Thursday, April 25, 2013

கடவுள்!



ஒரு தாயின் வயிற்றில் 8 மாதம் வளர்ந்த இரு குழந்தைகள் இருந்தன. ஓரளவு வளர்ந்து விட்டதால் இருவருக்கும் இடம் பற்றாக்குறை! நிறையநாள் இங்கேயே இருக்கமுடியாது என்பது இருவருக்குமே தெரிந்து விட்டது. 

முதல் குழந்தை : "எப்படியும் நாம் கொஞ்ச நாட்களில் இங்கிருந்து  சென்றுவிடுவோம். இங்கிருந்து சென்ற பிறகு கூட இதுவரை இருந்தது போல வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் என நம்புகிறாயா?"


இரண்டாவது : கண்டிப்பாக. இதற்க்கு வெளியேயும் கண்டிப்பாக ஏதாவது இருக்க வேண்டும். எனக்கென்னமோ நாம் வெளியே சென்ற பிறகு நன்றாக இருக்கவேண்டும் என்று ப்ரிபேர் பண்ணிக்கொள்வதர்க்கே இங்கிருக்கிறோம் என்று தோன்றுகிறது!"

முதலாவது : "முட்டாள்! இங்கிருந்து போனபின்னால் வாழ்க்கை கிடையாது. அப்படி ஒன்றிருந்தால் அது எப்படி இருக்கும் என்று சொல் பார்ப்போம்?"

இரண்டாவது : "எனக்குத்தெரியாது. ஆனால் இங்கிருப்பதை விட கண்டிப்பாக வெளிச்சமாக இருக்கக்கூடும். யாருக்குத் தெரியும்? நாம் கால்களால் நடப்போமோ.. வாயில் உணவு உண்ணுவோமோ என்னவோ?"

முதலாவது : "நீ சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனம்.. கால்களால் நடப்பதாவது.. வாயால் உணவு உண்பதாவது.. நமக்கு உணவு வரும் குழாய் (Umbilical cord ) இருக்கிறது. என்ன.. ரொம்ப சின்னதாக இருக்கிறது. அதனால் தான் வெளியே போனபின் வாழ்க்கை இல்லை என்கிறேன்!"

இரண்டாவது : "எனக்கு என்னமோ வெளியே வேறு இடம் இருக்கும் என்று தோன்றுகிறது. அது நாம் இருக்கும் இடத்தை விட மிக வித்யாசமாக இருக்கும் எனவும் நினைக்கிறேன்."

முதலாவது : "நீ சொல்வது தவறு. முடிந்த வரை இங்கேயே இருப்போம். வெளியே போனால் அவ்வளவுதான்!"

இரண்டாவது : "ஒன்று நிச்சயம். வெளியே போனவுடன் நாம் அம்மாவை பார்ப்போம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்."

முதலாவது : "அம்மாவா? நீ அம்மா இருக்கிறார் என்பதை நம்புகிறாயா? எங்கே இருக்கிறார் அம்மா?"

இரண்டாவது : "அம்மா நம்மை சுற்றி எல்லா எடத்திலும் இருக்கிறார். அம்மாவின் உள்ளே தான் நாம் இருக்கிறோம். அம்மா இல்லாவிட்டால் நமது உலகமே இருக்காது."

முதலாவது : "என் கண்ணுக்கு அம்மா தெரியவில்லை. அதனால் அம்மா இருக்கிறார் என்று நம்ப மாட்டேன்."

இரண்டாவது : "கொஞ்ச நேரம் அமைதியாக எதைபற்றியும் சிந்திக்காமல் கேள். அம்மாவை உன்னால் உணரமுடியும்"

முதலாவது அமைதியாக எதையும் சிந்திக்காமல் கேட்கத்தொடங்கியது... 

thanks to my friend, Sandy, for sharing this in her Facebook wall.

Saturday, April 20, 2013

எம்பதி


எம்பதி என்பது மற்றவர் பார்வையில் அவர் பிரச்சனையை உணர்ந்து கொள்வது. 
ஒவ்வொருபிரச்சனையிலும் , மற்றவர் பார்வையில் பார்க்க முடிந்தால் நம் அணுகுமுறையில் பெரிய வித்யாசம் இருக்கும். இதோ ஒரு அருமையான வீடியோ.. 





ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கும் கவலைகளை அறிந்து கொள்ள முடிந்தால் நம் பார்வையில் கருணை இன்னும் அதிகமாக இருக்குமோ?

Sunday, April 7, 2013

இசை அனுபவம்!

இன்றைய இசை அறிமுகம் மிக புதுமையான ஒன்று. அகபெல்லா (A capella) என்பது எந்த வித இசை கருவிகளும் இல்லாமல் இசையையும் பாடகர்களே இசை போலவே பாடிவிடுவது (சத்தம் செய்வது?)

