் ஷெட்டி , கிஷோர், அச்யுத் குமார், சப்தமி கவுடா, மானசி சுதீர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். முக்கியமாக எழுதி, நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு!
Friday, November 12, 2021
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 3
பழைய பாகங்களை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சில வருடங்களுக்கு முன் தொடங்கினேன். 3-ம் பதிவை எழுத மறந்துவிட்டேன். இதோ இப்போது.
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2
கார் கிடைத்தவுடன் நேரே ரிஸார்டுக்கு சென்றோம். உச்சி வெய்யில் என்றதால் காரில் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. ஊர் அப்போது கூட பனி போர்வை பார்த்துக்கொண்டு அழகாக இருந்தது. சரி ஏசி எதற்கு என்று கண்ணாடியை இறக்கினால், வெய்யில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. இந்த வெய்யிலில் பனிப்போர்வையா? குளிரவும் இல்லையே என்று ஒன்றுமே புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது அது பனி இல்லை. வெறும் புகை என்று!
ரேடியோவை போட்டால் ஊருக்கு சில மைல் தூரத்தில் காட்டுத்தீ என்பதால் ஊரெல்லாம் புகை என்று தெரிந்தது! கொடுமை!
மனைவிக்கு அந்த புகையில் ஒரே தலைவலி! அங்கிருந்த மீதி நாட்களும் இந்த கொடுமை தொடர்ந்தது.
ஒரு வழியாக ரிசார்ட் சென்றடைந்தோம். மிக அழகாக இருந்தது. ரூம் வசதியாக இருந்தது. அங்கும் புகை மூடி காட்டுத்தீ வாசனை காற்றில். கொண்டு வந்த உணவை உண்டு அங்குமிங்கும் திரிந்து பொழுது போக்கினோம். இரவு ரிஸார்ட் உணவகத்துக்கு சென்றோம். சாப்பிடும்போது தெரிந்தது தான் சமையல்காரருக்கு சமைக்கத் தெரியாது என்று!
நொந்து கொண்டே சென்று படுத்தோம்.
அடுத்தநாள் காலை அங்கிருந்து 30 மைல் தொலைவில் உள்ள கிரேட்டர் ஏரிக்கு செல்லும் பிளான். ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து 7700 வருடத்துக்கு முன் வெடித்து வெளிப்பக்கம் மலையாகவும் நடுவில் பெரிய ஆழமான குழியாக ஆகி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி இருக்கும் பனி உருகி ஏரியாக நிரம்பி இருக்கிறது. அதிகம் இல்லை ஜென்டில்மென். 10-12 கிலோமீட்டர் சுற்றளவு. 1.2 கிலோமீட்டர் ஆழம். அத்தனையும் 99.99% சுத்தமான தண்ணீர். இது தான் இந்த ஊரின் மிகப்பெரிய அட்ராக்ஷன்!
வருவதற்கு முன் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தண்ணீரின் கரை சாலையிலிருந்து வெகு கீழே (200-300 அடி). இறங்கி தண்ணீரை தொடக்கூட முடியாது.
சரி வந்தாயிற்று. போய் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டோம். வெளியே வருவதற்கு முன், இந்த ஊரில் இதுவரை கிடைத்த சனிப் பார்வை பலன்களை எண்ணி இதற்கு அந்த ஏரி அருகில் இருந்த ஆன்லைன் கேமராவில் ஏரியை பார்த்துவிட்டு போகலாம் என்று ஒரு யோசனை.
ரிஸார்ட்டின் கம்ப்யூட்டரில் போய் பார்த்தோம். நல்லவேளை. மாங்கு மாங்கு என்று போயிருந்தால் மறுபடியும் நொந்திருப்போம்! அங்கும் ஒரே புகை என்பதால் சாலையிலிருந்து தண்ணீரே தெரியவில்லை! போயிருந்தால் அங்கும் புகையைத்தான் பார்த்திருப்போம்!
அந்த ரிஸார்ட்டில் விளையாட வைத்திருந்த ஸ்னூக்கர் டேபிளில் விளையாட ஒரு கேமுக்கு 50 சென்ட், அங்குள்ள ஸ்விம்மிங் பூலில் குளிக்க 50 சென்ட் என்று அவர்கள் அல்பமாக பிடுங்கியதெல்லாம் கொடுமை.
அழுது கொண்டே ஊர் திரும்பினோம்!
ஆனால் அந்த ட்ரிப்பை நினைத்து நினைத்து சிரிக்காத நாளில்லை!
Tuesday, October 24, 2017
இருப்பவர்களும் இல்லாதவர்களும்!
இன்று இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை, வெளியிலிருந்து பார்ப்பவனாக எனக்குத் தெரிவது, ஏழை / பணக்காரர்கள் இடையே இருக்கும் மிகப்பெரிய இடைவெளி.
இன்றைய தமிழ் இந்து நாளிதழின் முதல் பக்கத்தில் பார்த்தவுடன் முகத்தில் அறைவது..
ஒரு லட்சத்துக்கு கொஞ்சம் அதிகம் கடன் வாங்கி இரு மடங்கு வட்டி கட்டி அடைக்க எந்த வழியும் தெரியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்து தம்பதியர்..
33 கோடிக்கு புது 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த சேகர் ரெட்டி
எப்பவோ நடந்த பத்திரப் பதிவு ஊழல் புகழ் தெல்கி (90000 கோடி ஊழல்!)..
ஏழ்மையுடன் நேர்மையாக இருப்பதற்கு என்ன இன்சென்டிவ் ?
Saturday, September 16, 2017
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2
(முதல் பாகம் படித்துவிட்டீர்களா? கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். இல்லையேல் தலைகால் புரியாது!)
இப்போது என்ன செய்வது என்று முழித்தோம்! இன்னொரு குடும்பம் என்பது ஒரு இளைஞர் / இளைஞி . "நாங்கள் இங்கிருந்து வாடகை கார் எடுத்துக்கொண்டு யூஜின் (180 மைல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம்) செல்ல வேண்டும். நாம் வந்த ரயிலிலேயே போகலாம். ஆனால் ட்ரைவ் செய்யும் பாதை அழகாக இருக்கும் என்பதால் இந்த பிளான்! " என்றார்கள் (சொந்த செலவில் சூனியம் என்று தோன்றியது. பேசாமல் ரயிலிலேயே போயிருக்கலாம்!)
சரி. நாம் இருக்கப் போவது ரிஸார்ட் -ஆச்சே. அவர்களையே கூப்பிட்டு ஒரு வண்டியை அனுப்பச் சொல்லலாம் என்று அவர்களையே கூப்பிட்டோம்!
