Friday, January 1, 2016

அரசியல் வெற்றிடம்



முதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். நான் தமிழகம் இப்போதிருக்கும் நிலையை பார்ப்பது செய்தி ஊடகங்கள் மூலமும், சமூக வலை தளங்கள் மூலமும், பதிவுகள் மூலமும் தான்.

இப்போது இருப்பது போல ஒரு அரசியல் வெற்றிடம் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை. வெள்ளம் வந்த போதுதான் எந்த அளவு அரசு செயல்படாத அரசாக இருக்கிறது என்று தெரிந்தது. ஊரே முழுகிக் கொண்டிருக்கும் போதும் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வெளியே வராத முதல்வரை என்ன சொல்வது?

திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி தலைமையை ஸ்டாலினுக்கு எளிதாகக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார் என நினைக்கிறேன். சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது இரண்டாவது அல்லது மூன்றாவது வருடம் ஸ்டாலினைக் கொண்டு வந்திருந்தால் transition எளிதாக இருந்திருக்கும். இப்போது யார் கூட்டணிக்கு வருவார்கள் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள். வெள்ளத்தில் இறங்கி வேலை செய்திருந்தால் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். மிக தாமதமாக குறைந்த இடங்களில் தென்பட்டது பெரிதாக பலன் அளிக்கவில்லை என நினைக்கிறேன்.

வைகோ வை பொருத்தவரை தங்கத்தட்டில் கொடுத்த வாய்ப்பை தவற விட்டவர் என நினைக்கிறேன். இனி எப்போதும் அந்த வாய்ப்பு வராது. எப்போது தமிழகத்தின் நலத்தை விட தமிழீழத்தின் நலத்தை அதிகமாக  அவர் மதிபிட்டாரோ அப்பொழுதே அவர் அரசியலில் தனிப்பட்டு விட்டார். அவர்தான் புரிந்து கொள்ளவில்லை.

விஜயகாந்தை பொறுத்த வரை, பொறுப்பிலாமல் நடந்து கொள்வதே அவர் மிகப் பெரிய பலமாகக் கருதிக் கொள்கிறார். எல்லோரையும் துச்சமாக மதிப்பது வேறு. பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேறு. அந்த வித்யாசம் தெரியாமல்தான், யாரையும் மதிக்காமல், அது வெளியே தெரியும் அளவு பொறுப்பிலாமல் நடந்து கொள்கிறார். அதை உணர்ந்து கொள்ளும் வரை, அவர் 10% ஓட்டோடு திருப்தி அடைய வேண்டியது தான்!


ராமதாசை பொருத்தவரை அவர் credibility யை அவரே போக்கிக்கொண்டு விட்டார். மாற்றி மாற்றி அலியன்ச் வைப்பது பெரிய தவறு ஒன்ன்றும் இல்லை. யாருக்குமே கொள்கை என்று ஒன்று கிடையாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். என்ன. இது பா மா கா விஷயத்தில் வெளிப்படையாக தெரிந்து விட்டது. அது தான் தவறு. அதை மீறி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.

திருமாவளவன் போன்றவர்கள் உண்மையாக உறுதியாக தன் கொள்கையில் (!) நின்றிருந்தால் ஒரு credibility  இருந்திருக்கும். ஆனால் கொள்கை (!​) விஷயத்தில் எதிர் நிற்கும் பா மா கா போன்றவர்களுடன் எப்போது கூட்டணி அமைத்தாரோ, ராஜ பக்ஷேவுடன் புகைப் படத்துக்கு போஸ் கொடுத்தாரோ அப்போதே அவர் அழிந்துவிட்டார். இவரை அழித்ததில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம் என நினைக்கிறேன்.

கம்யூனிஸ்ட் களை பொருத்தவரை அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மேலும், ஒன்றுக்கும் உதவாத சீனா ஆதரவு, ரஷ்யா ஆதரவு என்பதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் மக்களை பாதிக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்களேயானால் scope உண்டு. என்னைப் பொருத்தவரை, மக்களை பாதிக்கும் விஷயங்களில் உண்மையாக அக்கறை செலுத்துபவர்கள் இவர்கள் மட்டுமே. என்ன பிரயோஜனம். அதை மக்கள் உணரும் வரை இவர்களுக்கு விடிவு காலம் கிடையாது.

