Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - தவறான முன்னுதாரணங்கள்!



விஸ்வரூபம் தடை விலகி படம் வெளிவரும் நேரம். நடந்ததை பார்க்கும்போது பல தவறான முன்னுதாரணங்களை இந்த பட விவகாரம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. 

முதலாவது. படத்தை பார்க்காமல் பல இஸ்லாமிய சமூக சங்கங்கள் இணைந்து இந்த அளவு பெரிதாக எதிர்ப்பை தெரிவித்து படத்தை எங்களுக்கு போட்டு காட்டிவிட்டுத்தான் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதே போல பற்பல சங்கங்கள் வெளிவரும் படங்களுக்கு தடை விதிக்க போராட்டம் நடத்த முன் வரும்.. 

இரண்டாவது, இந்த போராட்டங்களுக்கு பணிந்து படத்தை முன் கூட்டியே அவர்களுக்கு போட்டுக்காட்டியது. இதுவே போராட்டத்தை வலுப்படுத்திவிட்டது. 

மூன்றாவது, தமிழக அரசு தடை விதித்தது. சென்சார் சான்றிதழ் பெற்றபின்னும் அரசு தடை செய்யலாம் என்பது தயாரிப்பாளர்களின் கழுத்து மேல் தொங்கும் கத்தி!

நான்காவது, நீதிமன்றம் 'பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியது. பொறுப்பை தட்டிக்கழிப்பது போல தோன்றினாலும் அடுத்த நாளே சரி செய்து விட்டார் நீதிபதி.

கொஞ்சநாளுக்கு வரும் படங்களுக்கு எதிரே பல லெட்டர் பேட்  சங்கங்கள் போராடும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது!

Wednesday, December 12, 2012

மேதைக்கு அஞ்சலி!



சிதார் மேதை ரவி ஷங்கர் அவர்களின் மறைவு மிகவும் வருத்தியது. அவர் தன் வாழ்நாளை இசைக்காகவே அற்பணித்திருப்பது அவர் வாழ்க்கை குறிப்பை படித்ததில் தெரிந்தது.  சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் எப்போது படித்தாலும் பிரமிப்பை தருகிறது 
  • உலகப்புகழ் பெற்ற உதய் ஷங்கர் இவர் அண்ணா 
  • இவர் பள்ளியில் படித்தது மொத்தம் நான்கு வருடங்களே 
  • உலகப்புகழ் பெற்ற சரோத் மேதை அலி அக்பர் கான் இவர் மனைவியின் சகோதரர் 
  • சாரே ஜகான்சே அச்சா பாடல் இவர் அமைத்த மேட்டிலே தான் இன்னும் பாடப்படுகிறது 
  • காந்தி படத்திற்கு இசை அமைப்பாளர் இவரே. அதற்க்கு ஆஸ்கர் நாமினேஷன் பெற்றார் 
  • இசைக்கு வழங்கப்படும் கிராமி அவார்டை இவர் மூன்று முறை பெற்றிருக்கிறார் 
  • நம் நாட்டின் உயர்ந்த விருதான பாரத் ரத்னா பெற்றதோடு, பிரான்ஸின்  உயர்ந்த விருதையும் பிரிட்டனின் சர் பட்டமும் பெற்றவர் இவர் 
  • மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் 
  • முப்பத்தொன்று புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். 
  • கர்நாடக இசையின் நுணுக்கங்களை இந்துஸ்தானி இசையில்  பயன் படுத்தியிருக்கிறார் 
  • இவர் மகள்கள் இருவரும் பலமுறை கிராமி வென்றிருக்கிறார்கள் 
  • உலகப்புகழ் பெற்ற இசை மேதை யெஹுதி மேனுஹினுடன் சேர்ந்து வாசித்த ஈஸ்ட் மீட்ஸ் வேஸ்ட் மிகவும் புகழ் பெற்ற ஒன்று 
நான் நெகிழ்ந்த மற்றொரு விஷயம்.. இவர் கடைசி கச்சேரி இந்த வருடம்  நவம்பர் நான்காம் தேதி நடந்தது. மறக்காதீர்கள். அவருக்கு வயது 92! மேடைக்கு வர சக்கர நாற்காலி தேவையாக இருந்தது அவருக்கு. அது மட்டும் இல்லை. கையோடு எடுத்து செல்லும் வகையில் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசிக்க முடிந்தது. இருந்தும் அரங்கத்தில் இருந்த அனைவரும் பிரமிக்கும் வகையில், அவர் இசைக்கு வயதே தெரியவில்லை என்றும் பலரும் புகழும் வகையில் அவர் இசை அன்று இருந்தது.