போனை எடுத்த பெண், 'எங்கள் ரிஸார்ட் பதினைந்து நிமிட ட்ரைவில் உள்ளது. எங்களிடம் ஷட்டில் சர்விஸ் இல்லை. வந்தால் இருக்க எல்லா வசதியும் இங்கு இருக்கிறது' என்றார். வந்தவுடன் சவுகரியம் எல்லாம் சரி. வருவது எப்படி என்றால் மறுபடியும் அதே வசனம். 'எங்கள் ரிஸார்ட் பதினைந்து..' மனிதருடன் பேசுகிறோமா. இல்லை மெஷினுடனா என்று சந்தேகம் வந்தது. கொஞ்சம் யோசித்தால் அவரும் தான் என்ன செய்ய முடியும்?
சரி. அந்த வழியும் இல்லை. என்ன செய்யலாம் என்று இளைஞ்ஞரை பார்த்தேன். அவருக்கும் தர்ம சங்கடமான நிலைமை!
கார் கம்பெனிக்காரரை பார்த்தோம். வேறு ஏதாவது ரெண்டல் கார் கம்பெனி நம்பர் கொடுங்கள். அங்கிருந்து கார் எடுத்துக் கொள்கிறோம் என்றோம். அவர், இந்த ஊரில் பகல் 12 மணிக்கு மேல் எந்த ரெண்டல் கார் கம்பெனியும் திறந்திருக்காது. நாளை தான் இனிமேல்! என்றார். திகைத்து விட்டேன். இப்படி ஒரு ஊரா!
இதற்கு நடுவில் என் பெண் போனில் யாருடனோ வண்டி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். இவளுக்கு இந்த ஊரில் யாரைத் தெரியும் என்று யோசித்தேன். போனை வைத்துவிட்டு என்னிடம், 'வீடு விட்டு வீடு மாறுபவர்களுக்கு U-Haul இருக்கில்லயா. அதாம்பா, வேன் வாடகைக்கு எடுத்து போவோமே. அங்க வேன் எடுத்துக்க முடியுமே. அதில் இருவர் தான் போகமுடியும். அவங்க அந்த வேன் எடுத்துக்கலாம். திருப்பி இங்க வந்து ரிட்டர்ன் பண்ணத் தேவையில்லை. யூஜினிலேயே ரிட்டர்ன் பண்ணலாம்! வண்டி கூட இருக்காம். அதான் கேட்டுட்டு இருந்தேன்' என்றாள். நான் உடனே அவரிடம், 'இது நல்ல ஐடியாவா இருக்கே. நீங்க ஏன் அப்படிப் பண்ணக்கூடாது?' எனக் கேட்டேன்.
அதற்க்கு அவர்கள் இருவரும், 'ஐயையோ! U-Haul வண்டியா. வேண்டவே வேண்டாம்' என்றுவிட்டார்கள்! அவர்களுக்கு என்ன அனுபவமோ! U-Haul வண்டி வசதியாக எல்லாம் இருக்காது. வெறும் $20 வாடகை என்று விளம்பரப் படுத்தும்போது அதில் என்ன வசதியை எதிர்பார்க்க முடியும்?
சரி. இதுவும் வேலைக்காகாது. 'ஒரு வழி இருக்கிறது. நம்ம குடும்பத்தை அந்த ரிஸார்ட்டில் விட்டு விட்டு அவர்களை கார் எடுத்துக்கொண்டு போக சொல்லலாமா? நாம ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கொள்ளலாமே' என்றேன் மனைவியிடம். அவள் அனல் பார்வையைப் பார்த்து அந்த யோசனை அப்படியே அமுங்கிவிட்டது!
அவர்கள் இதற்கு நடுவில் யார் யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ தெரிந்தவர் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். காதில் இருந்து போனை உரித்தெடுத்து, 'அடுத்த ஊர் medford. அங்கு வாடகை கார் இருக்கிறதாம். ரிஸர்வ் பண்ணிவிட்டேன் (இன்னுமாடா இந்த ரிஸர்வேஷனை நம்பறீங்கன்னு நினைச்சுக்கிட்டேன்!) நீங்கள் இந்த காரை எடுத்துக் கொள்ளுங்கள். எங்களை அங்கு ட்ராப் செய்துவிடுங்கள்' என்று சொன்னார்!
நல்ல யோசனையாக இருக்கிறது. கண்டிப்பாக பண்ணிடுவோம் என்று அந்த ஊர் எவ்வளவு தூரம் என்று பார்த்தேன் . 80 மைல்! அடக்கொடுமையே! சரி வேறு வழியே இல்லை என்றாகி விட்ட பிறகு பண்ணிவிட்டு வேண்டியது தான்! போய்வர ஒரு 3 மணி நேரம் விரயம் என்று யோசித்த படியே ஒத்துக்கொண்டேன்!
யாருக்கும் திருப்தியில்லாத ஒரு தீர்வு! என்ன செய்வது!
அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டது. ஏர்போர்ட் தான் காலியாச்சே! ஒரு தவளை வந்தாலும் கேட்டிருக்கும்!
ஒருவர் உள்ளே நுழைந்து நேரே யாரிடமும் பேசாமல் காலியாக இருந்த hertz கார் counter எதிரில் நின்று கொண்டார். சில நிமிடங்களில் hertz அலுவலக சிப்பந்தி அவரைத் தொடர்ந்து வந்தார். 'நல்லவேளை. நான் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தேன். அதனால தான் கூப்பிட்ட உடனே வரமுடிந்தது என்று அவரிடம் சொன்னது கேட்ட்து!' உடனே அவரிடம் ஓடினோம்.
முதலில் இளைஞர் அவரிடம் 'அந்த காரை எங்களுக்கு வாடகைக்கு கொடுங்கள்' என்றார்.
அவரும், 'எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், செவ்வாய் கிழமை இதை ஒருவர் வந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அதற்குள் கொடுத்தால் சரி' என்றார். இளைஞர் சோகமாக 'நாங்கள் யூஜினால் காரை விடுவதாக இருக்கிறோம்' என்றார்.
'அப்படியானால் தரமுடியாது' - hertz யுவதி!
நான் அவரிடம், 'அப்படியானால் அந்த காரை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் திரும்பிச் செல்லவேண்டிய ட்ரெயின் திங்கள் இரவு கிளம்புகிறது. அதனால் கண்டிப்பாக நாங்கள் காரை திருப்பிக் கொடுத்துவிடுவோம் ' என்றேன்!
சரி. நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் Hertz யுவதி! அந்த இளைஞர் / இளைஞி பட்ஜெட் கம்பெனி காரை எடுத்துக் கொண்டார்கள்!
ஒரு வழியாக கார் கிடைத்தது! வாழ்க Hertz !
அப்பாடா. கார் கிடைத்துவிட்டது. இனி ஜாலி தான் என நினைத்தேன்.. (விதி) சிரித்தது காதில் விழவில்லை!
