Saturday, September 16, 2017

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2

(முதல் பாகம் படித்துவிட்டீர்களா? கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். இல்லையேல் தலைகால் புரியாது!)
இப்போது என்ன செய்வது என்று முழித்தோம்! இன்னொரு குடும்பம் என்பது ஒரு இளைஞர் / இளைஞி . "நாங்கள் இங்கிருந்து வாடகை கார் எடுத்துக்கொண்டு யூஜின் (180 மைல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம்)  செல்ல வேண்டும். நாம் வந்த ரயிலிலேயே போகலாம். ஆனால் ட்ரைவ் செய்யும் பாதை அழகாக இருக்கும் என்பதால் இந்த பிளான்! " என்றார்கள் (சொந்த செலவில் சூனியம் என்று தோன்றியது. பேசாமல் ரயிலிலேயே போயிருக்கலாம்!)

சரி. நாம் இருக்கப் போவது ரிஸார்ட் -ஆச்சே. அவர்களையே கூப்பிட்டு ஒரு வண்டியை அனுப்பச் சொல்லலாம் என்று அவர்களையே கூப்பிட்டோம்!

நாங்கள் இருந்த ரிஸார்ட்!

போனை எடுத்த பெண், 'எங்கள் ரிஸார்ட் பதினைந்து நிமிட ட்ரைவில் உள்ளது. எங்களிடம் ஷட்டில் சர்விஸ் இல்லை. வந்தால் இருக்க எல்லா வசதியும் இங்கு இருக்கிறது' என்றார். வந்தவுடன் சவுகரியம் எல்லாம் சரி. வருவது எப்படி என்றால் மறுபடியும் அதே வசனம். 'எங்கள் ரிஸார்ட் பதினைந்து..' மனிதருடன் பேசுகிறோமா. இல்லை மெஷினுடனா என்று சந்தேகம் வந்தது. கொஞ்சம் யோசித்தால் அவரும் தான் என்ன செய்ய முடியும்?

சரி. அந்த வழியும் இல்லை. என்ன செய்யலாம் என்று இளைஞ்ஞரை பார்த்தேன். அவருக்கும் தர்ம சங்கடமான நிலைமை!

கார் கம்பெனிக்காரரை பார்த்தோம். வேறு ஏதாவது ரெண்டல் கார் கம்பெனி நம்பர் கொடுங்கள். அங்கிருந்து கார் எடுத்துக் கொள்கிறோம் என்றோம். அவர், இந்த ஊரில் பகல் 12 மணிக்கு மேல் எந்த ரெண்டல் கார் கம்பெனியும் திறந்திருக்காது. நாளை தான் இனிமேல்! என்றார். திகைத்து விட்டேன். இப்படி ஒரு ஊரா!

இதற்கு நடுவில் என் பெண் போனில் யாருடனோ வண்டி  பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். இவளுக்கு இந்த ஊரில் யாரைத் தெரியும் என்று யோசித்தேன். போனை வைத்துவிட்டு என்னிடம், 'வீடு விட்டு வீடு மாறுபவர்களுக்கு U-Haul இருக்கில்லயா. அதாம்பா, வேன் வாடகைக்கு எடுத்து போவோமே. அங்க வேன் எடுத்துக்க முடியுமே. அதில் இருவர் தான் போகமுடியும். அவங்க அந்த வேன் எடுத்துக்கலாம். திருப்பி இங்க வந்து ரிட்டர்ன் பண்ணத்  தேவையில்லை. யூஜினிலேயே ரிட்டர்ன் பண்ணலாம்! வண்டி கூட இருக்காம். அதான் கேட்டுட்டு இருந்தேன்' என்றாள். நான் உடனே அவரிடம், 'இது நல்ல ஐடியாவா இருக்கே. நீங்க ஏன் அப்படிப் பண்ணக்கூடாது?' எனக் கேட்டேன்.

அதற்க்கு அவர்கள் இருவரும், 'ஐயையோ! U-Haul வண்டியா. வேண்டவே வேண்டாம்' என்றுவிட்டார்கள்! அவர்களுக்கு என்ன அனுபவமோ! U-Haul வண்டி வசதியாக எல்லாம் இருக்காது. வெறும் $20 வாடகை என்று விளம்பரப் படுத்தும்போது அதில் என்ன வசதியை எதிர்பார்க்க முடியும்?

சரி. இதுவும் வேலைக்காகாது. 'ஒரு வழி இருக்கிறது. நம்ம குடும்பத்தை அந்த ரிஸார்ட்டில் விட்டு விட்டு அவர்களை கார் எடுத்துக்கொண்டு போக சொல்லலாமா? நாம ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கொள்ளலாமே'  என்றேன் மனைவியிடம். அவள் அனல் பார்வையைப் பார்த்து அந்த யோசனை அப்படியே அமுங்கிவிட்டது!

