இந்த பதிவு தொகுப்பில் அமெரிக்காவில் நான் கண்டு வியக்கும், நம் ஊரில் இல்லையே என்று பொறாமைப்படும் விஷயங்கள் குறித்து எழுத இருக்கிறேன்
இதில், இன்று எடுத்துக்கொள்வது ப்ரீவே (freeway)
அமெரிக்க புகைப்படங்களையும் சினிமாவில் காட்டுவதையும் பார்த்தால், அதன் உள் கட்டமைப்பு என்றவுடன் நமக்கு உடனடியாக தோன்றுவது, அதன் வானுயர் கட்டிடங்கள் தான்! உங்களுக்கும் அப்படித்தான் என்றால் அதை மனதில் இருந்து அழித்து விடுங்கள்.
அமெரிக்காவின் உள்கட்டமைப்புக்கு முதுகெலும்பு எனக்கருதப்படுவது அதன் ப்ரீவே எனப்படும் சாலைகள் தான்! ப்ரீவே எனப்படும் சாலைகளின் விசேஷம், பொதுவாக அதில், சிக்னல் கிடையாது, குறுக்கு போக்குவரத்து கிடையாது, சாலையை எல்லா இடத்திலும் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் கிடையாது. சுருக்கமாக எதற்காகவும் வாகனங்கள் நிற்க தேவை இருக்காது, (டிராபிக் ஜாம் தவிர).
இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.
சாலையை எல்லா இடத்திலும் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் கிடையாது.
இந்த பிரீவேக்கள் நகரங்களுக்குள் செல்லும் இடங்களில் எல்லாம், இந்த சாலைகளின் இரு பக்கங்களிலும் சுவர் எழுப்பியுள்ளார்கள். இந்த படத்தில் உள்ளது போல.
இது போல உள்ளதால், சாலையை யாராவது எப்போது வேண்டுமானாலும் கடக்கலாம் என்ற பயமில்லாமல் வாகனம் ஓட்ட முடியும். சுவருக்கு பதில் சில இடங்களில் வேலி உள்ளது. ஆனால், அடிப்படையில், நோக்கம் ஒன்றே.
சரி, சாலையை கடக்க வேண்டும் என்றால் எப்படி?
சாலையை கடக்க வேண்டிய அளவு குறுக்கு பாலங்கள் அமைத்துள்ளார்கள். சில பாலங்கள் பாதசாரிகள் மட்டுமே உபயோகிக்க. கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு பிரீவேயை கடக்க குறுகிய தூரத்தில் எவ்வளவு பாலங்கள்!
சரி, வாகனம் ஓட்டுபவர் அவர் சேர வேண்டிய இடம் வந்தவுடன் நிறுத்துவாரே?
இந்த பிரீவேக்களில் நுழைவதற்கும் வெளியே வருவதற்கும் பிரீவேயின் இணையாகவே அமைக்கப்பட்ட எக்சிட் ராம்ப் என்ற சிறிய சாலைகளை உபயோகிக்க வேண்டும். இந்த சிறிய சாலைகள் கிட்டதட்ட அரை மைல் நீளம் இருப்பதால், அந்த தூரத்திற்குள் பிரீவேயில் நுழைய வேண்டுமானால் வேகத்தை அதிகரித்துக்கொள்ளவோ, பிரீவேயில் இருந்து வெளியேற வேண்டுமானால் வேகத்தை குறைத்துக்கொள்ளவோ முடியும்.
அப்படி ஒரு, எக்சிட் ராம்ப் இங்கே..
1944 இல் President Franklin D Roosevelt கொண்டுவந்த "National System of Interstate Highways" சட்டமும், 1956 இல் President Dwight D Eisenhower கொண்டுவந்த Federal Aid Highway act சட்டமும் தான் அமெரிக்காவில் இன்று உள்ள நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்தது!
மற்றும் google images
அமெரிக்காவில் நான் வியக்கும் மிகப்பெரிய உள் கட்டமைப்பு இது தான்!