Monday, September 4, 2017
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1
கொஞ்சம் பெரிய தொடர் பதிவு!
இங்கு லேபர் டே வீகெண்ட் சென்ற வார இறுதியில். எளிதில் கிடைத்திடாத சேர்ந்தாற்போல் மூன்று நாள் விடுமுறை. அலுவலகத்திற்காவது எளிதில் லீவ் எடுத்துவிடலாம். பள்ளிக்கு மாணவர்கள் லீவ் எடுப்பது பயங்கரக் கொடுமை. அரசு பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாணவரும் வரும் எண்ணிக்கையை வைத்து பள்ளிக்கு பணம் கொடுக்கப் படுகிறது என்பதால் லீவ் கேட்டால் சொத்தை கேட்பது போல முறைப்பதும், வராத நாளுக்கு செய்யவேண்டிய ஹோம் ஒர்க் சுமையும் அன்று நடந்த டெஸ்ட் மற்றும் quiz -ஐ ஈடு கட்டுவதும் பெரிய கொடுமை என்பதால் மாணவர்களே லீவ் எடுக்க அழுவார்கள். அதனால், இது போன்ற சேர்ந்து வரும் மூன்று நாள் விடுமுறைகள் கட்டாயமாக சுற்றுலா செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு நம்மை தள்ளிவிடும்!
மூன்று நாள் விடுமுறைக்கு இம்முறை oregan மாநிலத்தில் உள்ள klamath falls என்று ஊருக்கு செல்ல தீர்மானித்தோம். சென்று வர ரயில் பயணம். அங்கு வாடகை கார். தங்க வசதியான ஓட்டல். என்று எல்லா ஏற்பாடும் செய்துவிட்டோம். நிம்மதியாக சென்று வரவேண்டியதுதான்!
மாலை 8 மணி வாக்கில் ரயில் கிளம்பும் நேரம் என்பதால் அவசர அவசரமாக 7 மணி வாக்கில் ஊபரில் ரயில் நிலையம் சென்றோம். அறிவிப்பு எதுவும் காணோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு enquiry counter சென்று விசாரித்தால் ரயில் மூன்று மணி நேர தாமதம். நீங்கள் இன்டர்நெட்டில் செக் செய்து விட்டு வந்திருக்கலாமே என்றார்! அடக்கொடுமையே என்று நொந்து மறுபடியும் எடு ஊபெர்! வீட்டை நோக்கி சோகமாக சென்றால் ஓட்டுநர், எங்கிருந்து வருகிறீர்கள்? சுற்றுலாவா? என்று புண்ணில் வேல் பாய்ச்சினார்!
ஒருவழியாக கிட்டதட்ட 12 மணிக்கு ரயில் கிளம்பியது. ஏறி நிதானமாக உட்கார்ந்தோம் (மற்றவர் தூங்குகிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் எதற்கு பேசுகிறார்களோ என்று யாரோ யாரிடமோ சத்தமாக 'முணுமுணுத்தது காதில் விழுந்தது. என்ன செய்வது. மனதிற்குள்ளேயே பேசி மற்றவர்களுக்கு கேட்க செய்யும் கலை தெரியவில்லையே!)
8 மணிக்கு செல்ல வேண்டிய ஊருக்கு 12 மணிக்கு சென்றோம் (நான் தான் சொன்னேனே! time make -up எல்லாம் செய்ய மாட்டார்கள் என்று! - train conductor). அந்த ஊரு ரயில் நிலையம் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வேலை செய்யும் ஒன்று என்பதும் இந்த ரயில் மட்டுமே அந்த ஊருக்கு இணைப்பு என்பதால் அந்த ரயில் வரும் நேரத்திற்கு ஏற்றாற்போல் நிலையம் வேலை செய்யும் என்பது புதுமையான செய்தி. அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் ஒரு நாளுக்கு நாலு மணிநேரம் மட்டுமே என்பதால் எல்லோரும் இன்னொரு பகுதி நேர வேலைக்கு செல்பவர்களாயிருக்கும்! ரயில் லேட்டாக வந்ததால் இன்னும் இரண்டு மணிநேரம் ரயில் நிலையம் திறந்திருந்தது. அவர்களுக்கு இன்று இரண்டு மணி நேரம் அதிக சம்பளமாக இருந்திருக்கும் என்பது மட்டுமே இதில் ஒரு திருப்தி!
வாடகை கார் எடுக்க ஏர்போர்ட் செல்ல வேண்டியிருந்தது. கொடுமை என்னவென்றால், அந்த ஊருக்கு வரும் விமான சேவை ரத்து செய்யப் பட்டது 2014இல். தத்தித்தத்தி இன்னொரு கம்பெனி ஒரு விமானத்தில் 30 பேர் மட்டுமே செல்லக் கூடிய பயணத் திட்டத்தை 2016 இல் தொடங்கியது. அதுவும் இப்போது நிறுத்தப் பட்டு விட்டது.
மொத்தத்தில், ஆளில்லா விமான நிலையத்தில் இருக்கும் கார் வாடகை கம்பனிக்கு வெளியூரில் இருந்து வர போக இருக்கும் ஒரே இணைப்புள்ள ரயில் நிலையத்தில் இருந்து டாக்ஸி (உபெர் இல்லை!) எடுத்து இரண்டு குடும்பம் சேர்ந்து சென்றோம் (இருவரும் தனித் தனியாக மீட்டர் வாடகை கொடுக்கவேண்டும் - ட்ரைவர்) அங்கு சென்றால் பட்ஜெட் கார் கம்பெனி என்று போர்ட் மட்டும் இருந்தது. ஒரு தொலை பேசி எண்ணும், அழைத்தால் ஜேமி என்ற சிப்பந்தி வருவார் என்றும் போட்டிருந்தது. தொலைபேசியவுடன் வந்த அவர், இரண்டு குடும்பங்களை பார்த்தவுடன், நீங்கள் லேட் ஆக வந்ததால் ஒரு கார் தான் இருக்கிறது. நீங்கள் இருவரும் யார் எடுத்து செல்வது என்று முடிவு செய்து கொள்ளுங்கள் என்று நம்மிடம் பிரச்சனையை தள்ளி விட்டார். ரிசர்வ் செய்த கார் எப்படி இல்லாமல் போகும். நீங்கள் இதற்க்கு பொறுப்பில்லையா என்ற கேள்விகளை கண்டு கொள்ளவே இல்லை. ஒரே பதில். நீங்கள் லேட்டாக வந்தீர்கள். அதனால் கார் இல்லை. வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டோம்! (கண்ணுக்கு எட்டிய வரை ஆளே இல்லாத இடத்தில் யார் வந்து கார் எடுத்திருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை!)