பிஜேபி யை பொருத்தவரை தமிழிசை போன்றவர்களை தவிர்த்து வேறு யாரும் அவர்களை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.

கடைசியில் என்ன மிச்சம் என்று பார்த்தால், இருப்பது வெற்றிடம் என்ற உண்மை தான்.

மீள ஒரே வழி , தேர்தலில் ஒரு மைனாரிட்டி அரசு வரவேண்டும். அந்த அரசு, குறைந்தது இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் அரசு அமைக்க முடியும் என்ற நிலை வரவேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது பொறுப்பான அரசு வரும்!



Tuesday, July 28, 2015

ஃபேஸ்புக் .. ட்விட்டர் .. அப்புறம்?





பிடிக்குதோ.. இல்லையோ.. நான் இந்த 'சோசியல் மீடியா'க்களில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய நேரம் செலவழிக்கிறேன்.. எனக்கு மட்டுமில்லை.. பலருக்கும் இதே அனுபவம் என நினைக்கிறேன்..

முதலில் எல்லாம் பஸ்.. ரயில்.. பயணங்களில் கொஞ்சமாவது மற்றவர்களுடன் பேசுவார்கள்.., இப்போது  சுத்தம்!
 (இங்கு).. ஏறியவுடன் பையை கீழே வைக்கும் முன்.. போஃனில்  ஃபேஸ்புக் .. யூடியூப் .. பார்ப்பவர்கள் கிட்டதட்ட எல்லோரும்!



இது எங்கே போய் முடியும் என்று முழிக்கும் போது இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது..

எல்லாரும் தனித்தனியா கூட்டமா அலையப் போறோம்!


கடைசியில்.. ஐன்ஸ்டீன் சொன்னது தான் நடக்கப் போகிறது!



Sunday, June 7, 2015

முழுமையான சர்வாதிகாரம்..

 கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் டி வி யில் வரும் 'செய்திகள் ' எந்த அளவு நம் கருத்துக்களை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது..

ஒரு மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டு வெளிவந்து உண்மையிலேயே மக்கள் புரட்சி வந்துவிடும் போல இருக்கிறது என்று எண்ணும்போது  திடீர் என்று ஒரு நடிகை குளிக்கும் வீடியோ வெளியாவது.. மிகப் பரபரப்பாக ஒரு கற்பழிப்பு செய்தி  வெளியாவது..என்றும் இல்லாமல் அதற்கு மிகப் பெரிய கவரேஜ்..அதிரடியாக ஒரு கிரிக்கெட் விளையாட்டு நடப்பது.. மிகப்பெரிய நடிகரின் படம் பெரிய தோல்வி அடைவது.. அந்த படத்தில் நஷ்டம் அடைந்த மிக சிலர் நடத்தும் 'போராட்டம்' செய்தியாக தொடர்ந்து வருவது..

இதெல்லாம் தற்செயலா? இல்லை யாராவது தெளிவாக நம் கருத்துக்களை சிதைத்துக் கொண்டே இருக்கிறார்களா?

இதெல்லாம் தெளிவாக நடக்கும் சதி வேலையே என்று கண்முன் போட்டுடைக்கிறது Perfect Dictatorship என்ற ஸ்பானிஷ் திரைப்படம். பார்க்க பார்க்க யாரோ நம் ஊரில் நடப்பதை வெட்டவெளிச்சம் ஆக்குவது போல இருந்தது..



கதை இதுதான்..

