பழைய பாகங்களை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சில வருடங்களுக்கு முன் தொடங்கினேன். 3-ம் பதிவை எழுத மறந்துவிட்டேன். இதோ இப்போது.
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2
கார் கிடைத்தவுடன் நேரே ரிஸார்டுக்கு சென்றோம். உச்சி வெய்யில் என்றதால் காரில் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. ஊர் அப்போது கூட பனி போர்வை பார்த்துக்கொண்டு அழகாக இருந்தது. சரி ஏசி எதற்கு என்று கண்ணாடியை இறக்கினால், வெய்யில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. இந்த வெய்யிலில் பனிப்போர்வையா? குளிரவும் இல்லையே என்று ஒன்றுமே புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது அது பனி இல்லை. வெறும் புகை என்று!
ரேடியோவை போட்டால் ஊருக்கு சில மைல் தூரத்தில் காட்டுத்தீ என்பதால் ஊரெல்லாம் புகை என்று தெரிந்தது! கொடுமை!
மனைவிக்கு அந்த புகையில் ஒரே தலைவலி! அங்கிருந்த மீதி நாட்களும் இந்த கொடுமை தொடர்ந்தது.
ஒரு வழியாக ரிசார்ட் சென்றடைந்தோம். மிக அழகாக இருந்தது. ரூம் வசதியாக இருந்தது. அங்கும் புகை மூடி காட்டுத்தீ வாசனை காற்றில். கொண்டு வந்த உணவை உண்டு அங்குமிங்கும் திரிந்து பொழுது போக்கினோம். இரவு ரிஸார்ட் உணவகத்துக்கு சென்றோம். சாப்பிடும்போது தெரிந்தது தான் சமையல்காரருக்கு சமைக்கத் தெரியாது என்று!
நொந்து கொண்டே சென்று படுத்தோம்.
அடுத்தநாள் காலை அங்கிருந்து 30 மைல் தொலைவில் உள்ள கிரேட்டர் ஏரிக்கு செல்லும் பிளான். ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து 7700 வருடத்துக்கு முன் வெடித்து வெளிப்பக்கம் மலையாகவும் நடுவில் பெரிய ஆழமான குழியாக ஆகி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி இருக்கும் பனி உருகி ஏரியாக நிரம்பி இருக்கிறது. அதிகம் இல்லை ஜென்டில்மென். 10-12 கிலோமீட்டர் சுற்றளவு. 1.2 கிலோமீட்டர் ஆழம். அத்தனையும் 99.99% சுத்தமான தண்ணீர். இது தான் இந்த ஊரின் மிகப்பெரிய அட்ராக்ஷன்!
வருவதற்கு முன் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தண்ணீரின் கரை சாலையிலிருந்து வெகு கீழே (200-300 அடி). இறங்கி தண்ணீரை தொடக்கூட முடியாது.
சரி வந்தாயிற்று. போய் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டோம். வெளியே வருவதற்கு முன், இந்த ஊரில் இதுவரை கிடைத்த சனிப் பார்வை பலன்களை எண்ணி இதற்கு அந்த ஏரி அருகில் இருந்த ஆன்லைன் கேமராவில் ஏரியை பார்த்துவிட்டு போகலாம் என்று ஒரு யோசனை.
ரிஸார்ட்டின் கம்ப்யூட்டரில் போய் பார்த்தோம். நல்லவேளை. மாங்கு மாங்கு என்று போயிருந்தால் மறுபடியும் நொந்திருப்போம்! அங்கும் ஒரே புகை என்பதால் சாலையிலிருந்து தண்ணீரே தெரியவில்லை! போயிருந்தால் அங்கும் புகையைத்தான் பார்த்திருப்போம்!
அந்த ரிஸார்ட்டில் விளையாட வைத்திருந்த ஸ்னூக்கர் டேபிளில் விளையாட ஒரு கேமுக்கு 50 சென்ட், அங்குள்ள ஸ்விம்மிங் பூலில் குளிக்க 50 சென்ட் என்று அவர்கள் அல்பமாக பிடுங்கியதெல்லாம் கொடுமை.
அழுது கொண்டே ஊர் திரும்பினோம்!
ஆனால் அந்த ட்ரிப்பை நினைத்து நினைத்து சிரிக்காத நாளில்லை!