Monday, November 25, 2013

அமெரிக்கா ஏன் உலகத்தின் தலை சிறந்த நாடு இல்லை..


HBO என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு ப்ரீமியம் டி வி சேனல். ப்ரீமியம் என்பதால் எந்த விளம்பரதாரர் தொந்தரவும் இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்க முடியும். இந்த சேனலில் முக்கியமாக மூன்று வித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகிறது. சினிமா. சின்னத்திரை  தொடர்கள். பே-பெர்-வியு நிகழ்ச்சிகள்.

இதில் 2012 இல் இருந்து வெளிவரும் தொடர் The Newsroom. ஒரு தொலைகாட்சியில் நியூஸ் வழங்கும் ஒரு டீமில் நடக்கும் நிகழ்ச்சிகள், எப்படிப்பட்ட நேரத்திலும் நேர்மையாக செய்திகளை வழங்க வேண்டும் என்று துடிக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்.. முடிந்தவரை எல்லோரையும் திருத்த முயற்ச்சிக்கும் செய்தியின் நேர்முக பேட்டியாளர்.. உண்மையாக உழைக்கும் துடிப்பான இளைஞர்கள்..அவர்கள் நேர்மையாக இருப்பதால் அவர்களுக்கு வரும் இடையூறுகள், யார் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று அவர்களை காப்பாற்றும் அந்த நெட்வொர்க்கின் தலைவர் என்று பிரமாதமான கேரக்டர்கள்.. அந்த தொடரில் அலசப்படும் நியூஸ் எல்லாம் அந்தந்த நேரத்தில் நடந்த நிகழ்சிகள் என்று.. அருமையாக எடுக்கப்பட்ட தொடர்..

அந்த தொடரின் முதல் நிகழ்ச்சியின் முதல் சில நிமிட கிளிப்.. அதில் இந்த தொடரின் ஹீரோ அமெரிக்கா இன்று ஏன் சிறந்த நாடு இல்லை என்று விளக்கும் ஒரு சுவாரஸ்யமான ஸீன் ..


இது போன்ற ஆக்க பூர்வமான தொடர்கள் நம் ஊரில் ஏன் வருவதில்லை?


Wednesday, November 6, 2013

உணவு எண்ணெய்!


அண்மையில் இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது. சீனாவில் கிட்டதட்ட 10% எண்ணெய் இப்படிப்பட்டது தான் என இது சொன்ன தகவல் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம். இதை பார்த்தால் வெளியே சாப்பிடுவதை கண்டிப்பாக குறைக்கத் தோன்றும்!

ஒருவரை ஒருவர் ஏய்த்து பிழைப்பது எந்த அளவிற்கு போனால் இப்படியெல்லாம் கலப்படம் பண்ணத் தூண்டும்?


Tuesday, November 5, 2013

நான் ரசித்த பாடல்..


எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கும்போது அதிக சத்தமாக வைக்காமல் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். மௌனத்தை கிழித்துக்கொண்டு வெளிவரும் குரல்..என்பதை தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை..

இந்த பாடல் உணர்த்தும் கருத்தும் அருமை. போருக்கு சென்ற தந்தையின் மரண செய்தியை கேட்டு உறைந்து நிற்கும் மகன்.. அதன் பிறகு அவன் வாழ்க்கை.. தாயின் சோகம்.. எல்லாமே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!


Sunday, October 27, 2013

பார்கின்சன்ஸ் - ஒரு புதிய கண்டுபிடிப்பு!


பார்கின்சன் சின்ட்ரோம்!

இதை கேட்டவுடன் மனக்கண்ணில் தெரிவது பாதித்தவரின் கை நடுக்கம் தான்! நாம் நினைவிலிருத்தி செய்யாத தினசரி செயல்களான சாப்பிடுவது.. குளிப்பது.. உடை உடுத்துவது.. காப்பி குடிப்பது என்று எந்த செயலையுமே பிறர் உதவி இல்லாமல் செய்ய இயலாமை பெரிய கொடுமை!