மெக்சிகோவின் ப்ரெசிடெண்ட் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாக வாயை விட்டு மாட்டிக்கொள்ளும் டைப். அவர் முதல் காட்சியிலேயே அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேசும்போது மெக்சிகோ மக்கள் கடின உழைப்பாளிகள்.. யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.. என்று சொல்ல நினைத்து .. உங்கள் நாட்டு கருப்பர்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவர்களை விட நன்றாக செய்வார்கள் என்று உளறிவிடுகிறார் .. வாட்ஸ் அப்.. Facebook , Twitter என்று எல்லோரும் அவரை கிழித்து தோரணமாய் தொங்க விட.. உடனே அவர் ஓர் டிவி நெட்வொர்க்கை அணுகுகிறார்.. அவர்கள் இதை எல்லோரும் மறக்கவேண்டுமானால் வேறு ஒரு பெரிய செய்தி வேண்டும் என்று ப்ரெசிடெண்ட் கட்சியிலேயே இருக்கும் ஒரு மாநில கவர்னர் பெட்டி நிறய பணம் லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிடுகிறார்கள்.. சட்டென்று பிரச்சனை திசை திரும்பிவிடுகிறது...

ஆனால் பெட்டி வாங்கிய கவர்னர் அசகாய சூரன்.. அந்த டிவி காரர்களுக்கு பணம் கொடுத்து அவர் மீதான செய்தியை மாற்ற முயல்கிறார்.. பேச்சுவார்த்தையின் போதுதான் தெரிகிறது இவர்கள் வீச்சு எவ்வளவு பெரிது என்று.. ஒரேடியாக தன்னை ப்ரெசிடெண்ட் ஆக்குவதற்கு அந்த டிவி யுடனே ஒரு டீல் போட்டுக் கொள்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்ட டிவி யே  கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அவர் இமேஜை வளர்க்கிறார்கள் என்று படம் வளர்கிறது..

நேர்மையாக நடக்கும் ஒரு அரசியல்வாதி.. அவரை டிவி பேட்டியில் எடக்கு மடக்காக கேள்வி கேட்டும் பழைய விவகாரங்களை கிளறியும் அவர் இமேஜை டிவி காலி செய்வது.. இரட்டைக் குழந்தைகள் காணாமல் போவது... அந்த விவகாரத்தை எந்த அளவு முடியுமோ அந்த அளவு பெரிதாக்குவது.. எந்த அளவு அதை 'ஸ்டேஜ்' செய்து காட்டுவது.. என்று கிழித்து தோரணமாய் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஒரு சாம்பிள் காட்சி.. நேர்மையான அரசியல்வாதியின் பழசை கிளற அரசின் உதவியை நாடுகிறார் டிவி அதிபர்.. அவர் கூப்பிடுவது தற்போதய ப்ரெசிடெண்டை .. ப்ரெசிடெண்ட் இருப்பது ஒரு ராணுவ வீரருக்கு அரசு மரியாதை செலுத்தும் விழாவில்.. அப்படி ஒரு விழாவில் இருப்பவரை போனில் கூப்பிட்டு கிட்டதட்ட மிரட்டுகிறார் டிவி அதிபர். யாரிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று அப்பட்டமாக காட்டுகிறது இது! அதுவும் 'என்னய்யா டை போட்டுட்டு இருக்க. கேவலமா இருக்கு. நான் கொஞ்சம் அனுப்பறேன்.. அதை போட்டுக்கோ..' என்று 'நான் உன்னை பாத்துக்கிட்டே தான் இருக்கேன்' என்று உள்ளூட மிரட்டுவது.. அட்டகாசம்!

பற்பல இடங்களில் படம் நம் ஊர் அரசியலை நக்கல் செய்வது போலவே இருக்கிறது. அவர்கள் செய்வதென்னவோ மெக்சிகோ அரசியலை! எல்லா ஊரிலும் இவர்கள் ஒரே மாதிரிதான் போல!

தவறவே விடக்கூடாத படம் இது..  2014இல் வெளியான படம். Netflix இல் உள்ளது.

இந்தப் படம் பார்க்கும்போது உங்களுக்கு ஆருஷி கேஸ்.. நிர்பயா விவகாரம் , லிங்கா விவகாரம்.. லல்லு.. சுப்பிரமணியம் சுவாமி.. சல்மான்.. பிரியங்கா.. ராகுல்.. மோடி.. எல்லோரும் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. அவர்களே பொறுப்பு! ..