..தொடரும்!
Tuesday, January 5, 2016
அமெரிக்க அனுபவம் : பிரச்சனையின் வேர்!
போலீசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு விரிசல் என்பதற்கு எகானமி, தோல் நிறம் என்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களைப் போலில்லாதவர்கள் குறித்த தவறான புரிதலும் இதற்க்குக் காரணம். பிரச்சனையின் அடி வேரை கண்டு அதற்கு தீர்வு காண சிகாகோ நகர அரசு எடுத்த ஒரு நடவடிக்கை இது. ஏழு வருடத்துக்கு முந்தைய வீடியோ என்பதை நினைவில் கொள்ளுங்கள்
எல்லா வகுப்பினரையும் / மதத்தினரையும் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த வீடியோ.
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது இந்த நகரத்தில் மட்டும் 80000 இந்துக்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு போலீஸ் போக நேர்ந்தால் அந்த வீட்டிலுள்ளவர்கள் அதை எப்படி எதிர் கொள்வார்கள் என்று பாடம் எடுக்கிறது இந்த வீடியோ
உண்மையிலேயே இந்த நடவடிக்கையை பார்த்து அசந்து விட்டேன். இதை தான் ஒவ்வொரு பொறுப்பான அரசும் செய்ய வேண்டும். நம் ஊரிலும் போலீஸ் போன்ற பொது நல ஊழியர்களுக்கு இது போன்ற வழிகாட்டிகள் இருக்கும் என நம்புகிறேன்.
Friday, January 1, 2016
அரசியல் வெற்றிடம்
முதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். நான் தமிழகம் இப்போதிருக்கும் நிலையை பார்ப்பது செய்தி ஊடகங்கள் மூலமும், சமூக வலை தளங்கள் மூலமும், பதிவுகள் மூலமும் தான்.
இப்போது இருப்பது போல ஒரு அரசியல் வெற்றிடம் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை. வெள்ளம் வந்த போதுதான் எந்த அளவு அரசு செயல்படாத அரசாக இருக்கிறது என்று தெரிந்தது. ஊரே முழுகிக் கொண்டிருக்கும் போதும் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வெளியே வராத முதல்வரை என்ன சொல்வது?
திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி தலைமையை ஸ்டாலினுக்கு எளிதாகக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார் என நினைக்கிறேன். சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது இரண்டாவது அல்லது மூன்றாவது வருடம் ஸ்டாலினைக் கொண்டு வந்திருந்தால் transition எளிதாக இருந்திருக்கும். இப்போது யார் கூட்டணிக்கு வருவார்கள் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள். வெள்ளத்தில் இறங்கி வேலை செய்திருந்தால் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். மிக தாமதமாக குறைந்த இடங்களில் தென்பட்டது பெரிதாக பலன் அளிக்கவில்லை என நினைக்கிறேன்.
வைகோ வை பொருத்தவரை தங்கத்தட்டில் கொடுத்த வாய்ப்பை தவற விட்டவர் என நினைக்கிறேன். இனி எப்போதும் அந்த வாய்ப்பு வராது. எப்போது தமிழகத்தின் நலத்தை விட தமிழீழத்தின் நலத்தை அதிகமாக அவர் மதிபிட்டாரோ அப்பொழுதே அவர் அரசியலில் தனிப்பட்டு விட்டார். அவர்தான் புரிந்து கொள்ளவில்லை.
விஜயகாந்தை பொறுத்த வரை, பொறுப்பிலாமல் நடந்து கொள்வதே அவர் மிகப் பெரிய பலமாகக் கருதிக் கொள்கிறார். எல்லோரையும் துச்சமாக மதிப்பது வேறு. பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேறு. அந்த வித்யாசம் தெரியாமல்தான், யாரையும் மதிக்காமல், அது வெளியே தெரியும் அளவு பொறுப்பிலாமல் நடந்து கொள்கிறார். அதை உணர்ந்து கொள்ளும் வரை, அவர் 10% ஓட்டோடு திருப்தி அடைய வேண்டியது தான்!
ராமதாசை பொருத்தவரை அவர் credibility யை அவரே போக்கிக்கொண்டு விட்டார். மாற்றி மாற்றி அலியன்ச் வைப்பது பெரிய தவறு ஒன்ன்றும் இல்லை. யாருக்குமே கொள்கை என்று ஒன்று கிடையாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். என்ன. இது பா மா கா விஷயத்தில் வெளிப்படையாக தெரிந்து விட்டது. அது தான் தவறு. அதை மீறி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.
திருமாவளவன் போன்றவர்கள் உண்மையாக உறுதியாக தன் கொள்கையில் (!) நின்றிருந்தால் ஒரு credibility இருந்திருக்கும். ஆனால் கொள்கை (!) விஷயத்தில் எதிர் நிற்கும் பா மா கா போன்றவர்களுடன் எப்போது கூட்டணி அமைத்தாரோ, ராஜ பக்ஷேவுடன் புகைப் படத்துக்கு போஸ் கொடுத்தாரோ அப்போதே அவர் அழிந்துவிட்டார். இவரை அழித்ததில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம் என நினைக்கிறேன்.
கம்யூனிஸ்ட் களை பொருத்தவரை அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மேலும், ஒன்றுக்கும் உதவாத சீனா ஆதரவு, ரஷ்யா ஆதரவு என்பதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் மக்களை பாதிக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்களேயானால் scope உண்டு. என்னைப் பொருத்தவரை, மக்களை பாதிக்கும் விஷயங்களில் உண்மையாக அக்கறை செலுத்துபவர்கள் இவர்கள் மட்டுமே. என்ன பிரயோஜனம். அதை மக்கள் உணரும் வரை இவர்களுக்கு விடிவு காலம் கிடையாது.
பிஜேபி யை பொருத்தவரை தமிழிசை போன்றவர்களை தவிர்த்து வேறு யாரும் அவர்களை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.
கடைசியில் என்ன மிச்சம் என்று பார்த்தால், இருப்பது வெற்றிடம் என்ற உண்மை தான்.
மீள ஒரே வழி , தேர்தலில் ஒரு மைனாரிட்டி அரசு வரவேண்டும். அந்த அரசு, குறைந்தது இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் அரசு அமைக்க முடியும் என்ற நிலை வரவேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது பொறுப்பான அரசு வரும்!
Tuesday, July 28, 2015
ஃபேஸ்புக் .. ட்விட்டர் .. அப்புறம்?
பிடிக்குதோ.. இல்லையோ.. நான் இந்த 'சோசியல் மீடியா'க்களில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய நேரம் செலவழிக்கிறேன்.. எனக்கு மட்டுமில்லை.. பலருக்கும் இதே அனுபவம் என நினைக்கிறேன்..