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் பலவற்றில் இதற்கென்றே இசை குழுக்கள் இருக்கும். எந்த இசை கருவியும் இல்லாததால், எந்த முதலீடும் இல்லாமல் மாணவர்கள் இதை பழக முடியும். இசை மீது காதல் ஒன்றிருந்தால் போதும் என்பது இதன் சிறப்பு. 

அகபெல்லாவின் இசை தொகுப்பு ஒன்று..



இப்போது அதிலும் புதுமை செய்த ஒருவர் பற்றி. அலா வார்டி (Alaa Wardi).  ஈரானில் பிறந்து சவுதி அரேபியாவில் வாழும் இளைஞர். இசையின் எல்லா வாத்தியங்களின் சத்தங்களையும் அவரே தனித்தனியாக உருவாக்கி எல்லாவற்றையும் இணைத்து அற்புதமான இசை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். எந்த அளவு இசையை ஒருவர் நேசித்துக் கொண்டிருந்தால்  இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்க முடியும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. 

இதோ அவர் வெளியிட்டுள்ள ஒரு ஹிந்தி பாடல்.. 


இன்னும் ஒரு அற்புதமான பாடல் அவரிடம் இருந்து.. 



அசந்து விட்டேன்.. இசையை எந்நேரமும் சுவாசித்துக்கொண்டிருக்கும் ஒருவரால் தான் இதை செய்திருக்க முடியும். நீங்களும் ரசித்து அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன்..

Thursday, March 14, 2013

குற்றங்களை குறைக்க எளிய வழி !



கடந்த சில மாதங்களாகவே மீடியாவில் வரும் செய்திகளில் முக்கியமானது பெண்களுக்கு எதிரான குற்றங்கள். கிட்ட தட்ட எல்லா விதங்களிலும் செயலற்றதாக இருக்கும் இந்திய அரசு, இதில் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம், வேகமாக செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. அதற்கு அரசுக்கு பாராட்டுக்கள். 

அதே நேரம், அதில் உள்ள சில பிரிவுகள் இந்த சட்டத்தை மட்டும் அல்லாது, ஏற்கனவே இருக்கும் சட்டங்களையும் நீர்த்துப்போகுமாறு செயல் படக்கூடியது. 

அதில் முதலாவது, இருவரும் ஒத்துக்கொண்டு வைத்துக்கொள்ளும் செக்ஸ் ரேப் ஆகாது. மேலோட்டமாக இது சரியாக தோன்றுகிறது. ஆனால், புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு, அந்த இருவரின் வயதும் பதினாறு இருந்தாலே போதும் என்கிறது! பதினாறு வயதில் என்ன தெளிவு இருக்க முடியும்?

இதற்க்கு விளக்கமளித்த அமைச்சர் கூறியது, கிட்ட தட்ட, இருவரும் மனம் ஒத்து வைத்துக்கொள்ளும் செக்ஸ் தவறே இல்லை, இருவருமே மைனராக இருந்தாலும் கூட என்ற வகையில் இருக்கிறது! இது பற்றிய செய்தி

கண்டிப்பாக குற்றங்களை குறைக்க இது ஒரு வழி. செய்தது குற்றமே இல்லை என்றானபின் குற்றங்கள்  குறையுமா இல்லையா?

Wednesday, February 6, 2013

மனதை சுற்றி வரும் பாடல்



இதோ இன்னுமொரு பாடல். ஒரு முறை கேட்டுப்பாருங்கள். ஆனால் ஒரு வார்னிங். கேட்ட உடன் கால எந்திரத்தில் பின்னோக்கி ஒரு ஐம்பது வருஷம் போய்விடுவீர்கள்! வீடியோவை பார்க்காமல் கண் மூடி இந்த பாட்டை கேட்டாலும் பின்னோக்கி போக முடிவது ஆச்சர்யம்..


கண்மூடி என்றவுடன் ஞாபகம் வருகிறது. பெண்குரல் பாடகர் வைக்கம் விஜயலக்ஷ்மி. பிறவியிலேயே பார்வை இழந்தவர் என்பது ஒரு ஆச்சர்யமான தகவல். வெறும் பத்து வயதிற்குள்ளாகவே நானூறுக்கும் மேற்பட்ட கச்சேரி செய்திருக்கிறார். கடந்த பதினெட்டு வருடங்களாக குருவாயூர் செம்பை சந்கீதோத்சவத்தில் பாடி வருகிறார்.

இதே பாடல் Making of the Song வீடியோவில்..



என்ன ஒரு அருமையான குரல்!  அவ்வப்போது மனச்சோர்வு வரும்போதெல்லாம் பிறவியிலே குறைகளுடன் படைக்கப்பட்டவர்களையே நினைத்துக்கொள்கிறேன்!