Tuesday, February 10, 2015

மன்மோஹனின் நெருங்கிய நண்பர்!



டிபெரியஸ் (Tiberius) 14 AD முதல் 37 AD வரை ஆட்சியில் இருந்த ரோமாபுரி மன்னன். வரலாற்றில் அவர் ஒரு கொடுங்கோல் மன்னனாக பதிவு செய்யப் பட்டிருக்கிறார் (மாற்று தகவல்களும் உண்டு) அவரை சதி மூலம் கொன்று பதவிக்கு வந்தவர் அவர் கொள்ளு மருமகன்  (grand nephiew) கலிகுலா (Caligula) டிபெரியஸ் இறக்கும்போது கலிகுலாவிடம் சொன்னது..எப்படியாவது மக்களை டிபெரியஸ் நல்லவன் என்று சொல்ல வேண்டும். அது ஒன்றே நான் கேட்கும் உதவி என்றானாம். அடுத்து வந்த கலிகுலாவின் மிருகத்தனமான கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் எல்லோரும் 'இவனை விட டிபெரியஸ்  எவ்வளவோ நல்லவன்' என்று சொன்னார்களாம்!

வரலாறு மறுபடி திரும்புகிறது

மௌனசாமியாக இருந்து குடி கெடுத்த மன்மோகனிடம் இருந்து பிடுங்கி மோடியிடம் அரசை கொடுத்தால், அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போல் இருக்கிறது!

நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவேன்.. (அதுவும் ஆளுக்கு ஒரு லட்சம்!)
இன்சூரன்ஸ் தனியார் மயமாகாது
ஆதார் அட்டை தேவையில்லை..
அணு ஒப்பந்தம் எல்லோருக்கும் ஏற்றது போல நிறைவேற்றப் படும்..
...
...
எல்லாமே மறந்து விட்டது போல இருக்கிறது. வேலையற்ற வேலையாக இந்துக்கள் பத்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.. கோட்சேக்கு சிலை..பட்டேலுக்கு  உலகத்திலேயே பெரிய சிலை... அதானிக்கு வெளிநாட்டில் தொழில் தொடங்க 1 பில்லியன் டாலர் கடன் (ஸ்டேட் பேங்க் மூலம்).. அணு ஒப்பந்தத்திற்கு கிட்ட தட்ட மண்டியிட்டு ஒப்புக் கொண்டு கையெழுத்து..'எளிமையாய்' 11 லட்சத்தில் சூட்..

நல்ல வேளை .. .டில்லியில் தோத்தது பிஜேபி.. இதை ஒரு wakeup call என உணர்ந்து வெறும் விளம்பரத்தை விட்டு உண்மையில் ஏதாவது பண்ணினால் தேவலாம்!

இப்போது சொல்லுங்கள்..

மன்மோகனே நல்லவர் போல இருக்கிறதே என்று எண்ண வைத்த மோடி தானே மன்மோகனின் நெருங்கிய நண்பர்?



Friday, December 26, 2014

பிசாசு!

மிஷ்கின் கிரைம் த்ரில்லெர் படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ரசிகரை புத்திசாலியாக கருதி படத்தின் ஓட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் அவர் உத்தி எனக்கு மிகப் பிடிக்கும். முடிச்சை போட்டுக்கொண்டே போய் வழியில் சில அதை அவிழ்க்கும் தடயங்களை விட்டு கடைசியில் அதை அவிழ்க்கும்போது நமக்கு வரும் திருப்தி.. என்ன சொல்ல. அது ஒரு அனுபவம்.. விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்தப் படத்திலும் அந்த அனுபவம் கிடைத்தது. ஆட்டோ சிக்னலில் நிற்காமல் முன்னே இருக்கும் டூ வீலரில் முட்டி நிற்பது ஒரு சாதாரண நிகழ்வு. அதையும் கடைசியில் ஒரு ஆதாரமாக கொண்டு வருவதில் மிஷ்கினின் அறிவு மிளிர்கிறது!

