Monday, September 4, 2017

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1


கொஞ்சம் பெரிய தொடர் பதிவு!


(c)கிரேட்டர் ஏரி 

இங்கு லேபர் டே வீகெண்ட் சென்ற வார இறுதியில். எளிதில் கிடைத்திடாத சேர்ந்தாற்போல் மூன்று நாள் விடுமுறை. அலுவலகத்திற்காவது எளிதில் லீவ் எடுத்துவிடலாம். பள்ளிக்கு மாணவர்கள்  லீவ் எடுப்பது பயங்கரக்  கொடுமை. அரசு பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாணவரும் வரும் எண்ணிக்கையை வைத்து பள்ளிக்கு பணம் கொடுக்கப் படுகிறது என்பதால் லீவ் கேட்டால் சொத்தை கேட்பது போல முறைப்பதும், வராத நாளுக்கு செய்யவேண்டிய ஹோம் ஒர்க் சுமையும் அன்று நடந்த டெஸ்ட் மற்றும் quiz -ஐ ஈடு கட்டுவதும் பெரிய கொடுமை என்பதால் மாணவர்களே லீவ் எடுக்க அழுவார்கள். அதனால், இது போன்ற சேர்ந்து வரும் மூன்று நாள் விடுமுறைகள் கட்டாயமாக சுற்றுலா செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு நம்மை தள்ளிவிடும்!

மூன்று நாள் விடுமுறைக்கு இம்முறை oregan மாநிலத்தில் உள்ள klamath falls என்று ஊருக்கு செல்ல தீர்மானித்தோம்.  சென்று வர ரயில் பயணம். அங்கு வாடகை கார். தங்க வசதியான ஓட்டல். என்று எல்லா ஏற்பாடும் செய்துவிட்டோம். நிம்மதியாக சென்று வரவேண்டியதுதான்!

மாலை 8 மணி வாக்கில் ரயில் கிளம்பும் நேரம் என்பதால் அவசர அவசரமாக 7 மணி வாக்கில் ஊபரில் ரயில் நிலையம் சென்றோம். அறிவிப்பு எதுவும் காணோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு enquiry counter சென்று விசாரித்தால் ரயில் மூன்று மணி நேர தாமதம். நீங்கள் இன்டர்நெட்டில் செக் செய்து விட்டு வந்திருக்கலாமே என்றார்! அடக்கொடுமையே என்று நொந்து மறுபடியும் எடு ஊபெர்! வீட்டை நோக்கி சோகமாக சென்றால் ஓட்டுநர், எங்கிருந்து வருகிறீர்கள்? சுற்றுலாவா? என்று புண்ணில் வேல் பாய்ச்சினார்!

ஒருவழியாக கிட்டதட்ட 12 மணிக்கு ரயில் கிளம்பியது. ஏறி நிதானமாக உட்கார்ந்தோம் (மற்றவர் தூங்குகிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் எதற்கு பேசுகிறார்களோ என்று யாரோ யாரிடமோ சத்தமாக 'முணுமுணுத்தது காதில் விழுந்தது. என்ன செய்வது. மனதிற்குள்ளேயே பேசி மற்றவர்களுக்கு கேட்க செய்யும் கலை தெரியவில்லையே!)

8 மணிக்கு செல்ல வேண்டிய ஊருக்கு 12 மணிக்கு சென்றோம் (நான் தான் சொன்னேனே! time make -up எல்லாம் செய்ய மாட்டார்கள் என்று! - train conductor). அந்த ஊரு ரயில் நிலையம் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வேலை செய்யும் ஒன்று என்பதும் இந்த ரயில் மட்டுமே அந்த ஊருக்கு இணைப்பு என்பதால் அந்த ரயில் வரும் நேரத்திற்கு ஏற்றாற்போல் நிலையம் வேலை செய்யும் என்பது புதுமையான செய்தி. அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் ஒரு நாளுக்கு நாலு மணிநேரம் மட்டுமே என்பதால்  எல்லோரும் இன்னொரு பகுதி நேர வேலைக்கு செல்பவர்களாயிருக்கும்! ரயில் லேட்டாக வந்ததால் இன்னும் இரண்டு மணிநேரம் ரயில் நிலையம் திறந்திருந்தது. அவர்களுக்கு இன்று இரண்டு மணி நேரம் அதிக சம்பளமாக இருந்திருக்கும் என்பது மட்டுமே இதில் ஒரு திருப்தி!