இவர் புவியில் இருந்தபோது நானும் வாழ்ந்தேன் என்பது  எனக்கு பெருமை!

Monday, November 12, 2012

ஒபாமாவின் தீபாவளி வாழ்த்து!



ஒபாமாவின் தீபாவளி வாழ்த்தை பார்த்தேன். வெறும், கொஞ்சம் ஸ்ரத்தையோடு தீபாவளியை பற்றி கொஞ்சம் சொல்லி வாழ்த்தும் சொல்லியிருக்கிறார்.



எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday, October 3, 2012

இன்னும்.. இன்னும்.. கீழே..




இதற்கு முன் இன்னும் எவ்வளவு கீழ் தரமாக இறங்கப்போகிறோம் என்று எழுதியிருந்தேன். இன்றைய செய்தியை படித்தால், அதைவிட கீழ்த்தரமாக போக அதிக நாட்கள் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

ராஜாவை பார்லிமென்ட் எனர்ஜி கமிட்டிக்கு மெம்பராகவும் கல்மாடியை பார்லிமென்ட் வெளியுறவு கமிட்டிக்கு மெம்பராகவும் அரசு நியமித்திருக்கிறது. இதில் கல்மாடியை வெளியுறவு கமிட்டிக்கு உறுப்பினறாக்கியதர்க்கு காங்கிரஸின் நகைச்சுவை உணர்வு தான் காரணம் என நினைக்கிறேன். அவர் தானே இந்தியாவின் மானத்தை உலக அளவுக்கு வாங்கியவர்!

குற்றவாளியோ இல்லையோ. அந்த சந்தேகத்தினால் தானே சிறையில் இருந்தார்கள்? மந்திரி பதவியும் போனது? இன்று வரை அந்த வழக்குகள் முடியவில்லை. ஆனால் மறுபடியும் இவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவியை மத்திய அரசு கொடுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? இன்னும் மூன்று வருடம் தேர்தல் இல்லை. எவன் என்ன நினைத்தால் எனக்கென்ன என்ற திமிர் தானே?

இந்த அளவு மக்களை இளிச்சவாயர்களாக நினைக்கும் அரசை இந்தியா பார்த்ததில்லை. அதே போல, மன்மோகன் போன்ற பசு தோல் போர்த்திய புலியை , நரியை, இதுவரை இந்தியா பார்த்ததில்லை!

Saturday, September 22, 2012

நமக்கெல்லாம் சுரணையே இல்லையா?



நான் முன்னொரு காலத்தில் யூனியன் ஆதிக்கமில்லாத ஒரு அரசு நிறுவனத்தில் பணி புரிந்தபோது கேட்டது. ஒருவர் அந்த நிறுவனத்தின் எச் ஆர் தலைவரை, யூனியன் ஆதிக்கமில்லாததை எப்படி சாதித்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு அவர், இளைஞ்சர்கள் வேலைக்கு சேர்ந்த உடனேயே அவர்கள் தலையை தூக்க முடியாத அளவு வேலை கொடுத்து பிசியாக வைத்திருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நாம் என்ன சொன்னாலும் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என்றாராம்.

இன்று இந்தியாவில் நடப்பதை பார்த்தால் அந்த எச் ஆர் தலைவரின் சூழ்ச்சி போல ஒன்று தான் இந்தியாவின் தற்போதய நிலைமைக்கு காரணம் என்று தோன்றுகிறது!

யோசித்துப்பார்த்தால், கார், பர்னிச்சர் செட் போன்ற சிற்சில விஷயங்கள் தவிர என் அப்பாவின் இப்போதைய என் வயது வாழ்க்கைக்கும் இப்போது என் வாழ்க்கைக்கும் பெரிய அளவு வித்யாசம் இல்லை! இருந்தும், அவருக்கு அப்போது நிறைய நேரம் இருந்தது போலவும் இப்போது எனக்கு இல்லாமல் இருப்பது போலவும் இருக்கிறது. இது எனக்கு மட்டும் பொருந்தவில்லை. என் நண்பர்கள் பலரின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. தினப்படி வாழ்க்கையே ஓட்டமாக இருக்கும்போது எப்படி போராடுவது?

நமக்கு எந்த விதத்திலும் உதவாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரமாகவாவது இல்லாமல் இருக்கக்கூடாதா என்று எரிச்சலூட்டும் அரசியல் வாதிகள். மன்மோகனின் பேச்சை கேட்டீர்களா? இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், மானம் எதுவுமே இருக்காதா? நேர்மையான நிர்வாகமே வளர்ச்சி தரும் என்று கொஞ்சமும் கூசாமல் எப்படி இவரால் சொல்ல முடிகிறது? திருப்பி திருப்பி சொல்லவே அலுப்பு தட்டும் அளவுக்கு ஊழல்கள்! 

