எளியவை
Thursday, December 1, 2022
சர்தார்!
கொஞ்சம் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். (தண்ணீர் பற்றாக்குறை வருடாவருடம் வருகிறது. அதனால் அது சிறந்தது! ) அதனுடன் அது சம்பந்தமான டீடெயில்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். தமிழ் தெரியாத கதாநாயகியை சேர்த்துக்கொள்ளுங்கள். (பாட்டில் வந்தால் போதும்). நிறைய சண்டை காட்சிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். raw , intelligence , cbi , national security advisor போன்ற வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். பெரிய பெரிய பாக்டரிகளில் சண்டை காட்சிகளை வைத்துக்கொள்ளுங்கள்! விக்ரமின் சிறை சண்டை பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியது. அதனால், சிறையில் ஒரு சண்டை காட்சியை சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் சித்தப்பா செண்டிமெண்ட், குழந்தை செண்டிமெண்ட் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கலக்கி லாஜிக் போக நன்கு வடிகட்டுங்கள்! சர்தார் திரைப்படம் தயார்!
உளவாளி. அவருக்கு தெரியாததே இல்லை! தனி ஆளாக பாகிஸ்தான் ஆர்மி கேம்பில் நுழைந்தது மூன்று விதமான மேக்கப்பை போட்டுக்கொண்டு, அங்கிருக்கும் ராணுவ ரகசியங்களை டீகோட் செய்து இந்தியா அனுப்பி, பலரை காப்பாற்றி, தென் இந்தியா கிராமத்தில் அவர் உளவாளி என்று குடும்பத்தினருக்கும் தெரியாமல் வாழும் நாடக கலைஞன் - ஹீரோ.
32 வருடங்கள் ஆனாலும் இன்று இருக்கும் புள்ளிவிவரங்களெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறார்! சண்டையில் நூறு பேரை அசாதாரணமாக வீழ்த்துகிறார்!
கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வது போல் பொய் சொல்லலாம். அதுக்குன்னு ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது!
கார்த்தி ஒரு படத்தில் பற்பல மாறுவேஷம் போடவேண்டும் என்ற ஆசை நிறைவேறியிருக்கிறது! அவ்வளவுதான்!
இந்தப் படம் பார்ப்பதற்கு பதில் வேறு ஏதாவது உருப்படியான வேலையை பார்க்கலாம்!
Friday, November 4, 2022
காந்தாரா !
படத்தை பார்த்ததில் இருந்து மந்திரித்து விட்டது போல இருக்கிறது! ஒரு படம் இப்படி பயித்தியமாக அடிக்க முடியுமா என்று வெகுவாக குழம்பினேன்... இரண்டாம் முறை பார்த்தவுடன் தெரிந்தது இது படம் இல்லை. அனுபவம். மருந்தை தேனில் குழைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் மருந்தும் இனிப்பாக இருக்கிறது!
கலைகளை முன்னிறுத்தி பல படங்கள் வந்திருக்கின்றன. இந்த படத்தில் பூத கோலா என்று மங்களூர் அருகில் நடக்கும் கலையை முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு மிகப்பெரிய வித்யாசம். கிட்டதட்ட கலையை முன்னிறுத்தும் எல்லா படங்களிலும் பார்ப்பது அதை செய்யும் மனிதர் பற்றியே. கலையில் அந்த மனிதரின் பாண்டித்யம், அதற்கு அவர் கொடுக்கும் விலை, கடைசியில் அவர் பெறும் அங்கீகாரம், அதற்கிடையே காதல், இதைதான்! இந்த படத்தில்தான் எதற்காக அந்த கலை என்பதை முன்னிறுத்தியிருக்கிறார்கள். இந்த கலை வழிபாட்டு முறையுடன் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்று காட்டுகிறது இந்தப் படம்.
அதேமாதிரி நாம் வழிவழியாக பார்த்து வந்த 'சாமி வருதல்' என்பதில் பலருக்கும் துறுத்தி நிற்கும் கேள்வி.. சொல்வது சாமியாடியா.. சாமியா.. என்பது. இந்த படத்தைவிட இதற்கு அழகான விளக்கம் கொடுத்த எதையும் நான் இது வரை பார்த்ததில்லை!
படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் காட்சிகளில் நான் நம்பும் குலதெய்வத்தை நான் உணர்ந்தேன். படத்தை பார்த்த பலரும் அதை உணர்வதால்தான் மறுபடி மறுபடி பார்க்க வருகிறார்கள் என நினைக்கிறேன்! இது போன்ற ஒரு அனுபவத்தை வாழ்க்கையில் அடைந்ததில்லை!
ஆத்மார்த்தமாக நடித்த ரிஷப் ஷெட்டி , கிஷோர், அச்யுத் குமார், சப்தமி கவுடா, மானசி சுதீர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். முக்கியமாக எழுதி, நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு!
Friday, November 12, 2021
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 3
பழைய பாகங்களை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சில வருடங்களுக்கு முன் தொடங்கினேன். 3-ம் பதிவை எழுத மறந்துவிட்டேன். இதோ இப்போது.
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1
அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2
கார் கிடைத்தவுடன் நேரே ரிஸார்டுக்கு சென்றோம். உச்சி வெய்யில் என்றதால் காரில் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. ஊர் அப்போது கூட பனி போர்வை பார்த்துக்கொண்டு அழகாக இருந்தது. சரி ஏசி எதற்கு என்று கண்ணாடியை இறக்கினால், வெய்யில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. இந்த வெய்யிலில் பனிப்போர்வையா? குளிரவும் இல்லையே என்று ஒன்றுமே புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது அது பனி இல்லை. வெறும் புகை என்று!
ரேடியோவை போட்டால் ஊருக்கு சில மைல் தூரத்தில் காட்டுத்தீ என்பதால் ஊரெல்லாம் புகை என்று தெரிந்தது! கொடுமை!
மனைவிக்கு அந்த புகையில் ஒரே தலைவலி! அங்கிருந்த மீதி நாட்களும் இந்த கொடுமை தொடர்ந்தது.
ஒரு வழியாக ரிசார்ட் சென்றடைந்தோம். மிக அழகாக இருந்தது. ரூம் வசதியாக இருந்தது. அங்கும் புகை மூடி காட்டுத்தீ வாசனை காற்றில். கொண்டு வந்த உணவை உண்டு அங்குமிங்கும் திரிந்து பொழுது போக்கினோம். இரவு ரிஸார்ட் உணவகத்துக்கு சென்றோம். சாப்பிடும்போது தெரிந்தது தான் சமையல்காரருக்கு சமைக்கத் தெரியாது என்று!
நொந்து கொண்டே சென்று படுத்தோம்.
அடுத்தநாள் காலை அங்கிருந்து 30 மைல் தொலைவில் உள்ள கிரேட்டர் ஏரிக்கு செல்லும் பிளான். ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து 7700 வருடத்துக்கு முன் வெடித்து வெளிப்பக்கம் மலையாகவும் நடுவில் பெரிய ஆழமான குழியாக ஆகி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி இருக்கும் பனி உருகி ஏரியாக நிரம்பி இருக்கிறது. அதிகம் இல்லை ஜென்டில்மென். 10-12 கிலோமீட்டர் சுற்றளவு. 1.2 கிலோமீட்டர் ஆழம். அத்தனையும் 99.99% சுத்தமான தண்ணீர். இது தான் இந்த ஊரின் மிகப்பெரிய அட்ராக்ஷன்!
வருவதற்கு முன் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தண்ணீரின் கரை சாலையிலிருந்து வெகு கீழே (200-300 அடி). இறங்கி தண்ணீரை தொடக்கூட முடியாது.
சரி வந்தாயிற்று. போய் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டோம். வெளியே வருவதற்கு முன், இந்த ஊரில் இதுவரை கிடைத்த சனிப் பார்வை பலன்களை எண்ணி இதற்கு அந்த ஏரி அருகில் இருந்த ஆன்லைன் கேமராவில் ஏரியை பார்த்துவிட்டு போகலாம் என்று ஒரு யோசனை.