வாடகை கார் எடுக்க ஏர்போர்ட் செல்ல வேண்டியிருந்தது. கொடுமை என்னவென்றால், அந்த ஊருக்கு வரும் விமான சேவை ரத்து செய்யப் பட்டது 2014இல். தத்தித்தத்தி இன்னொரு கம்பெனி ஒரு விமானத்தில் 30 பேர் மட்டுமே செல்லக் கூடிய பயணத் திட்டத்தை 2016 இல் தொடங்கியது. அதுவும் இப்போது நிறுத்தப் பட்டு விட்டது.மொத்தத்தில், ஆளில்லா விமான நிலையத்தில் இருக்கும் கார் வாடகை கம்பனிக்கு  வெளியூரில் இருந்து வர போக இருக்கும் ஒரே இணைப்புள்ள ரயில் நிலையத்தில் இருந்து டாக்ஸி (உபெர் இல்லை!) எடுத்து இரண்டு குடும்பம் சேர்ந்து சென்றோம் (இருவரும் தனித் தனியாக மீட்டர் வாடகை கொடுக்கவேண்டும் - ட்ரைவர்) அங்கு சென்றால் பட்ஜெட் கார் கம்பெனி என்று போர்ட் மட்டும் இருந்தது. ஒரு தொலை பேசி எண்ணும், அழைத்தால் ஜேமி என்ற சிப்பந்தி வருவார் என்றும் போட்டிருந்தது. தொலைபேசியவுடன் வந்த அவர், இரண்டு குடும்பங்களை பார்த்தவுடன், நீங்கள் லேட் ஆக வந்ததால் ஒரு கார் தான் இருக்கிறது. நீங்கள் இருவரும் யார் எடுத்து செல்வது என்று முடிவு செய்து கொள்ளுங்கள் என்று நம்மிடம் பிரச்சனையை தள்ளி விட்டார். ரிசர்வ் செய்த கார் எப்படி இல்லாமல் போகும். நீங்கள் இதற்க்கு பொறுப்பில்லையா என்ற கேள்விகளை கண்டு கொள்ளவே இல்லை. ஒரே பதில். நீங்கள் லேட்டாக வந்தீர்கள். அதனால் கார் இல்லை. வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டோம்! (கண்ணுக்கு எட்டிய வரை ஆளே இல்லாத இடத்தில் யார் வந்து கார் எடுத்திருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை!)

..தொடரும்!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அட! அங்கும் இப்படி ஒரு வித்தியாசமான அனுபவம்...ஓ அதனால்தான் பலரும் எல்லா ஊருக்குமே தங்களது கார் அல்லது கொஞ்சம் தூரம் என்றால் விமானத்தில் செல்கிறார்கள் போலும்....உங்கள் அனுபவம் சோகமாக இருக்கிறதே! தொடர்கிறோம் உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள...

கீதா

Avargal Unmaigal said...

இந்த மாதிரி வரும் பிரச்சனைகளுக்காகவே நான் வீட்டில் இருந்தே காரில் சென்றுவிடுவேன்

bandhu said...

நன்றி கீதா. எங்களுக்கு இது மிக புதுமையான அனுபவம்!

bandhu said...

நன்றி அவர்கள் உண்மைகள். நாங்களும் அப்படித்தான் செய்வோம். இந்த முறை 10 மணி நேர கார் பயணமா என்று மலைத்ததால் வந்த வினை இது!

கரந்தை ஜெயக்குமார் said...

வித்தியாசமானஅனுபவம்

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான அனுபவம் தான். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

அந்த ஊரிலும் சேவைகள் நம்மூர் போல அப்படித்தான் இருக்கிறது என்பது சோகமா, மனதுக்குள் ரகசியமான மகிழ்ச்சியா!