மிஷ்கினின் மிகப்பெரிய பலம்.. பொதுவான உருவகத்தை உடைப்பது. பாண்டியராஜனையும் பிரசன்னாவையும் வேறு யார் வில்லனாக பார்த்திருப்பார்கள்? அசட்டுத்தன நகைச்சுவை நடிப்பை வழங்கிய YG மகேந்திராவிடம் மிரட்டும் நடிப்பை யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ஆவி என்றாலாவது கொஞ்சம் நல்ல ஆவி உண்டு என்று நினைப்பதற்கு வழி உண்டு.. பிசாசு என்றால் தோன்றுவதே பயம் தான். அதை நல்லதாகவும் இருக்கக் கூடும் என்று புது சிந்தனைக்கு வழி அமைத்திருக்கிறார் மிஷ்கின்.

புத்திசாலித்தனமான படம் பிசாசு. எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் அழகாக எடுத்திருக்கிறார், மிஷ்கின். அதே போல 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கும் ராதா ரவி அவர்களுக்கு பெருமைப் படும் நடிப்பு வாய்ப்பை அளித்திருக்கிறார் மிஷ்கின்.

பிசாசு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Welcome Back , மிக்ஷ்கின்!

Saturday, December 6, 2014

குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?



ஆஸ்திரேலியாவின் Traffic Accident Commission தனது இருபது வருட சேவையை முன்னிட்டு வெளியிட்டுள்ள விளம்பரம்..

இளகிய மனதினர் பார்க்க வேண்டாம். மற்றவர் அனைவரும் பார்க்க வேண்டியது..



குடிக்கும் போது 'என்னடா இது. எறும்பு கடிச்சமாதிரி லைட்டா இருக்கு. போதையே இல்ல' என்று தோன்றினாலே.. உங்களுக்கு போதை ஏற ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.. எப்பாடு பட்டாவது குடித்து விட்டு வண்டி ஓட்டுவதை தவிருங்கள்..

டாஸ்மாக் பற்றி பலரும் பல விதமாக சொல்லியாகி விட்டது.. எனக்குத் தோன்றுவது..

நம்மைப் பற்றி அரசுக்கோ வேறு யாருக்குமோ அக்கறை இருக்கும் என்று நம்ப வேண்டாம். நம் குடும்பம் நம் பொறுப்பு. நம் நலம் அதற்கு முக்கியம். நலமாக இருப்போமே..

குடிப்பது கொடிது. அதனினும் கொடிது குடித்து விட்டு வண்டி ஓட்டுவது!

Wednesday, October 15, 2014

எது ஊழல்?






முதலில் நான் உண்மை என நினைப்பவை சில..


  • கொள்கை அடிப்படையில் எந்த கட்சிக்கும் பெரிய அளவு தன்னலம் கருதாத தொண்டர்கள் கிடையாது.
  • எந்த கட்சிக்கும் பெரிய அளவு கொள்கை எதுவும் இல்லை,  ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர. 
  • எல்லோரும் தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் தன்னிறைவு அடைய விரும்புகிறார்கள் 
  • யாரையும் சாராமல் தின வாழ்க்கைக்கு தேவையானவற்றை அடைய பணம் தேவையாக இருக்கிறது.
  • எந்த ஒரு கட்சி நடத்தவும் பெரிய அளவு பணம் தேவை. 
  • பதவியில் இல்லாத அரசியல்வாதிக்கு அரசியல் மூலம் சம்பளம் கிடையாது. 

எந்த பணவரவும் இல்லாமல் அரசியல்வாதி எப்படி வாழ முடியும்? சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் 50000 வேண்டியிருந்தால், அரசியல்வாதி குடும்பத்துக்கு அது போல சில மடங்கு தேவை. எதற்கு?

இருப்பை காட்டிக்கொள்ள அடிக்கடி போராட்டம் /உண்ணா விரதம் / பொதுக்கூட்டம் / மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த வேண்டியிருக்கிறது. இன்றைய விலைவாசியில் எது ஒன்றும் நடத்தவும்  குறைந்த பட்சம் ஒரு லட்சம்  முதல் பல லட்சம் வரை தேவையாக இருக்கும். எங்கிருந்து வரும் அந்தப் பணம்?

