Wednesday, March 5, 2014

உலகமே உங்களுக்கு எதிராக..


உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்ற எண்ணம் எப்பொழுதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா? இல்லை என்றால் இது வரை நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடவில்லை என்று அர்த்தம்!

எனக்கு இன்னும் புரியாத பெரும் புதிர் இது தான். அது எப்படி? நாளும் விலை ஏறிக்கொண்டிருக்கும் பங்கு நான் வாங்கிய அடுத்த வினாடி முதல் கீழ் நோக்கி மட்டுமே செல்கிறது?

இது போன்ற "நாளும் விலை ஏறிக்கொண்டிருக்கும்" பங்குகளை பார்த்தீர்களானால், முதலில் பெரிதாக யாரையும் கவராமல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும்.. பிறகு எல்லா பைனான்ஸ் நியூஸ் வலைகளிலும் அந்த கம்பெனி பற்றிய ஆர்டிகல்  வரும்..  நம்மை ஆர்வம் தொத்திக் கொள்ளும்.. ஓரமாக நின்று பார்ப்போம்.. ஸ்டாக் மார்கெட்டில் திடீரென்று ஒரு 15% அந்த பங்கு விலை ஏறும்.. நம்மை இப்போது பதட்டம் தொற்றிக்கொள்ளும்.. ஐயோ.. கோட்டை விட்டோமே என்று.. சரி இனிமேல் ஏறாது.. நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக்கொண்டு நகருவோம்..


அடுத்த நாள் பார்த்தால், இன்னுமொரு 10% ஜம்ப் ! இப்போது அந்த கம்பெனி பற்றிய ஆர்டிகல் பரவலாக நிறைய வரும்.. அவரவர், இது தான் அடுத்த அமேசன், அடுத்த கூகிள்.. என்ற அளவுக்கு எழுதுவார்கள்..சரி இன்னும் நேரம் இருக்கிறது என்று நம் பங்குக்கு கொஞ்சம் காசை போட்டு அடுத்த பில் கேட்ஸ் நாம் தான் என்று கனவு காண ஆரம்பித்த உடன்..

பங்கு சரிய ஆரம்பிக்கும்..

அடுத்த இரு நாள் இதே போல இறங்கும்.. அது வரை வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய எந்த மகராசனும்.. இப்போது அந்த கம்பெனி பற்றி எழுதமாட்டான். மூன்றாவது நாள், ஒரு புண்ணியவான்.. அந்த கம்பெனி ஏன் உருப்படாது என்று விளக்கமாக எழுதுவான் (இதுவரைக்கும் எங்கடா போயிருந்த?)

அவ்வளவுதான்.. இன்னும் வேகமாக சரியும்.. இப்போதும் சிலர் ஈனஸ்வரத்தில் அது நல்ல கம்பெனி தான்.. இப்போது மார்கெட் செண்டிமெண்ட் சரியில்லை.. உக்ரைனில் போர் வரும் போல இருக்கிறது.. அதனால் தான் நம் ஊரில் உப்பு விலை ஏறுகிறது என்ற மாதிரி வித விதமாக கதை விடுவார்கள்!

நாமும் தலை மேல் கைவைத்துக்கொண்டு அது உண்மைதான் போல இருக்கிறது.. இதோ.. புடின் பின் வாங்கியவுடன் பங்கு எகிறிவிடும் என்று காத்துக்கொண்டு இருப்போம்.. அதற்குள் போட்ட காசில் பாதி காலி! சரி எடுக்கலாம் என்று பார்த்தால்.. பணத்தை தொலைத்த இடத்தில் தானே தேடணும் .. சென்னையில் தொலைத்துவிட்டு சைனாவில் தேடினால் கிடைக்குமா என்று "அறிவு" இடிக்கும்!


சரி போகுது போ என்று.. ஒரு ஜெலுசில் முழுங்கிவிட்டு திருட்டு முழி முழித்துக்கொண்டு அலைவோம் கொஞ்ச நாளுக்கு.

அடுத்த நாள் பேப்பரை பார்த்தால்.. டெஸ்லா விற்கு பதில் பெஸ்லா என்ற புது கார் வரப்போகிறது.. அதற்கு முக்கியமான பார்ட் சப்ளையர்.. கேக்ரான் மேக்ரான் கம்பெனி தான். அடுத்த சூப்பர் ஸ்டாக் இது தான் என்று ஒரு பைனான்ஸ் வலை பக்கத்தில் ஒரு ஆர்டிக்கல் போட்டிருக்கிறான்.. எப்படியாவது ஒரு பத்தாயிரம் புரட்டி அதில் போட்டுட வேண்டியதுதான்.. ஒரே மாதம்.. விலை நூறு மடங்காகிவிடாது?


image credit : to the creators of the image
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏமாற்றுவதில்... இல்லை இல்லை... ஏமாறுவதில் புதுப்புது வகைகள்...!

bandhu said...

மிக்க நன்றி தனபாலன்.. யார் ஏமாற்றினாலும் நீங்கள் ஏமாற்றுவதே இல்லை!

Unknown said...

தெரிந்த விஷயம்தான் என்றாலும் உங்கள் எழுத்து நடை அருமை. மிக நன்றாக கணித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

bandhu said...

வருகைக்கு நன்றி Viya Pathy

Yaathoramani.blogspot.com said...

நல்ல அலசல்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

bandhu said...

நன்றி ரமணி சார்..