முதலில் எல்லாம் பஸ்.. ரயில்.. பயணங்களில் கொஞ்சமாவது மற்றவர்களுடன் பேசுவார்கள்.., இப்போது சுத்தம்!
(இங்கு).. ஏறியவுடன் பையை கீழே வைக்கும் முன்.. போஃனில் ஃபேஸ்புக் .. யூடியூப் .. பார்ப்பவர்கள் கிட்டதட்ட எல்லோரும்!
இது எங்கே போய் முடியும் என்று முழிக்கும் போது இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது..
- "carmen" by Stromae
Sunday, June 7, 2015
முழுமையான சர்வாதிகாரம்..
ஒரு மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டு வெளிவந்து உண்மையிலேயே மக்கள் புரட்சி வந்துவிடும் போல இருக்கிறது என்று எண்ணும்போது திடீர் என்று ஒரு நடிகை குளிக்கும் வீடியோ வெளியாவது.. மிகப் பரபரப்பாக ஒரு கற்பழிப்பு செய்தி வெளியாவது..என்றும் இல்லாமல் அதற்கு மிகப் பெரிய கவரேஜ்..அதிரடியாக ஒரு கிரிக்கெட் விளையாட்டு நடப்பது.. மிகப்பெரிய நடிகரின் படம் பெரிய தோல்வி அடைவது.. அந்த படத்தில் நஷ்டம் அடைந்த மிக சிலர் நடத்தும் 'போராட்டம்' செய்தியாக தொடர்ந்து வருவது..
இதெல்லாம் தற்செயலா? இல்லை யாராவது தெளிவாக நம் கருத்துக்களை சிதைத்துக் கொண்டே இருக்கிறார்களா?
இதெல்லாம் தெளிவாக நடக்கும் சதி வேலையே என்று கண்முன் போட்டுடைக்கிறது Perfect Dictatorship என்ற ஸ்பானிஷ் திரைப்படம். பார்க்க பார்க்க யாரோ நம் ஊரில் நடப்பதை வெட்டவெளிச்சம் ஆக்குவது போல இருந்தது..
கதை இதுதான்..
மெக்சிகோவின் ப்ரெசிடெண்ட் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாக வாயை விட்டு மாட்டிக்கொள்ளும் டைப். அவர் முதல் காட்சியிலேயே அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேசும்போது மெக்சிகோ மக்கள் கடின உழைப்பாளிகள்.. யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.. என்று சொல்ல நினைத்து .. உங்கள் நாட்டு கருப்பர்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவர்களை விட நன்றாக செய்வார்கள் என்று உளறிவிடுகிறார் .. வாட்ஸ் அப்.. Facebook , Twitter என்று எல்லோரும் அவரை கிழித்து தோரணமாய் தொங்க விட.. உடனே அவர் ஓர் டிவி நெட்வொர்க்கை அணுகுகிறார்.. அவர்கள் இதை எல்லோரும் மறக்கவேண்டுமானால் வேறு ஒரு பெரிய செய்தி வேண்டும் என்று ப்ரெசிடெண்ட் கட்சியிலேயே இருக்கும் ஒரு மாநில கவர்னர் பெட்டி நிறய பணம் லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிடுகிறார்கள்.. சட்டென்று பிரச்சனை திசை திரும்பிவிடுகிறது...
ஆனால் பெட்டி வாங்கிய கவர்னர் அசகாய சூரன்.. அந்த டிவி காரர்களுக்கு பணம் கொடுத்து அவர் மீதான செய்தியை மாற்ற முயல்கிறார்.. பேச்சுவார்த்தையின் போதுதான் தெரிகிறது இவர்கள் வீச்சு எவ்வளவு பெரிது என்று.. ஒரேடியாக தன்னை ப்ரெசிடெண்ட் ஆக்குவதற்கு அந்த டிவி யுடனே ஒரு டீல் போட்டுக் கொள்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்ட டிவி யே கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அவர் இமேஜை வளர்க்கிறார்கள் என்று படம் வளர்கிறது..
நேர்மையாக நடக்கும் ஒரு அரசியல்வாதி.. அவரை டிவி பேட்டியில் எடக்கு மடக்காக கேள்வி கேட்டும் பழைய விவகாரங்களை கிளறியும் அவர் இமேஜை டிவி காலி செய்வது.. இரட்டைக் குழந்தைகள் காணாமல் போவது... அந்த விவகாரத்தை எந்த அளவு முடியுமோ அந்த அளவு பெரிதாக்குவது.. எந்த அளவு அதை 'ஸ்டேஜ்' செய்து காட்டுவது.. என்று கிழித்து தோரணமாய் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் ஒரு சாம்பிள் காட்சி.. நேர்மையான அரசியல்வாதியின் பழசை கிளற அரசின் உதவியை நாடுகிறார் டிவி அதிபர்.. அவர் கூப்பிடுவது தற்போதய ப்ரெசிடெண்டை .. ப்ரெசிடெண்ட் இருப்பது ஒரு ராணுவ வீரருக்கு அரசு மரியாதை செலுத்தும் விழாவில்.. அப்படி ஒரு விழாவில் இருப்பவரை போனில் கூப்பிட்டு கிட்டதட்ட மிரட்டுகிறார் டிவி அதிபர். யாரிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று அப்பட்டமாக காட்டுகிறது இது! அதுவும் 'என்னய்யா டை போட்டுட்டு இருக்க. கேவலமா இருக்கு. நான் கொஞ்சம் அனுப்பறேன்.. அதை போட்டுக்கோ..' என்று 'நான் உன்னை பாத்துக்கிட்டே தான் இருக்கேன்' என்று உள்ளூட மிரட்டுவது.. அட்டகாசம்!
பற்பல இடங்களில் படம் நம் ஊர் அரசியலை நக்கல் செய்வது போலவே இருக்கிறது. அவர்கள் செய்வதென்னவோ மெக்சிகோ அரசியலை! எல்லா ஊரிலும் இவர்கள் ஒரே மாதிரிதான் போல!
தவறவே விடக்கூடாத படம் இது.. 2014இல் வெளியான படம். Netflix இல் உள்ளது.
இந்தப் படம் பார்க்கும்போது உங்களுக்கு ஆருஷி கேஸ்.. நிர்பயா விவகாரம் , லிங்கா விவகாரம்.. லல்லு.. சுப்பிரமணியம் சுவாமி.. சல்மான்.. பிரியங்கா.. ராகுல்.. மோடி.. எல்லோரும் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. அவர்களே பொறுப்பு! ..
Friday, December 26, 2014
பிசாசு!
ரசிகரை புத்திசாலியாக கருதி படத்தின் ஓட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் அவர் உத்தி எனக்கு மிகப் பிடிக்கும். முடிச்சை போட்டுக்கொண்டே போய் வழியில் சில அதை அவிழ்க்கும் தடயங்களை விட்டு கடைசியில் அதை அவிழ்க்கும்போது நமக்கு வரும் திருப்தி.. என்ன சொல்ல. அது ஒரு அனுபவம்.. விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்தப் படத்திலும் அந்த அனுபவம் கிடைத்தது. ஆட்டோ சிக்னலில் நிற்காமல் முன்னே இருக்கும் டூ வீலரில் முட்டி நிற்பது ஒரு சாதாரண நிகழ்வு. அதையும் கடைசியில் ஒரு ஆதாரமாக கொண்டு வருவதில் மிஷ்கினின் அறிவு மிளிர்கிறது!
மிஷ்கினின் மிகப்பெரிய பலம்.. பொதுவான உருவகத்தை உடைப்பது. பாண்டியராஜனையும் பிரசன்னாவையும் வேறு யார் வில்லனாக பார்த்திருப்பார்கள்? அசட்டுத்தன நகைச்சுவை நடிப்பை வழங்கிய YG மகேந்திராவிடம் மிரட்டும் நடிப்பை யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ஆவி என்றாலாவது கொஞ்சம் நல்ல ஆவி உண்டு என்று நினைப்பதற்கு வழி உண்டு.. பிசாசு என்றால் தோன்றுவதே பயம் தான். அதை நல்லதாகவும் இருக்கக் கூடும் என்று புது சிந்தனைக்கு வழி அமைத்திருக்கிறார் மிஷ்கின்.
புத்திசாலித்தனமான படம் பிசாசு. எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் அழகாக எடுத்திருக்கிறார், மிஷ்கின். அதே போல 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கும் ராதா ரவி அவர்களுக்கு பெருமைப் படும் நடிப்பு வாய்ப்பை அளித்திருக்கிறார் மிஷ்கின்.
பிசாசு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
Welcome Back , மிக்ஷ்கின்!
Saturday, December 6, 2014
குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?
ஆஸ்திரேலியாவின் Traffic Accident Commission தனது இருபது வருட சேவையை முன்னிட்டு வெளியிட்டுள்ள விளம்பரம்..
இளகிய மனதினர் பார்க்க வேண்டாம். மற்றவர் அனைவரும் பார்க்க வேண்டியது..
குடிக்கும் போது 'என்னடா இது. எறும்பு கடிச்சமாதிரி லைட்டா இருக்கு. போதையே இல்ல' என்று தோன்றினாலே.. உங்களுக்கு போதை ஏற ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.. எப்பாடு பட்டாவது குடித்து விட்டு வண்டி ஓட்டுவதை தவிருங்கள்..
டாஸ்மாக் பற்றி பலரும் பல விதமாக சொல்லியாகி விட்டது.. எனக்குத் தோன்றுவது..
நம்மைப் பற்றி அரசுக்கோ வேறு யாருக்குமோ அக்கறை இருக்கும் என்று நம்ப வேண்டாம். நம் குடும்பம் நம் பொறுப்பு. நம் நலம் அதற்கு முக்கியம். நலமாக இருப்போமே..
குடிப்பது கொடிது. அதனினும் கொடிது குடித்து விட்டு வண்டி ஓட்டுவது!
Tuesday, June 10, 2014
காசிருந்தால் இங்கிருக்கவும்..
திண்ணை. நம் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் வஸ்து. அயலூரார் ஒரு பொழுது தங்கிப் போவதற்கும், கவனிப்பாரற்ற தத்தா மூலையில் முடங்கிக் கொள்வதற்கும், பகலெல்லாம் வெய்யிலில் இளைப்பாற யாருக்கும் இடம் அளிக்கவும் காலம் காலமாக நம் ஊரில் இருந்து வந்தது.. இப்போதைய இரண்டு பெட்ரூம்.. இரண்டு பாத்ரூம்.. ஒரு ஹால். ஒரு கிச்சன்.. 600 சதுர அடி.. தேவையில் திண்ணை தேவையில்லாமல் போய் விட்டது..
எல்லாவற்றிற்கும் அடி நாதம்... என்னிடம் இருக்கும் பணம் என் சௌகர்யத்திற்கு.. மற்றவரிடம் பணம் இல்லை என்றால் அது அவர்கள் தவறு (இப்படி ஒரு வாதத்தை அமெரிக்காவில் முதன்முறை கேட்டு அசந்து விட்டேன்!) ஏனென்றால் அவர்கள் உழைக்க மறுக்கின்றார்கள்! அவர்கள் சௌகர்யத்தை ப் பற்றி நான் ஏன் கவலைப் படவேண்டும் என்ற எண்ணங்களே..
இது எந்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் என்பதை கற்பனை பண்ணிப் பார்க்க வேண்டாம்.. கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்தாலே போதும்..
இங்கிருக்கும் படங்களைப் பாருங்கள். தரையை வெறுமனே வைத்திருந்தால் வீடில்லாத மக்கள் வந்து தூங்கி மற்ற எல்லோருக்கும் 'தொல்லை' தருகிறார்களே என்று லண்டனில் சில இடங்களில் தரையில் ஈட்டி போல கூர்மையான உலோக வடிவங்களை பதித்திருக்கிறார்கள்!
இவர்களே பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டார்கள் கனடாவில் உள்ள ஒரு ஊரின் அதிகாரிகள். வீடில்லாதவர்கள் கூடாரம் அடித்துத் தங்கும் நிலத்தில் கோழிக் கழிவுகளை கொட்டி அவர்களை விரட்ட முயற்ச்சித் திருக்கிறார்கள்.
எதை இழந்து எதை பெறுகிறோம் என்றே தெரியவில்லை!
இதைப் பற்றிய செய்தி..
https://ca.news.yahoo.com/blogs/dailybrew/london-criticized-anti-homeless-spikes-canada-better-174042472.html
Monday, June 9, 2014
சாலை பாதுகாப்பு..
சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு மொபைல் போன் பெரிய பங்கு வகிக்கிறது.. இது பற்றி பற்பல விளம்பரங்கள் வந்தாலும் பெரிய பலன் இருப்பதாக தெரியவில்லை.
ஆனாலும் என்னைக் கவர்ந்த சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று.. எவ்வளவு அழகாக டெக்னாலஜியை பயன் படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!
இந்த விளம்பரத்தை அனுபவித்தவர் மனதில் நீண்ட நாள் அந்த பாதிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
Saturday, March 15, 2014
பெரிய பிரச்சனை.. எளிய தீர்வு..
பார்க்கிங் பல இடங்களில் பெரிய பிரச்சனை.. இந்த பார்க்கிங் லாட்களை பாருங்கள்..
இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது அரை மணி நேரத்துக்கும் அதிகமாக காலியான பார்கிங் இடத்தை தேடுவதற்கே ஆகி விடும்! சில சமயங்களில் அதை விட அதிகமாவதும் உண்டு. ஒரு முறை, சுற்றி சுற்றி வெறுத்துப் போய் திரும்பி வந்ததும் உண்டு..
டி நகரில் கார் நிறுத்த இடம் கிடைக்காமல் ட்ரைவரை சுற்றிக்கொண்டே இருக்கச் சொல்லிவிட்டு நிதானமாக ஷாப் செய்துவிட்டு திரும்ப வருபவர்களை பார்த்திருக்கிறேன்!
பல நாடுகளிலும் இந்த காலி இடம் தேடுவதை பல விதமாக சால்வ் செய்கிறார்கள்..
அமெரிக்காவில் மால்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் முறை.. பார்கிங் சென்சர். ஒவ்வொரு பார்க்கிங் இடத்திற்கும் மேலே ஒரு விளக்கு இருக்கும். பார்கிங் இடத்தில் கார் இருந்தால் சிவப்பு வண்ணத்திலும் காலியாக இருந்தால் நீல வண்ணத்திலும் அந்த விளக்கு எரியும்.
பார்கிங் ப்ளோர் போகுமுன் அந்த ப்ளோரில் எவ்வளவு காலி இடங்கள் இருக்கிறது என்று எண்ணிக்கை இருக்கும். அதிக நேர விரயம் இல்லாமல் பார்க்கிங் செய்துவிட்டு வந்துவிடலாம்..
இப்போது ஸ்மார்ட் போனுடன் இணைத்தும் சில கம்பெனிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கிறார்கள். இந்த முறையில் இன்னொரு பெரிய அட்வான்டேஜ்.. காரை எங்கே வைத்தோம் என எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்பது தான்.. ஒரே பார்கிங் லாட்டில் ஆயிரம் கார் இருக்கும்போது கண்டுபிடிப்பதும் ஒரு தலை வலியே!
எனக்கு மிகவும் பிடித்த தீர்வை தந்திருப்பது ஒரு கொரியன் கம்பெனி.. மிக எளிய தீர்வு.. எவ்வளவு அழகாக இந்த பிரச்சனையை தீர்த்திருக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது..
நீங்களே பாருங்களேன்!
Sunday, March 9, 2014
குடிநீர் தேவைக்கு தீர்வு!
இந்த இணைப்பில் இருக்கும் வீடியோவைப் பாருங்கள்..
பெரு நாட்டின் லிமா நகரத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. ஒரு பெரிய விளம்பரப் பலகையில் Air Filter , Condenser , Carbon Filter அனைத்தையும் இணைத்து காற்றில் இருக்கும் ஈரப் பதத்தை உறிஞ்சி குடிநீராக மாற்றும் திட்டம். கடந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு பலகையில் இருந்து 10000 லிட்டர் குடிநீர் எடுத்திருக்கிறார்கள்! எடுத்த குடிநீர் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மூலம் சுத்திகரிக்கப் படுவதால், மிக மிக தூய்மையான ஒன்றாக இருக்கிறது இந்த நீர்.
இதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அந்த ஊரில் காற்றின் ஈரப்பதம் 98% இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.
சென்னையில் காற்றின் ஈரப்பதம் எப்போதுமே 80% க்கு அருகிலோ அதிகமாகவோ.. நம் குடிநீர் தேவைக்கு இப்படி ஒரு வழி சாத்தியமா?
பெருவில் அமைக்கப் பட்டது proof of concept என நினைக்கிறேன். சாத்தியமே என்று நிரூபிக்க நிறுவப் பட்டது. ஆனால், அதை நிர்மாணிக்கவும் தொடர்ந்து அது வேலை செய்யவும் ஆகும் செலவு மிக அதிகமானால் இந்த திட்டம் விரயமாகும். அதே சமயத்தில், விளம்பரப் பலகை என்பது ஒரு பணம் கொடுக்கும் விஷயம். அந்த விளம்பரப் பலகையின் மூலம் வரும் பணத்தைக் கொண்டு இந்த திட்டத்தை நடத்த முடிந்தால்?
சாத்தியம் என்றே தோன்றுகிறது!
Wednesday, March 5, 2014
உலகமே உங்களுக்கு எதிராக..
உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்ற எண்ணம் எப்பொழுதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா? இல்லை என்றால் இது வரை நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடவில்லை என்று அர்த்தம்!
எனக்கு இன்னும் புரியாத பெரும் புதிர் இது தான். அது எப்படி? நாளும் விலை ஏறிக்கொண்டிருக்கும் பங்கு நான் வாங்கிய அடுத்த வினாடி முதல் கீழ் நோக்கி மட்டுமே செல்கிறது?
இது போன்ற "நாளும் விலை ஏறிக்கொண்டிருக்கும்" பங்குகளை பார்த்தீர்களானால், முதலில் பெரிதாக யாரையும் கவராமல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும்.. பிறகு எல்லா பைனான்ஸ் நியூஸ் வலைகளிலும் அந்த கம்பெனி பற்றிய ஆர்டிகல் வரும்.. நம்மை ஆர்வம் தொத்திக் கொள்ளும்.. ஓரமாக நின்று பார்ப்போம்.. ஸ்டாக் மார்கெட்டில் திடீரென்று ஒரு 15% அந்த பங்கு விலை ஏறும்.. நம்மை இப்போது பதட்டம் தொற்றிக்கொள்ளும்.. ஐயோ.. கோட்டை விட்டோமே என்று.. சரி இனிமேல் ஏறாது.. நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக்கொண்டு நகருவோம்..
அடுத்த நாள் பார்த்தால், இன்னுமொரு 10% ஜம்ப் ! இப்போது அந்த கம்பெனி பற்றிய ஆர்டிகல் பரவலாக நிறைய வரும்.. அவரவர், இது தான் அடுத்த அமேசன், அடுத்த கூகிள்.. என்ற அளவுக்கு எழுதுவார்கள்..சரி இன்னும் நேரம் இருக்கிறது என்று நம் பங்குக்கு கொஞ்சம் காசை போட்டு அடுத்த பில் கேட்ஸ் நாம் தான் என்று கனவு காண ஆரம்பித்த உடன்..
பங்கு சரிய ஆரம்பிக்கும்..
அடுத்த இரு நாள் இதே போல இறங்கும்.. அது வரை வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய எந்த மகராசனும்.. இப்போது அந்த கம்பெனி பற்றி எழுதமாட்டான். மூன்றாவது நாள், ஒரு புண்ணியவான்.. அந்த கம்பெனி ஏன் உருப்படாது என்று விளக்கமாக எழுதுவான் (இதுவரைக்கும் எங்கடா போயிருந்த?)