தனி ஒரு மனிதனாக இல்லாவிட்டாலும் அரசியல்வாதி மூலம் தான் இந்த செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்போது கட்சி கொடுப்பது?


கட்சிகளுக்கான வருமானம் என்றால், கட்சிக்கு வரும் நன்கொடை,அதன் சொத்துக்கள் மூலம் வரும் வாடகைகள் போன்றவை பெரும்பாலானவை. கொள்கைகளே இல்லை என்னும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நன்கொடை என்பது எவ்வளவு இருக்கப்போகிறது?.. கண்டிப்பாக அதிகம் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகளுடன் நன்கொடை என்பது இரு வகையில் இருக்கக் கூடும் (ஊகம் தான்!) ஒன்று செய்து கொடுக்கப் போகிற காரியத்திற்கோ (இந்த  திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்தால் கட்சிக்கு நிதி போன்ற..) / செய்து கொடுத்த காரியத்திற்க்கோ (இந்த ப்ராண்ட் சோலார் வாங்கினால் மட்டுமே ஊக்கத் தொகை என்பது போன்ற..) வருவது.. இரண்டாவது.. நாளை ஆட்சி அமைத்தவுடன் எனக்குப் அமைச்சர் / எம்பி / எம் எல் ஏ.  அதனால் இன்று சம்பாதிப்பதில் கொடுக்கிறேன் என்பது.

ஆக மொத்தம் கட்சிகள் நடத்தத் தேவைப் படும் பணம் சம்பாதிக்க எனக்குத் தெரிந்த வழிமுறைகள் இவைதான்.

அடிப்படையிலேயே நேர்மையுடன் நடத்தவே முடியாத ஒன்றாக இந்த கட்சி நடத்துவது இருக்கிறது. ஆனால் கட்சி நடத்த முடியவில்லை என்றால் ஆட்சிக்கு வர முடியாது. எவருக்கு எந்த அளவு பதவிக்கு வர விருப்பம் இருக்கிறதோ  அந்த அந்த அளவுக்கு கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதோ (அவரே நிதி கொடுப்பதால் / நிதி திரட்டும் வலிமை கொண்டதால்) இல்லை கட்சியை நடத்துவதோ இருக்க வேண்டும்.

மறுபடி அரசியல்வாதிக்கு வருவோம். அவரும் பிழைக்க மாதம் தோறும் பணம் தேவை. நேர்மையாக எந்த வழியும் இல்லை. ஆனாலும் அரசியலில் அவர் இருந்தால்தான் என்றாவது அதிகாரத்துக்கு வர முடியும்.. இப்படி இருக்கும்போது இவர்கள் நேர்மையாக எப்படி இருக்க முடியும்? நேர்மையாக இருப்பது என்பது கட்சி கொடுக்கும் (கொடுத்தால்) பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வது. அப்படி இருந்தால் அடுத்த மாதமே பெரும்பாலானோர் அவரை மறந்து விடுவார்கள்.. அப்புறம் எப்படி அதிகாரத்துக்கு வருவது?

மொத்தத்தில், அரசியல்வாதிகள் பணம் ஈட்டுவது ஏற்கனவே செய்த செலவுகளை சரிகட்டவும் / எதிர்காலத்தில் செய்யப் போகும் செலவுகளை சமாளிக்கவும். அதையும் தாண்டித் தான் அனைவரும் சம்பாதிக்கிறார்கள்.

இப்படி ஒரு சொதப்பல் அஸ்திவாரத்துடன்.. 'ஊழல் இல்லாத அரசு..ஊழலை அடியோடு ஒழிப்போம்' என்பதெல்லாம் வெற்று வாதம் தான்!

ஓரளவு ஊழலை சகித்துக் கொள்வதே நடைமுறை வழி! இல்லையேல், அரசியல் வாதிகள் செய்வது ஊழல் இல்லை. மற்றவர் செய்வது மட்டுமே ஊழல் என்று சொல்லி விடலாம்!