லிப்ட் லாப் டிசைன்ஸ் ஒரு சமீபத்தில் துவக்கப்பட்ட கம்பெனி. இவர்களின் முதல் ப்ராடக்ட் லிப்ட்வேர் (LIFTWARE)

பார்கின்சன்ஸ் பாதித்தவர்கள்  சாப்பிடுவதை எளிதாக்கி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு. இவர்கள் கண்டுபிடித்துள்ள ஸ்பூன் உபயோகித்து சாப்பிட்டால் 70% வரை கை நடுக்கத்தை அந்த ஸ்பூன் உணராமல் செய்துவிடுகிறது! இதனால் பிறர் உதவியின்றி இவர்களால் சாப்பிட முடியும் என்பது மட்டுமல்ல. பொது இடங்களில் சாப்பிட முடியாமல் தடுமாறுவதையும் குறைக்கும்!

இந்த ஸ்பூனின் விலை $295.00. கொடுக்கும் நிம்மதியோ கணக்கில் அடங்காதது. இந்த கம்பெனியின் சி இ ஒ ஒரு அமேரிக்கா வாழ் இந்தியர். இது நமக்கெல்லாம் ஒரு பெருமை!


இந்த கம்பெனி இணையத்தளம் https://www.liftlabsdesign.com/

Wednesday, September 4, 2013

அமெரிக்கா ... பாலம்..

Youtube -இல் உள்ள மிகப்பெரிய சிக்கல்.. பல வித குப்பைகளுக்கு இடையே உள்ள முத்துக்களை கண்டெடுப்பது தான். அப்படி குவிந்துள்ள பலவித குப்பைகளுக்கு இடையே நான் கண்டெடுத்த முத்து இன்று..

சான்பிரான்சிஸ்கோ நகரை ஒரு பக்கம் சூழ்ந்துள்ள தண்ணீரின் மீது தரை வழி இணைப்பதற்கு இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று மிகப் பிரபலமான Golden Gate பாலம். மற்றொன்று Bay Bridge. இதில் பே ப்ரிட்ஜ் போக்குவரத்து மிக அதிகமான ஒன்று. முக்கிய காரணம், அது இணைக்கும் பல நகரங்கள்.



42000 மணி நேரம்.. கிட்ட தட்ட ஐந்து வருட கால உழைப்பில் உருவான புதிய 
பாலத்தின் நீட்டிப்பு இங்கு நான்கு நிமிட வீடியோவாக.. 

சில குறிப்புகள் 

  • இந்தப் பாலம் இணைப்பது சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஓக்லாண்ட் நகரங்களை 
  • இதில் இருப்பது ஆறு வழிப்பாதை. போக ஆறு. வர ஆறு. எமெர்ஜென்சிக்கு என்று ஒவ்வொரு புறமும் ஒன்று என மொத்தம் பதினான்கு வழிப்பாதை 
  • ஏற்கனவே இருந்த பாலத்திற்கு இணையாக ஒரு தற்காலிக இணைப்பை கட்டி போக்குவரத்திற்கு பெரிய பாதிப்பில்லாமல் கட்டினார்கள் 
  • மொத்த கட்டமைப்பு உருவாக எடுத்துக்கொண்ட ஐந்து வருடங்களில் மொத்தம் 6 நாட்களே பாலத்தை முழுமையாக மூடினார்கள். அதையும் ஒவ்வொரு முறையும் மூன்று நாட்கள் என மூன்று நாட்கள் விடுமுறை வரும் நாட்களில் மட்டுமே மூடினார்கள். மூடுவதற்கு ஒவ்வொரு முறையும் கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு முன்னேயே அறிவித்துவிட்டு செய்தார்கள். 
  • இந்த வீடியோ தயாரிப்பதற்கு இருபது லட்சம் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன..
ஆச்சர்யமாக இல்லை?

Thursday, August 29, 2013

சரியும் ரூபாயின் மதிப்பு!