ரிஸார்ட்டின் கம்ப்யூட்டரில் போய் பார்த்தோம். நல்லவேளை. மாங்கு மாங்கு என்று போயிருந்தால் மறுபடியும் நொந்திருப்போம்! அங்கும் ஒரே புகை என்பதால் சாலையிலிருந்து தண்ணீரே தெரியவில்லை! போயிருந்தால் அங்கும் புகையைத்தான் பார்த்திருப்போம்!
அந்த ரிஸார்ட்டில் விளையாட வைத்திருந்த ஸ்னூக்கர் டேபிளில் விளையாட ஒரு கேமுக்கு 50 சென்ட், அங்குள்ள ஸ்விம்மிங் பூலில் குளிக்க 50 சென்ட் என்று அவர்கள் அல்பமாக பிடுங்கியதெல்லாம் கொடுமை.
அழுது கொண்டே ஊர் திரும்பினோம்!
ஆனால் அந்த ட்ரிப்பை நினைத்து நினைத்து சிரிக்காத நாளில்லை!
Wednesday, November 10, 2021
கோடியில் ஒருவன்!
தெளிவான கதை. இறுக்கமாக பின்னப்பட்ட திரைக்கதை. வேகமாக நகரும் திரைக்கதை. மிகப்பெரிய ஹீரோயிசம் இல்லை. நம்ப முடியாத சண்டைகள் அதிகம் இல்லை.
நேரம் போனதே தெரியவில்லை. படம் முடியும்போது கூட, அதற்குள் முடிந்து விட்டதே என்று இருந்தது. ஆனால் திருப்தியான முடிவாக இருந்தது.
இத்தனைக்கும் விஜய் ஆண்டனிக்கு வழக்கமான பிரச்சனை தான். நடிப்பு வரவில்லை. திறமைசாலிகளை கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர் நடிப்பை வளர்த்துக்கொள்ளவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது!
டைரக்டர் மிக திறமைசாலி. வாழ்த்துக்கள்
Sunday, November 7, 2021
Doctor - டாக்டர் படம்
டாக்டர் படம் netflix -இல் வெளிவந்திருக்கிறது. பொதுவாக நல்ல விமர்சனங்கள் இருப்பதாலும் பெரிய அளவு ஹிட் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்தேன்.
பெரிய ஏமாற்றம்!
குழந்தை கடத்தல் என்பது வெகு சீரியஸான விஷயம். அதை டார்க் காமெடி என்ற பெயரில் கொடுமை படுத்தி இருந்தார்கள். படத்தின் இசை சுத்தமாக ஒட்டவில்லை.
படத்தில் இம்மி அளவும் லாஜிக் இல்லை.
**spoiler alert**
கோவாவில் பெரிய வில்லன். அரசில் எல்லோரையும் தெரியும் என்கிறார். சிவ கார்த்திகேயன் ஒரு ஐஸ் க்ரீம் கடை நடத்துபவர் என்பதையும் குழந்தை கடத்தலையும் செய்பவர் என்பதை எளிதாய் நம்பும் ஏமாளியாக இருக்கிறார்!
படத்தின் க்ளைமாக்ஸ் 1970 வந்த மோசமான படங்களை நினைவு படுத்தியது
எல்லா படத்திலும் நிறைய பேசி நடிப்பதால் இதில் சிவகார்த்திகேயன் அண்டர் பிளே பண்ண முயற்சிக்கிறார். அதனால் லைஃபே இல்லாமல் ஒரு நடிப்பு
எல்லா விதத்திலும் இந்த படம் ஒரு குப்பை!
இந்த படம் எப்படி ஓடியது என்பது பெரிய ஆச்சர்யம்!
பணம் போட்டு லாபம் பார்த்த சிவகார்த்திகேயன் பெரிய அதிர்ஷ்டசாலி!
Tuesday, September 29, 2020
பங்கு சந்தை முதலீடா சூதாட்டமா?