அவ்வளவுதான்.. இன்னும் வேகமாக சரியும்.. இப்போதும் சிலர் ஈனஸ்வரத்தில் அது நல்ல கம்பெனி தான்.. இப்போது மார்கெட் செண்டிமெண்ட் சரியில்லை.. உக்ரைனில் போர் வரும் போல இருக்கிறது.. அதனால் தான் நம் ஊரில் உப்பு விலை ஏறுகிறது என்ற மாதிரி வித விதமாக கதை விடுவார்கள்!
நாமும் தலை மேல் கைவைத்துக்கொண்டு அது உண்மைதான் போல இருக்கிறது.. இதோ.. புடின் பின் வாங்கியவுடன் பங்கு எகிறிவிடும் என்று காத்துக்கொண்டு இருப்போம்.. அதற்குள் போட்ட காசில் பாதி காலி! சரி எடுக்கலாம் என்று பார்த்தால்.. பணத்தை தொலைத்த இடத்தில் தானே தேடணும் .. சென்னையில் தொலைத்துவிட்டு சைனாவில் தேடினால் கிடைக்குமா என்று "அறிவு" இடிக்கும்!
சரி போகுது போ என்று.. ஒரு ஜெலுசில் முழுங்கிவிட்டு திருட்டு முழி முழித்துக்கொண்டு அலைவோம் கொஞ்ச நாளுக்கு.
அடுத்த நாள் பேப்பரை பார்த்தால்.. டெஸ்லா விற்கு பதில் பெஸ்லா என்ற புது கார் வரப்போகிறது.. அதற்கு முக்கியமான பார்ட் சப்ளையர்.. கேக்ரான் மேக்ரான் கம்பெனி தான். அடுத்த சூப்பர் ஸ்டாக் இது தான் என்று ஒரு பைனான்ஸ் வலை பக்கத்தில் ஒரு ஆர்டிக்கல் போட்டிருக்கிறான்.. எப்படியாவது ஒரு பத்தாயிரம் புரட்டி அதில் போட்டுட வேண்டியதுதான்.. ஒரே மாதம்.. விலை நூறு மடங்காகிவிடாது?
Friday, January 31, 2014
அமெரிக்க அனுபவம் -- ஃபாரினர் யாரும் இங்க இல்லை!
என் நண்பர் ஒருவரின் மாமனார் தன் மகள் / மாப்பிள்ளை குடும்பத்துடன் சில மாதம் தங்க சென்ற கோடை காலத்தில் அமேரிக்கா வந்திருந்தார். மகள் மாப்பிள்ளை இருவரும் வேலைக்கு சென்றிருந்த படியால் வீட்டில் தனியாக இருந்தார். யாரோ அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டு இவருக்கு ஒரே குழப்பம் கதவை திறக்கலாமா வேண்டாமா என்று. ஒரு வழியாக கதவை திறந்தவருக்கு அழைப்பு மணி அடித்தவரை பார்த்து இன்னும் குழப்பம். வந்திருந்தவர் ஒரு வெள்ளைக்காரர்.
வந்தவர்.. I was looking for David. He used to live here.. I am sorry if this is not his house.. என்றார்..
இவர் உடனடியாக.. No Foreigner is living here. It is our house!
வந்தவர்.. "யார்ரா ஃபாரினர்" என்று நினைத்திருப்பாரோ?
Monday, November 25, 2013
அமெரிக்கா ஏன் உலகத்தின் தலை சிறந்த நாடு இல்லை..
HBO என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு ப்ரீமியம் டி வி சேனல். ப்ரீமியம் என்பதால் எந்த விளம்பரதாரர் தொந்தரவும் இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்க முடியும். இந்த சேனலில் முக்கியமாக மூன்று வித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகிறது. சினிமா. சின்னத்திரை தொடர்கள். பே-பெர்-வியு நிகழ்ச்சிகள்.
இதில் 2012 இல் இருந்து வெளிவரும் தொடர் The Newsroom. ஒரு தொலைகாட்சியில் நியூஸ் வழங்கும் ஒரு டீமில் நடக்கும் நிகழ்ச்சிகள், எப்படிப்பட்ட நேரத்திலும் நேர்மையாக செய்திகளை வழங்க வேண்டும் என்று துடிக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்.. முடிந்தவரை எல்லோரையும் திருத்த முயற்ச்சிக்கும் செய்தியின் நேர்முக பேட்டியாளர்.. உண்மையாக உழைக்கும் துடிப்பான இளைஞர்கள்..அவர்கள் நேர்மையாக இருப்பதால் அவர்களுக்கு வரும் இடையூறுகள், யார் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று அவர்களை காப்பாற்றும் அந்த நெட்வொர்க்கின் தலைவர் என்று பிரமாதமான கேரக்டர்கள்.. அந்த தொடரில் அலசப்படும் நியூஸ் எல்லாம் அந்தந்த நேரத்தில் நடந்த நிகழ்சிகள் என்று.. அருமையாக எடுக்கப்பட்ட தொடர்..
அந்த தொடரின் முதல் நிகழ்ச்சியின் முதல் சில நிமிட கிளிப்.. அதில் இந்த தொடரின் ஹீரோ அமெரிக்கா இன்று ஏன் சிறந்த நாடு இல்லை என்று விளக்கும் ஒரு சுவாரஸ்யமான ஸீன் ..
இது போன்ற ஆக்க பூர்வமான தொடர்கள் நம் ஊரில் ஏன் வருவதில்லை?
Wednesday, November 6, 2013
உணவு எண்ணெய்!
அண்மையில் இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது. சீனாவில் கிட்டதட்ட 10% எண்ணெய் இப்படிப்பட்டது தான் என இது சொன்ன தகவல் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். இதை பார்த்தால் வெளியே சாப்பிடுவதை கண்டிப்பாக குறைக்கத் தோன்றும்!
ஒருவரை ஒருவர் ஏய்த்து பிழைப்பது எந்த அளவிற்கு போனால் இப்படியெல்லாம் கலப்படம் பண்ணத் தூண்டும்?
Tuesday, November 5, 2013
நான் ரசித்த பாடல்..
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கும்போது அதிக சத்தமாக வைக்காமல் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். மௌனத்தை கிழித்துக்கொண்டு வெளிவரும் குரல்..என்பதை தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை..
இந்த பாடல் உணர்த்தும் கருத்தும் அருமை. போருக்கு சென்ற தந்தையின் மரண செய்தியை கேட்டு உறைந்து நிற்கும் மகன்.. அதன் பிறகு அவன் வாழ்க்கை.. தாயின் சோகம்.. எல்லாமே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!





