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - தவறான முன்னுதாரணங்கள்!



விஸ்வரூபம் தடை விலகி படம் வெளிவரும் நேரம். நடந்ததை பார்க்கும்போது பல தவறான முன்னுதாரணங்களை இந்த பட விவகாரம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. 

முதலாவது. படத்தை பார்க்காமல் பல இஸ்லாமிய சமூக சங்கங்கள் இணைந்து இந்த அளவு பெரிதாக எதிர்ப்பை தெரிவித்து படத்தை எங்களுக்கு போட்டு காட்டிவிட்டுத்தான் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதே போல பற்பல சங்கங்கள் வெளிவரும் படங்களுக்கு தடை விதிக்க போராட்டம் நடத்த முன் வரும்.. 

இரண்டாவது, இந்த போராட்டங்களுக்கு பணிந்து படத்தை முன் கூட்டியே அவர்களுக்கு போட்டுக்காட்டியது. இதுவே போராட்டத்தை வலுப்படுத்திவிட்டது. 

மூன்றாவது, தமிழக அரசு தடை விதித்தது. சென்சார் சான்றிதழ் பெற்றபின்னும் அரசு தடை செய்யலாம் என்பது தயாரிப்பாளர்களின் கழுத்து மேல் தொங்கும் கத்தி!

நான்காவது, நீதிமன்றம் 'பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியது. பொறுப்பை தட்டிக்கழிப்பது போல தோன்றினாலும் அடுத்த நாளே சரி செய்து விட்டார் நீதிபதி.

கொஞ்சநாளுக்கு வரும் படங்களுக்கு எதிரே பல லெட்டர் பேட்  சங்கங்கள் போராடும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது!

Wednesday, December 12, 2012

மேதைக்கு அஞ்சலி!



சிதார் மேதை ரவி ஷங்கர் அவர்களின் மறைவு மிகவும் வருத்தியது. அவர் தன் வாழ்நாளை இசைக்காகவே அற்பணித்திருப்பது அவர் வாழ்க்கை குறிப்பை படித்ததில் தெரிந்தது.  சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் எப்போது படித்தாலும் பிரமிப்பை தருகிறது 
  • உலகப்புகழ் பெற்ற உதய் ஷங்கர் இவர் அண்ணா 
  • இவர் பள்ளியில் படித்தது மொத்தம் நான்கு வருடங்களே 
  • உலகப்புகழ் பெற்ற சரோத் மேதை அலி அக்பர் கான் இவர் மனைவியின் சகோதரர் 
  • சாரே ஜகான்சே அச்சா பாடல் இவர் அமைத்த மேட்டிலே தான் இன்னும் பாடப்படுகிறது 
  • காந்தி படத்திற்கு இசை அமைப்பாளர் இவரே. அதற்க்கு ஆஸ்கர் நாமினேஷன் பெற்றார் 
  • இசைக்கு வழங்கப்படும் கிராமி அவார்டை இவர் மூன்று முறை பெற்றிருக்கிறார் 
  • நம் நாட்டின் உயர்ந்த விருதான பாரத் ரத்னா பெற்றதோடு, பிரான்ஸின்  உயர்ந்த விருதையும் பிரிட்டனின் சர் பட்டமும் பெற்றவர் இவர் 
  • மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் 
  • முப்பத்தொன்று புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். 
  • கர்நாடக இசையின் நுணுக்கங்களை இந்துஸ்தானி இசையில்  பயன் படுத்தியிருக்கிறார் 
  • இவர் மகள்கள் இருவரும் பலமுறை கிராமி வென்றிருக்கிறார்கள் 
  • உலகப்புகழ் பெற்ற இசை மேதை யெஹுதி மேனுஹினுடன் சேர்ந்து வாசித்த ஈஸ்ட் மீட்ஸ் வேஸ்ட் மிகவும் புகழ் பெற்ற ஒன்று 
நான் நெகிழ்ந்த மற்றொரு விஷயம்.. இவர் கடைசி கச்சேரி இந்த வருடம்  நவம்பர் நான்காம் தேதி நடந்தது. மறக்காதீர்கள். அவருக்கு வயது 92! மேடைக்கு வர சக்கர நாற்காலி தேவையாக இருந்தது அவருக்கு. அது மட்டும் இல்லை. கையோடு எடுத்து செல்லும் வகையில் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசிக்க முடிந்தது. இருந்தும் அரங்கத்தில் இருந்த அனைவரும் பிரமிக்கும் வகையில், அவர் இசைக்கு வயதே தெரியவில்லை என்றும் பலரும் புகழும் வகையில் அவர் இசை அன்று இருந்தது.

இவர் புவியில் இருந்தபோது நானும் வாழ்ந்தேன் என்பது  எனக்கு பெருமை!