அவர்கள் இதற்கு நடுவில் யார் யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ தெரிந்தவர் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். காதில் இருந்து போனை உரித்தெடுத்து, 'அடுத்த ஊர் medford. அங்கு வாடகை கார் இருக்கிறதாம். ரிஸர்வ் பண்ணிவிட்டேன் (இன்னுமாடா இந்த ரிஸர்வேஷனை நம்பறீங்கன்னு நினைச்சுக்கிட்டேன்!) நீங்கள் இந்த காரை எடுத்துக் கொள்ளுங்கள். எங்களை அங்கு ட்ராப் செய்துவிடுங்கள்' என்று சொன்னார்!

நல்ல யோசனையாக இருக்கிறது. கண்டிப்பாக பண்ணிடுவோம் என்று அந்த ஊர் எவ்வளவு தூரம் என்று பார்த்தேன் . 80 மைல்! அடக்கொடுமையே! சரி வேறு வழியே இல்லை என்றாகி விட்ட பிறகு பண்ணிவிட்டு வேண்டியது தான்! போய்வர ஒரு 3 மணி நேரம் விரயம் என்று யோசித்த படியே ஒத்துக்கொண்டேன்!

யாருக்கும் திருப்தியில்லாத ஒரு தீர்வு! என்ன செய்வது!

அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டது. ஏர்போர்ட் தான் காலியாச்சே! ஒரு தவளை வந்தாலும் கேட்டிருக்கும்!

ஒருவர் உள்ளே நுழைந்து நேரே யாரிடமும் பேசாமல் காலியாக இருந்த hertz கார் counter எதிரில் நின்று கொண்டார். சில நிமிடங்களில் hertz அலுவலக சிப்பந்தி அவரைத் தொடர்ந்து வந்தார். 'நல்லவேளை. நான் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தேன். அதனால தான் கூப்பிட்ட உடனே வரமுடிந்தது என்று அவரிடம் சொன்னது கேட்ட்து!' உடனே அவரிடம் ஓடினோம்.

முதலில் இளைஞர் அவரிடம் 'அந்த காரை எங்களுக்கு வாடகைக்கு  கொடுங்கள்' என்றார்.
அவரும், 'எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், செவ்வாய் கிழமை இதை ஒருவர் வந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அதற்குள் கொடுத்தால் சரி' என்றார். இளைஞர் சோகமாக 'நாங்கள் யூஜினால் காரை விடுவதாக இருக்கிறோம்' என்றார்.
'அப்படியானால் தரமுடியாது' - hertz யுவதி!

நான் அவரிடம், 'அப்படியானால் அந்த காரை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் திரும்பிச் செல்லவேண்டிய ட்ரெயின் திங்கள் இரவு கிளம்புகிறது. அதனால் கண்டிப்பாக நாங்கள் காரை திருப்பிக் கொடுத்துவிடுவோம் ' என்றேன்!

சரி. நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் Hertz யுவதி! அந்த இளைஞர்  / இளைஞி பட்ஜெட் கம்பெனி காரை எடுத்துக் கொண்டார்கள்!


ஒரு வழியாக கார் கிடைத்தது! வாழ்க Hertz !

அப்பாடா. கார் கிடைத்துவிட்டது. இனி ஜாலி தான் என நினைத்தேன்.. (விதி) சிரித்தது காதில் விழவில்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

ஸ்ரீராம். said...

வித்தியாசமான சோதனைகளாக இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

கார் கிடைத்தும்
பிரச்சினையா
தொடருங்கள் காத்திருக்கிறேன்

அவனிவன் said...

ரவி.. நன்றாக இருக்கிறது... எழுத்தைச் சொன்னேன்... மெல்லிய நகைச்சுவை இழையோடு, படிக்க மிகவு, சிரமமில்ல்லாமல்....

Thulasidharan V Thillaiakathu said...

முதல் பகுதி பார்த்ததுமே வாசித்த நினைவு வந்தது...கருத்துப் போட்ட நினைவு கீழே அதற்கு அத்தாட்சியும்!!!!!! ஆனால் இரண்டாவது பார்க்கவில்லை என்பது வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது. கருத்தும் இல்லை!!ஹிஹிஹி

தவளை கூட கர் கர் என்று சத்தம் போடும்!!!! ஹாஹாஹா

நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கீங்க. நம்ம பாட்டன் வள்ளுவரை ரொம்பவே நல்லா ஃபாலோ செய்யறீங்க!!!

வித்தியாசமான அனுபவம். ஒன்று மட்டும் தெரியும் மேலை நாடுகளில் பயணம் என்பது நாம் பல வகைகளில் ரொம்பவே திட்டமிட்டுச் செல்ல வேண்டும் என்பது. அதாவது சறுக்கல் நேர்ந்தாலும் சமாளிப்பதற்குமான திட்டமும் சேர்த்து. ஆனால் இந்த அனுபவம் உங்களுக்கு நிறைய பாடம் சொல்லியிருக்கும் இல்லையா!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கார் கிடைச்சபிறகும் உள்ள பிரச்சனைய வாசித்துவிட்டேனே!!!!

கீதா