Image Courtesy : Google Images

எது நடக்கக்கூடாது என்று பயந்தோமோ அது நடந்து கொண்டிருக்கிறது.
ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. போனவாரம் வரை 1 டாலருக்கு 62 இல் இருந்த மதிப்பு இப்போது 1 டாலருக்கு 67 என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

அரசின் போக்கோ நான்கு குருடர்கள் யானையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாகத்தை தடவிப்பார்த்து அதன் உருவத்தை ஒவ்வொருமாதிரி கற்பனை செய்து கொள்வார்களே, அது போல இருக்கிறது.

NDTV -யின் இப்போதைய நிலையை விளக்கும் கலந்துரையாடலை கேட்டேன். காங்கிரஸ் சார்பாக வந்த ஒருவர் "இப்போதைய நிலைக்கு நாம் அயன் ஓர் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதற்க்கு காரணம் கர்நாடகாவில் அந்த அயன் ஓரில் ஏகப்பட்ட ஊழல். கர்நாடகாவில் அப்போதைய ஆட்சி பி.ஜே.பி. அதனால் இந்த சிக்கலுக்கு காரணம் பி.ஜே.பி. தான்!" என்று ஒரு போடு போட்டார். சும்மா சொல்லக்கூடாது. குடுத்த காசுக்கு நல்லாவே கூவுகிறார்!

அதே கலந்துரையாடலில் இன்னொருவர், "பொருளாதார மேதை" என நினைக்கிறேன்.. (ஊரெங்கும் இந்த "பொருளாதார மேதைகளின்" அட்டகாசம் தாங்க முடியவில்லை!). அவர் சொன்னது.."இந்தியா ஆயிரத்தி நூறு வருடமாக பொருளாதார ரீதியாக முன்னேறாத நாடு. (என்ன கணக்கோ!) கடந்த இருபது வருடமாக தான் இந்த வளர்ச்சி. கொஞ்சம் குறைந்திருக்கிறதே ஒழிய இப்போதும் நாம் மிக பலமாகத்தான் இருக்கிறோம்" என்றார்!

Image Courtesy : Google Images

நமது ப.சி யோ, என்னமோ இப்போதுதான் இதெல்லாம் கண்ணுக்கு தெரிவது போல, "ப.சி.யின் பத்து கட்டளைகளை" வெளியிட்டிருக்கிறார். அதில் முதல் கட்டளை, அரசின்  செலவை குறைப்பது. அதே நேரத்தில் சோனியா எல்லோருக்கும் உணவு என்ற ஓட்டு வாங்கும் திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி புதிய செலவை உருவாக்கி இருக்கிறார். இவர்களெல்லாம் ஒருவரை ஒருவர் கலந்து பேசி ஏதாவது செய்கிறார்களா.. இல்லை சோனியா தவிர மற்றவர் எல்லோரும் புடுங்குவது ஆணியே இல்லை என்கிறார்களா ?

   பதிவுலகத்தின் கண்களாலும், தமிழ் பத்திருக்கைகளின் கண்களாலும் தமிழகத்தை பார்த்துக்கொண்டிருப்பதால் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக இருப்பதாக தோன்றுகிறது.

போகும் போக்கை பார்த்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைத்து பொருட்களும் 25% வரை விலை உயரக்கூடும் என நினைக்கிறேன். அதைவிடக்கொடுமை பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காமல் போவது. சில அத்யாவசியம் இல்லாத ஆடம்பரப் பொருட்கள் கிடைக்காவிடில் தலை முழுகிப்போகாது. (பெட்ரோமாக்ஸே வேணுமா?) ஆனால், முக்கியமான பொருட்களான பெட்ரோலிய பொருட்கள் (பெட்ரோல், டீசல், சமையல் காஸ்..), இறக்குமதி செய்யும் சில மருந்துகள், போன்றவற்றின் தட்டுப்பாடு வந்தால் அது பல விதத்தில் எல்லோரின் வாழ்வையும் பாதிக்கும்.

அரசின் செயல்கள் யாவும்.. எத்தை தின்னால் பித்தம் குறையும்.. என்ற மனோபாவத்தில் பலவற்றையும் முயற்ச்சித்து பார்ப்பது போல இருக்கிறது..

இதற்க்கு நடுவில் சிரியாவின் மீது அமேரிக்கா போர் தொடுக்குமோ என்ற பயம்.. (ஏண்டா ..ஏன் .. ஏன்  இந்த கொலைவெறி? ) பிரிட்டன் பார்லிமென்ட் அந்த நாட்டிற்கு போருக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது கொஞ்சம் ஆஸ்வாசம் தருகிறது!

இந்த நிகழ்வுகள் எல்லோரயுமே பாதிக்கும் என்பது மிக விரைவில் அனைவரும் அறிந்து கொள்வார்கள். என்ன.. அப்போது அது மிக கசப்பாக இருக்கும்!

Image Courtesy : Google Images

Wednesday, August 21, 2013

இந்திய பொருளாதாரம் - கவலைக்கிடமான நிலையில்..


Image courtesy : Google Images




இந்திய பொருளாதாரம் மிக அபாயமான நிலையில் உள்ளது. ஒரே மாதத்தில் 7% மதிப்பை ரூபாய் இழந்துள்ளது. இதன் ஆபத்தை இரண்டு உதாரணங்கள் மூலம் உணரலாம்.
கொடுக்க வேண்டிய கடன் டாலரில் திருப்பி கொடுக்க வேண்டியிருப்பதால், ஒரே மாதத்தில் கடன் தொகை 7% அதிகரித்துள்ளது! ஆண்டிற்கு 84% வட்டி!

Image courtesy : Google Images

70% பெட்ரோல் இறக்குமதி ஆவதால், பெட்ரோல் பொருட்கள் விலை மேலும் மேலும் உயரும். நம் நாட்டில் பெரும்பாலான சரக்குகள் (அந்த 'சரக்கு' உட்பட) பெட்ரோல் பொருட்களால் இயங்கும் வாகனங்கள் மூலம் விற்பனை ஆகும் இடங்களுக்கு எடுத்து செல்வதால் எல்லா பொருட்களுமே 7% உயரும்.

இன்னுமொரு நெருக்கடி குறைந்த காலத்தில் திருப்பிக்கொடுக்கவேண்டிய கடன் மிக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஒரே வருடத்தில் இந்தியா திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் - $172 Billion. கிட்டதட்ட  பதினொரு லக்ஷம் கோடி ருபாய் மதிப்பில்! .
Image courtesy : Google Images


திருப்பிக்கொடுக்கவேண்டிய நேரத்தை நீட்டிக்கொள்ளலாம். ஆனால், நாம் இருக்கும் நெருக்கடியான நிலையினால்  வட்டி அதிகமாகும்.

நம் கையிருப்பும் மிக குறைந்துள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி இடையில், இறக்குமதி அதிகமாக இருப்பதால், நம் கையில் உள்ள தொகை ஏழு மாத பற்றாக்குறையை சமாளிக்கும் அளவே உள்ளது.

இது வரை RBI எடுத்த நடவடிக்கை எதுவும் பலனளிக்கவில்லை! 1990-ஆம் ஆண்டு இருந்த நெருக்கடி நிலைக்கு இப்போது வந்திருக்கிறோம்.

அப்போது அதை சமாளிக்க லாப நிலையில் இருந்த பொதுத்துறை நிறுவனகள் ஒன்றொன்றாய் பலி கொடுத்து சமாளிக்க முடிந்தது. இப்போது என்ன செய்யப்போகிறோம்? (BSNL போன்ற பொன் முட்டை இட்ட வாத்துக்களை தனியார் லாபத்திற்காக பலி கொடுத்துவிட்டோம்)

எந்த அளவு இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. எல்லோருக்குமே இதன் மூலம் பாதிப்பு இருக்கும்.

Image courtesy : Google Images

வேலையில்  ஆள் குறைப்பு , வானளாவிய விலை உயர்வு. ஒரே நாளில் பங்கு சந்தைகளில் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் பலர்..

இன்னும் தலைவா ரிலீஸ் ஆகவில்லை என்று கவலைப்படும் பலரை பார்த்தால் தான் கவலையாக இருக்கிறது!