உங்கள் கையில் நிறைய பணம் இருக்கிறது. அதை முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
ஏதாவது ஒரு டீக்கடை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் வேலையில் இருப்பதால், ஏற்கனவே இருக்கும் டீக்கடை ஒன்றில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறீர்கள். வீட்டருகே புதிதாக வந்த ஒரு கடை உங்களுக்கு ஞாபகம் வருகிறது. பிரமாதமான அலங்காரத்துடன் இருக்கும் அந்த கடை வந்த சில நாட்களிலேயே எப்போதும் கூட்டமாக இருப்பதும் உங்களுக்கு தெரியும். லேட் பண்ண வேண்டாம் என்று அந்த உரிமையாளருடன் பேசி ஐந்து லக்ஷம் பணம் போடுகிறீர்கள். நேற்றுவரை டீக்கடை வாடிக்கையாளராக இருந்த நீங்கள் இன்று டீக்கடை பங்கு தாரர் என்று பெருமையாக இருக்கிறது!
நீங்கள் செய்தது முதலீடா? சூதாட்டமா?
சூதாட்டம். டீக்கடை எவ்வளவு லாபத்தில் இயங்குகிறது? எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? மாதம் எவ்வளவு செலவு? மாதா மாதம் வருமானம் அதிகரிக்கிறதா ..
இதெல்லாம் தெரியாமல் பணம் போட்டால் சூதாட்டம். தெரிந்து முடிவெடுத்து பணம் போட்டால் முதலீடு!
இதே தான் பங்கு சந்தையிலும்!
Thursday, January 3, 2019
சபரிமலை!
இந்த பதிவு சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா கூடாதா என்பது பற்றி அல்ல.
எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை பதிவு செய்கிறேன்
- கேரளாவின் மொத்த மக்கள் தொகை 2011 ஆண்டில் மூன்றறை கோடி. (இப்போது நான்கு கோடி இருக்கும் என நினைக்கிறேன். பாதி பெண்கள் இருக்கும். ஒரு 2 கோடி? இதில் ஒரு 50 லட்சம் 15 வயதுக்கு கீழுள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும். மீதி ஒன்றரை கோடி )
- கேரளாவின் சாலைகளின் மொத்த நீளம் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர்கள்.
- வனிதா மதில் பேரணியில் 50 லட்சம் மக்கள் 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தார்கள் - பினராயி அரசு (அதாவது மூன்றில் ஒரு பங்கு கேரள பெண்கள் சரியாக அரைமணி நேரத்துக்கு வரிசையில் வெறும் 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்றிருந்தார்கள்!)
- கேரள அரசு ஆளுங்கட்சி CPI (M). இந்திய அளவில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படும் ஒன்று. ஆனால் காங்கிரஸ் கேரளாவில் சபரிமலை மீதான அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது
- பிஜேபி இந்திய அளவில் ஆளும் கட்சி. மாநில அளவில் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது
- பிஜேபி தென் இந்தியாவில் வலுவாக கால் ஊன்ற இதை ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கிறது
- காங்கிரசை பொறுத்தவரை காற்று எந்தப்பக்கம் அடிக்கும் என்று தெரியாமல் பின்னர் அதற்க்கேற்றமாதிரி நிலை எடுக்கலாம் என்று காத்திருக்கிறது
- CPI (M ) ஐ பொறுத்தவரை - பெண்கள் மீதான அதீத பாசம் - உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை எப்பாடு பட்டாவது அமுல் படுத்தும் நீதிக்கு தலை வணங்கும் நேர்மை - என்றெல்லாம் யாருமே நம்பமாட்டார்கள். இவர்கள் தான் மார்தோமா சர்ச், முல்லை பெரியாறு விஷயங்களில் கோர்ட் பேச்சைக் கேட்பதில்லை பாதிரியார் ஒருவர் மீதான கன்னியாஸ்திரீகளின் குற்றசாட்டை கேட்கவும் தயாராக இல்லாத பெண் உரிமை பாதுகாவலர்கள்!
- CPI (M ) நோக்கம் புரியவில்லை. பிற மதங்களுக்கு சார்பாகவா.. இல்லை பிஜேபி காலூன்ற கள்ளத் தனமாக பினரயி கை கோர்த்திருக்கிறாரா.. மக்கள் நலனுக்காக எந்த அரசியல் கட்சியும் இல்லை என்பதில் சந்தேகமே இல்லை.
- எல்லோருமே இது வெறும் கேரளா விவகாரமாக இருக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்னமோ நடக்குது. ஒண்ணுமே புரியலை..
ஸ்வாமியே சரணம் ஐயப்பா !