இவர் ஆட்சியின் சாதனை ஒன்றே ஒன்று தான். ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மறுபடி மறுபடி ஊழல் செய்து, ஆயிரம், லட்சம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று மக்களை நினைக்க வைப்பது தான்!  அதைவிட பெரிய விஷயம், இது வரை எந்த அரசியல் வாதியும் மாட்டவில்லை! குற்றம் நிரூபணம் ஆகும் வரை குற்றவாளி இல்லை. அவ்வளவு சீக்கிரம் குற்றம் நிரூபணம் ஆக விடமாட்டோம் என்று நடந்து கொள்ளும் அரசு! சி பி ஐ என்பது வாசலில் கட்டி வைத்திருக்கும் நாய் தான். யாரை காட்டுகிறோமோ அவரை பார்த்து குறைக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறது அரசு!

இந்த அளவு ஊழல் புகார் வந்தபின்னும், இப்படி மன்மோகனால் சொல்ல முடிகிறது என்றால் அதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும்? இவர்களெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்கள். இவர்கள் தின பிழைப்பே போராட்டமாக இருக்கும்போது இவர்களா எதிர்த்து ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை தானே?

நமக்கெல்லாம் உண்மையிலேயே சுரணை இல்லையா?

Saturday, September 8, 2012

உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு?



உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு? மொத்தமாக பத்து நாள்? இருபது நாள்? முப்பது நாள்? என்ன படிச்சு என்ன பிரயோஜனம்? இதுக்கு மேல நம்மால யோசிக்கக்கூட முடியலை. 

இங்க பாருங்க.. ஒருத்தர் வருஷத்துக்கு இருநூற்று ஐம்பது நாள் சொந்த வேலையா வெளிநாட்டில் தங்கி இருந்திருக்கிறார். மிக அதிகமாக சம்பாதிக்கும் இவர் மந்திரியாகவும் இருக்கிறார்!

யார் அந்த மந்திரி? நம்ப 'கல்வித்தந்தை', 'விழா நடத்தும் நாயகன்' ஜெகத்ரட்சகன் தான்!

இன்றைய தினமலரில்..


Sunday, July 1, 2012

இன்னும் எந்த அளவு கீழ் நோக்கி செல்லப்போகிறோம்?



ஒரு பக்கம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சங்மா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அவர்களிடம் ஆதரவு பெற அவர் வீட்டிற்கு செல்கிறார். மறு பக்கம் அடுத்த ஜனாதிபதி ஆக பெரிய வாய்ப்பு உள்ள பிரணாப் 2G குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ள கனிமொழி வீட்டிலிருந்து ஜனாதிபதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்!  (இதில் சட்டப்படி ஒரு தாரத்திற்கு மேல் மணமுடிப்பது குற்றம் என்றிருக்கும்போது கருணாநிதியின் இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து  பிரச்சாரத்தை தொடங்குவது இன்னுமொரு கொடுமை!  எதிலும் தன் குடும்பத்திற்கு லாபத்தை எதிர்நோக்கி காய் நகர்த்தும் கருணாநிதி இப்போதெல்லாம் டெல்லியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை கனிமொழி வீட்டில்தான் சந்திக்கிறார். முதலில் அந்தோனி.. இப்போது இவர்!)

ஜனாதிபதி பதவி என்பது வெறும் பதவி மட்டும் இல்லாமல் முதல் குடிமகன் என்ற மதிப்பையும் கொடுக்கிறது. அதுவும் இல்லாமல், அவர்கள் மேல் குற்றவழக்கு எதையும் தொடரவும் முடியாமல் ஒரு பாதுகாப்பும் கொடுக்கிறது (என அறிகிறேன்.. தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்). யாரையும் மரண தண்டனையிலிருந்து கூட மன்னிக்க உரிமை உள்ள பதவி!

இப்படி இருக்கும்போது இந்த பதவிக்கு வருபவர்மேல் யாருடைய நிழலும் விழாமல் இருப்பது முக்கியம் இல்லையா? குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்களின் நிழல் இவர்கள் மீது விழுந்தால் எந்த வழக்கிலும் அவர்கள் சார்பாக இருக்க நேரிடும் அல்லவா. 

நம் ஊரில் தான் conflict of interest என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே!